வளைகுடா அடிமைத்தனம்

அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள் என்று பட்டது. அங்காடித்தெரு காட்டும் சுரண்டல் உலகம் வளைகுடாவில் வேலைசெய்யும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்டிருந்தது.

கடுமையான தண்டனைகள், கீழ்த்தரமான பாலியல் சுரண்டல் [ ஓரினச்சேர்க்கையாளர்கள் அந்த அளவுக்கு மிகுந்த சமூகம் பிறிதில்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் சொன்னத அனுபவங்களே முதுகெலும்பை சில்லிட செய்பவை] ஊதியவெட்டுக்கள் இவற்றுடன் அவ்வப்போது வேலையில்லாமல் அரைப்பட்டினியாக கூரை இல்லாமல் கொடும்வெயிலில் அலைய நேரிடும் துயரங்கள் என அந்த அனுபவங்களைக் கேட்க ரத்தம் கொதித்தது. ஒரு இஸ்லாமிய வாசகரின் கடிதத்தை ஏதாவது இஸ்லாமிய இதழுக்கு அனுப்புங்கள் என்று பதில் எழுதினேன். அவர் மீண்டும் எழுதவில்லை.

இந்த விஷயத்தைப்பற்றி எவர் எழுதினாலும் அவரை இந்துத்துவர் என்று சொல்ல ஒரு பெரும் கும்பலே காத்திருக்கிறது. சீனாவிலோ வளைகுடாவிலோ நிகழும் வன்முறைகள், சுரண்டல்கள் எல்லாம் புனித வன்முறைகள் புனிதச் சுரண்டல்கள் என்று நம்புவதே முற்போக்கு. சராசரி அராபியனின் மனநிலையாக வெளியாகும் இனவெறியும் மதவெறியும் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய அபாயங்கள் என்று சொல்பவன் ஏகாதிபத்திய முத்திரையுடன் மிஞ்சிய வாழ்நாளை கழிக்க நேரும்

சீனா பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு வாசகர் காலச்சுவடு இதழில் அதன் ஆசிரியர் எழுதிய இக்கட்டுரையை அனுப்பியிருந்தார். கண்ணன் கூர்மையாகவும் துணிச்சலாகவும் சொல்லியிருக்கிறார்.

http://www.kalachuvadu.com/issue-125/page47.asp

முந்தைய கட்டுரைசென்னைக்கு சிறில்
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் ஞாநி