எங்கே இருக்கிறீர்கள்?

S

 

எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில்
நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?

ஒருவேளை கண்ணீருடன். ஒருவேளை புன்னகையுடன். ஒருவேளை வெறுமைப்பார்வையுடன். ஒருவர் கைகளை ஒருவர் பற்றிக்கொண்டு,
ஒரு சொல்கூட பேசாமல்…. எங்கள் சுற்றங்களே, அங்கிருந்தால் அனைத்தும் தெரியும்தானே?

இன்று எங்கள் இல்ல முற்றங்களில் களியாட்டங்கள், விருந்துகள், உபசரிப்புகள். நடனங்கள், பாடல்கள், போதைச்சிரிப்புகள்.ஒருவருக்கொருவர் நாங்கள் சூட்டும் புகழ்மாலைகள். ஆம், நாங்கள் வெற்றிபெற்றவர்கள் அல்லவா?

காலக் கொந்தளிப்பை கடந்துவருதலே வெற்றி என்று அறிந்திருக்கிறோம். கண்களை மூடிக்கொண்டு, எதையும் பொருட்படுத்தாமல், தாண்டியதையெல்லாம் அவ்வப்போதே மறந்து,புழுதிகளை அக்கணங்களிலேயே உதறி, காலடிச்சுவடுகள்கூட மிஞ்சாமல் இக்கரையில் எஞ்சிவிடுதல் மட்டும்தானே வெற்றி? அதைத்தான் இதோ மதுக்கிண்ணங்களாலும் மலர்மாலைகளாலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

மரணத்துக்கு அப்பாலும் மரணங்கள் உள்ளன. நிராகரிப்பின் மரணம், கைவிடப்படுதலின் மரணம், மறக்கப்படுவதன் மரணம். மரணங்களின் அலைகள் எங்கள் கரைகளில் இருந்து உங்களை தள்ளித்தள்ளிக் கொண்டுசெல்கின்றன. இருண்ட வாள்முனையெனத்தெரியும் முடிவின்மையின் தொடுவானம் நோக்கி.

மிக அருகே நின்றிருக்கிறீர்கள் நீங்கள். உங்கள் மூச்சுக்காற்றை, உங்கள் உலர்ந்த உதடுகள் ஒட்டிப்பிரியும் ஒலியை கேட்க முடிகிற அண்மை. ஆகவேதான் நாங்கள் உரக்கப்பேசுகிறோம் , கெக்கலித்துச் சிரிக்கிறோம். தயவுசெய்து விலகிச் செல்லுங்கள். விரிந்து விரிந்து செல்லும் அந்த இடைவெளியில் நிறையட்டும் உங்கள் அமைதி, எங்கள் மௌனம்.

அதை நிரப்பட்டும் நீங்கள் கடைசியாக எங்கள் பரம்பரைகளுக்கு அளிக்கும் பொதுமன்னிப்பு.

 

[முதற்பிரசுரம் மே17, 2010]

முந்தைய கட்டுரைதிருமா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54