‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40

பகுதி 9 : பெருவாயில்புரம் – 3

துவாரகைக்குச் செல்லும் நீண்ட கற்பாளச்சாலையில் நடக்கும்போது சாத்யகி ஏன் கைகளை கோர்த்துக்கொள்ளச் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்தான். தொழும்பர்களாக வந்தவர்கள் அனைவருமே ஒரு பெருநகரை முதன்முறையாக பார்ப்பவர்கள். அவர்களால் இரண்டுபக்கத்தையும் நோக்கி விழிதிகைக்காமலிருக்க முடியவில்லை. பெருகிச்சென்றுகொண்டிருந்த கூட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு சென்றபோதிலும் அவர்கள் முட்டிமோதி தடுமாறினர். இரண்டுமுறை கைச்சங்கிலி உடைந்து மூவர் நெரிசலில் தவறிச்சென்றனர். பின்னால் வந்த வீரர்கள் அவர்களைப் பிடித்து மீண்டும் மந்தையில் சேர்த்தனர்.

சாத்யகியும் இருபக்கங்களையும் நோக்கியபடி வந்தான். சீராக நடப்பட்ட மலர்மரங்களும் வேப்பமரங்களும் செறிந்த சோலைக்குப்பின் காவல்நாயகங்களின் மாளிகைகள் வரத்தொடங்கின. அனைத்துமே உருண்ட பெரிய தூண்கள் கொண்ட முகப்பும் உப்பரிகை நீண்ட மாடமும் திரைச்சீலைகள் ஆடிய பெருஞ்சாளரங்களும் கொண்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் முன்னால் வணிகர்களும் வீரர்களும் நிரைவகுத்து நின்றிருந்தனர். மாளிகைகளின் முகடுகளில் யாதவர்களின் கருடக்கொடி பறந்தது. மாளிகைக்கு முன்னால் அந்தந்தக் காவல்நாயகத்திற்குரிய கொடிகள் பறந்தன. நண்டு, ஆமை, எருமைக்கொம்பு, வில், பற்சக்கரம், நங்கூரம், குதிரை, வளைதடி என வகைவகையான குறிகள். ஒவ்வொன்றிற்கும் தனிப்பொருள் இருக்கும் என சாத்யகி எண்ணிக்கொண்டான்.

துவாரகை உயரமான குன்று என்பதை சாத்யகி சற்றுநேரம் கழித்தே அறிந்தான். முழுக்குன்றும் நகரமாக மாறியிருந்தது. பாலையின் நிரப்பையே சார்ந்த தோரணவாயிலுக்கும் முகப்புச்சாலைக்கும் அப்பால் அரைஆள் உயரத்தில் இரண்டாவது அரசபாதைச்சுற்று இருந்தது. மக்கள் செல்ல மிகநீளமான பன்னிரு படிகள் மையத்தில் இருக்க இருபக்கமும் பாதையே வளைந்து சுழன்று மேலேறிச்சென்றது. அதில் வலப்பக்க வளைவில் தேர்களும் புரவிகளும் செல்ல இடப்பக்கம் வழியாக வண்டிகளும் பொதிவிலங்குகளும் சென்றன. வலப்பக்கப்பாதை நேராக அரசவீதியின் பெருமுகப்பை அடைந்தது. இடப்பக்கப்பாதை அங்காடிகளை நோக்கி சென்றது.

அங்காடியிலிருந்து போரோ பெருவிழவோ நிகழ்வதுபோல முழக்கம் எழுந்துகொண்டிருந்தது. தொலைவில் என எழுந்த கடலோசையுடன் அது முழுமையாக இணைந்து ஒலித்தது. துவாரகைக்குமேல் கடல்துமிகள் பொழியும் என்பது வெறும் கதை என சாத்யகி உணர்ந்தான். கடல் மிக ஆழத்தில் எங்கோதான் இருந்தது என தோன்றியது. அங்கிருந்து ஓசைகூட பெரிதாக மேலெழவில்லை. கடலோரமாகவே அங்காடிகள் அமைந்திருந்தன. அங்காடிகளிலிருந்து சாலைகள் இறங்கி துறைமுகம் நோக்கி செல்லக்கூடும். சாத்யகி அதுவரை கடலையே பார்த்திருக்கவில்லை. அவன் பார்த்த காம்பில்யத்தின் கங்கைத்துறைமுகமே நெடுநேரம் அவனை திகைத்து நெஞ்சமையச் செய்தது. “இதைவிட ஆயிரம்மடங்கு பெரியது துவாரகையின் துறைமுகம். இங்குள்ள அத்தனை படகுகளையும் அள்ளி அங்கு வரும் ஒரு பீதர்நாவாயின் உள்ளே வைக்க முடியும்” என்றார் அவனுடன் நின்று காம்பில்யத்தைப்பார்த்த முதிய யாதவரான பிரதீபர்.

அரசப்பெருவீதியின் இருபக்கமும் ஏழடுக்கு மாடங்கள் நிரைவகுத்திருந்தன. முதல்பார்வைக்கு அவை ஒன்றுபோலிருக்கும்படி கட்டப்பட்டிருந்தாலும் மெல்ல மெல்ல அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டவை என சாத்யகி கண்டுகொண்டான். மிகப்பெரிய உருண்டதூண்களை அவன் கூர்ந்து நோக்கினான். அத்தனை பெரிய மரங்களை எங்கிருந்துகொண்டுவந்தனர் என எண்ணி வியந்தபின்னர்தான் அவை மரங்களல்ல சுதைபூசப்பட்ட செங்கல்தூண்கள் என தெரிந்துகொண்டான். தூண்கள் லவணர்கள் வாசிக்கும் இரட்டைப்புல்லாங்குழல்கள் போல இணைந்து நின்றிருந்தன. தூண்களுக்குமேல் அமைந்திருந்த உத்தரமுகப்பில் கன்னம் கொழுத்த குழந்தைகளும் பெண்களும் குவிந்த உதடுகளுடனும் சுருள்முடிகளுடனும் செதுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியை சுருண்டு சுருண்டு பரவிய அவர்களின் ஆடைகள் நிறைத்திருந்தன.

அவனுடன் கைகோர்த்திருந்த கரிய மலைமகன் “அவை பூதங்கள் யாதவரே. இரவில் இந்த மாளிகைகளின் கதவங்களை மூடிவிடுவார்கள். நுண்சொற்களின் கட்டவிழ்ந்ததும் இவை அனைத்தும் எழுந்து காற்றை நிறைத்து இத்தெருக்களை காவல் காக்கும்” என்றான். “ஆனால் அவை அழகியவை. இளம்பெண்களும் குழந்தைகளும்” என்றான் சாத்யகி. “ஆம், அவை பகலில் அப்படித்தான் தோற்றமளிக்கும். இரவில் அவை கொடுவுருக் கொள்ளும். அவற்றின் உதடுகளைப் பாருங்கள். அவை தப்பி ஓடும் அடிமைகளின் குருதியை உறிஞ்சுபவை.” அவனுடைய பெரிய வெண்ணிற விழிகள் ஒடுங்கிய கரிய முகத்தில் பிதுங்கித்தெரிந்தன.

“தப்பி ஓடும் அடிமைகளை இவை கொன்று போட்டிருக்கும். அவர்கள் குருதி இழந்து வெளுத்து விரைத்துக்கிடப்பார்கள். இரவில் உதிர்ந்த களாப்பழங்களைப்போல அவர்களின் உடல்களை காலையில் அள்ளி வண்டிகளில் கொண்டுசெல்வார்கள். அங்கே துறைமேடைகளுக்கு அப்பால் ஒரு பெரிய கடல்பாறை உள்ளது. அங்கு கொண்டுசென்று சடலங்களை போட்டுவிடுவார்கள். நீள்கழுத்துக் கழுகுகள் அவற்றை கொத்திக்கிழித்துண்ணும். பழகிய கழுகுகள் அவை. அவற்றைத்தான் இங்கே செய்திப்பறவைகளாக பயன்படுத்துகிறார்கள்.”

“இவற்றை எங்கிருந்து அறிந்தீர்?” என்றான் சாத்யகி. “யாதவரே, நான் தட்சிணமாளவத்தின் காட்டிலிருந்து வருகிறேன். நாங்கள் வராலத மலைக்குடியினர். நாங்கள் நூற்றறுபதுபேர் அங்கிருந்து கிளம்பினோம். நாற்பத்தெட்டுநாட்கள் காடுகளிலும் பாலையிலும் நடந்தோம். இங்கு எழுபத்தாறுபேர் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறோம்” என்றான். சாத்யகி வியப்புடன் திரும்பி பிறரைப் பார்த்தான். அவனைப்போலவே பெரிய வெண்ணிற விழிகளும் சிறிய கருமுகமும் கொண்டிருந்தனர்.

“என் பெயர் கரன். எங்களில் நான் மட்டுமே தொல்மொழி பேசுவேன். மலைகளில் வாழ்கையில் மாளவ வணிகர்களிடம் மலைப்பொருள் விற்றுக்கொண்டிருந்தேன். இங்கு வரும் வழியெல்லாம் இக்கதைகளைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.” சாத்யகி ”அதன்பின்னரும் ஏன் இங்கு வந்தீர்?” என்றான். ”நாங்கள் செல்வதற்கு வேறு இடமில்லை. அங்கே மாளவர்களின் படைகள் எங்கள் காடுகளை கைப்பற்றிக்கொண்டிருக்கின்றன. எங்கள் குடிகள் சிதறிக்கொண்டிருக்கிறார்கள்.”

சாத்யகி “நீங்கள் ஏன் அவர்களை எதிர்த்துப்போராடக்கூடாது?” என்றான். “நாங்கள் எப்போதுமே போராடியதில்லை… காடுகள் எங்களுக்கு அதை கற்றுத்தரவில்லை. எங்கள் தெய்வங்கள் நாங்கள் போரிடுவதை விரும்பவுமில்லை.” சாத்யகி “இங்கு இந்த அடிமைக்குறியை பெறுவதற்கா அத்தனை தொலைவுக்கு வந்தீர்கள்?” என்றான். “அடிமை என்பவன் தன் உரிமையாளரால் பாதுகாக்கப்பட்டவன் அல்லவா?” என்றான் கரன். “இங்கே நாங்கள் தேடுவது பசியற்ற வாழ்க்கை. சவுக்குகள் எங்களை ஆண்டாலும் எங்கள் உயிர் பேணப்படும் அல்லவா?”

பாதை மேலும் வளைந்து அடுத்த சுழலை அடைந்தது. மேலும் மேலுமென நகரம் ஏறிச்சென்றுகொண்டே இருந்தது. கீழே நோக்கியபோது மாளிகைகளின் பலவண்ணக் கூரைகள் முதிர்காலையின் வெண்ணிற ஒளியில் மின்னிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. மேலே செல்லும்தோறும் கடற்காற்றின் விரைவு கூடிவந்தது. சாத்யகியின் கூந்தல் எழுந்து பறந்தது. அவன் கைகளை விட்டுவிட்டு கூந்தலை அள்ளி முடிச்சிட்டுக்கொண்டான். ஒரு வீரன் “கைகளை விட்டுவிடாதே” என்று எச்சரித்தான்.

துவாரகை அப்போதுதான் மெல்லமெல்ல விழித்தெழுந்துகொண்டிருந்தது. அது துயிலாநகரம் என்று யாதவப்பாடகர்கள் சொல்வதுண்டு. அங்கே வணிகம் முழுக்க இரவில்தான் நிகழும். இரவெல்லாம் விழித்திருந்த வணிகர்கள் முற்பகல் முழுக்க துயில்வார்கள். அவர்களின் வினைவலரும் ஏவல்மாக்களும்கூட வெயில்சாய்ந்தபின்னரே எழுவர். நகர்க்குடிகளில் வணிகர்களே மிகுதி என்பதனால் காலையில் எழுந்து கடமையாற்றுபவர்கள் அரசப்படையினரும் அலுவலர்களும்தான்.

சாலைநிறைத்து சென்றுகொண்டிருந்தவர்களின் முகங்களை நோக்கியபடி சாத்யகி சென்றான். காலையிலேயே நீராடி உயர்தரமான பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். மரவுரியணிந்த பிற எவருமே கண்ணுக்குப்படவில்லை. பல வண்ணங்களில் பல வடிவங்களில் தலைப்பாகைகள். முகப்பில் கருடக்குறி கொண்டவர்கள் அனைவரும் அரசப்பணியாளர்கள் என்று தோன்றியது. சிலர் பொன்னிலும் சிலர் வெள்ளியிலும் சிலர் செம்பிலும் அக்குறிகளை அணிந்திருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசியபடி விரைந்து சென்றவர்கள் அவர்களை ஆர்வமற்ற விழிகளால் நோக்கி திரும்பிக்கொண்டனர்.

மாளிகை முகப்புகளிலெல்லாம் சிறுமுரசுகள் அமைந்த மேடைகளில் கொம்பூதிகளும் கோல்காரர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செந்நிறமான புருவங்களும் பச்சைப்பளிங்கு விழிகளும் புண்போன்ற வாய்க்குள் கூழாங்கல் நிறப் பற்களும் கொண்ட யவனக் காவலர்கள் தங்கள் யவன வேல்களைப்பற்றியபடி துயில் எஞ்சிய விழிகளுடன் காவல் நின்றனர். அவர்களை பணிவிடுவிக்கும் பகல்காவலர்கள் வந்திருக்கவில்லை.

சாலையில் எங்கும் யானைகள் இல்லை. துவாரகையிலேயே யானைகள் கண்ணுக்குப்படவில்லை என அதன்பின்னர்தான் உணர்ந்தான். அங்கே நின்ற பச்சைமரங்கள் அனைத்துமே நட்டு வளர்க்கப்பட்டவை. புல்வெளிகளும் காடுகளும் இல்லாத அவ்விடத்தில் யானைகளுக்கு உணவு கொடுப்பது கடினமாக இருக்கலாம். அப்படியென்றால் துறைமேடையில் பொதிகளை நாவாய்களில் எப்படி ஏற்றுகிறார்கள்? யானைகள் துறைமுகத்தில் மட்டும் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவை அங்கிருந்தால் நகரிலும் தென்படாமலிருக்காது.

புரவிகளும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. கங்காவர்த்தத்தின் புரவிகள் முதுகுபரந்து வயிற்றின் அடிப்பக்கம் வளைந்து இரட்டை மார்புடன் முரசுமுழக்கும் முழைக்கோல் போன்ற குளம்புகளுடன் இருக்கையில் துவாரகையின் புரவிகள் கிளியலகு போன்று கூரிய குளம்புகளுடன் சவுக்குபோலச் சுழன்ற கால்களுடன் ஒடுங்கி நீண்ட உடலும் மிகநீளமான கூர்முகமும் எப்போதும் நடுங்கி அசையும் சிறியகாதுகளும் கொண்டிருந்தன. அவற்றில் அமர்ந்த வீரர்கள் எடையற்ற சிறிய விற்களை தோளில் மாட்டி கடிவாளத்தைப்பற்றாமல் சரிந்து அமர்ந்து பேசிக்கொண்டு சென்றனர்.

ஏழாவது சுற்றில் மீண்டும் கோட்டைவாயில் வந்தது. அங்கே நின்றிருந்த யவனக்காவலர் அவர்களைக் கொண்டுவந்த வீரர்களிடம் ஒப்புச்சான்றுகளைப் பெற்று உள்ளே அனுப்பினர். இருபக்கமும் நின்ற மாளிகைகள் அனைத்துமே வெண்ணிறமான குவைமுகடுகள் கொண்டவையாக மாறின. அல்லிமொட்டுகள் எழுந்த குளம் போன்றது துவாரகை என்ற யாதவர்களின் பாடலை சாத்யகி நினைவுகூர்ந்தான். மேலே கிருஷ்ணனின் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து நோக்கும்போது அப்படி தெரியலாம். அதைப்பாடிய பாணன் அங்கு நின்று பார்த்திருக்கலாம். பாணர்கள் காற்றுபோல், எங்கும் செல்லும் வல்லமைகொண்டவர்கள்.

பதினெட்டாவது அடுக்கில் மீண்டும் அரண்மனையின் கோட்டைமுகப்பு வந்தது. பெருவாயில் வெண்கலக்குமிழிடப்பட்ட மரக்கதவால் மூடப்பட்டிருந்தது. திறந்திருந்த திட்டிவாயில் வழியாகவே அரசப்பணியாளர் உள்ளே சென்றனர். வாயிலின் இரு பக்கமும் பொறிக்கப்பட்டிருந்த பொன்பூசப்பட்ட சங்குசக்கரத்தையும் நடுவே எழுந்த உச்சி வளைவில் தழல்நிறமான சிறகுவிரித்த செங்கழுகின் சிற்பத்தையும் நோக்கி சாத்யகி சிலகணங்கள் கால் மறந்து நின்றான். கழுகின் செங்கனல் விழிகள் அவனை நோக்கின. பொன்னிறமான அலகு சற்றே திறந்திருந்தது.

உச்சியில் யாதவகிருஷ்ணனின் மாளிகை பெரிய வெண்முகைக்கூட்டம் போல குவைமுகடுகளுடன் எழுந்து நின்றது. அவற்றில் பறந்த நூற்றுக்கணக்கான கொடிகளின் படபடப்பை விழிதூக்கி நோக்கினான். வானொளியில் கண்கூசி விழிநீர் நிறைந்து காட்சி மறைந்தது. “இவ்வழி செல்க!” என்று வீரன் அவர்களுக்கு அறிவுறுத்தினான். கோட்டைக்கு இடப்பக்கமாகச் சென்ற பெரிய பாதையில் அவர்கள் திரும்பி நடந்தனர். அங்கிருந்த மாளிகைகளின் வெண்ணிறச் சுவர்ப்பரப்பில் அரண்மனைமுகடுகளின் குவைநிழல்கள் தெரிந்தன. தரையில் கொடிகளின் நிழல்கள் அசைவதைக் கண்டு சாத்யகி கால்பதறினான். கொடிகளை மிதிக்காமல் அவன் விலகிச்செல்ல பிறர் அவனைக்கண்டு அதேபோல விலகி நடந்தனர்.

பெரிய முகமண்டபம் கொண்ட வினைநாயகத்தின் மாளிகை முகப்பை அவர்கள் சென்றடைந்தனர். கைகளை விட்டுவிட்டு நிரைவகுத்து நிற்கும்படி வீரர்கள் ஆணையிட்டார்கள். கருங்கற்பாளங்கள் பரப்பப்பட்ட முற்றத்தில் வெயில் கண்கூசும்படி பரவியிருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் கீழே மாளிகைகள் முகடுகளில் விரிந்த பீதர்களின் ஓடுகள் வெயிலில் மின்ன கங்கைநீர்ப்பரப்பின் அலைவெளி போல தெரிந்தன. ஒவ்வொரு மாளிகையையும் சூழ்ந்திருந்த மலர்மரங்களின் நிழல்கள் நீர்ப்பாசிப்பரப்புகள் என காற்றில் நெளிந்தன.

தெற்குத்திசையிலிருந்து காற்று சுழன்றடித்து ஆடைகளை படபடக்கச்செய்தது. உப்புமணம் கொண்ட குளிர்காற்று. அங்குதான் கடல் இருக்கிறது என சாத்யகி எண்ணிக்கொண்டான். மிகப்பெரிய கோட்டை ஒன்றால் அத்திசை பாதியளவு மறைக்கப்பட்டிருந்தது. திசைகளை இணைத்துக் கட்டியதுபோல இடைவெளியே இல்லாமல் கட்டப்பட்ட சற்றே வளைந்த அக்கோட்டைவாயிலை அவன் விழியிமைக்காமல் நோக்கிக்கொண்டு நின்றான்.

அதன்பின்னர்தான் அக்கோட்டைப்பரப்பின் மேல் ஒரு வெண்ணிற மலர்வடிவை சாத்யகி கண்டான். அடுத்த சிலகணங்களில் அது கப்பலென்று அறிந்தான். உடனே அந்த நீலநிறமான கோட்டை மாபெரும் நீர்வெளி என்று தெரிந்து உடல்சிலிர்த்தான். அலைகளின் நெளிவை காணமுடிந்தது. விழிவிரித்து இருபக்கமும் மாறிமாறி முகம்திருப்பி கடலையே நோக்கினான். நூற்றுக்கணக்கான நாவாய்களை காணமுடிந்தது. வெண்மலர்க்கொத்துபோல ஏராளமான பாய்களை விரித்த பெருநாவாய்கள். இளஞ்செந்நிறத்தில் பாய்கள் புடைத்த மரக்கலங்கள். இறகைத் தூக்கி ஒருக்களித்து நீந்தும் மீன்போன்ற அம்பிகள். ஒவ்வொன்றையும் அவன் பாடல்கள் வழியாக அறிந்திருந்தான். ஒவ்வொன்றும் வேறாக இருந்தன. பாடல்வரிகள் எங்கோ என ஒலித்தன. ஆனால் சிலகணங்களில் அந்த வரிகளனைத்தும் அப்போது அங்கே கண்டவற்றால் பொருளேற்றம் கொண்டன.

“பெரிய கோட்டை” என்றான் கரன். “அது கடல்” என்று சாத்யகி சொன்னான். “கடலா?” என்றான் கரன் திகைப்புடன். “ஆம், அது நீர்தான்… கூர்ந்து பாரும், அலைகளை காணமுடியும்.” கரன் மேலும் திகைப்புடன் வாய்திறந்து நழுவி விழுந்துவிடுமென துருத்திய விழிகளுடன் நோக்கி பெருமூச்சுவிட்டான். “ஆம், நீர்தான்” என்றான். “அது ஏன் அங்கே நின்றிருக்கிறது? ஏன் பெருகிவந்து இவ்விடத்தை நிறைக்கவில்லை?” சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென எண்ணியபோதே கரன் “யாதவ கிருஷ்ணனின் ஆணை. நீரையும் காற்றையும் அவன் ஆள்கிறான்” என்றான்.

பின்னால் நின்றிருந்த அவன் குலத்தினர் உரக்க ஏதோ கேட்க அவன் அவர்களின் மொழியில் மிகவிரைவான சொற்களுடன் விளக்கத் தொடங்கினான். அனைவரும் இணைந்து குரலெழுப்ப பறவைகள் கலைந்ததுபோல ஓசை எழுந்தது. காவலன் “ஓசையிடாதீர்கள். காவலர்தலைவர் வருகிறார்” என்றான். அவர்கள் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. சாத்யகி கீழிருந்து பெரிய கலம் ஒன்று புடைத்த பாய்களுடன் நீர்வெளியில் மேலேறுவதைக் கண்டான். அதன் பாய்கள் மட்டுமே மேலே தெரிந்தன. முழு உடலும் அலைகளுக்குள் மூழ்கியதுபோல தோன்றியது.

உள்ளிருந்து நடுவயதான ஒருவர் விரைந்து முற்றத்திற்கு வந்து “சாத்யகி எங்கே? இங்கே சாத்யகி யார்?” என்று கூவினார். சாத்யகி “இங்கிருக்கிறேன் அமைச்சரே” என்றான். அவர் மணிக்குண்டலங்கள் அணிந்து நீண்ட குழலுடன் இருந்தார். பொன்னூல் பின்னிய பட்டுச்சால்வையை அள்ளிப்போட்டபடி அவனை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்து “நீயா? மூடா, நீ விருஷ்ணி குலத்தவனல்லவா? நீ ஏன் இந்த நிரையில் நின்றாய்?” என்றார்.

அவன் மறுமொழி சொல்வதற்குள் அவர் வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “நான் யாதவனின் தோழன் ஸ்ரீதமன். இங்கு முறையமைச்சன். விருஷ்ணிகுலத்தவன் நீ என சற்றுமுன்னர்தான் ஓலைக்குறிப்பை நோக்கி அறிந்தேன் மிகவும் தற்செயலாக… இல்லையேல் நான் காணாமலேயே போயிருப்பாய்… நல்லூழ்தான். மிகப்பெரிய நல்லூழ்தான்…”

சிரிப்பும் கொந்தளிப்புமாக அவன் தோளைப்பற்றி உலுக்கினார். “யாதவ மாமன்னரின் மருகன் நீ. இப்படியா வருவது? உன் தந்தையின் ஓலையுடன் வந்திருந்தால் உன்னை வரவேற்க ஏழு அமைச்சர்கள் தோரணவாயிலுக்கு வந்திருப்பார்களே?” என்றார். சாத்யகி “தந்தையின் ஓலையுடன்தான் வந்தேன் அமைச்சரே. அதை இளையயாதவரிடம் பின்னர் கொடுக்கலாமென நினைத்தேன்” என்றான்.

“மூடா மூடா” என்று கூவிய ஸ்ரீதமர் அவன் தோளை நோக்கி “தொழும்பர்குறி….” என்றார். சாத்யகி அதை நோக்கியபின் “இருக்கட்டும். நான் என்றென்றும் இளையயாதவரின் அடிமை. அதற்குமேல் இங்கே நான் எதையும் விழையவில்லை” என்றான். ஸ்ரீதமரின் கண்கள் கனிந்தன. “ஆம், நீ விருஷ்ணிகுலத்தோன். அந்த உளவிரிவை உன்னிடம் காண்பதில் வியப்பில்லை. வருக… அரசர் உன்னை சந்திக்கட்டும்” என்று அவன் தோள்களை அணைத்துக்கொண்டார்.

கரன் அவன் கைகளைப்பற்றி “யாதவரே, யார் இவர்? எங்கு கொண்டுசெல்கிறார்? தனியாக செல்லவேண்டியதில்லை. தகுதியற்ற தொழும்பர்களை உடனே கொன்றுவிடுகிறார்கள் இங்கே” என்றான். “இல்லை, இவர் என் உறவினர்” என்றான் சாத்யகி. “உறவினரா? உமக்கா?” என்றான். “பொய் சொல்கிறார்கள் யாதவரே, செல்லாதீர். எங்கள் குடியுடன் இணைந்து நின்றுகொள்ளும்.”

ஸ்ரீதமர் “இவர் யார்? உனது தோழரா?” என்றார். “ஆம், இந்நிரையில் அறிமுகமானவர் இவர். மாளவத்தின் வராலத குலத்தைச் சேர்ந்த மலைமகன். கரன் என்று பெயர்… பின்னால் நிற்பவர்கள் அனைவருமே அவரது குலத்தவர்தான்” என்றான் சாத்யகி. “மாளவர்களின் படைகளை அஞ்சி இங்கு வந்து தொழும்பர்களாக சேர்ந்துவிட்டார்கள்.”

ஸ்ரீதமர் புன்னகையுடன் “வராலதரே, இங்கு தொழும்பர் என எவரும் இல்லை. இங்கு குலமுறைப் பதிவுக்குப்பின் நீங்கள் அரண்மனையின் அலுவலர்களுக்கு நிகராகவே நடத்தப்படுவீர். மானுடரை விலங்குகள் போல் சவுக்காலடிப்பதும் விற்பதும் பிறவகையில் அவமதிப்பதும் இங்கில்லை” என்றார். கரன் தெறிக்கும் விழிகளுடன் நோக்கி “ஆனால்…” என்றான். “பாரதவர்ஷத்தில் எங்கும் தொழும்பர்முறை என்பது ஒன்றே. இங்கே நாங்கள் தொழும்பர்களைப் பெறுகிறோம். அவர்களை குடிகளாக ஆக்கிக்கொள்கிறோம். இங்குள்ள அனைவரும் புகலிடம் தேடிவந்தவர்களே. வந்தபின் அனைவரும் இளையயாதவரின் தோழர்கள்” என்றபின் சாத்யகியிடம் “வருக” என்றார் ஸ்ரீதமர்.

சாத்யகி அவருடன் சென்றபடி “இங்கே தண்டம் இல்லை என்றால் ஒழுங்கு எப்படி வரும்?” என்றான். ஸ்ரீதமர் “தண்டம் இல்லை என எவர் சொன்னது? இளைய யாதவர் கூரிய படைவாள் போல இரக்கமற்றவர் என அனைவரும் அறிவர். ஆனால் முறையான மன்றுசூழ்தலுக்குப்பின் பிழை வகுக்கப்பட்டு அதற்குரிய தண்டமே அளிக்கப்படும்” என்றார். “இந்நகரம் முற்றிலும் புதியது யாதவரே. இங்குள்ள நெறிகளும் புதியவை. ஏழ்கடல் சூழ்ந்த பேருலகமெங்குமிருந்து புதியவை இங்கு வந்துகொண்டிருக்கின்றன.”

“இந்தப்புரவிகள் சோனகநாட்டிலிருந்து வருபவை. இந்த வெண்பளிங்குச் சிற்பங்கள் யவனர்களுடையவை. இந்த யானைத்தந்தச் செதுக்குகள் காப்பிரிநாட்டைச் சேர்ந்தவை. அந்த வெண்களிமண் தூண்கள் பீதர்களால் கொண்டுவரப்பட்டவை. நீர் இங்கு பேசப்படும் மொழியையும் நோக்கலாம். அதுவும் அனைத்து மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெற்று உருவானதே. அதை மணிமிடைபவளம் என இங்கு சொல்கிறோம்.”

அவனை அவர் அருகே இருந்த இன்னொரு மாளிகைக்குள் செல்லும் நீண்ட இடைநாழி வழியாக அழைத்துச்சென்றார். “ஒவ்வொருநாளும் இந்நகரம் பெருகிவருகிறது. எத்தனை மக்கள் வந்தாலும் திகையாதபடி எங்கள் தேவைகளும் பெருகுகின்றன. இங்கு துவாரகைக்கு மேல் இன்று நாங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வாழ்கிறோம். வணிகம் பெருகி நகரம் விரிய விரிய கோடையில் குடிநீர்ப்பஞ்சம் பேரிடராக உள்ளது” என்று ஸ்ரீதமர் சொன்னார். “தெற்கே பத்து காதம் தொலைவிலிருக்கும் குரங்கசாகரம் ஏரியிலிருந்து நீர் மொண்டு நாவாய்களில் ஏற்றி இங்கே கொண்டுவருகிறோம். இந்நகரின் பெரும்செல்வமும் மானுட உழைப்பும் ஒவ்வொரு நாளும் அதற்காக வீணாகிறது.”

சாத்யகி அந்த மாளிகையின் விரிந்த அறைகளை நோக்கியபடி சென்றான். ஒவ்வொரு அறையிலும் சுவடிநாயகங்கள் சொல்வதை இரண்டுமுழ உயரமுள்ள சிறிய சாய்ந்த பீடங்களுக்குப்பின்னால் தரையில் தோல் விரித்து அமர்ந்த கற்றுச்சொல்லிகள் தலைப்பாகை தெரிய குனிந்து பீதப்புல் ஏடுகளில் தூவல்முனைகளால் பளிங்குக் குடுவையில் இருந்து மைதொட்டு எழுதிக்கொண்டிருந்தனர். எழுதப்பட்ட புல்லேடுகள் பலகைகளில் காயவைக்கப்பட்டிருந்தன. ஏடுகளையும் இலச்சினைகளையும் குறியொப்புச்சுவடிகளையும் கொண்டு நூலேந்திகள் அறைகளில் இருந்து அறைகளுக்கு காற்றுபோல ஓசையின்றி சென்றுகொண்டிருந்தனர்.

”ஆகவேதான் ஒரு பெருந்திட்டத்தை தொடங்கவிருக்கிறோம்” என்றார் ஸ்ரீதமர். ”குரங்கசாகரத்தில் வந்துசேரும் கோமதி ஆற்றை மூன்று பெருங்குன்றுகளால் தடுத்து துவாரகைக்கு அருகே கொண்டுவரலாமென்றனர் சிற்பிகள். மூன்றுவருடங்கள் அதன் வழியை ஆராய்ந்து பிருத்விசூத்ராகிகள் அதற்கான வாஸ்துமண்டலத்தையும் வரைந்தளித்துவிட்டனர். வினைவலர் சேர்ந்ததும் இந்தக்கோடையிலேயே பணிகளை தொடங்கிவிடுவோம்.”

சாத்யகி “ஆற்றை திசைதிருப்புவதா?” என்றான். “பொன்னிருந்தால் கங்கையையே திசைதிருப்பலாம் இளைஞனே” என்றார் ஸ்ரீதமர் சிரித்தபடி. “அதன்பொருட்டே யாதவர் இங்கே தங்கியிருக்கிறார். இன்று உன்னை சந்தித்தால் அவர் மார்புறத்தழுவிக்கொள்வார்.” சாத்யகியின் உடல் குளிர்போல சிலிர்த்தது. “நான் அவரை பார்த்திருக்கிறேன் அமைச்சரே. காம்பில்யத்தில் திரௌபதியின் மணத்தன்னேற்புக்கு சென்றிருந்தேன். அவர் தன் தமையனுடன் அங்கே வந்தார். நான் சென்று அவரை வணங்கினேன்.” தன் தோளைத்தொட்டு “இதோ இங்கு அவர் தொட்டார். என்னுடன் வா என்றார். அவர் தொட்ட அந்த இடத்தில்தான் அவருக்கு நானும் என் குலமும் தொழும்பர் என சான்றுக்குறி வைத்திருக்கிறேன்…”

தன் அறைக்குள் சென்ற ஸ்ரீதமர் அங்கிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமர்க!” என்றார். சாத்யகி ஒரு கணம் தயங்க “இளையோனே, நீ அமரவேண்டிய இடம் மட்டும் அல்ல இது. உன் சொல் ஆளவேண்டிய இடமும்கூட” என்று சொன்னார். சாத்யகி அமர்ந்ததும் “இங்கு என்ன நிகழ்கிறதென்று நீ அறிந்திருப்பது நன்று. உனது உறவுகளால் நிறைந்துள்ளது இந்நகர். அறிந்திருக்கமாட்டாய்” என்று ஸ்ரீதமர் தொடர்ந்தார்.

“துவாரகையின் நிலம் நாற்புறமும் விரிந்துகொண்டிருக்கிறது இளையோனே. வசுதேவரின் தந்தை சூரசேனர் இப்போது யமுனைக்கரையில் மதுவனத்தில் இருக்கிறார். அவரது இரண்டாவது மைந்தர் காவுகர் அங்கே அரசாள்கிறார். மதுராவை வசுதேவர் ஆள்கிறார். உத்தரமதுராபுரியை தேவகரின் முதல்மைந்தர் தேவாலர் ஆள்கிறார். தேவகர் இப்போது இங்குதான் தன் மகளுடன் தங்கியிருக்கிறார்.”

“தேவாலரை நான் காம்பில்யத்தில் இளைய யாதவருடன் சந்தித்தேன்” என்றான் சாத்யகி. “என்னிடம் அன்புடன் பேசினார். இளைய யாதவரின் அணுக்கத்தவர் போல் அருகிருந்தார்.” ஸ்ரீதமர் புன்னகைத்து “ஆம், அவர் இதுநாள் வரை மன்னரின் மெய்க்காவலராக இருந்தார். தேவகர் ஓய்வுகொள்ள விழைந்தமையால் உத்தரமதுராபுரிக்கு அரசராக ஆனார்… அவரது இளையோர் உபதேவரும் சுதேவரும் அவருக்கு துணையாக இருக்கிறார்கள். மகதத்திற்கும் யாதவமண்ணுக்குமான எல்லைகள் அவர்களால் காக்கப்படுகின்றன” என்றார்.

“கோகுலத்தையும் பதினெட்டு ஊர்களையும் நந்தகோபர் ஆள்கிறார். அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரருக்கும் தேவகரின் மகள் சுருதைக்கும் மைந்தரான சுசரிதர் அவருக்கு உதவுகிறார். கோகுலத்தின் அரசராக சுசரிதரே தொடரவேண்டுமென அரசர் விழைகிறார்” என்றபடி ஸ்ரீதமர் ஒரு நூலை எடுத்தார். பூர்ஜமரப்பட்டைகளை பட்டுநூலில் தொடுத்து உருவாக்கப்பட்ட அதில் பன்னிரண்டாவது சுவடியை விரித்து “இதோ உமது குலவரிசை உள்ளது” என்றார்.

“மதுராவை ஆண்ட ஹேகயகுலத்து மாமன்னர் கார்த்தவீரியரில் இருந்து மது பிறந்தார். மதுவிலிருந்து விருஷ்ணி. அவர் மைந்தர் யுதாஜித்தில் இருந்து விருஷ்ணிகுலம் எழுந்தது. யுதாஜித்தின் மைந்தர் ஸினி. ஸினியின் மைந்தர் சுகதி. அவரது குருதிவரி நக்தர், ஜயர், உபஜயர், குனி, அனமித்ரர், பிரஸ்னி என நீள்கிறது. பிரஸ்னியின் இருமைந்தர்களில் ஸ்வஃபால்கரின் மைந்தர் அக்ரூரர். சித்ரதரரின் மைந்தர் உனது தந்தை சத்யகர். முதியவரான அக்ரூரர் இங்குதான் இருக்கிறார். உனக்கு அவர் சிறியதந்தை முறையாவார். அவரது பதினெட்டு ஆயர்குடிகளையும் மைந்தன் தேவகர் ஆள்கிறார்.”

சாத்யகி புன்னகைசெய்து “இந்தக் குலவரிசையை நான் நினைவுகொள்வதே இல்லை அமைச்சரே. நான் சத்யகரின் மைந்தன். விருஷ்ணிகுலத்து யாதவன். அதைமட்டுமே அறிவேன்” என்றான். ஸ்ரீதமர் “இனிமேல் நினைவில் கொண்டாகவேண்டும் இளையோனே. நீ இன்று எளிய யாதவனல்ல. பாரதவர்ஷத்தின் மாமன்னர் ஒருவரின் மருகன். வாளேந்தி அவர் வலப்பக்கம் காக்கும் பொறுப்பு கொண்டவன்…” என்றார். சாத்யகி “அது என் கடமை மட்டுமே” என்றான்.

சுவடியை மூடிவைத்துவிட்டு “யுயுதானனே, நீ நீராடி புத்தாடை அணிந்து வருகையில் அரசரை சந்திக்க ஆவன செய்கிறேன்” என்றார். “மூத்தவர் பலராமர் இங்கில்லை. அரசமுறையாக அவர் மதுராவிற்கு சென்றிருக்கிறார். இருவரில் ஒருவர் மட்டுமே இங்கிருப்பது வழக்கம்.”

சாத்யகி “நான் அன்னை தேவகியையும் யசோதையையும் சந்திக்க விழைகிறேன் அமைச்சரே. அவர்களை கதைகளாகக் கேட்டறிந்தவன். கண்களால் கண்டேன் என்றால் என் குலத்து அன்னையரும் அகநிறைவடைவர்” என்றான். ஸ்ரீதமர் “இது உனது நகரம், உனது அரண்மனை யுயுதானனே. இனி நீ இங்கு எனக்கும்கூட ஆணையிடலாம்” என்றார்.

முந்தைய கட்டுரைலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்
அடுத்த கட்டுரைலாரன்ஸ் ஹோப் – வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்