செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

1

ஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும்.

2

ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான அனுபவங்களை தொடர்ந்து எழுதி வருகிறார்கள். சொல்வனம் நேர்காணலும் வாசிக்க கிடைத்தது. இவையெல்லாம் இனைந்து அவரை பற்றிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கியது. ஆனால் மிகமுக்கியமான கேள்வி ஒன்றை ராயின் நேர்காணல் என்னுள் எழுப்பியது. காலனியமா? சாதி ஒடுக்குமுறையா? எது மிக மோசமான தீமை? மேலும் துணை கேள்வியாக சமூகநீதியா? விடுதலையா? எது முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும்? இக்கேள்விகளுக்கான விடையை முன்போல் காலனியம் தான் என அத்தனை தீர்மானமாக சொல்லிவிட முடியவில்லை.

பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரைக்கு வந்த ராயை அரைநாள் பயணமாக காரைக்குடி அழைத்து வருவதாக செந்தில் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் இது எதிர்பாராத திட்டம். பர்மியர்களை சுரண்டியதில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு பங்கிருப்பதாக செந்திலிடமும் அலெக்சிடமும் கூறியிருக்கிறார். அப்படி சுரண்டி எழுப்பப்பட்ட கட்டிடங்களை காண விரும்புவதாக சொன்னதன் பேரில் இப்பயணம் சாத்தியமானது.

காந்தி, இந்தியா, காலனியம், அருந்ததி ராய், என எனக்கிருக்கும் மாற்றுக்கருத்துக்களை அவருடன் தர்க்கிக்க வேண்டும் என விரும்பினேன். இதற்கிடையில் சிறில் மிக செறிவாக மொழியாக்கம் செய்திருக்கும் அவருடைய உப்பு வேலி நூலின் முதல் பிரதியையும் வாசித்து முடித்தேன். வரலாற்று தரவுகளும் பயண அனுபவங்களும் கச்சிதமாக கலந்து வந்துள்ள ஒரு ஆக்கம். ஒரு தேர்ந்த துப்பறியும் கதையை போல் இருந்தது என்று கூட சொல்லலாம்.

காந்திக்கு ஆங்கிலேய நீதி அமைப்பின் மீது நம்பிக்கை இருந்த அளவிற்கு அவர்களுடைய நிர்வாக அமைப்பில் நம்பிக்கை இருக்கவில்லை. இந்து சுயராஜ்ஜியத்தில் மிக காட்டமான விமர்சனங்களை ஆங்கிலேய பாராளுமன்ற அமைப்பின் மீது வைக்கிறார். ‘உங்களுக்கு புலி வேண்டாம் ஆனால் அதன் இயல்புகள் வேண்டும்’ என ஆங்கில நிர்வாக முறையை பின்பற்றுவதை விமர்சிக்கிறார். அவருடைய நேர்காணலில் இத்துடன் முரணான தோணி இருப்பதாக தோன்றியது.

அலெக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் தொலைபேசியில் அழைத்து ராய் பற்றி சொல்லிகொண்டிருந்தார். பெரும் உரையாடல்காரர் என்றார். ஜெயமோகனை விடவா என்றேன்? “அவரு கூட கொஞ்சம் ப்ரேக் விடுவாரு” என சொல்லி சிரித்தார். நாற்பதாண்டுகால பயண அனுபவங்கள், தேடல் கொண்டவர். பகர்வதற்கு எத்தனையோ சுவாரசியமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.

காலை எட்டு மணிக்கு கிளம்பவேண்டியவர்கள் எட்டே முக்காலுக்கு தான் மதுரையில் இருந்து புறப்பட்டார்கள். நமக்கு நேர பிரக்ஞை என்பது போதிய அளவு இல்லை என்பதில் ராய்க்கும் வருத்தம் உண்டு. அவர்களின் வருகைக்காக கிளினிக்கில் காத்திருந்தேன். பத்தேமுக்கால் மணிபோல் ராய், மற்றும் அவருடைய இந்திய பி.ஏ செந்தில், எழுத்து அலெக்ஸ் ஆகியவர்கள் இன்னோவோ காரில் வந்து சேர்ந்தார்கள். அருகிலிருந்த டீக்கடையில் சென்று தேநீர் அருந்தினோம். செந்தில் அறிமுகம் செய்துவைத்தார். சில மாதங்களுக்கு முன்னர், ராம் கோரிய படி அவசரகதியில் ஜெயமோகனின் உப்பு வேலி கட்டுரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து எஸ்செக்ஸ் சிவா மூலம் அனுப்பியது நான் தான் என்றேன். ஒ சீவ குமார்? சரி சரி என்று உரத்த குரலில் பேசியபடி கைகுலுக்கினார்.

ராய் தேநீரை விரும்பி அருந்தினார். இரண்டு டீயை ஒரே லோட்டாவில் ஊற்றி நிதானமாக குடித்தார். அவருடைய தேநீர் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுக்க இங்கிருந்து இலங்கைக்கு சென்ற தமிழர்களை பற்றி எழுதியிருப்பதாக அலெக்ஸ் குறிபிட்டார். குஜராத்தில் சபர்மதி ஆசிரமம், தண்டி கடற்கரை ஆகிய இடங்களுக்கு பயணித்ததாக சொன்னார். ‘அங்கு உப்பு சத்தியாக்ரகத்தின் போது காந்தி எங்கள் ஊருக்கு வந்தார் என்று அவர் வராத ஊர்காரர்கள் கூட சொல்லிகொள்கிறார்கள். எனது தாத்தா காந்தியுடன் உப்பு சத்தியாக்ரகம் செய்தவர் என்று சொல்பர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் அதுவே சில லட்சங்கள் தொடும்..ஆனால் உண்மையில் சென்றவர்கள் என்னவோ 78 பேர்கள் தான்’ என சொல்லி சிரித்தார். ஒரு ஆஸ்திரேலியர் உப்பு சத்தியாகிரகத்தை அப்படியே மீளுருவாக்கம் செய்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் காந்தி சென்ற சரியான பாதை, கலந்து கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இருக்கின்றன நீங்கள் வாசிக்க வேண்டும் என்றார்.


என்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வு, அதுவும் அக்காலத்தில் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஆவண செய்வதில் கூட இத்தனை சிக்கல்கள் ஏன் எழுகிறது? இந்தியர்களுக்கு ஆவணபடுத்தும் பழக்கம் ஏன் இல்லை? நமக்கு எல்லாவற்றையும் தொன்மமாக்கும் பழக்கம் ஏன்? அப்படியாக்குவதில் உள்ள சாதக பாதகங்கள் யாவை? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தன. ‘ஆனால் இங்கிலாந்தில் கூட சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது’ என்றார் ராய். எல்லோருள்ளும் ஒரு பழங்குடி மனிதன் கதைகேட்கவும், கதைகட்டவும் ஆவலாய் இருக்கிறான் போலும்.

செந்தில் நான் ஒரு சைவ உணவர் என சொன்னபோது, காந்தியுடன் இருந்த மீரா பெண் அவருடைய மரணத்திற்கு பின்னர் சிலகாலம் இந்தியாவில் வசித்துவிட்டு ஜெர்மனியில் வசித்போது அங்கு நிலவிய தட்பவெப்ப நிலையின் காரணமாக அவர் அசைவ உணவு உண்ண துவங்கினார். காந்திக்கு மிக அணுக்கமாக இருந்தவர். நீங்கள் அவருடைய சரிதையையும் வாசிக்க வேண்டும். அவருடைய தந்தை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக இருந்தவர். எத்தனை காழ்ப்பு கொண்டிருப்பார்! என்று அங்கலாய்த்தார்.

இங்கிலாந்து பயணத்தின் போது காந்திக்கு ஒரு ஆங்கிலேய பணக்காரர் அவர் பயன்படுத்த ஒரு உயர்தர ரோல்ஸ் ராய்ஸ் காரை அளிக்கிறார். காந்தி அதன் பின் சீட்டில் ஒரு ஆட்டை கூட்டிக்கொண்டு ஊர் உலா சென்றார். gandhi is a strange man. காந்தியின் ஆடையை பற்றி ஒரு நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார் அவருடைய பெயர் மறந்துவிட்டது என்றார். பீட்டர் கொன்சால்வ்ஸ் என்றேன். அவர் எழுதிய காந்தியும் போப்பும் கட்டுரையை பற்றியும் அவருக்கு சொல்லிக்கொண்டு வந்தேன். காந்திக்கு ஆட்டுப்பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்கள் என்றேன். காந்திக்கு பிரிட்டிஷ் பாணி தொப்பி மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு காரணமாக அணியவில்லை என்றார். தென்னாப்ரிக்கா ஆம்புலன்ஸ் சேவையின் போது அவர் அப்படி தொப்பி அணிந்த புகைப்படம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அழகப்பா கல்லூரி வளாகங்களை காட்டி அவருடைய கொடையை பற்றி சொன்னேன். சேவையெல்லாம் சரிதான். ஆனால் இதற்கு எல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? நான் சில பர்மியர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் இவர்கள் மீது மிக கோபம் கொண்டிருக்கிறார்கள். நியாயப்படி இவர்களுடைய சாரிட்டி எல்லாம் பர்மியர்களுக்கு தான் செல்ல வேண்டும் என்றார். ஆங்கிலேயர்களை சுரண்டினார்கள் என்கிறோம். இவர்களும் அதையே தான் செய்திருக்கிறார்கள்.

ஆப்ரிக்காவில் சில குஜராத்தி வணிகர்களை சந்தித்திருக்கிறேன். காலனியம் இருந்த காலத்தில் எங்களிடம் கொஞ்சம் அதிகாரம் இருந்தது. ஆப்ரிக்கர்கள் அவர்கள் பிரச்சனைகளை எங்களிடம் சொல்வார்கள் என்றார். குஜராத்திகளும் மிக கொடுமையாக நடந்துகொண்டார்கள் என்றார். ஏ.கே.செட்டியார் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். தேர்ந்த பயணியான அவர் ராய்க்கு நெருக்கமாக இருக்கக்கூடும். ஆனால் அவருடைய படைப்புகள் இன்னும் ஆங்கிலத்தில் சென்றடையவில்லை! எ.ஆர்.வெங்கடாசலபதி மொழியாக்கம் செய்த அண்ணலின் அடிசுவடில் மட்டும் ஆங்கிலத்தில் வெளிவந்ததாக நினைவு.


நல்ல உயரம். வெயில் பட்டு சிவந்த அடர் சிவப்பு புள்ளிகள். அழகிய கூன். வெள்ளி நரை. அயராத உரையாடல்காரர். இவை எல்லாவற்றையும் காட்டிலும் அவரிடம் நுட்பமான அங்கதம் மிளிர்ந்தது. தீர்மானமான கருத்துக்களை கொண்டவர். சில நேரங்களில் முன்முடிவுகள் என்னும் எல்லையை தொடுபவை. ஆனால் நாம் பேசுவதற்கு இடம் அளிக்கிறார். வயோதிகம் மெல்ல நினைவாற்றலை செரித்து கொண்டிருக்கிறது. நூல்களை பற்றி சொல்கிறார் ஆனால் எழுதியவரின் பெயர்களை அவரால் நினைவுகூர முடியவில்லை. சொற்களை கொஞ்சம் நிதானமாக துழாவி எடுத்தே பேசுகிறார்.

ராய் சில நேரங்களில் ஒரு வழமையான ‘ஆங்கிலேய குடிமகனாகத்தான்’ தோன்றுகிறார்.’. கீழை தேசியங்களை அப்படித்தான் நோக்குகிறார். ஆனால் அவருடைய வாழ்வனுபவங்களும் பயணங்களும் எழுத்தாள அகமும் அவரை அந்த எல்லையில் இருந்து நகர்த்துகிறது. காரில் ஏ.சி கூட இல்லாமல் தமிழக வெயிலில் அவரால் பயணிக்க முடிகிறது. அவர் ஒரு பிரிட் என்று எழுதியது ஒரு விமர்சனமாக அல்ல. அதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் நமக்கு தான் சில விந்தையான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நாம் வெளிநாட்டவர்களுக்கு இந்திய கலாசார மேன்மையை காட்ட விழைந்துகொண்டே இருக்கிறோம். ஆரத்தி எடுக்கிறோம், பொட்டு வைக்கிறோம், இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நம் கலாசாரத்தை அங்கீகரிக்க/ஏற்கவைக்க வெவ்வேறு வழிகளில் கோருகிறோம். நான் கொஞ்ச காலம் வெளிநாட்டவர்கள் தங்கி செல்லும் சொகுசு விடுதியில் அவர்களுக்கு ஆயுர்வேத ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த காட்சிகள் எல்லாம் வேடிக்கையாகவும் அலுப்பூட்டுவதாகவும் இருக்கும். பிறரை மாற்றுவதற்கு முனைந்துகொண்டே இருக்கிறோம். அது அவசியமற்ற ஒன்று. ராய் ஒரு மனிதாபிமானமுள்ள ‘பிரிட். அவர் ஒரு கலாசாரத்தின் பிரதிநிதி. அந்த கண்ணியத்தை அவர் குலைத்துகொள்ளவில்லை. செந்திலை உரிமையுடன் சீண்டிக்கொண்டே வந்தார். செந்திலுக்கு எப்போதும் சாப்பாட்டு கவலை தான் என்றார்.

செம்மண் விரிநிலம் சாலையின் இருப்பக்கமும் சூழ, மேகமற்ற நீல வானம் ஆடிபோல் உச்சியில் மிளிர்ந்து கொண்டிருந்தது. உச்சிவெயிலில் கானாடுகாத்தான் சென்று சேர்ந்தோம். இரண்டு வருடங்களுக்கு மேலாக செட்டிநாட்டு அரண்மனையை பார்வையிட அனுமதிப்பதில்லை. செட்டிநாட்டை நோக்கி வர அது ஒரு முக்கிய காரணம். ஆனால் ஏனோ இப்போதெல்லாம் பயணிகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. ராய் வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்துகொண்டார்.

நான் காவலாளியை கேட்டு பார்த்தேன். ‘நீங்கள் ஆத்தங்குடிக்கு தான் போக வேண்டும்’ என்றார். அரண்மனைக்கு நேர் பின்புறம் நான் பணியாற்றிய செட்டிநாடு மேன்ஷனுக்கு அழைத்து சென்றேன். வாயிலில் தொகை விரித்த மயில் போல் நிற்கும் விசிறி வாழை, பிரம்மாண்டமான ஒற்றை மர தேக்கு பெஞ்சு, ஒராள் சுற்றளவில் தேக்கு தூண்கள், பிர்மிங்காமிலிருந்து வந்த இரும்பு தூண்கள், பெல்ஜியம் கண்ணாடிகள், இத்தாலிய மார்பிள்கள் என எல்லாவற்றையும் விளக்கி கொண்டிருந்தேன். அவர்களின் சடங்குகள், வாழ்க்கை முறை பற்றி நானறிந்தவற்றை சொல்லிகொண்டிருந்தேன்.

சீர் சாமான்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து ஓரறையில் பார்வைக்கு வைத்திருந்தார்கள். ஆப்ரிக்க கலை பொருட்கள் அதிகம் கானபடுகிறதே? என கேட்டார். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் கொஞ்ச காலம் தென்னாப்ரிக்காவில் பணியாற்றி இருக்கிறார் என்றேன். ஏன் பல வீடுகள் பராமரிப்பின்றி இருக்கின்றன? என வினவினார். பங்கு வீடு, பூர்வீக சொத்து என்பதால் எவரும் மெனக்கெட்டு செலவு செய்ய முன்வருவதில்லை என்றேன். கேரளாவிலும் இப்படித்தான், ஆனால் அங்கு எல்லா சொத்துக்களுமே ஏதோ ஒரு வழக்கில் மாட்டிக்கொண்டு இருக்கும். இது ஒரு பிரத்யேகமான இந்திய சிக்கல் என்றே எண்ணுகிறேன். லண்டனில் இப்படியான சொத்து பிரச்சனைகள் ஏதும் அதிகம் இருப்பதில்லை என்றார்.

இந்த கட்டிடங்களில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய கட்டிடகலை தாக்கம் தென்படுகிறது என்றார். ஆர்ட் தேகொர் என்று இதை சொல்வோம். முப்பதுகளில் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த கட்டிடமுறை என்றார். ‘வைட் ஆங்கிள்’ லென்ஸ் இல்லாமல் எண்ணிய கோணத்தில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டே அங்கும் இங்கும் நடந்து சென்று புகைப்படம் எடுத்தார். அலேக்சிடம் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என விசாரித்தேன். வரைபடங்களுடன் செம்மையாக வந்திருப்பதாக சொன்னார். ராய் எழுதிய தேநீர் பற்றிய புத்தகத்தையும் கொண்டுவரவிருப்பதாக சொன்னார்.

செட்டியார்களின் ஒடுக்குமுறை தாங்காமல் ஒரே இரவில் பர்மிய அரசு ரூபாய் நோட்டை மாற்றியது. அரசிடம் வந்து மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆணை பிறபிக்கபட்டது. ஒட்டுமொத்தமாக அவர்கள் சேர்த்த பணம் முழுவதும் செல்லாகாசாக அறிவிக்கப்பட்டது. வரலாற்றில் இப்படியான நிகழ்வு என ஏதுமில்லை. அதன்பின்னர் தான் இவர்கள் ஒன்றுமில்லாமல் ஆனார்கள் என்றார். இரண்டாம் உலகப்போரில் நட்டமடைந்து திரும்பியவர்கள் என்பதே எனது மனபதிவாக இருந்தது.

இங்கே ஓரிரவு தங்குவதற்கு எவ்வளவாகும் என்றார்? ஆறாயிரம் ஏழாயிரம் இருக்கும். ஒரு மதிய சாப்பாடு எழுநூறு ரூபாய் என்றேன். நான் அடுத்தமுறை லாட்டரி வென்றால் இங்கு வந்து தங்குவேன் என சிரித்துக்கொண்டே சொன்னார். பொதுவாக நான் பயணத்தின் போது தங்குமிடத்திற்கும் உணவிற்கும் அதிகமாக செலவழிக்க மாட்டேன் என்றார். தேர்ந்த பயணியின் மிகமுக்கியமான குணம் அதுதான் என எண்ணிக்கொண்டேன். நீங்கள் ஐரோப்பா சென்றதுண்டா என கேட்டார்? இல்லை, நான் இந்திய எல்லையை தாண்டியதில்லை, ஆனால் ஐரோப்பா செல்ல வேண்டும் என்பது எனக்கொரு கனவு என்றேன். இப்போது செல்பர்கள் அவசரகதியில் இரண்டு வாரங்களில் எல்லா ஐரோப்பா தேசங்களையும் பார்க்கும் திட்டத்தை அமைத்துக்கொண்டு செல்கிறார்கள். ஒன்றோடொன்று குழம்பிவிடும். ஒரு தேசத்திற்கு சென்று அங்கேயே கொஞ்ச காலம் செலவழிக்க வேண்டும், அதுவே நல்ல அனுபவங்களை அளிக்கும் என்றார்.

இதற்குள் மணி பனிரெண்டேகால் ஆகிவிட்டது. செந்தில் இங்கே உணவு உண்டுவிட்டு செல்லலாம் என்றார். நேரமில்லை, நான் மதியம் உண்பதில்லை என்றார். இந்தியாவில் தான் அசைவம் உண்பதில்லை. பிரிட்டனில் கோழிகள் சுதந்திரமாக வளர்க்கபடுகிறது என்பதற்கு சான்று வழங்கும் வழக்கம் உண்டு. அடைத்து வைத்து வளர்க்கப்படும் கோழிகளை நான் உண்பதில்லை. இந்தியாவில் நான் ஒரு கோழிபன்னையை பார்த்தேன். மிக மோசமான நிலையில் இருந்தது அதிலிருந்து நான் இங்கு கோழிகறி உண்பதில்லை. அசைவம் உண்டாலும், பிராணிகள் உரிய கவுரத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். மீன்களை உண்பேன்’ என்றார்.

இங்கிலாந்தில் பிரபல சூப்பர் மார்கெட்டுகள் இப்படி மிக மோசமாக வளர்க்கப்படும் கோழிகளை பயன்படுத்துகின்றன என்பது குறித்து நான் பார்த்த ஆவணப்படத்தை பற்றி கேட்டேன். அது சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஊழலாக அறியப்பட்டது. இப்போது நிலைமை அப்படியல்ல என்றார். படிப்பதற்கு விசா கேட்டு வருபவர்களின் முறைகேடுகளை ஒடுக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கல்வி செலவு மிக அதிகமாக ஆகிவிட்டது என்று வருத்தபட்டார்.

வழியில் ஒரு வீட்டு வாசலில் நின்று புகைப்படங்கள் எடுத்துகொண்டோம்.. இளவட்ட கல்லை காட்டினேன். காரைக்குடி வந்து சேர்ந்தபோது ஒருமணி ஆகிவிட்டது. ஒரு சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றேன். பட்டபகலில் அவர் கேட்ட தோசையை வாங்கித்தர முடியவில்லை. சப்பாத்தியும் அவரைக்கை கூட்டும், எண்ணெய் கத்திரிக்காயும் சாப்பிட்டார். இதுவரை இந்த பயணத்தில் நான் சாப்பிட்டதில் இதுவே சிறந்த உணவு. வேண்டுமானால் லண்டனின் ராய் மாக்சம் சொன்னதாக விளம்பரபடுத்திகொள்ளலாம் என சொல்லி சிரித்தார். கிளம்பும் முன் ஹோட்டல் மேனேஜரிடம் “first class food” என மனமார பாராட்டிவிட்டுத்தான் சென்றார்.

நேரம் ஒண்ணேகால் ஆகிவிட்டது. நான்கு மணிக்கு நாகர்கோவிலுக்கு மதுரையிலிருந்து ரயில் பிடிக்க வேண்டும். “வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என விரும்பினேன்..மனைவியும் அம்மாவும் உங்களை சந்தித்தால் மகிழ்திருப்பார்கள்” என்றேன். “it s a pity, but we are running out of time” என்றபடி கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றார்.

வெள்ளையர் வியத்தல் நம்முள் ஊறிய ஒன்றோ என்று கூட எனக்கு ஐயமுண்டு. அவரிடம் எப்படி பேசுவது? ஒரேயடியாக இழைந்து குழைய கூடாது, வெள்ளையர் என்பதால் வாய் பிளக்க கூடாது, முதியவர், எழுத்தாளர், அனுபவமிக்கவர் ஒரேயடியாக மிடுக்காக முறுக்கிக்கொள்ளவும் கூடாது. எவ்விதத்திலும் சளைத்தவன் அல்ல என்பதை நிறுவ வேண்டும். அவர் எழுத வாய்ப்புள்ள பயணக்கட்டுரையில் ஒரு பெயராக எஞ்சுவதற்காகத்தான் இத்தனை முயற்சிகளா? என்று தோன்றியபோது சிரிப்பு வந்தது. ஆனால் ராய் எனக்கு அவ்வித சங்கடங்களை, முறைமைகளை/முறைமை மீறல்களை பற்றி சிந்திக்க அவகாசமே அளிக்கவில்லை. அத்தனை இயல்பாக உரையாட முடிந்தது ஒரு இனிய நினைவாக என்றும் எஞ்சியிருக்கும். ஆசிரியர்கள் தங்கள் இடத்தை அவர்களே எடுத்துகொண்டு விடுகிறார்கள். .
தாத்தா கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு முன்சீட்டில் அமர்ந்தவுடன், வெள்ளை இன்னோவா வெயிலில் மினுங்கிய தார் ரோட்டில் என்னைக் கடந்து அதன் அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டது.

முந்தைய கட்டுரைஓலைச்சிலுவை – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43