ஆசிரியருக்கு ,
ஒரு புதிய நபரை சந்திப்பது ஒரு புதிய நிலத்தை சந்திப்பதற்கு சமம் , அவர் ஒரு அறிவுஜீவி என்றால் ஒரு நிலத்தை அது பூத்திருக்கும் போது பார்பதற்கு சமம். எப்போதுமே ஒரு புதிய நபரை புதிய நிலத்தை பார்பதற்கு தீராத ஆவல் கொண்டிருப்பவன் நான் . வயது ஏற ஏற நபரும் சரி நிலமும் சரி சந்திப்பதில் சொற்பமே நம்மை திருப்திப் படுத்தும்.
அவ்வாறு சந்தித்து நான் நிறைவடைந்த நபர் ராய் மக்சாம். எப்போதும் உரையாடலுக்குத் தயாரான , உற்சாகம் ததும்பும் 75 வயது துடிப்பான மனிதர் ராய் . மிக அபூர்வமாகவே தனது கருத்துக்கள், அவதானிப்புகள், முடிவுகள் மற்றும் தீர்ப்புக்களை சொல்லக் கூடியவர். அவர் திருப்திப்படும் அளவுக்கு ஆய்வையும் வாசிப்பையும் கொண்டிருந்தால் மட்டுமே ஒன்றில் கருத்து சொல்வார் எனத் தோன்றுகிறது.
அவருடன் உதகையில் பயணித்துக் கொண்டே உரையாடியது பொருளார்ந்த பொழுதாக அமைந்தது. அவருடனான கோத்தகிரி வன விடுதி தங்கலும் காட்டுக்குள் சென்ற கானுலாவும் உவகையளிக்கக் கூடியதாக இருந்தது.
மலையில் தேயிலைத் தோட்டத்தில் அடுத்தடுத்து ஒரு சென்ட் கடும் பச்சையிலும் ,ஒரு சென்ட் மென் பச்சையிலும் இருந்தது , இந்த வித்தியாசம் ஏன் வருகிறது என உங்களுக்குத் தெரியுமா என்றார் , தெரியவில்லை. கடும் பச்சையில் உள்ளது தேயிலை பறிக்கப் பட்டது , மென்பச்சையிலானது கொழுந்துகள் பறிக்க காத்திருப்பவைகள். பொதுவாக சிவப்பு நிற மண்ணில் தான் தேயிலை பயிரிட முடியும் அதற்கு மண்ணில் இயற்கையிலேயே அமிலத்தன்மை சற்று கூடுதலாக இருக்க வேண்டும் , மேலும் தேயிலை பயிரிடுதல் மண் அரிப்பை தடுக்கும் , ஆண்டுக்கு சுமார் கால் அடி அதன் நில மட்டம் உயரும் என்றார் ருசிகரமான தகவல் இது. ராய் ஆப்ரிக்காவில் தேயிலை பயிரிட்டவர், நிபுணர், தேயிலை குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.
அவருக்கு காந்தி பற்றி ஒரு உயர்ந்த மதிப்பு இருப்பதாகப் படுகிறது. லண்டனில் ஒரு மாநாட்டுக்கு காந்தி தனது நண்பருடன் ஆஸ்டின் காரில் வந்து இறங்குகிறார் , பின்னிருக்கையில் ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு ஆடு, தேவைப் படும்போது தானே பால் பீய்ச்சி குடித்துக் கொள்வார், இது ஒரு கிறுக்கா குறியீட்டு செயலா எனத் தெரிய வில்லை , உடல் முழுவதும் சேற்றை அப்பிக் கொண்டு பிரபுவை சந்திக்கச் சென்ற திமிரை நினைத்தேன் , இதை எல்லாம் அவர் வேண்டும் என்றே தான் செய்திருக்கிறார்.
பிரிட்டன் ஏன் உலகை ஆண்டது , அதற்கென தன்னியல்பான சிறப்புத் தகுதி ஏதேனும் உண்டா எனக் கேட்டேன், அந்த சிந்தனையில் அவருக்கு நம்பிக்கை இல்லை எனவும் , பிரிட்டன் தனது கப்பல் படை பலத்தால் தான் உலகை வென்றது , அவ்வாற்று தனது கப்பல் படையை வலிமைப் படுத்தும் கட்டாயத்தை போதுகீசியர்களும் , டச்சுக் காரர்களும் , ஸ்பானியர்களும் ஏற்படுத்தினர். படை எடுப்பில் இருந்து தப்பவே பிரிட்டன் கபற்படை தொடர்ந்து பலப் படுத்தப் பட்டது , பின்னர் எப்படியோ காலனியாதிக்கத்திற்கு வழியமைத்தது என்றார். ஒரு வரியில் சொல்லப் போனால் போர்துகீசியர்களின் மீதுள்ள அச்சமே பிரிட்டன் உலகை வெல்ல காரணமாக அமைந்தது என்றார் , ஆச்சர்யமான நோக்கு இது.
தான் படித்த முக்கயமான புத்தகங்களை குறிப்பிட்டு சொன்னார் , அவற்றில் முக்கியமானது Lockwood இன் six legged soldiers. ஜப்பான், கொரியா மீதும் , சீனா மீதும் ஏவிய உயிரியல் யுத்தம் பற்றியது அது. plague நோயைப் பரப்ப ஜப்பான் முதலில் போரில் பிடித்த பிணையக் கைதிகள் மீது plague நோயை பரப்புவார்கள், பின்னர் அவர்களுக்கு உணவிடாமல் அவர்கள் மீது கிருமிகளை ஏவுவார்கள் , கிருமிகள் பூச்சிகள் ஈசல்கள் போன்றவை அவர்கள் மீது படிந்து ரத்தத்தை உறிஞ்சி பூசிகள் கொழுக்கும் பினையக்கைதிகள் சோகையாகி ரத்தம் சுண்டி நான்கைந்து நாட்களில் இறப்பார்கள். அவர்கள் மீது படிந்திருக்கும் பூசிகளை சேகரித்து ஒரு உருண்டையாக திரட்டுவார்கள் ,இது எலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இவைகளை சீனாவிலும் , கொரியாவிலும், பிற தூரக் கிழக்கு நாடுகளிலும் மேலிருந்து வீசுவார்கள், அது கீழே விழுந்து வெடித்துப் பரவும் , இது ஏற்படுத்திய அழிவு என்பது யூத பேரழிவை விட அதிகம் , குறைந்தபட்சம் ஹிரோஷிமா அழிவை விட இரு மடங்கு. முன்னரே தேனீக்களை போரில் பயன்படுத்தியதையும் இந்நூல் விவரிக்கிறது என்றார் , கோட்டை முகப்பில் ,தாழ்வாரங்களில் தேனீக் கூட்டை வளர்ப்பார்கள் , கோட்டையை பிடிக்க மேலேறும்போது இந்த கூட்டைக் கலைபார்கள் , எதிரிகளை படையெடுத்துக் தேனீக்கள் கொட்டும். அம்பு முனையிலும் தேனடைகளை பொருத்தி எய்கிற வழக்கமும் உண்டு . 2000 ஆண்டுகளாக இது வளர்ந்து இப்படி ஒரு உயிரியல் யுத்தமாக முன்னேறி இருக்கிறது என்றார். இது பற்றி எந்த ஒரு ஹாலிவுட் படமும் வந்ததில்லை என குறைபட்டுக் கொண்டார்.
அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர் என்பதால் , பல்வேறு வண்ண மயமான அனுவம் கிடைக்கப் பெற்றவர் , அவற்றையும் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை எத்தியோப்பியாவில் இருந்து சூடான் செல்வதற்காகக ஒரு பெட்ரோல் பம்பில் 3 நாட்கள் தங்க நேரிட்டது , பெட்ரோல் லாரி வந்ததும் அதில் லிப்ட் கேட்டு செல்லலாம் . கூட ஒரு பெல்கியத்தைச் சேர்ந்தவர் தங்கி இருந்தார் ,தான் வேலை இல்லாததால் அரசிடம் ஒய்வூதியம் பெற்று காலம் தள்ளுவதாகச் சொன்னார் , ஆனால் லாரியில் ஏறியதும் தனது பையைத் திறந்தார் , கட்டு கட்டாக பணம். நகைத்துக் கொண்டே நான் செய்யும் தொழிலை அரசு அங்கீகரிக்காது , நான் பெல்ஜியத்தில் தேவாலயங்களை கொள்ளை அடிப்பவன் , பின் சுற்றுலா செல்பவன் என்றார் . அவரிடம் போலியான முகவரியை கொடுத்துவிட்டு ஊர் திரும்பிய ஒரு மாதத்தில் அவர் பெல்ஜியத்தில் போலீசாரிடம் பிடிபட்ட செய்தியைப் படித்ததாக சொன்னார்.
அவர் தினமும் குறிப்புகள் எடுக்கக் கூடியவர், எது தேவை எது தேவை இல்லை என அப்போது எனக்குத் தெரியாது , பின்னர் இந்த சாதாரண நபர்கள் ஒரு கொலையோ , கொள்ளையோ செய்யும் பொது சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள் என சிரித்துக் கொண்டே சொன்னார்.
அவருக்கு பூலான் தேவியுடன் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது , ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார் , சாம்பலில் தங்கி இருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் அவருக்கு நிறைய நட்புகள். கேரளா அவர் விரும்பும் இடம். இந்தியா பயணிக்க மிக பாதுகாப்பானது எனச் சொல்கிறார் , பாஸ்போட் /விசா அடங்கிய பையை கீழே வைக்க மாட்டேன் என்கிறார்.
ஆர்வத்துடன் பறவைகளை பார்க்கிறார் , சில பறவைகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார் , 40 ஆண்டுகளாகப் பயணித்து சோர்ந்து விட்டார் , இன்னும் 5 ஆண்டுகள் பயணித்து விட்டு 80 இல் விடை பெறப் போகிறேன் என்றார் , அவரின் அடுத்த பயணம் குஜராத்தில் Raan of kutch.
கிருஷ்ணன்