என்ன நடக்கிறது?

நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், என்ன நடக்கிறது, ஏன் எழுதவில்லை என்று. எழுதவில்லை, அவ்வளவுதான். என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு தெரியும், இது அபூர்வமல்ல. எழுத ஆரம்பித்தால் எழுதித்தள்ளுவதும் நின்றுவிட்டால் மீண்டும் தொடங்க முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிடுவதும் என் வழக்கம். நடுநடுவே பல இடைவெளிகள் அப்படி நிகழ்ந்திருக்கின்றன. கடந்தகாலங்களில் பலவகையான மனநிலை மாற்றங்கள் கொந்தளிப்புகள் வழியாகச் சென்று கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனென்றால் நான் மனநிலைகளால் தீர்மானிக்கப்படுபவன். எதையுமே திட்டமிட்டு எழுதும் பழக்கம் இல்லாதவன். என் மனதை ஒரு கடல் என்றும் அதன் கரையில் காத்து கிடப்பதே என் வேலை என்றும் எப்போதும் நம்புகிறேன். கடல் இப்போது சும்மா இருக்கிறது, ஒரு மாபெரும் கிரானைட் தகடு போல. ஒன்றும் செய்வதற்கில்லை.

கும்பமேளா நிகழ்ச்சிகளை எழுதியதோடு சரி. அதற்குமேல் ஒன்றும் எழுதவில்லை. சின்னச்சின்ன விஷயங்கள் எழுதினேன், அவை படைப்புத்தன்மை கொண்டவை அல்ல. ஒருமாதம் முன்னால் சென்னை விடுதியில் தங்கி இருந்தபோது வலிந்து ஒரு கட்டுரை எழுதினேன். கொஞ்சநேரம் கழித்து வாசித்துப் பார்த்தால் அத்தனை தட்டையாக , அத்தனை கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அழித்துவிட்டேன்.

பயமாக இருந்தது. ஏதேனும் ஒரு கட்டத்தில் அப்படி காலியாக எழுத ஆரம்பித்துவிடுவேனா என. அப்போது ஜெயகாந்தன் போல நிறுத்திவிட்டு சும்மா இருக்கும் துணிவு வரவேண்டும் -சுந்தர ராமசாமி போல முட்டிமுட்டி எழுதி சிறுமைப்படலாகாது என உறுதி கொண்டேன்.

நிறைய கடிதங்கள் மின்னஞ்சல்கள் குவிந்து கிடக்கின்றன. பதில் பெறாதவர்களின் மன்னிப்பை மானசீகமாக கோருகிறேன். பல முக்கியமான கடிதங்கள் கூட தேங்கி கிடக்கின்றன. வங்கி வேலைகள் தணிக்கை வேலைகள்…. எதுவுமே செய்யவில்லை. ஏன், அலுவலகம் போய் மூன்றுமாதமாகிறது!

வாசிக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. பல நாட்கள் தினமணி கூட வாசிக்கவில்லை. பாட்டு கேட்கிறேனா என்றால் அதுவும் இல்லை. பின்னே என்னதான் செய்கிறேன்? சும்மா இருக்கிறேன். முற்றிலும் சும்மா. அதற்கேற்ப இங்கே நல்ல காலநிலை. எங்கள் மண்ணுக்கே உரிய ‘ஆனியாடிச்சாரல்’ குளிர்காற்று, மழைமூட்டம். மேகம் படர்ந்த மலைச்சாரலில் நடக்கிறேன், அவ்வளவுதான்.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு ‘அண்டி களைஞ்ஞ அண்ணான் மாதிரி ‘. ஆம், கொட்டையை நழுவ விட்ட அணில் மாதிரி கை கூப்பி வெறுமையை அள்ளி சும்மா இருக்கிறேன்.

பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைபெங்களூரில்…
அடுத்த கட்டுரைஇணைய தள மாற்றங்கள் குறித்து