‘நதிக்கரையில்’- கடிதம்

அன்பு ஜெ சார்…

கடந்த சில நாட்களாகத் தாங்கள் தளத்தில் எதுவும் புதிதாக எழுதாமல் இருப்பது ஒரு வகையில் பயன் அளிக்கின்றது. பழைய கட்டுரைகளைப் படிக்க முடிகின்றது.

தளத்தின் ஆரம்பச் சிறுகதையான ‘நதிக்கரையில்’ படித்தேன். அருமையாக இருந்தது.

மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் வருகின்றதா, என்ன..? இன்றேல், இது போன்ற கதைகள் காலப்போக்கில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும் அல்லவா? அப்படிப் பார்க்கின் நம் இரு பேரிலக்கியங்களும் எழுதி முடிக்கப்படுவதேயில்லை அல்லவா..?

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்தகுமார்

அன்புள்ள வசந்தகுமார்

மகாபாரதத்தில் இந்த நிகழ்ச்சி இப்படியே இல்லை. இந்நிகழ்ச்சியை உருவாக்க தோதான ஒரு சந்தர்ப்பம் உள்ளது. அதாவது வியாசர் கங்கையை திரையாக்கி இறந்துபோனவர்களை எஞ்சியவர்களுக்கு காட்டும் சந்தர்ப்பம். அதன் மறுஆக்கம் என்னுடையது.

நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். மகாபாரதம் பல மேதைகளால் தொடர்ச்சியாக வளார்த்தெடுக்கப்பட்டு நம்மிடம் கிடைக்கும் ஒரு பிரதி. தமிழிலேயே நளவெண்பா முதல் பாஞ்சாலி சபதம் வரை எத்தனை உதாரணங்கள்!

ஏனென்றால் மகாபாரதம் அறம் குறித்த ஒரு விவாதத்தை தொடக்கி வைத்தது நம் பண்பாட்டில். அந்த விவாதம் காலம்தோறும் நீட்சி அடைவது. அதை நடத்த மகாபாரத கதைக்களம் போல உகந்த இன்னொரு தளம் இல்லை

ஜெ

http://www.jeyamohan.in/?p=82 நதிக்கரையில்

முந்தைய கட்டுரைஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?
அடுத்த கட்டுரைபெங்களூரில்…