இன்றைய காந்தி -கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

சமுகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பின்புலத்தில் உள்ள உளவியல் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து அதனை எளிமையான நடையில் பதிந்து வரும் உங்களின் எழுத்துகளை சில காலமாகத்தான் வாசித்து வருகிறேன்.அப்படியான வரிசையில் இன்றைய காந்தி வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். சில பக்கங்களே கடந்த நிலையில் ஒன்றினை என்னால் கூர்ந்து கவனிக்க இயன்றது.

தங்கள் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டு உங்களுக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல்களுக்கு தாங்கள் பதியும் பதில் உரைகளில் காணப்படும் கண்ணியம், கருத்துகளின் கட்டுமானம், எதிர் தரப்பு சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்வதில் உள்ள பொறுமை இவையாவும் நீங்கள் காந்தியாரை ஆன்மாவால் தேட முயலும் ஓர் எழுத்தாளர் எனும் பயிற்சியின் அடிப்படை என்பது தான் அது.

பல ஆண்டுகால தொன்மை கொண்ட இந்திய உளவியலின் சார்புகளை மிகச் சரியான கோணத்தில் அணுகிய வண்ணம் இருக்கின்ற உங்களின் தேடல் இதனை உங்களுக்கு சாத்தியமாக்கியது என்பதை உங்கள் கட்டுரைகள் நிறுவுகின்றன.

காந்தியாரைக் குறித்த இந்த நூலுக்காக என் மனம் குளிர்ந்து , சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன்.

அன்புடன்
CHANDRAMOWLEESWARAN

அன்புள்ள சந்திரமௌலீஸ்வரன்,

நானும் காந்தியைப்பற்றிய எதிர்மறையான சித்திரத்துடன் தொடங்கியவன் தான். தமிழ்நாட்டில் காந்தி மீது ஈடுபாடுள்ள ஏறத்தாழ அனைவருமே காந்தியை அவதூறுகள் வழியாக தவறான வரலாற்று புரிதல் வழியாக அறிந்து அதை நம்பி இருந்தவர்களாகவே இருப்பார்கள். எங்கோ ஒருபுள்ளியில் அவர்கள் காந்தியை அறிய ஆரம்பிக்கிறார்கள். ஒரு நுட்பமான மனம் மலர்தல் அது

– எனக்கு நிகழ்ந்ததைப்போல மறு தரப்பைச் சொல்பவர்களிடம்மும் அது நிகழவேண்டுமென எதிர்பார்த்தே நான் எழுதினேன்

முந்தைய கட்டுரைஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன?
அடுத்த கட்டுரைநல்ல கட்டுரையில் …