«

»


Print this Post

என்ன நடக்கிறது?


நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், என்ன நடக்கிறது, ஏன் எழுதவில்லை என்று. எழுதவில்லை, அவ்வளவுதான். என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு தெரியும், இது அபூர்வமல்ல. எழுத ஆரம்பித்தால் எழுதித்தள்ளுவதும் நின்றுவிட்டால் மீண்டும் தொடங்க முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிடுவதும் என் வழக்கம். நடுநடுவே பல இடைவெளிகள் அப்படி நிகழ்ந்திருக்கின்றன. கடந்தகாலங்களில் பலவகையான மனநிலை மாற்றங்கள் கொந்தளிப்புகள் வழியாகச் சென்று கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனென்றால் நான் மனநிலைகளால் தீர்மானிக்கப்படுபவன். எதையுமே திட்டமிட்டு எழுதும் பழக்கம் இல்லாதவன். என் மனதை ஒரு கடல் என்றும் அதன் கரையில் காத்து கிடப்பதே என் வேலை என்றும் எப்போதும் நம்புகிறேன். கடல் இப்போது சும்மா இருக்கிறது, ஒரு மாபெரும் கிரானைட் தகடு போல. ஒன்றும் செய்வதற்கில்லை.

கும்பமேளா நிகழ்ச்சிகளை எழுதியதோடு சரி. அதற்குமேல் ஒன்றும் எழுதவில்லை. சின்னச்சின்ன விஷயங்கள் எழுதினேன், அவை படைப்புத்தன்மை கொண்டவை அல்ல. ஒருமாதம் முன்னால் சென்னை விடுதியில் தங்கி இருந்தபோது வலிந்து ஒரு கட்டுரை எழுதினேன். கொஞ்சநேரம் கழித்து வாசித்துப் பார்த்தால் அத்தனை தட்டையாக , அத்தனை கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அழித்துவிட்டேன்.

பயமாக இருந்தது. ஏதேனும் ஒரு கட்டத்தில் அப்படி காலியாக எழுத ஆரம்பித்துவிடுவேனா என. அப்போது ஜெயகாந்தன் போல நிறுத்திவிட்டு சும்மா இருக்கும் துணிவு வரவேண்டும் -சுந்தர ராமசாமி போல முட்டிமுட்டி எழுதி சிறுமைப்படலாகாது என உறுதி கொண்டேன்.

நிறைய கடிதங்கள் மின்னஞ்சல்கள் குவிந்து கிடக்கின்றன. பதில் பெறாதவர்களின் மன்னிப்பை மானசீகமாக கோருகிறேன். பல முக்கியமான கடிதங்கள் கூட தேங்கி கிடக்கின்றன. வங்கி வேலைகள் தணிக்கை வேலைகள்…. எதுவுமே செய்யவில்லை. ஏன், அலுவலகம் போய் மூன்றுமாதமாகிறது!

வாசிக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. பல நாட்கள் தினமணி கூட வாசிக்கவில்லை. பாட்டு கேட்கிறேனா என்றால் அதுவும் இல்லை. பின்னே என்னதான் செய்கிறேன்? சும்மா இருக்கிறேன். முற்றிலும் சும்மா. அதற்கேற்ப இங்கே நல்ல காலநிலை. எங்கள் மண்ணுக்கே உரிய ‘ஆனியாடிச்சாரல்’ குளிர்காற்று, மழைமூட்டம். மேகம் படர்ந்த மலைச்சாரலில் நடக்கிறேன், அவ்வளவுதான்.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு ‘அண்டி களைஞ்ஞ அண்ணான் மாதிரி ‘. ஆம், கொட்டையை நழுவ விட்ட அணில் மாதிரி கை கூப்பி வெறுமையை அள்ளி சும்மா இருக்கிறேன்.

பார்ப்போம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

 • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/7279

12 comments

Skip to comment form

 1. vks

  எழுதுவது வரம். அவ்வளவுதான். மனம் ஏதாவது என்னிக்கொண்டேயிருக்கும். இன்று மாத்திரம் இரு தடவைகள் உமைச் சென்னாயயை வாசித்தேன். அருவருப்பான எஜாமான் இருந்தாலும் திட்டுக்களை வாங்கி கொண்டு சில காலம் அவனோடு காட்டுக்குள் செல்லலாம் போல உணருகின்றேன். யானை கூட பிளிறுவது கேட்கின்றது.
  எழுதுங்கள்.

 2. sankarg.siva

  Sir, you need to rest for a while.let ur mind get charged.let it get some inputs from surroundings to radiate its fabulous results.

 3. arunbharath

  ஐயா, நான் கணிப்பொறியியலில் உயர் படிப்பு படித்து வருகிறேன். விரும்பி தான் படிக்க வந்தேன். ஆனால் எனக்கும் தாங்கள் கூறுவது போல் சில நேரங்களில் ஒன்றுமே செய்யத் தோன்றுவதில்லை. சில நேரங்களில் உற்சாகம் பொங்கி அனுபவித்து படிப்பேன். காரணம் புரியவில்லை.

  இது அவ்வப்பொழுது வரும் கட்டம் (phase) என்று நினைக்கிறேன். தாங்கள் மீண்டும் எழுத தொடங்க வாழ்த்துக்கள்.

 4. baski

  ‘சொல்லற சும்மா இருப்பது’ அப்படியொன்றும் சாமான்யமான விஷயம் இல்லையே! உங்களுடைய இந்த ‘சும்மா இருத்தலுக்கும்’ பெருவாரியான தமிழர்களின் ‘சும்மா இருத்தலுக்கும்’ நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
  தங்களுக்கும், அஜிதனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
  – பாஸ்கர்

 5. elama

  அன்புள்ள ஜெயமோகன் சார்,

  ‘பொறாமையாய் இருக்கிறது’. வாழ்த்துக்கள்.

  இளம்பரிதி

 6. sarvachitthan

  அன்புள்ள ஜெ.மோ,
  வணக்கமும்,வாழ்த்துக்களும்!
  தங்களைவிடவும் வயதில் மூத்தவன், என்றாலும் தங்கள் எழுத்தினை விரும்பிப் படிப்பவன். உங்களது கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், திறமையும், தன்னம்பிக்கையும் கொண்ட எழுத்தாளன் என்பதால் அதனை மதித்து வாழ்த்துபவன்.
  அண்மையில், ஏதோவேர் இணையப் பக்கத்தில்,” ஜெயமோகன் இப்போது சில நாள்களாய் எழுதுவதில்லை.அவர் எத்தனை நூல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை” என்று வாசித்தேன். அது உண்மையாக இருக்கலாம் என நினைத்தபோது மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால், இப்போது உங்கள் தன்னிலை விளக்கம் கவலையாக உள்ளது. இருப்பினும், இவ்வாறான மன ஓய்வு, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தீவிரமாகச்
  செயல்படுபவர்களுக்குத் தேவையான ஒன்றுதான். உங்கள் உள்ளம் நிறையும் வரை இந்த ‘ஆழ்மோன நிலையை’ப் பூரணமாக அனுபவித்து விட்டு, மீண்டும் எழுத வாருங்கள். இலக்கிய உலகில் நீங்கள் சாதிப்பதற்கு இன்னும் அதிகம் உள்ளது.

 7. Elango Kallanai

  ஏற்கனவே சில பிளாக்குகளில் நீங்கள் பயம் கொண்டு ஓடி ஒளிவதாக எழுதுகிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு யோசனை சொன்னேன். ஏம்பா என்ன நேரத்தில ஜெயமோகன் எல்லாச் சாமியார்களையும் கிண்டலடித்து விஷ்ணுபுரத்தை எல்லாம் கொழுத்துவேன் என்று எழுதினாரோ அப்பவே சாமியாரெல்லாம் சேந்து மாந்திரீகம் வச்சுபுட்டாங்கன்னு ஆதாரத்தோடு அடிச்சு விடுங்கயான்னு சொன்னேன். அது பத்தி தீவிர ஆலோசனை அவர்கள் வட்டாரத்தில் நடப்பதாக தகவல் அறிகிறேன். சாமியார்களுக்கு ஆதரவு சேரும் போது இதுவும் நடக்கும். வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் 30 வருஷம் சும்மா இருந்தார் என்றெல்லாம் சொன்னால் யார் நம்புவார்கள்? இது எளிய காரணமாக தெரியுதா? எப்புடி?

 8. parthi6000

  அன்புள்ள ஜெ.

  TAKE LIFE AS IT COMES

  ADVOCATE PARTHIBAN
  TIRUPPUR

 9. sattikumar

  Its not uncommon to have this phase. We are eagerly waiting for you sir….
  Satish
  Mumbai

 10. jekay2ab

  இப்போதுதான் விஜய் அவார்ட்ஸ் பார்த்தேன். கமல்ஹாசன் உங்களை மனசுவிட்டுப் பாராட்டியதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
  நீங்கள் திரைத்துரையில் மென்மேலும் சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.

 11. ganesan

  அன்புள்ள ஜெயமோகன்,
  என்னடா இப்படி எழுதி தள்ளுகிறாரே என்று வியக்க வைத்தீர்கள் ஒரு நேரம். இப்போது ஒய்வு தேவை என்றல் அது நியாயமே. எனக்கு மன அமைதி தேவை என்றல், ஜெயமோஹனை படிப்பது ஒரு வழியாக இருந்தது. உங்கள் எழுத்துகளை நீங்கள் மறு வாசிப்பு செய்வதுண்டா?
  விஜய் தொலைகாட்சியில் கமல்ஹாசன் உங்களை சிலாகித்ததை பார்த்தேன். எதாவது சேர்ந்து செயல்படும் திட்டம் உண்டா?
  தலை சிறந்த தந்தையை பெற்ற அஜிதனின் கல்விக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அஜிதன் தந்தையை மிஞ்சுவாரா தெரியவில்லை, ஆனால் அவர் பாதையில் வாசமிக்க வண்ணமலர்கள் இருக்கும்.
  அன்புடன்
  கணேசன்

 12. varam .. ippadi thanimai kedaikarathum.. athu rasikarathum.. mana nimmathiyoda.. muzhu varam.. :):):)

  Regards,
  Priya Shan

Comments have been disabled.