மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் தளத்தில் தாங்கள் பதிப்பித்த ‘பாலா’ என்பவரின் ஆச்சரியம் கொடுக்கும் கடிதத்திற்கான (மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை – http://www.jeyamohan.in/72562) எதிர்வினை இது.

பொதுவாக நான், தொந்திரவு கொடுக்கும்படிக்கு இப்படி எதிர்வினைக்கு எதிர்வினை என்பதைச் செய்யாதவன்; – ஆனால் நண்பர் ‘பாலா’ அவர்கள் கடிதத்தில், இரு முக்கியமான அடிப்படைப் பிறழ்வுகள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த ‘பாலா’ அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பராக இருக்கக்கூடிய பட்சத்தில் உங்களுக்கு இதனால் சங்கடம் ஏற்படுமானால் – உங்களுக்கு ஒப்புதல் இருந்தால் இதனைப் பிரசுரிக்கவும் – இல்லையேல், வழக்கம்போல, தலையில் அடித்துக்கொண்டு நானே ஒத்திசைவில் போட்டுக்கொல்கிறேன். ;-)

madu
0. ‘பாலா’ அவர்களின் ஆதங்கம் எனக்குப் புரியாமலில்லை. ஆனால்… அதற்காக, அவர் கண்டமேனிக்கும், அடிப்படை முகாந்திரமில்லாமல் கருத்து தெரிவிப்பது சங்கடமாக இருக்கிறது.

1. நான் ஊர்சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த வெறும்பாதக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். பங்கர் ராய், + அவருடைய துணைவி அருணா ராய் அவர்களுடன் அளவளாவியும் இருக்கிறேன். (அப்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர் – ஆனால் பிற்காலத்தில் அருணா அவர்கள் ஒரு ஸெக்யூலர்வாதியாகத் தன்னைச் சுருக்கிச் சாயமடித்துக் கொண்டு விட்டார்; என் நினைவு சரியானால் இவர் மக்ஸய்ஸாய் விருதும் பெற்றார்!). இன்னமும் திலோனியாவில் சிலருடன் தொடர்பில் இருக்கிறேன். என் பார்வையில், அவர்கள் பார்வையில் – இந்தப் பயிலகம் செயல்படும் முறைக்கு, அன்னிய நிதி என்பது தேவையே இல்லை. ஏனெனில் – இந்த நிதி கொடுக்கப்படுவதென்பதற்கு பல சிடுக்கல்கள் இருக்கின்றன; என்னுடைய – தன்னார்வ நிறுவனங்கள் பெறும் அன்னிய நிதிக்கு எதிரான ஒரு ஆங்கிலக் கட்டுரைக்கு இந்த பயிலகத்தின் நடைமுறைகளையும் கணக்கில் கொண்டிருக்கிறேன். (இதன் சுட்டியை நான் உங்களுக்கு அனுப்பி, நீங்களும் அதனைப் பிரசுரம் செய்தீர்கள்)

2. நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட் என்பதன் நம்பகத்தன்மை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க (ஏனெனில் எனக்குத் தெரிந்த பலப்பல போலித் தன்னார்வ நிறுவனங்கள் – ஏதாவது களப்பணி செய்கிறார்களோ இல்லையோ – பளப்பளாவென இந்த சமைக்கப்பட்ட நிதிக் கணக்குகளை உடனுக்குடனே தரவேற்றுபவர்கள் – ட்ரேன்ஸ்பரென்ஸி என்கிற கதையின்கீழ்!) – அதைக் கருத்தில் கொள்ளாமல், அதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பது என்பது வினோதமாகவே இருக்கிறது.

3. நான் அறிந்தவரையில் பங்கர் ராய் அவர்கள் அடிப்படையில் மோசமானவர் அல்லர். ஆனால் வெளி நாட்டு நிதி பெற்றுதான் அவர் செயல்படவேண்டும் என்கிற விஷயம் சரியல்ல. அந்த நிறுவனத்திலேயே இதற்கான எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன.

4. தருண் பாரத் ஸங் எனும் அமைப்பும் ராஜஸ்தானில் தான் இருக்கிறது – இவர்களின் நீர் மேலாண்மைச் சேவை என்பது நம்பவே முடியாத அளவில் ஆழமும் வீச்சும் கொண்டது. ஆனால் இவ்வேலைகளுக்காக இந் நிறுவனம் கண்டமேனிக்கும் நன்கொடைகளைப் பெறுவதில்லை. வெறும்பாத அமைப்பு பெறும் நிதி விகிதத்தில் மிகமிகமிகக் குறைந்த அளவில் உள் நாட்டில் நிதி பெற்று – அதுவும் பெரும்பாலும் உபயோகிப்பாளர்களின் கட்டணங்களை, உபரிகளைப் பெற்று சேவை செய்கிறது இது! என்ன சொல்ல வருகிறேன் என்றால் – இதன் சொற்ப நிதியாதாரத்தில் செய்யும் விஷயங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கூட வெறும்பாதக் காரர்களால் செய்யமுடியவில்லை. (ஆனால் நான் பின்னவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை – அவர்களுடைய ஓவர்ஹெட்ஸ் செலவினங்கள் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்!)

5. அம்மணி மது கிஷ்வர் அவர்களை நான் பலப்பல ஆண்டுகளாக அறிவேன். இவரைப் பற்றி ‘பாலா’ அவர்கள் சொல்கிறார்: “மது கிஷ்வர், பெண்ணுரிமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு academic. நிறைய வேறுபாடுகள் உள்ளன.”

எப்படித்தான் இப்படி தடாலடியாக எழுதுகிறார் என்று தெரியவில்லை/
2
5.1 மது அவர்கள் நிச்சயம் ஒரு பெண்ணுரிமைக்காரர் அல்லர். பல மாமாங்கங்களாக அவர் பல தளங்களில் – நேர்மையான களப்பணி உட்பட – ஈடுபட்டிருக்கிறார். அவர் தன்னை வறட்டுப் பெண்ணுரிமைவாதிகளுடன் பொருத்திக் கொண்டதே கிடையாது. என் நினைவின் படி ‘why I am not a feminist’ போன்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரைகூட எழுதியிருக்கிறார்.

5.2 அவர் ஒரு வெறும் ‘குரல் கொடுக்கும் அகெடெமிக்’ அல்லர். களப்பணிகள் பல செய்திருப்பவர். ஒரு இக்கால உதாரணமாக – கடந்த பல வருடங்களாக, ஏழை நடைபாதை வியாபாரிகள் சார்பாக போராடிக்கொண்டிருப்பவர். (ஆனால் அவருக்கு விளம்பரம் என்பது முக்கியமல்ல)

5.3 அவர் தொடங்கிய நிறுவனங்களுக்கு அவர் என்றும் வெளி நாட்டு நிதி வாங்கிக் கொண்டதில்லை. ஏன், தன் பத்திரிகைக்கு ‘விளம்பரம்’ வாங்கிக் கொள்கிறேன் என்கிற பெயரில் பம்மாத்துகூடச் செய்வதில்லை. (ஏனெனில், மது நடத்தி வந்தது – ஒரு ஈபிடபிள்யு வகையறா பத்திரிகையல்ல)

5.4 அவருக்கு இந்த ஜோலாவாலா பை வகையறா போராளித்தனம் என்பது அறவே பிடிக்காது. எனக்குத் தெரிந்து, அவர் அப்படிப்பட்ட ஜோல்னாப் பையரல்லர்.

5.5 அவர் தன் இளமையில் – ஒரு மாணவர் தலைவராக இருந்தவர். பலப்பல விஷயங்களைச் சாதித்தவர். விளம்பரத்தைத் தேடியலைந்தவரோ, விருதுகளின் பின்னால் அலையும் விருதாத்தனம் கொண்டவரோ அல்லர்.

5.6 போராட்டங்கள், முன்னெடுப்புகள் எனப் பலவற்றிற்கும் அவர் தன் சொந்த சம்பாத்திய பணத்தைப் போட்டுத்தான் உழைத்திருக்கிறார் – நிச்சயம் அவர் ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. ‘அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என கமுக்கமாக வேலை செய்பவர் அல்லர் அவர்.

5.7 எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. மது அவர்களையும் சர்வ நிச்சயமாக விமர்சனம் செய்யலாம். ஆனால், அதனைக் கொஞ்சமேனும் நேர்மையுடன், 5% அளவிற்காவது அடிப்படைகளை, பின்புலங்களை அறிந்துகொண்டு செய்யமுடியுமா? இணையத்தில் மேலோட்டமாக மேய்ந்து, அவற்றை நம்பி, தமக்கு உவப்பானதை மட்டும் எடுத்துக்கொண்டு தன் பக்க நியாயமாக எடுத்துக்காட்டும் போக்கினைத் தவிர்க்க முடியுமா?

6. ஆனால் ‘பாலா’ அவர்கள், இந்த வெறும்பாதக் காரர்களையும், மது கிஷ்வர் அவர்களுடைய பணிகளையும் நேரடியாக அறிந்தவராக இருக்கலாம் – பல்லாண்டுகளில் அவருடைய அனுபவம் சார்ந்த அவதானிப்புகளில் அவர், தன்னுடைய முடிவுகளுக்கு வந்திருக்கலாம் – அப்படியிருப்பின், அவர் தன்னுடைய கருத்துகளைச் சொன்னால் அவற்றையும் கேட்க ஆசைதான்.

நன்றி.

எனக்கு மறுபடியும் மறுபடியும் இம்மாதிரி விஷயங்களை எதிர்கொள்வது சலிப்பாக இருக்கிறது; உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.

வெ. ராமசாமி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்