பகுதி 9 : பெருவாயில்புரம் – 1
நெடுந்தொலைவிலேயே துவாரகையின் கடல்நோக்கி எழுந்த பெருவாயிலின் பின்பக்கத்தை காணமுடியும் என்று சாத்யகி கேட்டிருந்தான். முன்பக்கம் இரண்டு பசுக்களின் நடுவே யாதவர்களின் குலக்குறியான பன்னிரு ஆரங்கள் கொண்ட வெண்சக்கரம் இருக்கும். பின்னாலிருந்து பார்க்கையில் அவ்விரு பசுக்களும் சிம்மங்களாக வாய்திறந்திருக்க நடுவே செந்நிறவிழிக்கற்களுடன் செம்பருந்து சிறகு விரித்திருக்கும்.
“கடல்நோக்கி புன்னகைக்கும் அந்தவாயில் கரைநோக்கி சினந்திருக்கும். அது இளைய யாதவன் பாரதவர்ஷத்திற்கு விடும் செய்தி” என்று குலமூத்தாரான மதுபர் சொன்னார். “கடல்நோக்கி எழுந்த பெரும்பாறைமேலிருக்கிறது அந்த வாயில். நிலத்திலிருந்து நோக்கும்போது அது ஒளிமிக்க தெற்குவானை நோக்கி திறந்திருக்கும். விண்ணவர் வந்திறங்க வானம் திறந்து வாயிலானதுபோல.” உணர்ச்சியால் நடுங்கும் குரலுடன் கைகளைத் தூக்கி “அது விண்ணவர் நகரம்! மண்ணில் எழுந்த விண்ணுலகு” என்றார்.
துவாரகையைப்பற்றி அவன் மிகஇளமையிலேயே கேட்டிருந்தான். நெடுந்தொலைவில் தெற்குக் கடல்முனையில் யாதவர்களுக்கென்றே உருவாகும் மாநகரம் பற்றி யாதவகுலப்பாடகர்கள் அத்தனை குலக்கூடல்களிலும் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் துவராகையைப்பற்றிய புதியசெய்தியுடன் சூதர்கள் வந்தனர். சூதர்கள் பாடிச்சென்றவற்றை யாதவப்பாடகர்கள் கற்பனைசெய்து விரித்தெடுத்து அடர்காடுகளுக்குள்ளும் புல்வெளிகளிலும் வாழ்ந்த மேய்ச்சல்குழுக்களுக்கு கொண்டுசென்றனர். மீண்டும் மீண்டும் துவாரகையைப்பற்றிய கதைகளைக் கேட்டும் எவரும் சலிக்கவில்லை. ஒரே கதை வெவ்வேறு வடிவங்களில் அவர்களிடம் வந்தபோதும் அவற்றை விரும்பினர்.
துவாரகைக்குமேல் கடலின் துமி எப்போதும் மழையென பெய்துகொண்டிருப்பதனால் அங்கே வெயில் வெம்மை படிவதேயில்லை என்றனர் சூதர். கூம்பிய அல்லிமொட்டுகள் என எழுந்த வெண்ணிறமான குவைமாடங்கள் எந்நேரமும் நீர்வழிந்து மின்னிக்கொண்டிருக்கும். தழல்நிறக்கொடிகள் பறக்கையில் நீர்த்துளிகள் பொற்சிதறல்களாக மின்னித்தெறிக்கும். துவாரகையின் தெருக்களெல்லாம் தூயவெண்சங்குகள் பதிக்கப்பட்டவை. மாளிகை முற்றங்களை வளைத்து கடல்நீர் ஓடும் தெளிந்த ஓடைகளில் இருந்து மீன்கள் துள்ளி புரவிகளின் கால்களுக்கு நடுவே பறக்கும். அங்கே குதிரைகள் அருந்த பெரும் ஆமையோடுகளில் நீர் தேக்கப்பட்டிருக்கும்.
மாடவீடுகளின் தூண்கள் வெண்பளிங்கால் ஆனவை என்பதனால் அவை கண்ணுக்குத்தெரியாமல் நின்றிருக்கும். நிறைநிலவென வெண்ணிற ஒளி பரவிய இல்லங்களில் அயலவர் கைகளை முன்னால் விரித்துத் துழாவியே நடக்கமுடியும். அங்கே வணிகச்சாலைகளில் ஏழுகடல்களுக்கு அப்பாலிருந்து வந்த பொருட்கள் குவிந்துகிடக்கும். வெண்பட்டுத்துணியால் யவனர் கட்டிய கூடாரங்கள் பாற்கடல் அலைகளென காற்றில் கொந்தளிக்கும். சோனகத்து லேபனங்களும் யவனத்து மதுவினங்களும் காப்பிரிநாட்டு ஊனுணவுகளும் இணைந்து மணக்கும்.
“ஆடகமும் கிளிச்சிறையும் சாதரூபமும் சாம்பூநதமும் தனித்தனியாக விற்கப்படும் கடைவீதிகள் கொண்ட மாநகரம் இப்புவியில் ஒன்றே” என்றார் சூதர். “நான்குவகை பொன்னா?” என்று முதியவரான ஃபௌமர் வியந்தார். “அவை வெவ்வேறாகத் தெரியுமா என்ன?”
சூதர் புன்னகைத்து யாழ்மீட்டலை நிறுத்தினார். “என் சொற்கள் அவற்றை காட்டவல்லவை அல்ல யாதவரே. ஆடகம் என்பது தூயபசும்பொன். அரைத்து உருட்டி உலரச்செய்த சந்தனம் போன்றது. வெறும் நகத்தாலேயே அதன் ஓரத்தை கிள்ளி எடுக்கமுடியும். கிளிச்சிறை சற்றே செம்பு கலந்து எரிதழலின் அழகுகொண்டது. சாதரூபம் மேலும் செம்புகலந்து கனல்போல் செம்மை மின்னுவது. சாம்பூநதம் ஈயமும் கலந்து வெண்ணிற அழகியின் வெயில்படாத தொடைகளைப்போல மின்னுவது. நால்வகைப்பொன்னுடன் ஐந்தாவதாக வெள்ளியையும் சேர்த்து உருக்கிய உலோகத்தை ஐம்பொன் என்கிறார்கள். ஐம்பொன் சிலைகள் மின்னுபவை அல்ல. அவை உயிருள்ள உடல் என மிளிர்பவை. ஐம்பொன் சிலையாக நிற்கும் அழகியின் முலைகளின் வளைவில் அவள் காமம் சிலிர்ப்பதை காணமுடியும் அங்கே.”
கருநிலவிருள் படர்ந்து கடற்கரை மறையும் இரவுகளில் துவாரகையின் கடற்கரையில் கடற்சிங்கங்கள் பால்நுரைபோல் பிடரிமயிர் பறக்க அம்புமுனைகள் என மின்னும் பற்களுடன் உறுமியபடி ஏறிவரும் என்றனர். அப்போது கடற்கரையை அவற்றுக்காக முற்றிலும் ஒழித்துவிட்டிருப்பர். அவற்றின் நான்கு உகிர்களும் ஐந்தாவது பேருகிரும் பதிந்த காலடிகள் கரைமணல்கதுப்பில் காலையில் விரிந்திருக்கும். மறுநாள் அந்தக் காலடிச்சுவடுகளில் குருதிசொட்டும் மலரும் மஞ்சளரிசியும் இட்டு பூசனைசெய்வார்கள் கடலோடிகள்.
முழுநிலவு எழுந்து கடற்பாறைகள் ஒளிகொள்ளும் இரவுகளில் வெண்பட்டாடை என நெளியும் வால்களுடன் கடற்கன்னியர் அங்கு நீந்தி வருவார்கள். அம்பென நீரிலிருந்து எழுந்து துள்ளிச்சுழன்று அலைவட்டங்களுக்கு நடுவே விழுந்து மூழ்கி மறைவார்கள். பற்கள் ஒளிர கூவிச்சிரித்து களியாடுவார்கள். களைத்தபின் அலைசூழ்ந்த கடற்பாறைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து நிலவை நோக்குவார்கள். அவர்களின் கருநீலக் குழல் நீண்டு நீருள் விழுந்து பாசிக்கொடி என அலையடிக்கும்.
செவ்வைரங்கள் மின்னும் ஆமையோட்டுப் பேரியாழ்களை மடியில் வைத்து செண்பக மொட்டென குமிழ் எழுந்த குவைமுலைகள் மேல் சாய்த்து சிட்டுக்குருவி அலகுபோல் செந்நிற நகம் நீண்ட சிறுவிரல்களால் மீட்டி அவர்கள் பாடும் இசையை இரவில் விழித்து அமர்ந்திருந்தால் கேட்கமுடியும். ஓங்கி அறைந்து ஓலமிடும் கடலலைகள் அதைக்கேட்டு மெல்ல மெல்ல அமைந்து கடல் ஒரு கரிய பட்டுப்பரப்பென்றாகும். அந்த அமைதியில் அவ்விசையைக் கேட்கும் இளையோர் கண்மூடிய கனவில் அவர்களின் நீலச்சுடர்விழிகளை காணமுடியும். வைரத்திற்குள் நீரோட்டமென அவற்றுள் ஓடும் அழியாப்பெருங்காமத்தை அவர்கள் அறிவார்கள். பின்னர் அவர்கள் இல்லம்தங்குவதில்லை. பித்தெழுந்த விழிகளும் நடுங்கி சொல்லுதிர்க்கும் இதழ்களுமாக கடற்கரையில் அலைவார்கள். மறுநாள் நிலவில் அவர்கள் நீரலைகளுக்குள் சென்று மறைவார்கள்.
துவாரகைக்கு அருகே நீருக்கு அடியில் இன்னொரு துவாரகை உள்ளது என்றனர் கவிஞர். சென்றமகாயுகத்தில் மண்ணில் வாழ்ந்த முந்தைய கிருஷ்ணன் கட்டிய பெருநகர் அது. அலையவிந்த கோடைநாள் நடுப்பகல் ஒன்றில் நீலம் மறைந்த கடலுக்குள் மூழ்கிச்சென்று அதை கண்டுவந்த இளையயாதவன் அந்தப் பெருநகரின் வடிவிலேயே தன் நகரை அமைத்தான். நீலம் ஒளிவிட்ட நீருள் பச்சைப்பாசி படர்ந்து அலையொளிவாள்கள் சுழன்று சுழன்று பரவ விரிந்திருக்கும் தொல்துவாரகைக்குமேல் வெள்ளிவால்கள் அலைக்கழிய வெள்ளிச்சிறகுகள் துழாவ விழித்த பெருவிழிகளுடன் உகிர்ப்பற்கள் தெரியும் பசித்த வாய்களைத் திறந்து சுறாக்கள் மிதந்தலைந்தன. அவற்றின் மெல்லுடல் அங்கு விழிதிறந்து நகைத்து நின்ற கன்னியர்சிலைகளை தீராக்காமத்துடன் உரசிச்சென்றது.
மீன்நிழல்கள் பறந்து சென்ற முகடுகளுடன் பல்லாயிரம் ஆண்டுக் கடுந்தவத்தில் உறைந்திருந்தது தொல்துவராகைப்பெருநகர். அதற்கும் அப்பால் மேலும் ஆழத்திலிருந்தது அதற்கும் முந்தைய கிருஷ்ணனால் அமைக்கப்பட்ட ஆழ்துவாரகை. மானுட விழிகள் செல்லமுடியாத இருண்ட கடலாழத்தில் அது இருட்பாளங்களால் ஆன சுவர்களும் இருள்குமிழிகளால் ஆன குவைமாடங்களும் இருள்படிகளுமாக நின்றிருந்தது. இருளுக்குள் நீர்க்குமிழிகள் செல்லும் மெல்லிய ஒளியொன்றே இருந்தது. அந்தத் துளிவெளிச்சம் பட்டு விழிமின்னின கடலுண்ட மூதாதையரின் விழிமுனைகள்.
அதற்கும் அப்பால் இருட்டு செறிந்து கல்லென்றான ஆழத்தில் மேலுமொரு துவாரகை உண்டென்றனர் சூதர். இருட்டின் எடை அதை அழுத்தி அழுத்தி சிறியதாக ஆக்கிவிட்டிருந்தது. ஆழத்தில் வாழும் ஒளியறியா விழியிலிகள் தங்கள் இருண்ட மென்மயிர்க் கால்களால் பற்றி அதன் மேல் ஊர்ந்தன. அதன் சின்னஞ்சிறிய குவைமாடங்களில் வழுக்கி உள்ளறைகளுக்குள் தவழ்ந்தன. விரல்களேயான உடல்களால் சிலைகளை வருடி வருடி அறிந்தன. அறிந்தும் அறிந்தும் தீராமல் முடிவிலாது தவித்தன.
அதற்கும் அப்பால் செறிவே இருளென்றான பேராழத்தில் இருந்த துவாரகை அழுந்திக்குறுகி கையளவே ஆகிவிட்டிருந்தது. அதன் மாடங்களுக்கு மேல் அணுவடிவ சிற்றுயிர்கள் ஒட்டியிருந்தன. அதன் சிற்பங்கள் எறும்புருக்களாக மாற அதற்குள் முன்பு பேருருவம் கொண்டு நின்றிருந்த மூதாதை கிருஷ்ணனின் சிலை சிறு புழுவென நெளிந்து நின்றது. அதற்குமப்பால் அணுவடிவத் துவாரகை இருந்தது. அப்பால் கடலாழத்தின் மையத்தில் எங்கோ இருந்த முதற்துவாரகை ஏழ்கடல்களும் சுழிக்கும் உந்தியின் நடுவே ஓர் ஓங்காரமாக மட்டும் எஞ்சியிருந்தது.
சாத்யகி யமுனைக்கரையின் ரிஷபவனத்தில் இருந்து கிளம்பி பன்னிரு நாட்கள் அடர்காடுகள் வழியாக வந்து அதன்பின் தென்மேற்குக் கூர்ஜரத்தின் வெளிறிவறண்ட பெரும்பாலை நிலத்தை அடைந்தான். எட்டுநாட்கள் பாலைவழியாக பயணம் செய்து துவாரகையின் முகப்பை அடைந்தபோது அவன் நினைவிலிருந்தே ரிஷபவனமும் தன் குலமும் மறைந்துவிட்டிருந்தது. எண்ணமெல்லாம் துவாரகை மட்டுமே நிறைந்திருந்தது.
மரங்களை வெட்டிவிலக்கி பாறைபிளந்து எடுத்த கற்பாளங்களை சீராகப் பரப்பி காட்டுக்குள் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இருபது காதத்திற்கு ஓர் இடத்தில் யாதவர்களால் காக்கப்பட்ட அன்னவிடுதியில் இரவு தங்கவும் உணவுண்ணவும் புரவிக்கு புல்லிடவும் ஒருங்குசெய்யப்பட்டிருந்தது. பாலையில் பன்னிரு காதத்திற்கு ஓர் இடத்தில் சோலைவிடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விடுதியும் வில்லும் வாளுமேந்திய நூறு யாதவப்படையினரால் காக்கப்பட்டது. தொலைவிலேயே இடமறியும்படியாக அருகேநின்ற பெரிய மரத்தின் மீதிருந்த முழவன் குறுமுழவை முழக்கிக்கொண்டிருந்தான். விடுதிக்குமேல் உயர்ந்த முளையில் யாதவர்களின் கருடக்கொடி பறந்தது.
அத்தனை தொலைவையும் கடந்து மதுராவிலிருந்து கழுதைகளிலும் அத்திரிகளிலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வணிகர்கள் துவராகைக்கு சென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு விடுதியிலும் அவர்கள் பொதிவிலங்குகளை அவிழ்த்து மேயவிட்டுவிட்டு ஈச்சஓலைவேய்ந்த கொட்டகைகளில் மரப்பட்டைகளால் அமைக்கப்பட்ட மஞ்சங்களில் முதுகை விரித்துப் படுத்துக்கொண்டு உரக்க பேசிக்கொண்டிருந்தனர். அனைத்து இடங்களிலும் அவன் தன்னை யாதவப்படைவீரன் என்றே சொல்லிக்கொண்டான்.
அனைவரும் துவாரகையைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். செல்பவர்களும் வருபவர்களும் பேசிக்கொள்ள முடிவில்லாத செய்திகள் இருந்தன. ஆனால் அவை காட்டிய துவாரகை பெருநாவாய்கள் வந்து இறங்கும் துறைமுகமாக மட்டுமே இருந்தது. உத்கலத்திலோ தாம்ரலிப்தியிலோகூட துவாரகையில் வந்திறங்கும் அரும்பொருட்கள் வருவதில்லை என்றார் ஒரு முதியவணிகர். அவர் யவனமதுக்கலங்களை வாங்கி கங்காவர்த்தத்துக்கு எடுத்துச்சென்றுகொண்டிருந்தார். “அங்கே நால்வகைப் பொன்னுக்கும் நான்கு கடைத்தெருக்கள் உள்ளனவா?” என்று சாத்யகி கேட்டான். வீரஜர் நகைத்து “இளைஞனே, பொன் என்பது விற்கப்படுவதோ வாங்கப்படுவதோ அல்ல. அது வணிகத்தின் உட்பொருளென இலங்குவது. விற்கப்படாததும் வாங்கப்படாததுமான அதுவே இப்புவியில் மிகவும் கைமாறுகிறது” என்றார்.
”நான் கொண்டுசெல்வது கங்காவர்த்தத்தின் மதிப்பு மிக்க வாட்களை. இவற்றைச்செய்யும் முறையை இரும்புக்கொல்லர்கள் தங்கள் குலத்துக்குள் வைத்திருக்கிறார்கள்” என்று அவர் எடுத்துக்காட்டினார். “இவை உப்புநீரிலும் துருப்பிடிப்பதில்லை. பாறையை முட்டினாலும் முனைவளைவதில்லை. உச்சவெம்மையில் மட்டுமே உருகுகின்றன. இவற்றுக்காக சோனகர் பொன்னை நிகர்வைப்பார்கள்.” அந்தப்பொன்னை வாங்கி அதைக்கொண்டு யவனரின் மதுவை வாங்குவதாக அவர் சொன்னார். அந்தப்பொன்னைக்கொண்டு அவர்கள் துவாரகையின் கடைத்தெருக்களில் இருந்து அகில் சந்தனம் மிளகு யானைத்தந்தம் போன்றவற்றை வாங்குவார்கள்.
“இறுதியில் அந்தப்பொன் எவருமறியாமல் சென்று யாதவனின் கருவூலத்தில் அமர்கிறது. இன்று கருவூலத்தை பொன்னால் நிறைத்திருக்கும் ஒரே பேரரசன் அவனே. அந்தப்பொன்னே அவனுடைய பெரும்படையாகவும் நாவாய்களாகவும் ஆகின்றது. கலிங்கச்சிற்பிகளின் கைவண்ணம் பொலியும் மாளிகைகளாக ஆகின்றது. அங்கே சூதர்கள் பாடும் கதைகளும் கவிஞர்கள் யாக்கும் காவியங்களும் எல்லாம் அப்பொன்னில் எழுந்த நுரைகள் என்றே சொல்வேன்” உத்கலவணிகரான வீரஜர் சொன்னார்.
அன்றிரவு கொட்டகைக் கூரைமேல் பாலைக்காற்று வீழ்த்திய மணல்மழையின் ஓசையைக் கேட்டுக்கொண்டு மரப்பட்டைப் பலகையில் கண்மூடிக் கிடக்கையில் சாத்யகி தன் குடியை எண்ணிக்கொண்டான். அவனுடைய ஊரில் அவன் தந்தையிடமன்றி எவரிடமும் பொன் என ஏதுமிருக்கவில்லை. அவன் தந்தைக்கு பரிசாகக் கிடைத்த பொற்கலன்களை பட்டில் சுற்றி கருவூலத்தின் பெட்டிகளுக்குள் வைத்துவிடுவார்கள். என்றேனும் அவரோ பிற அரசகுடியினரோ அரசநிகழ்வுகளில் தோன்றும்போது மட்டும் எடுத்தணிந்துகொள்வார்கள். யாதவர்களின் நாணயம் என்பது பசுவே. ஆயிரம் வெண்பசுக்களுக்கு அழகிய இளம்கன்னியை வாங்கி மணம்கொள்ளமுடியும். இருபது பசுக்களுக்கு ஒரு இல்லம் நிகராகும். ஐம்பது பசுக்களுக்கு ஒரு படகு. அவன் அனைத்தையும் பசுக்களாகவே எண்ணப்பழகியிருந்தான்.
“பொன் என்பது கறக்காத பசு. ஆனால் குட்டிபோடுவது” என்றர் வீரஜர். “பசுக்கள் இறக்கும். பொன் இறப்பதில்லை. பசுக்கள் உணவூட்டும். பொன் உணவூட்டுவதுமில்லை.” சாத்யகி சிலகணங்கள் தயங்கிவிட்டு “வீரஜரே, பசுவைப்பேணுபவன் விண்ணுலகு செல்வான். பொன்னைப்பேணுபவன் செல்லமுடியுமா?” என்றான். வீரஜர் அவ்வினாவை எதிர்பார்க்கவில்லை என அவரது மரப்பட்டை மஞ்சம் முனகியதிலிருந்து தெரிந்தது.
சற்றுநேரம் கழித்து இருளில் அவர் பெருமூச்சுவிட்டார். “அறியேன் இளைஞனே” என்றார். “என் வாழ்க்கை பொன்னைத் துரத்துவதில் கழிந்துவிட்டது. நீ கேட்டதை நான் எண்ணிப்பார்த்ததே இல்லை.” மறுநாள் அவன் விழித்தபோது விடியலிலேயே அத்தனை வணிகர்களும் சென்றுவிட்டிருந்தனர். கொட்டகையும் விடுதிச்சுற்றுப்புறமும் ஒழிந்துகிடந்தன. வினைவலர் கூட்டி குப்பைகளைப் பெருக்கி அகற்றிக்கொண்டிருந்தார்கள். அவன் தன் புரவி நோக்கி செல்லும்போது வீரஜரிடம் கேட்ட வினாவையே எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு புள்ளியில் எத்தனை எளிய வினா என்று தோன்றியது. காடுகளில் மாடுமேய்க்கும் யாதவன் மட்டுமே அதை கேட்கமுடியும்.
அவன் துவாரகையை அடையும்போது முன்னிரவு ஆகிவிட்டிருந்தது. தொலைதூரத்தில் இருட்டின் எல்லையின்மையே திசைகளாகச் சூழ்ந்த வெளிக்கு நடுவே எவரோ கணப்பிட்டு அணைக்காமல் போன கனல்குவை போல செந்நிற ஒளிப்புள்ளிகளாகத் தெரிந்ததுதான் துவாரகை என்று கண்டான். அவன் நின்றிருந்த உயரமற்ற மணல் மேட்டின்மேல் தெற்கிலிருந்து வந்த கடற்காற்று மோதிச் சுழன்று சென்றுகொண்டிருந்தது. அதில் நீரின் மணம் இருந்தது. காற்றில் வந்த மணல்பருக்கள் அவன் ஆடைக்குமேல் பொழிந்து உதிர்ந்தன.
காலையில் மேலும் எட்டுநாழிகை சென்றால்தான் துவாரகையின் கோட்டைமுகப்பை அடையமுடியும் என்று எண்ணிக்கொண்டான். புரவியை அவிழ்த்து விட்டுவிட்டு மணலில் தன் தோலாடையை விரித்து படுத்துக்கொண்டு விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். பாலைநிலத்தின் விண்மீன்கள் மிகப்பெரியவை. கொழுத்த மீன்கள் என்று வணிகர்கள் சொன்னார்கள். “பாலைநிலத்து விண்மீன்களை நோக்கியபடி துயிலாதே. அவற்றில் ஒன்று உன் தலையில் விழக்கூடும்” என்றார் வீரஜர். ”விண்மீன் விழுந்து இறந்த வணிகர்களை நான் அறிவேன்.”
முந்தைய விடுதியிலேயே அந்தியில் தங்கியிருக்கலாம் என எண்ணிக்கொண்டான். முன்மாலையிலேயே அங்கு வந்துவிட்டான். துவாரகையை நெருங்க நெருங்க உள்ளத்தில் எழுந்த எழுச்சியால் அங்கே தங்க அகம் ஒப்பவில்லை. புரவியை ஊக்கினால் இருளுக்குள் சென்று சேர்ந்துவிடமுடியும் என்று தோன்றியது. ஆனால் புரவி மிகவும் களைத்திருந்தது. துவாரகையை நெருங்க நெருங்க மணலின் இறுக்கம் குறைந்து பொருக்குகளாக இருந்தமையால் அதன் குளம்புகள் புதைந்தன. காற்றில் இருந்த ஈரம் இரவில் பனியாகப்படிந்து உருவான பொருக்கு அது என அவன் அறிந்தான். தொலைவில் துவாரகையின் விளக்குகள் தெரியத் தொடங்கும்போதே வானில் விண்மீன்கள் பழுத்துப்பிதுங்கி வந்து நின்றன.
மேலே பார்க்க அஞ்சினான். விண்மீன்களின் பெருவெளி. ஆனால் அவற்றில் ஒன்று விழுந்து அவன் தலை உடையக்கூடும். வியப்புதான். விண்மீன் விழுந்து ஒருவன் இறப்பதைப்போல விந்தையான பிறிது எது? வானம் நேரடியாகவே அவனை எடுத்துக்கொண்டிருக்கிறது. விண்மீன்களின் ஒளி நோக்க நோக்க கூடி வருவதாகத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு கண்ணுக்குள் எழுந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவன் விழித்துக்கொண்டபோது அவன் புரவி அவனருகே வந்து நின்றிருந்தது. காற்றில் வந்த மென்மணலால் அவன் உடல் முழுமையாகவே மூடியிருந்தது. விழித்தெழுந்தபின்னர்தான் அதுவரை கனவில் இருந்திருக்கிறோம் என்று அறிந்தான். என்ன கனவு என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சிந்தையை குவித்தாலும் எதையும் தொட்டு எடுக்கமுடியவில்லை.
எழுந்து ஆடைகளை நன்கு உதறிக்கொண்டு விடிமீனை தேடினான். அவன் ஊரில் விடிவெள்ளி பெரியதாக வெள்ளிச்சிமிழ் போல தனித்துத்தெரியும். பாலையில் அத்தனை விண்மீன்களும் பெரிதாகத் தெரிந்தன. அவன் புரவியின் உடலையும் துணியால் வீசி மண்ணைப்போக்கியபின் அதன்மேல் ஏறிக்கொண்டான். அது வாயை திறந்துமூடி நீர் அருந்த விரும்புவதை தெரிவித்தது.
மணல்சரிவில் இறங்கும்போது அவன் துவாரகையை நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக் கனல்குளம் அப்படியேதான் செவ்வொளி விட்டுக்கொண்டிருந்தது. வானம் நெடுந்தொலைவுவரை சென்று வளைந்து இறங்கி மண்ணைத்தொட்டிருந்தமையால் தூரத்துவிண்மீன்கள் மண்ணில் விழுந்து கிடப்பவை போல தோன்றின. நகரின் செவ்வொளிக்குவை விண்மீன்களுக்கு நடுவே தெரிந்தது.
இயல்பாக ஒரு முகம் நினைவில் வந்தது. அதன்பின்னர் அந்தக் கனவு. கனவில்தான் அவன் வந்தான். அவனை மிக அண்மையில் அவன் கண்டது கனவில்தான். அவன் குனிந்து ஒரு சடலத்தைப்பார்க்கிறான். தலை இருந்த இடத்தில் கருகிய ஊன்சிதறல்கள். அதைச் சிதறடித்த எரிவிண்மீன் அப்பால் பாலைமணலில் ஆழ இறங்கி புகை விட்டுக்கொண்டிருந்தது. இறந்தவனின் புரவி அஞ்சி உடல் சிலிர்த்துக்கொண்டும் சீறிக்கொண்டும் அருகே தலைகுனிந்து நின்றது. இறந்தவன் தோல்பையும் நீண்ட வாளும் வைத்திருந்தான்.
நோக்கி நின்ற இளைஞன் மேலும் குனிந்து கைகளால் இறந்தவனின் ஆடையை விலக்கி அவன் கச்சையையும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்த குலக்குறியையும் நோக்கினான். அவன் எவரெனப்புரிந்துகொண்டவன் போல நிமிர்ந்து வானில் எரிந்துகொண்டிருந்த விண்மீன்களை நோக்கியபின் தன் புரவியை நோக்கி சென்றான். அவன் புரவி மணல் குன்றுக்குக் கீழே சேணத்துடன் நின்றிருந்தது. அவனைக் கண்டதும் தலையை ஆட்டி காதுகளைக் குவித்து மெல்ல கனைத்தது.
அவன் எவரென்று உணர்ந்ததும் சாத்யகி கடிவாளத்தை அறியாமல் பற்றிவிட்டான். புரவி தலைதிருப்பி முன்காலை நடனமென எடுத்துவைத்து நின்றது. அவன் பெயர் பூரிசிரவஸ். பால்ஹிக நாட்டு இளவரசன். அவனை காம்பில்யத்தில் திரௌபதியின் சுயம்வரத்தில் அவன் பார்த்திருந்தான். சிற்றரசர்களுக்கான நீண்ட வரிசையில் பன்னிரு யாதவக்குலக்குழுத்தலைவர்களும் அவர்களின் மைந்தர்களும் அமர்ந்திருந்தனர். அவ்வரிசையில் இறுதியாக சாத்யகி தன் தந்தை சத்யகருக்கு அருகே அமர்ந்திருந்தான். அவனுக்கு அப்பால் பால்ஹிக சோமதத்தர் அமர்ந்திருக்க அதற்கப்பால் பூரிசிரவஸ் இருந்தான்.
மென்மீசை பரவிய சிவந்த உதடுகளும் சிறிய பருக்கள் அரும்பிய வட்டக்கன்னங்களும் நீலக்கண்களும் சுண்ணப்பாறைகளின் நிறமும் கொண்ட இளைஞனைக் கண்டதுமே சாத்யகி வெறுத்தான். அவ்வெறுப்பை அவனே வியப்புடன் நோக்கி ஆராய்ந்தான். வெறும் வெறுப்புதான் அது என்று புரிந்தபோதும் அவ்வுணர்ச்சி மாயவில்லை. இலைநுனியில் அமர்ந்த தும்பி போல பூரிசிரவஸ் ததும்பிக்கொண்டே இருந்தான். அரசர்கள் ஒவ்வொருவரையும் திரும்பித்திரும்பி நோக்கி அவர்களின் பெயர்களையும் குலங்களையும் தன் இதழ்களுக்குள் சொல்லிக்கொண்டான். கர்ணனும் துரியோதனனும் வந்தபோது உளஎழுச்சியால் தன்னையறியாமலேயே எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டான்.
திரௌபதி அவைக்கு வந்த கணம் முதல் அவன் அங்கில்லாததுபோல் ஆனான். அவன் விழிகள் அவளை அன்றி வேறெதையும் நோக்கவில்லை. மூச்சு மட்டும் ஓட அசைவழிந்து அமர்ந்திருக்கும் அவனை திரும்பி நோக்கியபோது சாத்யகியின் உடல் எரிந்தது. அவையமர்ந்த அனைவருமே திரௌபதியைத்தான் பார்க்கிறார்கள் என அவனும் அறிந்திருந்தான். ஆனால் அப்படி விழிமலர்ந்து வாய்திறந்து நோக்க மூடனாகிய மலைமகனால் மட்டுமே முடியும்.
அவனை எவரும் நோக்கவில்லைதான். அவனை நோக்கும் நிலையில் அவன் தந்தைகூட இருக்கவில்லை. ஆனால் அவனை எவராவது பார்த்துவிடுவார்கள் என்று சாத்யகி அஞ்சினான். அவனுக்காக நாணினான். அவனுடன் அங்கே அமர்ந்திருக்கவே கூசினான். அவனை அழைத்து சொல்லிவிடலாமா என்று நூறுமுறை நெஞ்சு எழுந்தது. ‘மலைமூடா, விழிகளை மூடு’ என்று அவனுள் சினக்கூற்று ஆயிரம் முறை ஒலித்தது. அங்கிருக்கும் நேரமெல்லாம் அவன் எதையுமே நோக்கவில்லை.
பாண்டவர்கள் வந்ததும்தான் அவன் சித்தம் பூரிசிரவஸ்ஸை மறந்தது. பின்னர் சாத்யகி அவனை பார்க்கவேயில்லை. தந்தையுடன் தன் ஊருக்குத்திரும்பும்போது அவன் சித்தத்தில் திரௌபதியின் பேரழகுக்கும் அங்கு நிகழ்ந்த போட்டிக்கும் பின்னர் தொடர்ந்த போருக்கும் நிகராக பூரிசிரவஸ்ஸின் முகமும் எழுந்து வந்தது. கசப்புடன் முகத்தை மறைக்கும் திரையை கிழித்து விலக்குவது போல அச்சித்திரத்தை அகற்றிக்கொண்டிருந்தான்.
படகுகளில் ரிஷபவனத்துக்கு திரும்பிச் செல்லும் பாதையில் சத்யகர் “நம்மருகே அமர்ந்திருந்த இளைஞனின் பெயர் பூரிசிரவஸ்” என்றார். “பால்ஹிககுலத்தவன். மலைமகன். ஆயினும் நுண்ணறிவும் தேர்ந்த கல்வியும் கொண்டவன் என்று சொல்கிறார்கள்.” அவன் பெயரை சாத்யகி அப்போதுதான் அறிந்தான். இருளில் படகின் முகப்பில் இரும்புக்கலத்தில் எரிந்த கணப்பருகே அமர்ந்திருந்த முதிய யாதவரான துவஷ்டர் “பால்ஹிகர்களை என்றேனும் யாதவர்கள் போரில் சந்திக்கவேண்டும்” என்றார். அந்த வரி அவனுக்கு விளக்கமுடியாத அக எழுச்சியை அளித்தது. தந்தைக்குப்பின்னால் இருட்டுக்குள் வடத்தின் மேல் அமர்ந்திருந்தவன் எழுந்துகொண்டான். சத்யகர் திரும்பிப்பார்த்தார். அவன் அமர்ந்துகொண்டான்.
“அவர்களின் நிலம் நமக்கு மிக அயலானது. அங்கே நாம் கன்றுமேய்க்கவும் முடியாது. பனிபரவிய வீண்நிலம் என்கிறார்கள்” என்று சத்யகர் சொன்னார். துவஷ்டர் “நாம் என்றால் நமது குலம் அல்ல. இன்று யாதவர்கள் என்பது துவாரகையை மட்டுமே குறிக்கும். கூர்ஜரத்தையும் சப்தசிந்துவையும் கைப்பற்றிய பின் இளைய யாதவனின் படைகள் பால்ஹிகர்களைத்தான் வென்றாகவேண்டும். சிந்துவின் முழுப்பெருக்கும் யாதவன் ஆட்சிக்கு விரைவில்வரும். இமயம் முதல் தென்கடல் வரை கருடக்கொடி பறக்கும்” என்றார்.
சத்யகர் பெருமூச்சுடன் “நான் இத்தகைய பேச்சுக்களை வெறுக்கிறேன்” என்றார். “இவற்றில் உள்ளது வெறும் பேராசை மட்டுமே. இன்று அவையில் இளையயாதவன் ஏன் இளவரசியை வேட்கவில்லை? அவனால் முடியுமென காட்டிவிட்டு திரும்பிச் சென்றான் என்பதை நாமனைவருமே பார்த்தோம்.” அவரை அனைவரும் ஏறிட்டுப்பார்த்தனர். “…ஏனென்றால் அதை அங்கிருந்த எந்த ஷத்ரியரும் விரும்பவில்லை. அவன் இளவரசியை வென்றிருந்தால் அங்கே அத்தனை ஷத்ரியர்களும் இணைந்திருப்பார்கள். பாரதவர்ஷமே அவனுக்கு எதிராக வாளெடுத்திருக்கும்.”
“பெருங்கனவுகள் நன்று” என்றார் சத்யகர். “ஆனால் அவை பேரழிவுகளையும் உடன்கொண்டுவரும். யாதவகுலத்தின் நிகரற்ற மாவீரர் கார்த்தவீரியரின் வரலாறு நம் ஒவ்வொருவர் நாவிலும் உள்ளது. கங்கையையும் யமுனையையும் அவர் வென்றார். அவருடைய ஆயிரம் கைகள் பாரதவர்ஷத்தை வெல்லும்பொருட்டு எழுந்ததும் ரிஷிகளின் சினம் அவருக்கு எதிராக எழுந்தது. இளையோரே, அவருடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டி கங்கைக்கரையில் மலையெனக் குவித்தார் என்ற கதையை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது. ஆயிரம் கைகளும் தனித்தனியாக வானை அள்ளத் துடித்தன. ஒவ்வொரு யாதவனும் நினைவில்கொள்ளும்பொருட்டு அதை இன்றும் சூதர்கள் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.”
சாத்யகி பொறுமையிழந்து அசைந்தபோது அவன் அமர்ந்திருந்த வடம் முனகியது. சத்யகர் மீண்டும் திரும்பி நோக்கினார். அவன் அவர் நோக்கை விலக்கி தலைகுனிந்தான். “நாம் நூற்றாண்டுகளாக அடக்கி ஆளப்பட்ட மக்கள். கார்த்தவீரியரின் மறைவுக்குப்பின் நம் குலங்கள் சிதறிப்பரந்தன. பூசலிட்டு அழிந்தன. நம் அனைவர் உள்ளத்திலும் இன்னொரு கார்த்தவீரியருக்கான எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே நாம் இந்த இளைய யாதவனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறோம். சொல்லிச்சொல்லி அவனை ஒரு கார்த்தவீரியராக ஆக்குகிறோம்.”
“அவன் முடிவும் கார்த்தவீரியருடையதாக ஆகக்கூடாதென்று நான் அஞ்சுகிறேன்” என்று சத்யகர் நெருப்பை நோக்கியபடி சொன்னார். “கூர்ஜரத்தின்மேல் அவன் கொண்ட வெற்றி நல்லூழால் நிகழ்ந்தது. அவன் அத்தையின் சொல் அஸ்தினபுரியில் அன்று ஒலிக்கமுடிந்தது. ஏனென்றால் அன்று அப்போது அங்கே விதுரரும் குந்தியும் மட்டும் கோலோச்சினர். பிதாமகர் பீஷ்மர் காடேகியிருந்தார். கூர்ஜரத்தின் புதையல்கள் அவனுக்குக் கிடைத்த இரண்டாவது ஊழின்பரிசு. அந்த நிலம் மூன்றாவது ஊழ்க்கொடை. எதிரிகள் எட்டமுடியாத பாலைக்கு அப்பால் இருக்கிறது அது என்பதே அவனை வளரச்செய்தது. யவனரும் சோனகரும் காப்பிரிகளும் பீதரும் விரும்பும் அலையடங்கிய துறைமுகப்பாக ஆக அதனால் முடிந்ததும் நல்லூழே.”
“இவ்வெற்றிகளில் அவர் ஆற்றியது எதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா?” என்றார் துவஷ்டர். அவன் தன் நெஞ்சுக்குள் எழுப்பிக்கொண்ட வினா அது. “இல்லை. அவன் நுண்மதியன். போர்க்கலை அறிந்தவன். கூர்ஜரத்தில் புதையலிருப்பதை உய்த்தறிந்ததும் அந்நிலத்தை பெருந்துறைமுகமாக அகக்கண்ணில் கண்டதும் தன் அத்தையின் உள்ளத்தை வென்று அஸ்தினபுரியின் படைகளைப் பெற்றதும் அவன் திறனே. ஆனால் அவன் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்றால்…” என்று சொன்னபின் சத்யகர் கையை விரித்தார். “மூத்தவரே, அவனுக்கு இன்று இப்பாரதவர்ஷத்தில் ஒருவரும் துணையில்லை. நான் சொல்லவந்தது அதைமட்டுமே” என்றார்.
“அவனுக்கு வில்விஜயனின் துணை இருக்கிறது” என்று சொன்னபோது துவஷ்டரின் குரலில் நம்பிக்கை இருக்கவில்லை. “அவர்களே இன்று நாடிலிகளாக மணமகள் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அஸ்தினபுரிக்குள் இனி அவர்களை துரியோதனன் நுழைய விடமாட்டான்” என்றார் சத்யகர். “விழியிழந்த மாமன்னன் பெரும் வஞ்சகன் என்கிறார்கள். அவனுடைய உள்ளமும் விழியற்றது. அவனுடைய வஞ்சத்தால்தான் பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். வாரணவதத்தில் அவர்களை எரித்துக்கொல்ல முயன்றதும் அவனே. அவனிடமிருந்து அவர்கள் கால்வைக்கும் நிலம்கூடப் பெறமுடியாது.”
கங்கையிலிருந்து வந்த காற்றில் நெருப்பு வெடித்துச்சீறியது. சாத்யகி முடிவெடுத்து சிலகணங்களிலேயே சொற்களை தேர்ந்து கோர்த்து அமைத்துவிட்டான். “தந்தையே, நான் துவாரகைக்கு செல்லவிருக்கிறேன்” என்றான். சத்யகர் திகைத்துத் திரும்பி “ஏன்?” என்றார். “என் பணி அங்கேதான். நான் யாதவப்பேரரசருடன் இருக்கவேண்டியவன்.” சத்யகர் சீற்றத்துடன் “அதைமுடிவுசெய்யவேண்டியவர்கள் யாதவக்குலமூதாதையர்… நீயல்ல” என்றார்.
“நான் வளைகோல் கொண்டு வாழப்பிறந்தவன் அல்ல. என் கை வாளுக்குரியது. அது இளையயாதவருக்குரியது” என்றான் சாத்யகி. அவன் எழுந்தபோது வடமும் இறுக்கமிழந்து மேலெழுந்தது. முதிய யாதவர் “இந்நாளில் அத்தனை இளையோருக்கும் இதுவே பித்தாக உள்ளது. காடுகளில் கன்றுகளைத் துறந்து வாளேந்தியபடி துவாரகை நோக்கி கிளம்பிவிடுகிறார்கள்” என்றார். “இளையோனே, கன்றுசூழும் யாதவனின் வாழ்க்கைக்கு நிகரான பேரின்பம் கொண்ட வாழ்க்கை ஏதும் இம்மண்ணில் இல்லை. நீ வென்றடையும் எதுவும் ஒரு பசு உன்னை வாழ்த்தும் சொல்லுக்கு நிகரானதல்ல.”
“மூத்தவரே, நான் செல்வது வாழ்வதற்காக அல்ல, இறப்பதற்காக. யாதவப்பேரரசுக்காக களம்படுகையில் மட்டுமே என் மூதாதையர் என்னை வாழ்த்துவர். இதுவே யாதவர்களின் தலைமுறைகள் ஏங்கிக்காத்திருந்த தருணம். இதைத் தவறவிடுபவன் ஆண்மகன் அல்ல” என்றான் சாத்யகி. “ஏன் களம்படவேண்டும்? நாம் வேளாண்மக்கள் அல்ல. நமக்கு நாடென ஏதும் தேவையில்லை. புல்லிருக்கும் இடமெல்லாம் நாம் வாழும் மண்ணேயாகும்” என்றார் சத்யகர்.
“தந்தையே, பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை என்று உணருங்கள். என்னை வாழ்த்துங்கள்” என்று சாத்யகி சொன்னான். அவன் தந்தை சொல்லற்று நின்று திறந்த வாயுடன் நோக்கியபோது அவன் அறிந்தான், அவன் சொல்லப்போவதை அவர் உள்ளறிந்திருந்தார் என்று. அவர் யாதவனைப்பற்றி சொல்லத்தொடங்கியதே அதற்காகத்தான்.
“காம்பில்யத்தில் நான் இளைய யாதவரைக் கண்டு வணங்கினேன். என்னை அவர் அழைத்தார்” என்றான் சாத்யகி. “ரிஷபவனத்துக்கு வந்து அன்னையைப் பார்த்து வணங்கியபின் நான் கிளம்பலாமென்றிருக்கிறேன்.” அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் தலைவணங்கிவிட்டு அவன் விலகிச்சென்றான். தன் காலடிகள் படகின் பலகையில் ஓசையெழுப்புவதைக் கேட்டான். அத்தனை விழிகளும் தன் மேல் அமைந்திருப்பதை உணர்ந்தான்.
தொலைவில் துவாரகையின் புலரிமணியோசை எழுந்தது. மிகமெல்லிய ஓசை. யாழின் தந்தி ஒன்றில் வண்டு முட்டியதுபோல. தொடர்ந்து பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அந்த ஓசையும் செவியறிந்ததா சிந்தையறிந்ததா என மயங்கும்விதத்தில் இருந்தது. குன்றிறங்கியதுமே துவாரகை விழிகளில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால் இருளுக்குள் நகரின் செம்பந்த ஒளி மேலே எழுந்து தெரிந்தது. அங்கே மிகச்சிறிய செம்மேகத்தீற்றல் ஒன்று நின்றிருப்பதுபோல.
சாத்யகி புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். ஒரு விதிர்ப்புடன் அவன் உணர்ந்தான், பூரிசிரவஸ் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது அவனுடைய உடலைத்தான். கண்களை மூடி மீண்டும் அந்தக் கனவுக்காட்சியை தன்னுள் ஓடவிட்டான். ஒவ்வொன்றும் துல்லியமாக இருந்தது. ஆடைகள், கச்சை, உடைவாள், முழங்கையின் நீலநிறமான குலக்குறி, அப்பால் நின்றிருக்கும் குதிரை. அது அந்த மணல்மேடுதான். அதை அவன் இருளில்தான் பார்த்தான். கனவில் பகலொளியில் அது அத்தனை துல்லியமாக எப்படி வந்தது என வியந்துகொண்டான்.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்