«

»


Print this Post

சீன அங்காடித்தெரு ஒரு கடிதம்


அன்புள்ள ஜெயமோகன்,
சீன அங்காடித் தெரு குறித்து எனது இணைப்பை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு ஒரு வாசகர் ஏன் இந்தியாவில் எலிக்கறி தின்பதில்லையா என்று கேட்டிருந்தார். இது போன்று என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் மட்டையடியாக வரும் பதில்களைப் படிக்கும் பொழுது சலிப்பாக இருக்கிறது.

சீனாவில் அடிமைகளாக மக்கள் சித்திரவதைச் செய்வதைச் சொல்லும் பொழுது அப்படி இந்தியாவில் கொத்தடிமைகளோ, வறுமையோ, சித்ரவதைகளோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இந்தியாவிலும் அந்தக் கொடுமைகள் இருக்கின்றன, இருந்தாலும் அதை மீறி வெளியே வருவதற்கான ஒரு சுதந்திரம் லிங்கத்துக்கும், சேர்மக்கனிக்கும் இன்னும் லட்சகணக்கான அடிமைத் தொழிலாளர்களுக்கும் இருக்கிறது. அப்படி அவர்கள் கஷ்டப் படுகிறார்கள் என்பதை ஒரு படைப்பாளியாக ஒரு ஜெயமோகன் ஏழாவது உலகத்திலும், ஒரு ஜானகி விஸ்வநாதன் குட்டியிலும் ஒரு வசந்த பாலன் அங்காடித் தெருவிலும் தாராளமாகக் காண்பிக்க முடிகிறது. அதை எதிர்த்து நாம் கோர்ட்டுக்குப் போகலாம், சினிமா எடுக்கலாம், நாடகம் போடலாம், பத்திரிகைகளில் எழுதலாம். இந்த சுதந்திரம் பாட்டாளிகளின் சொர்க்கம் என்று அழைக்கப் படும் சீனாவில் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டவே அந்த இணைப்பை நான் அனுப்பியிருந்தேன். இந்தியாவில் எலிக்கறி தின்கிறார்கள் என்பதை தாராளமாகச் சொல்லலாம். அதை யாரேனும் சொன்னால் நாம் உடனடியாக அவர்களை மறுப்பதில்லை, மறைப்பதில்லை, நடப்பதேயில்லை என்று சாதிப்பதில்லை. எதிர்ப்பை மூர்க்கமாக மரண தண்டனை கொடுத்து ஒடுக்குவதில்லை.

கம்னியுசம் என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகாரமும், அப்பட்டமான சுரண்டல்களும், அடிமைத்தனமும், சித்திரவதைகளும் படுகொலைகளும் உலகத்திடம் இருந்து மறைக்கப் பட்டு எல்லாமே சுபிக்‌ஷமாக சுமுகமாக இருக்கிறதாக நம் கம்னியுஸ்டுகளால் ஒரு சித்திரம் எழுப்பப் பட்டு ரஷ்யா, சீனா என்பது ஒரு சொர்க்க பூமி, ஒரு லட்சிய தேசம் என்பதான ஒரு பிம்பம் எழுப்பப் படுகிறது. இவர்கள் பிரச்சாரத்தைக் கேட்டால் சீனாவில் பாலும் தேனும் மட்டுமே பெருகி ஓடுவதாக ஒரு பாமரன் நம்பி விடுவான். நான் அனுப்பிய இணைப்பு போன்ற செய்திகள் முற்றிலுமாக இடதுசாரிகளின் பிடிகளில் சிக்கியிருக்கும் நம் ஊடகங்களினால் மறைக்கப் படுகின்றன. என் நண்பர்கள் சிலர் சீனாவின் உள்பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளுக்குச் சென்று வந்தனர். அங்கிருக்கும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடூரமான பணிச் சூழல்கள் நம் இந்தியாவில் அதே அளவில் இருக்கும் எந்தவித தொழிற்சாலையில் சாத்தியமே இல்லை என்று நடுங்கிப் போய்ச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு மோசமான சூழல் இருக்கிறது இருந்தாலும் நம் காம்ரேடுகளால் அந்த நாடு ஒரு லட்சிய தேசமாகப் பிரச்சாரம் செய்யப் படுவது எவ்வளவு பெரிய மோசடி?

அங்காடித் தெருவைக் கூட முற்போக்கு இலக்கியவாதிகள் பெரிதும் சிலாகித்து வசந்தபாலனை அழைத்து அவர்கள் நடத்தும் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில் பாராட்டு தெரிவித்த செய்தியைப் படித்தேன். அங்காடித் தெருவைப் பாராட்டும் அதே தோழர்கள் சீனாவில் நடக்கும் கொடுமைகளை ஒத்துக் கொள்ள மறுப்பார்கள் அப்படி அங்கு எதுவுமே நடக்கவில்லையென்று சாதிப்பார்கள். ஆக இவர்கள் முற்போக்கு என்பதெல்லாம் இரட்டை வேடம் மட்டுமே. அமெரிக்கக் கோக்கை விரட்டுவோம் என்று கோஷம் போடுவார்கள் டிராமா போடுவார்கள் உள்ளூரில் மணல் கொள்ளையடிக்கும் கழகங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஸ்ரீநிவாசன் நடித்த ”அரபிக் கதா” பார்த்திருப்பீர்கள். சிவப்புத் தோழரான அவர் துபாயில் வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு சீன பெண்ணைச் சந்திப்பார். அவள் ஏன் இங்கு வந்து வேலை பார்க்கிறாள் ஏன் அப்படி ஒரு பாட்டாளி வர்க்க சொர்க்கத்தை விட்டு விட்டு இங்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று அப்பாவியாகக் கேட்ப்பார். உரிமைக்காகப் போராடிய அவளது சகோதரனை சீன அரசாங்கமே கொன்று விட்டதை அறியும் பொழுது மிகுந்த அதிர்ச்சி அடைவார். உங்கள் பி தொ நி ழலை கடுமையாகச் சாடுபவர்கள் இந்தப் படத்தை கொஞ்சம் பார்க்க வேண்டும். அந்த நிலையில்தான் பல கம்னியுஸ்டுகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிவதில்லை அப்படியே யாராவது சொன்னாலும் பிடிவாதமாக நம்ப மறுக்கிறார்கள். இந்தியாவில் எலிக்கறி சாப்பிடவில்லையா என்று புரியாமல் மட்டையடி அடித்து அது ஏகாபத்தியத்தின் பிரச்சாரம் என்று நம்ப மறுத்து விடுவார்கள். அதையும் மீறி சீனாவில் நடப்பதைச் சொன்னால் அமெரிக்கக் கைக்கூலி, சி ஐ ஏ ஏஜெண்டு, ஆர் எஸ் எஸ் அடியாள், பனியாக்களின் பணியாள் என்று திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அங்காடித் தெரு இவர்களுக்கு சாதகமான ஒரு பிரச்சாரக் கருவியாகி விட்டதோ என்ற அச்சம் எனக்கு வசந்தபாலனை இவர்கள் அழைத்து கேடயம் கொடுத்த பொழுது உறுதியாகி விட்டது. என் அச்சத்தை எனது சொல்வனம் http://solvanam.com/?p=7588 கட்டுரையிலும்

“இதை விடப் பல்லாயிரம் மடங்கு கடுமையான கொத்தடிமைச் சூழல் நிலவி வரும் சீனாவை, கம்னியுஸ்டு அரசாங்கமே உழைப்பாளிகளை அடக்குமுறை செய்து மோசமான சூழலில் இருத்தி வந்த ஒரு தேசத்தை தங்கள் ஆதர்ச தேசமாகவும் பாட்டாளிகளின் சொர்க்கமாகவும் கருதும் தோழர்கள் இது போன்ற சினிமாக்களை வரவேற்பது மோசமான நகை முரண்.”

என்று குறிப்பிட்டிருக்கிறேன். சின்னக் கருப்பனின் கட்டுரையும், காலச்சுவடு கண்ணனின் கட்டுரையும் அதையே சுட்டுகின்றன. நமது முற்போக்காளர்களின் அளவுமானிகளில் உள்ளூர் இந்து முதலாளிகளுக்கும், உள்ளூர் பிற மத முதலாளிகளுக்கும், சீன, அரேபிய அடிமைத்தனத்திற்கும் வெவ்வேறு அளவுகள் வைத்திருக்கிறார்கள்.

அன்புடன்
ராஜன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7270

6 comments

Skip to comment form

 1. vks

  சீனாவிலும் ரஷ்ய அணியிலும் கருத்துரிமை இல்லை எனபது வெளிப்படையானது. இதில் மறுக்க என்ன உள்ளது? அதற்காக நம் தேசங்களில் நீதி தேவதைதான் பத்திரிகை நடத்துவதாக நினைப்பது அபத்தமானது. அடக்குமுறை என்றவுடன் அரபு நாடுகளும் சீனாவும், ரஷ்யாவும் நினைவுக்கு வருவது என்றால் பார்வையில் கோளாறு உண்டு.
  மும்பையில் பகிரங்கமாக சிறைப்பிடிக்கப்பட்டு சிவப்பு விளக்கு தெருக்களில் அடிமைகளாக வாழும் பெண்களுக்கு என்ன முடிவு?

  உலகின் பெரிய இராணுவ அமைப்பைக் கொண்டிருக்கும் இந்திய அரசு மும்பை பெண்களை விடுவிக்க ஏன் முடியவில்லை?

  கொத்தடிமையாக கடத்தப்பட்டு அடைக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் 1947 இல் தானே சுதந்திரம் கிடைத்தது?

  சீனாவில் 90 விழுக்காடு அடிமைத்தனம் இருக்குது. நம்ம ஜனநாயக பாரத புண்ணிய பூமியில் 89 விழுக்காடு அடிமைத்தனம் தானே இருக்கின்றது கூற வருவது ஒன்றும் தரமாகத் தெரியவில்லை.
  குட்டி படம் எடுக்கின்ற உரிமை உண்டு என்றால் அந்த உரிமையால் அந்த மக்கள் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டு காலத்தில் விடிவு பெற்றிருக்க வேண்டுமே!
  சுதந்திரம் ஜனநாயகம் என்பதல்லாம் என்ன என்பதை போபால் மக்களிடம் கேட்டுப் பார்க்கலாம்.

 2. jasdiaz

  How many of those who criticize China, actually had been to China and spent a couple of years there to pass such judgements? I had not been to China but I had interacted with a number of Chinese students who do their MS/PhD in USA. Most of them after having spent 5-8 years in USA, go back to China and they are not unhappy about going back. If the situation is so bad almost all of them should be staying back in USA.

  As far as கருத்துரிமை is concerned can any one in Tamil Nadu call Karunanidhi as ‘Karunanidhi’ in a public forum and not get beaten up?

  jas

 3. N.V.Balaji

  @VKS: என்ன சொல்ல வருகிறேர்கள் என்று புரியவில்லை. ராஜன் சீனாவில் நடப்பதை எழுதியிருக்கிறார். பலருக்கு இம்மாதிரி அங்கு நடப்பது தெரியவில்லை என்றும், சிலர் தெரிந்தாலும் மூடி மறைப்பதாகவும் நினைக்கிறார். ஆகையால் இம்மாதிரி நிகழ்வுகளை வெளிக்கொணர்வது அவசியம் என்றெண்ணி இதை வெளியிடுகிறார். அவர் இந்தியாவைப் பற்றி இதில் எழுதவே இல்லை.

 4. GK

  @vks, 89% அடிமைத்தனம் இந்தியாவில் உண்டென்பதை பலரும், பலவிதங்களிலும் ஆவணப்படுத்தியுள்ளார்கள். இதை சீனாவில் செய்ய முடியுமாவென்பதே திரு. ராஜனின் கேள்வி. இந்திய ஊடகங்களில் பேசுவது போல் அருந்ததி ராயால் சீனாவில் பேச முடியுமா? இந்தியாவில் எலிக்கறி சாப்பிடுவதை பற்றி அறிந்திருக்கிறீர்கள். சீனாவில் அப்படி ஒன்று நடப்பதேயில்லை என நமக்கு எப்படி தெரியும்?

 5. vks

  பாலாஜி! எனக்கு ராஜன் மீது தனிப்பட்ட விரோத உணர்வோ அல்லது சீனா மீது பிடிப்போ கிடையாது. மொத்தத்தில் நமது சமூகப் பார்வையில் ஒரு வகை ஒரு கண்மூடித்தனம் வேதனையை உண்டாக்குகின்றது.
  நமக்கு கருத்துரிமை உண்டு என்பது ஒரு மேலோட்டமான முடிவுதான்.
  நாம் போற்றுகின்ற கருத்துரிமை, ஜனநாயாக உரிமை என்பன சாதாரண மக்களுக்கு உண்டா என்பது கேள்விக்குறிதான்.

  நாம் இருப்பதாக என்னும் உரிமைகள் சாதாரண மனிதனுக்கு விடிவைத் தேடித் தரவில்லை என்றால் அதனால் பெருமையடைய என்ன உள்ளது?

  விடிவைத் தேடித்தராத கருத்துரிமை அடக்குமுறையில் உள்ளது என்றே பொருள்படும்.!

  சீனாவில் மூடப்பட்ட சமூக அமைப்பில் மக்கள் அடக்கப்படுகின்றார்கள் என்றால் நமது சமூகங்கள் வெளிப்படையாக அடக்கப்படுகின்றார்கள்.
  ராஜனையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. எனது எழுத்துக்கள் அவரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

 6. stride

  அன்பு ஜாஸ்,

  நீங்கள் உயர் படிப்புக்கு வந்த சீன மாணவர்கள் கூறியதை வைத்து மட்டும் சீனாவை சுவர்க்கபூரியாக கருதிவிடாதீர்கள். மேல் படிப்புக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல நிலையில் இருந்து வருபவர்கள். பலர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். சீன மக்கள் தொகையில் ஐந்து சதவிகித கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தான் சீனாவின் அபரிதமான வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  Hukou என்று தேடி பாருங்கள். கிட்டத்தட்ட ஐம்பது கோடி கிராமத்திய மக்கள் பெர்மிட் வாங்கி மட்டுமே நகரங்களுக்கு கூலி தொழிலாளர்களாக செல்ல முடியும். அப்படி செல்லும் மக்கள் வேலை முடிந்த பின் தங்கினால் ஊருக்கு deport செயப்படுவார்கள். நகரங்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளை கூட அழைத்து செல்ல முடியாது, அங்கே பள்ளிக்கூடங்களில் சேர்க்க அனுமதி கிடையாது. குழந்தைகளை உறவினர்களிடம் விட்டு விட்டு தான் கோடிக்கணக்கான மக்கள் வருடக்கணக்கில் நகரங்களில் வேலை செய்கின்றனர். இதையெல்லாம் உங்கள் சீன நண்பர்கள் சொல்லவே மாட்டார்கள். கேட்டால் எதோ இப்போதது தான் கேட்டது போல் பாவனை புரிவார்கள். நம்மாட்கள் போல் செத்தாலும் சீனாவை குறை சொல்ல மாட்டார்கள்.

  சீனாவை விட நம் நாட்டில் குறைகள் அதிகம் இருந்தாலும் அதை ஆமோதிக்கவாகவாது செய்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலில் ஈடுபட்டு தங்கள் உரிமைகளை பெறுவது பெருகியவண்ணமே இருக்கிறது. சீனாவில் மூச்சு காட்ட முடியாது.

  சிவா

Comments have been disabled.