«

»


Print this Post

கமல்


ஜெயன்,

வணக்கம். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலாவுக்கு கொடுத்த கமல், நான் ஜெயமோகனின் ரசிகன் என்றார். மேலும், அவருக்கு நான் இப்போது ரசிகர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார். கமலுடன் தங்கள் அறிமுகம் எப்போது/எப்படி நிகழ்ந்தது? கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார்?

நன்றி,
வாசு

அன்புள்ள ஜெயமோகன்,

நேற்றிரவு விஜய் டிவியில் விருது வழங்கும் விழா பார்த்துக் கொண்டிருந்தேன். சிறந்த இயக்குநருக்கான விருதை பாலாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் உங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

“இந்தப் படத்தில் வேலை செய்த ஜெயமோகன் அவர்களுக்கும் என் பாராட்டைச் சொல்லிக்கொள்கிறேன். ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். நான் அவருக்கு ஒரு வாசிப்புப் பட்டாளத்தையே உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்”

என் இரு குருநாதர்கள் என உங்களையும் கமல்ஹாசனையும் வைத்திருக்கிறேன். உங்களுக்குள்ளும் இணைப்பு உள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
ஜெகதீசன்

அன்புள்ள நண்பருக்கு,

கமல்ஹாசன் அவர்களிடம் எனக்கு அதிக தொடர்பு ஏதும் இல்லை என்பதே உண்மை. எனக்கு திரையுலகில் தெரிந்தவர்கள் சிலரே. இலக்கியம் மீது கவனம் உடையவர் என்றமுறையில் கமல் பதிமூன்று வருடங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரத்தை வாசித்து அதைப்பற்றி சில பொதுவான நண்பர்களிடம் பேசியதை அறிந்திருக்கிறேன். ‘கொற்றவை’ நாவல் வெளிவந்தபோது அதை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் நிறைய பேசினார். அவருக்கும் எனக்கும் நண்பர்ரான கு.ஞானசம்பந்தம் அவர்கள் தொடர்பு கொடுத்து அறிமுகம் செய்தார். அதன்பின்னர் கமல் அவர்களை நான் ஒரு முறைநேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருக்கும் எனக்குமான உறவு என்பது என் நாவல்களை அவர் பதினைந்து வருடங்களாக வாசிக்கிறார் அவரது படங்களை நான் முப்பது வருடங்களாக பார்க்கிறேன் என்பதுதான்.

திரையுலகிலும் வெளியிலும் பலர் கமல் என்னுடைய கொற்றவை, இன்றைய காந்தி முதலிய நூல்களை அவர்களுக்கு அளித்து அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7282

3 comments

 1. kannan

  அன்பு ஜெயமோகன்,
  நீங்கள்- கமல் இருவருமே வன்முறை, தீவிரவாதம் ஆகியவைகளுக்கு எதிரான கருத்தை சமுதாயத்தில் முன்வைப்பவர்கள். இருவருக்குமே காந்தியம் மிக உவப்பானது.
  கமல் மேடையில் பேசியது சரியானதே. “ நான் கடவுள்” பற்றிய நிகழ்ச்சிகளில் உங்கள் “ ஏழாம் உலகம்“ என்ற பெயர் மிக கவனமாக சிலரால் தவிர்க்கப்படுகிறது. இது அந்த கலைஞனுக்கு செய்யும் துரோகம். பரவலான மக்கள் கூட்டத்தின் முன்னும் தொலைக்காட்சி காமிராக்களின் முன்னும் மறைக்கப்பட்ட கலைஞனை முன்னிறுத்த வேண்டியது சககலைஞனின் கடைமை. அதைத் தான் கமல் செய்தார்..

 2. ramji_yahoo

  கமலுக்கு நன்றி. சக மனிதனை படைப்பாளியை பாராட்டும் அந்த நல்ல குணத்தை கமலிடம் இருந்து நாம் கற்று கொள்வோம்.

 3. parthi6000

  வணக்கம் ஜெ
  கமல் உங்களை பல காலமாக வாசித்து வருகிறார் என்பதை அறியும் போது மகிழ்ச்சி. விஜய் டிவியில் வந்த கமல் 50 என்ற நிகழ்ச்யில் கமல் பேசிய போது ” சமீப காலமாக எனது படங்களின் நிறம் மாறி வருகிறது ” என்று குறிப்பிட்டார். அதற்கு நீங்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. கமலின் சமீபத்திய படமான உன்னைப் போல் ஒருவன் தீவிர வாதத்தை பற்றி கவலைபடாத, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளையும், போலிமதச்சார்பின்மையும் தோலுரித்திருக்கிறது. தீவிரவாத்தை எப்படி அனுகவேண்டும் என்பதை நடுநிலையோடு அலசி படம் அது.

  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

Comments have been disabled.