அண்மைக்கால ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சியும் விற்பனையும்
நூல்தேட்டம் வாயிலாக ஈழத்துத் தமிழ் நூல்களை பதிவுசெய்யும் எனது தொடர் பணியின் ஓரங்கமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற நூலகங்களிலும் ஏழாவது தொகுதிக்கான நூல்களை தேடிப்பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டது.
அதில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தமது வெளியீடுகள் புகலிடத்தைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டார்கள். ஈழத்தின் போர்ச்சூழலால் எமது மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்ட நிலையை அவர்கள் புள்ளிவிபரங்களுடன் குறிப்பிட்டார்கள். தாயகத்தில் மாத்திரம் நிலைபெற்ற விடயம் அல்ல இது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழ் இனத்தையும் பாதிக்கும் விடயம்.
தரமான புத்தக விற்பனையாளர்கள் இல்லாத நிலையில் தனி மனித முயற்சியாகவாவது ஈழத்துத் தமிழ் நூல்களை புலம்பெயர்ந்த வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பொன்றையும் பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
இதன் முதற்கட்டமாக லண்டனில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இலங்கைத் தமிழ் நூல்களையும் புகலிடத்து வாசகர் விரும்பும் நூல்களையும் லண்டனுக்கு வரவழைத்து விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருகின்றேன்.
அவ்வப்போது சிறிய புத்தக விற்பனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஈழத்து நூல்களை ஆர்வமுள்ள வாசகர்களிடம் சேர்ப்பிப்பது மற்றொரு முயற்சியாகும்.
இவ்வகையில் எதிர்வரும் ஜுன் 5ம் திகதி ஊடகவியலாளர் அ.மயூரனின் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் (London) சிறியதொரு நூல் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.00மணியிலிருந்து நூல்வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்வரை இவ்விற்பனை இடம்பெறும். இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து சேமமடு பொத்தகசாலையினரும் குமரன் புத்தக இல்லமும் தத்தமது அண்மைக்கால படைப்புக்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். பல்துறைசார் நூல்கள் கொண்ட இத்தொகுதியில் இருந்து நீங்களும் சில நூல்களைத் தேர்வுசெய்து கொள்வனவு செய்வீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.
இது எவ்வித லாபநோக்கமும் இன்றி இடம்பெறும் ஒரு நிகழ்வு. நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கை விலையுடன் அதற்கான Air Fright செலவையும் சேர்த்த ஒரு தொகையே புத்தகத்தின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தின் அருகிவரும் புத்தக வெளியீட்டை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கிலும் புகலிடத்தில் ஒரு வாசிப்புக் கலாச்சாரம் உருவாகவும் இங்குள்ள வாசகர் வட்டங்களும் இலக்கிய வட்ட ஆர்வலர்களும் தமிழ்ப் பள்ளிகளும் தயவுசெய்து முன்வாருங்கள். உங்கள் வட்டத்தினருக்கும் புதிய நூல்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்யுங்கள்
ஜுன் 5ம் திகதி ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மாலை மூன்று மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாவது அங்கு காட்சிக்கு வைக்கப்படும் புதிய நூல்களை பார்வையிட்டு பெற்று குடும்ப நூலகங்களை உருவாக்க உதவுங்கள்.
அன்புடன்
என்.செல்வராஜா