பகுதி 8 : நச்சு முள் – 6
சூரியனின் முதற்கதிர் வானில் எழுந்தவேளை சூழ்ந்து எரிந்த செந்தழல்களின் நடுவே தன் வெண்புரவியில் அமர்ந்து இடையறாது அம்புகளைத் தொடுத்தபடி கர்ணன் காம்பில்யத்தின் மேற்குக் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தான். அவனைத்தொடர்ந்து அஸ்தினபுரியின் வில்லவர் படையும் இறுதியாக பூரிசிரவஸ்ஸும் அம்புகளை செலுத்தியபடி பாய்ந்து சென்றனர். துறைமேடையில் எரிந்த தழலின் அடர்ந்த கரும்புகையே அவர்களுக்கு அரணாக அமைந்தது. புகைக்கு அப்பால் தெரிந்த கோட்டைவாயிலை சட்டம் எரிந்த அனல்வளையமே காட்டியது.
காம்பில்யத்தின் கோட்டைமேல் இருந்த வில்லவர்களும் ஆவசக்கரப் படையினரும் கீழே நோக்கமுடியாமல் இலக்கின்றி அம்புகளை பெய்தனர். வடக்குக்காற்றால் அள்ளிக்கொண்டு வந்து வீசப்படும் பெரிய மழைத்துளிகள் போல அவை அவர்களுக்கு மேல் பரவின. விரைவை கொண்டே அவற்றை வெல்லமுடியும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். கோட்டை இருநூறு வாரை தொலைவிலிருந்தது. ஆயிரத்திருநூறு அடி. அறுநூறு குதிரைப்பாய்ச்சல்கள். அறுநூறு கணங்கள். அறுநூறு யுகங்கள். அறுநூறு இறப்புகள். அறுநூறு பிறவிகள். அப்பால் கோட்டை கரிப்புகை படிந்து இருண்டு அசைவின்றி நின்றுகொண்டிருந்தது. அருகே வா. அருகே வா. விரைக! விரைக! அருகே. இன்னும் அருகே. ஆனால் இரக்கமில்லாமல் அது அங்கேயே நின்றுகொண்டிருந்தது. அதை நோக்கி சென்ற அவன் குதிரை காலமின்மையில் கால்களால் நீந்திக்கொண்டு வானில் அசைவற்று நின்றது.
புரவிகளின் குளம்படித்தாளமன்றி எதையும் பூரிசிரவஸ் கேட்கவில்லை. அவன் நெஞ்சும் அதைப்போலவே ஒலித்துக்கொண்டிருந்தது. கர்ணனின் கொம்போசையைக் கேட்டு புரவியை குதிமுள்ளால் உதைத்து கூச்சலிட்டபடி வில்லைத்தூக்கி விரையத்தொடங்கிய கணம் முதல் காலம் கணங்களால் ஆனதாக மாறியது. ஆயிரம் காதுகள் பல்லாயிரம் கண்கள் நூறாயிரம் சித்தம். அங்கிருந்த ஒவ்வொரு எரிதூணையும் அவன் கண்டான். ஒவ்வொரு குதிரையின் குளம்புகளையும் ஒவ்வொரு பிடரிமயிர்க்குலைவையும் ஒவ்வொரு வீரனின் விழி தெறித்த வெறிமுகங்களையும் தனித்தனியாகக் கண்டான். அவன் கைகளிரண்டும் வில்லில் இருந்து அம்புகளை தொடுத்தன. குதிரையின் தாவும் உடலின் ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி அவன் உடல் அதனுடன் இணைந்து நடனமிட்டது.
அத்தனைக்கும் அப்பால் அவன் உள்ளம் அங்கு நிகழ்வன அனைத்தையும் சொற்களாக்கிக்கொண்டுமிருந்தது. அவன் பிறந்தநாள் முதல் அதுவரை ஒருபோதும் அத்தனை முழுமையாக இருந்ததில்லை. அவன் ஆடிப்பாவைகளாகப் பிரிந்து பிரிந்து பல்லாயிரமாகி சூழ்ந்து சென்றுகொண்டிருந்தான். பல்லாயிரம் பாவைகளுக்குள்ளும் ஒற்றைப்பேரிருப்பாகத் திகழ்ந்துகொண்டுமிருந்தான். இது போர். ஆம், இது போர். இதுதான் போரா? இப்படித்தான் போர் இருக்குமா? இதுதான் போர் என்றால் எப்படி மானுடனால் போரின்றி வாழமுடியும்?
மானுடன் படைக்கப்பட்டதே போருக்காகத்தான். அவன் கண்கள் செவிகள் கைகள் உடல் அனைத்தும் போருக்கானவை. அம்பு நுனிமுதல் இறகு வரை போருக்கானது. வில் வளைமுனை முதல் ஊன்றுமுனை வரை போருக்கானது. நாணில் நின்று அது விம்மிநடமிடுகிறது. அது அதன் உச்சம். சித்தமொன்றில் உருவெடுத்து விண்ணில் உருத்திரண்டு மண்ணில் பருவென வந்ததன் பொருள். இக்கணங்கள். இக்கணம். இக்கணத்துளி. இனி இதை எப்படி மறப்பேன்? இனி இது இன்றி எப்படி வாழ்வேன்? இது போர்! போரில் திகழ்கின்றன வாழ்க்கையின் உள்ளுறைகள். போரில் திரள்கின்றன தெய்வங்கள் மானுடனுக்களித்தவை அனைத்தும்.
ஆனால் இறப்பு! இங்கே இறப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்குள் பலநூறுபேர் இறந்துவிட்டனர். அம்பு நெஞ்சைத் துளைக்கையில் அந்த முகங்களில் எழுவதென்ன? திகைப்பு. ஆம், திகைப்பு. படைக்கலமெடுத்து களம்புகும் எவனுக்கும் தெரியும் இது ஓரு சாவுப்பெருவெளி என. ஆயினும் அவன் தன் நெஞ்சில் அம்பு தைக்கையில் வியக்கிறான். அவ்வளவுதானா? அந்த ஒரு சொல்லைத்தான் அத்தனை முகங்களிலும் காண்கிறேன். இதுவா? இதுவேதானா? முகங்களாக மாறி அச்சொல் மண்ணில் உதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதோ. கடந்துவிட்டது அந்த அம்பு. இன்னொரு அம்பு. விம்மி விம்மி என்னைக் கடந்து செல்லும் இந்த அம்புகளில் ஏதோ ஒன்றில் என் இறப்பு பொறிக்கப்பட்டிருக்கிறது. இக்களத்தில் நான் விழுந்தால்….
நெஞ்சை அடைத்து ஒரு கணம் சித்தத்தை உறையவைத்தது கடுங்குளிர். இதுவரை இத்தகைய பேரச்சத்தை நான் உணர்ந்ததில்லை. இதுவரை இறப்பென்பது ஒரு தொலைதூர நிகழ்வு. எழுதப்பட்ட சொல். கேட்டு நினைவில் நின்ற கதை. கனவிலெழுந்த சித்திரம். இங்கு இதோ அது என்னைச் சூழ்ந்துள்ளது. இறப்பெனும் இன்மை. இருள். இறப்பென்பது… இதோ கடந்துசெல்லும் அம்பு அதை அறியுமா? இதோ அலறி வீழும் வெறித்த விழிகொண்ட வீரன் அறிந்துவிட்டானா? இதோ என் அன்னை முகம். அன்னைமுகம். அன்னைமுகம். இதோ இன்னொருவன் வீழ்ந்து துவண்டெழுந்து பாய்ந்து வரும் குதிரைக்கால்களால் மிதிபட்டு சிதறடிக்கப்படுகிறான். அவன்மேல் உருண்டேறுகிறது எரியும் கனல்தடி. அன்னை. ஏன் வேறெந்த முகமும் எழவில்லை?
மூக்கு எரிய மணப்பதென்ன? உப்பு எரிகிறது. இல்லை அது குருதி. இங்கே எரியும் நெருப்பை மீறி மணப்பது பச்சைக்குருதி. குமிழியிடுகிறது. சிதறி செம்முத்துக்களாக பரக்கிறது. மண்ணில் சாம்பலில் எரிதழலில் விழுகிறது. முலைப்பாலாக உண்ணப்பட்டது. எண்ணங்களாக விழைவுகளாக அச்சங்களாக வஞ்சங்களாக கனவுகளாக உடலுக்குள் குமிழியிட்டது. குமிழிகள். இங்கே சிதறிப்பரக்கையில் குருதிக்கு என்ன பொருள்? கோட்டைமேலிருந்து அலறி விழுபவனின் கைகள் துழாவித்துழாவிப் பற்றும் வெட்டவெளி. அவன் விழுந்து மண்ணிலறைபட்டு துடிதுடிக்கையில் அவன் மேல் வந்து விழுகிறான் அவன் தோழன். இரு உடல்கள். வெறும் இரு குருதிப்பைகள்.
என்ன இது? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன்? நூறடித்தொலைவைக்கூட என் புரவி கடந்திருக்கவில்லை. என் கைகள் நூறு அம்புகளை தொடுத்துவிட்டன. என் அம்புகளால் நூறுபேராவது விழுந்து உயிர்துறந்திருப்பார்கள். ஆனால் இங்கில்லாமல் இருந்து இவற்றை நோக்கிக்கொண்டிருக்கிறேன். என் ஆடிப்பாவை இங்கு நின்று கொந்தளிக்கிறது. என்னுடன் பிறந்தது. நான் இறக்கையில் தானுமிறப்பது. இங்கே என்னசெய்துகொண்டிருக்கிறேன்?
தன்முன் சென்ற வில்லவன் ஒருவன் விரைந்தோடும் புரவியின் மேலிருந்து அம்புபட்டு சரிந்து விழுவதை பூரிசிரவஸ் கண்டான். பூரிசிரவஸ்ஸின் புரவி அவனைக் கடந்துதாவி மேலே சென்றது. வில்லவனின் புரவி போர்க்கலை பயிற்றுவிக்கப்பட்டதாகையால் பின்னால் வந்த குதிரைகளை மோதாமல் முன்னால் ஓடியபடியே விலகிச்சென்று வளைந்து பின்னோக்கி திரும்பியோடியது. அதற்குள் இன்னொரு புரவியின் விலாவில் ஆவசக்கரத்தின் நீளம்பு பாய்ந்து இறங்கி சிறகு நடுங்கியது. அதன் விலாவில் தோல் துடித்தது. விசையுடன் எழுந்த முன்னங்கால் தசை விதிர்க்க பெரிய கழுத்து நரம்பு சுண்ட அது முழுவிரைவில் தாவும் உடலுடன் அம்பை நக்க விழைவதுபோல தலைவளைத்து அவ்விசையால் உடல் கோணலாகி முன்னால் விழுந்து கழுத்து மண்ணில் அறைபட்டு பின்னங்கால்கள் லாடங்கள் தெரிய காற்றில் எழுந்து உதற மும்முறை தலை குத்தி உருண்டு சென்று விழுந்து புரண்டு எழுந்தது. அதன் ஆமையோட்டுக்கவசம் தெறித்து உருண்டு அதிர்ந்து சுழன்று அமைந்தது.
எரிந்துகொண்டிருந்த மரத்தடிமேல் விழுந்த குதிரை மேலும் அலறியபடி துடித்தெழுந்து மறுபக்கம் பாய்ந்து மீண்டும் விழுந்தது. அதன்மேலிருந்து குதித்த வில்லவன் பின்னால் வந்துகொண்டிருந்த குதிரைகளின் காலில் படாமல் விலகி ஓடினான். மண்ணில் விழுந்து துடித்த குதிரையை தாவிக்கடந்தபடி மற்றகுதிரைகள் கனைத்துக்கொண்டே முன்னால் ஓடின. தன் முன் மேலும் இரு வீரர்கள் அம்புபட்டு விழுவதை பூரிசிரவஸ் கண்டான். ஒருவனை பின்னால் வந்த புரவி மிதித்து துவைத்து மேலே சென்றது. அலறல்கள் எங்கோ என ஒலித்தன. பெருமுரசுகள் உடலுக்குள் புகுந்து விம்மின. எங்கோ ஒலித்த சங்கு செவிக்குள் புகுந்து தலையை நிறைத்தது.
போர்ப்புரவிகள் வெறிகொண்டிருந்தன. அனலையும் அம்புகளையும் அவை அப்போது அஞ்சவில்லை. முன்னால் செல்வதற்காக அவற்றை தூண்டவே வேண்டியிருக்கவில்லை. கர்ணன் கோட்டைக்கு அப்பால் மறைந்தான். வால் சுழலும் கவசப்புரவிகள் ஒவ்வொன்றாக புகைத்திரையைக் கிழித்து உள்ளே சென்று மறைந்தன. அங்கே கர்ணனின் அம்புகள் பட்டு விழும் வீரர்களின் ஒலிகளை கேட்கமுடிந்தது. பெருமுரசொன்றின் அதிர்வுக்குப்பின் கொம்பொலிகள் எழுந்தன. அங்கே ஒரு படை நின்றிருக்கிறது.
அஸ்தினபுரியின் பெரும்படகுகள் காம்பில்யத்தின் எரியும் துறையை அணுகி அனல் தொடாதபடி நீருக்குள் நின்றுகொண்டு கோட்டைமேலிருந்த காவல்மாடங்களை நோக்கி அம்புகளை செலுத்தின. சதக்னிகளின் எரியுருளைகள் தலைக்குமேல் முழங்கியபடி சென்று கோட்டைமேல் விழுந்து வெடித்து அனல்குழம்புகளை சிதறடித்தன. கோட்டைமேலிருந்த காவல்மாடங்களனைத்தும் எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்த சதக்னிகளும் எண்ணைக் கலங்களும் பற்றிக்கொண்டு வெடித்து எரியத்தொடங்கின. கோட்டைமேலிருந்த வில்லவர்கள் மறுபக்கம் படிகளினூடாக இறங்கி ஓடினர்.
கோட்டைமேலிருந்து அம்புகள் நின்றதும் பின்பக்கம் துரியோதனனின் சங்கொலி எழுவதை பூரிசிரவஸ் கேட்டான். அஸ்தினபுரியின் காலாள்படைகள் போர்க்கூச்சலிட்டபடி தீயும் புகையும் நிறைந்த துறைமேடையில் ஏறி ஓடிவந்தன. ஒரு கணம் திரும்பி நோக்கிவிட்டு அவன் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே சென்றான். அவனுக்குபின்னால் புகைக்கதவுகள் மூடிக்கொண்டன. முன்னால் அலையடித்த படைக்கலங்களின் அசைவுகளை போர்க்குரல்களை மரணக்கூச்சல்களை வெயிலை புழுதியை எரிமணத்தை குருதிமணத்தை ஒரேகணம் அவன் எதிர்கொண்டான்.
கோட்டைவாயிலுக்கு அப்பால் காலையொளி எழுந்திருந்தது. காம்பில்யத்தின் பன்னிரு அடுக்குகொண்ட காவல்கோட்டங்களின் நிழல்கள் நீண்டுவந்து கோட்டை மேல் விழுந்து மடிந்திருந்தன. அவற்றில் இருந்து நிழலம்புகள் எழுந்து ஏதோ திசை நோக்கிச் சென்று மடிந்தன. தொலைவில் குவைமுகடுகள் கொண்ட சுங்கமாளிகைகளும் படைத்தலைவர் மாளிகைகளும் அதற்கப்பால் எழுந்த செந்நிறக் கதிரொளியில் நிழலுருக்களாக தெரிந்தன. காம்பில்யத்தின் நகர்மையத்திற்குள் செல்லும் இரு பெருஞ்சாலைகளிலும் பாஞ்சாலப்படையினர் அணிவகுத்து அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தனர். மாளிகைகளின் உப்பரிகைகளிலும் காவல்கோட்டங்களின் முகடுகளிலும் இருந்து வில்லவர் அம்பெய்தனர்.
அவனுக்கு சிலகணங்களுக்கு முன்னர் உள்ளே புகுந்திருந்த கர்ணன் தன் அம்புகளால் முன்னணியில் நின்ற பாஞ்சாலர்களை வீழ்த்தியபடி பாய்ந்துசென்று பாஞ்சாலத்தின் படைகளை மோதி சிதறடித்துவிட்டிருந்தான். உப்பரிகைகளில் இருந்தும் காவல்கோட்டங்களில் இருந்தும் அவன் அம்புகள் பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்தனர். கர்ணன் கைகளைத் தூக்கி தன் பின்பக்கத்தை காக்கும்படி பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிக்கொண்டு முன்னேறினான். கர்ணனை குறிவைத்து வில்லெடுத்த ஒவ்வொருவரையும் தன் அம்புகளால் வீழ்த்தியபடி பூரிசிரவஸ் தொடர்ந்தான்.
கொம்புகளும் முரசுகளும் ஒலிக்க தனக்குப்பின்னால் துரியோதனனின் காலாள்படைகள் நுழைந்ததை பூரிசிரவஸ் கேட்டான். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் வீரர்கள் அணியணியாக உள்ளே வந்தபடியே இருந்தனர். உலோகக் கவசமணிந்து கையில் கதையுடன் துரியோதனன் வர அவனுக்குப்பின்னால் துச்சாதனன் இடப்பக்கம் காத்துக்கொண்டு வந்தான். கர்ணனின் குதிரைப்படை பாஞ்சாலப்படையை இரு கதிர்களாக வகுந்தபடி முன்னால் செல்ல அந்த இடைவெளியில் துரியோதனனின் காலாள்படை உள்ளே புகுந்தது. உரக்க நகைத்தபடி தன் நீண்டகதாயுதத்தால் தலைகளை உடைத்துக்கொண்டு முன்னால் சென்றான். அவன் உடல் மதம் கொண்டு ததும்பியது. இரும்புக்கவசம் காலையொளியில் வெட்டி வெட்டி மின்னியது.
சிலகணங்களில் முழுமையாகவே போர் மூண்டுவிட்டது. போர் என்பது உடல்களின் கொந்தளிப்பு. அங்கே இலக்குகள் இல்லை. எதிரிகள் இல்லை. மானுடர்கூட இல்லை. குருதிவெறிகொண்ட தெய்வங்களின் நடனம். குருதி தெறித்து சிதறி மழையென விழுந்து பலநூறு கால்களால் மிதிபட்டுச்சேறாகி அச்சேற்றில் விழுந்த உடல்களை மூடிக்கொண்டது. கருக்குழந்தைகள் என குருதி மூடிய உடல்கள் துடித்தன. கால்கள் புயல் கொண்ட காடுகள் என கால்கள். கைகளின் பல்லாயிரம் கிளைச்சுழற்சிகள். முகங்கள் காற்றில் கொந்தளித்தன. அத்தனை வீரர்களின் முகங்களும் ஒற்றை உணர்ச்சியில் வெறித்திருந்தன. அங்கு நிகழவனவற்றுக்கு அப்பால் எங்கோ இருந்தன கண்கள்.
அவர்களுக்குப்பின்னால் துச்சலனின் தலைமையில் படகுகள் அனைத்தும் எரிந்து உடைந்து சரிந்த துறைமேடையை அணுகி நிற்க அவற்றிலிருந்து சதக்னிகளையும் ஆவசக்கரங்களையும் இறக்கி உருளைகளில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர். அவை நிலைகொண்டதுமே அம்புகளையும் எரியுருளைகளையும் ஏவத்தொடங்கின. அவர்களின் தலைக்குமேல் பறவைக்கூட்டங்கள் போல முன்னும் பின்னும் அவை பறந்துகொண்டிருந்தன.
ஒன்றுடன் ஒன்று முட்டி இருமுனைகளுமே உடைந்து மரச்சிம்புகளாகித் தெறிக்க ஒன்றுக்குள் ஒன்று உள்ளே செல்லும் நாவாய்கள் போல இரு படைகளும் ஆயின. அந்த உடைவுமுனையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. கர்ணன் கைகளைத் தூக்கியதும் அவன் கொம்பூதியின் ஓசை எழுந்தது. வில்லவர்கள் ஐவர் ஐவராக அணிபிரிந்து விலகி வலைபோல மாறி காம்பில்யப்படைகளை எதிர்கொண்டனர். அவர்களின் அம்புபட்டு வீழ்ந்த பாஞ்சாலர்களின் மீது ஏறிக்குதித்து முன்னால் சென்றனர். அலையலையாக உடல்கள் சரிந்தன. உடல்கள் மேல் உடல்கள் விழுந்தன
பூரிசிரவஸ் வலப்பக்கத்து காவல்கோபுரத்தை தொடர்ச்சியாக அம்புகளால் தாக்கி அங்கிருந்த அனைவரையும் வீழ்த்தினான். அஸ்தினபுரியின் வில்லவர்கள் பாய்ந்து அதில் ஏறிக்கொண்டு அதன் வளைந்த சிறிய மாடங்களில் தோன்றி காம்பில்யப்படைகளை நோக்கி அம்புகளை தொடுத்தனர். அந்த முதல்வெற்றியை அஸ்தினபுரியின் வீரர்கள் கூவி ஆர்த்து கொண்டாடினர்.
போரின் ஒலிப்பெருக்கு ஏன் அலையடிக்கிறது என்று பூரிசிரவஸ் வியந்தான். ஒவ்வொரு எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஓசையாகவே கேட்டறிய முடிந்தது. அப்படியென்றால் அந்த மொத்தப் படையும் ஒன்றாகவே இருக்கிறது. அது ஒவ்வொன்றையும் காண்கிறது. ஒவ்வொரு வீரனும் தன் இலக்கை தன்னந்தனியாகவே அடைகிறான். தனிமையிலேயே இறக்கிறான். ஆனால் அவர்களனைவரும் இணைந்து ஒன்றாகவும் இருக்கிறார்கள். இப்போது நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் கைகளும் கண்களும் படைகளில் கலந்துள்ளன. இந்த ஆழத்தில் என்னுள் நின்று ஒரு சிறுவன் கிளர்ச்சிகொண்டு கொந்தளிக்கிறான்.
பேரோசையைக் கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். பாஞ்சாலப்படைகளுக்கு அப்பால் குரங்குக்கொடி பறக்கும் பொன்னிறத்தேரில் வந்த அர்ஜுனனைக் கண்டு கர்ணன் நாணோசை எழுப்பியபடி தன் வெண்புரவியில் விரைந்துசென்றான். அவனைச்சூழ்ந்து அவன் வில்லவர் சென்றனர். பூரிசிரவஸ் தன் வில்லை ஒலித்தபடி புரவியைச் செலுத்தி கர்ணனின் வலப்பக்கத்தை காத்துக்கொண்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அதே கணத்திலேயே அவர்களின் அம்புகளும் காற்றில் ஒன்றையொன்று மறித்து உடைந்து தெறித்தன.
அர்ஜுனனும் கர்ணனும் பொருதத் தொடங்கிய முதற்கணம் அங்கிருந்த அத்தனை படைவீரர்களும் போரை நிறுத்தி விழிதிகைத்து நோக்கி நின்றனர். இருவரின் விற்களிலிருந்தும் அம்புகள் எழுந்து மோதிச் சிதறின. அம்புகளின் உலோக அலகுகள் மோதி விண்ணில் பொறி தெறிப்பதை பூரிசிரவஸ் முதல்முறையாகக் கண்டான். சிலகணங்களுக்குள் பேரோசையுடன் இருபடைகளும் மீண்டும் மோதிக்கொள்ளத் தொடங்கின.
அர்ஜுனனுக்கு வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் நகுலனும் வில்லேந்தி வந்தனர். துரியோதனன் தன் கதையை வீசிவிட்டு வில்லை வாங்கிக்கொண்டு தருமனை எதிர்கொண்டான். பூரிசிரவஸ் நகுலனுடன் பொருதினான். போரை விற்களே நிகழ்த்திக்கொண்டன. பாதாளநாகங்கள் உடலில் குடியேறியதுபோல அவை விம்மி நெளிந்து துள்ளி நடனமிட்டன. மூன்றடுக்குகளாக வெளி கொந்தளித்தது.அ ம்புகளால் ஆன கூரைக்குக் கீழே மனித உடல்களின் அலை. அதற்கு அடியில் கீழே விழுந்து துடிக்கும் உடல்களின் நெளிவு.
நெடுந்தொலைவில் என கொம்புகளும் முரசுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் கிழக்குவாயிலையும் வடக்குவாயிலையும் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே பாஞ்சால இளவரசர்களும் பீமனும் சகதேவனும் அவர்களை எதிர்கொள்கிறார்கள். மூன்று பெருங்கழிகளால் அறையப்படும் மூன்றுமுக முரசு. மூன்று வேங்கைகளால் தாக்கப்படும் யானை. அது முழங்கி அதிர்ந்தது. அஞ்சியும் சினந்தும் பிளிறியது.
போர் தொடங்கி மிகக்குறைவான நேரமே ஆகியிருக்கிறது என்று திடீரென்று பூரிசிரவஸ் உணர்ந்தான். முழுநாளும் சென்று மறைந்தது போலிருந்தது. நெடுங்காலமாக அங்கே அப்போரே நிகழ்ந்துகொண்டிருப்பது போல தோன்றியது. போரிடும் படைகளின் நிழல்கள் கோட்டைச்சுவரில் சுழன்றாடின. அதில் வெயிலின் செம்மை மறைந்து வெள்ளிப்பெருக்காகியது. மின்னும் படைக்கலங்கள் அதில் நூறுநூறு சிறு மின்னல்களை உருவாக்கின.
மத்தகங்கள் முட்டிக்கொள்ளும் மதயானைகள் போல இருபடைகளும் மோதி உறைந்து நின்றன. திரும்பி நோக்கியபோது பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் படைகள் முன்னால்செல்வதை உணர்ந்தான். கர்ணனின் அம்புவெள்ளத்தை தடுக்கமுடியாமல் அர்ஜுனனின் தேர் அறியாமலேயே பின்னால் சென்றது. தோளில் துரியோதனின் அம்புபட்டு தருமன் தேர்த்தட்டில் சரிந்து விழுந்தான். பாஞ்சாலப்படைகள் பெருங்கூச்சலுடன் அவன் தேரை சூழ்ந்துகொண்டன. களிவெறியுடன் சிரித்துக்கொண்டு துரியோதனன் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி தருமனை நோக்கி சென்றான். தருமனைப் பாதுகாத்தபடி பாஞ்சாலர்கள் பின்னால் செல்ல அங்கே உருவான வளைவை அஸ்தினபுரியின் காலாள்படைகள் நிறைத்தன.
அர்ஜுனன் திரும்பி தருமனை நோக்கி ஏதோ சொல்லமுயன்ற கணத்தில் அவன் தொடையிலிருந்த இரும்புவலைக் கவசத்தின் இடைவெளியில் கர்ணனின் அம்பு தைத்தது. பாஞ்சாலப்படைகள் திகைத்து கூச்சலிட்டன. அர்ஜுனன் தேர்த்தூணில் சாய்ந்தபடி நிற்காமல் முன்னேறும்படி தன்படைகளை நோக்கிக் கூவியபடி வெறியுடன் அம்புகளைத் தொடுத்தான். அவனுடைய வில் உடைந்து தெறித்தது. அவனை நோக்கி நகுலன் பாய்ந்து வர நகுலனின் தலைக்கவசத்தை பூரிசிரவஸ்ஸின் அம்பு உடைத்தெறிந்தது.
அர்ஜுனனின் தேரோட்டி தேரை பின்னோக்கி செலுத்தினான். அர்ஜுனன் பின்னடைந்தபோது மொத்த பாஞ்சாலப்படையும் இழுபடும் வலைபோல அவனுடன் சேர்ந்து பின்னால் சென்றது. கர்ணன் கைகாட்ட அவனுடைய கொம்பூதி முன்னேறும்படி அறைகூவினான். அர்ஜுனன் மீண்டு எழமுடியாதபடி அம்புகளால் அவனை சூழ்ந்துகொண்டு கர்ணன் முன்னால் சென்றான். அர்ஜுனன் உடல் இயல்பாக அசைந்து அம்புகளைத் தவிர்த்தது. ஒரு கணம் அவன் உள்ளம் பதறினால்போதும் அவன் நெஞ்சை கர்ணனின் அம்புகள் தைத்துவிடும் என்று பூரிசிரவஸ் அறிந்தான்.
ஒரு கணம். அச்சமோ தளர்வோ ஒரு கணம். அந்தக்கணத்தில் அனைத்தும் முடிந்துவிடும். அந்தக்கணம் மிக மிக அருகே நின்றிருந்தது. கண்ணெதிரே ஒளிவிட்டு கை தொட விலகும் நீர்க்குமிழி போல. ஒரு கணம். ஒருகணம். ஒருகணம்… அம்புகள் எழுந்து எழுந்து கடந்தன. சிறுபூச்சிகளால் சூழப்பட்ட காட்டெருதுகள் போலிருந்தனர் இருவரும். ஒருகணம். நகுலனை தன் அம்புகளால் தடுத்து அர்ஜுனனை நெருங்கவிடாது செய்தபடி பூரிசிரவஸ் அர்ஜுனன் விழிகளையே நோக்கினான். விழிகள் அத்தனை அண்மையில் வந்தன. தொட்டுவிடலாமென. ஓவியத்தில் எழுதி விரித்தவை என. அவற்றில் தெரிந்தது உலோகம். உணர்வற்றது. உயிரற்றது.
உலோகம் அல்ல. அது திரை. அப்பால் இருக்கிறது அவன் உள்ளம். அங்கே அச்சம் எழவில்லை. ஆனால்… ஆம், திகைப்பு. ஒருகணம் அங்கே மின்னி மறைந்த திகைப்பைக் கண்டு பூரிசிரவஸ்ஸின் உள்ளம் துள்ளியது. வில்லை ஏந்திய கைகள் நடுங்கின. திகைப்பு. திகைப்புதான் அது. இதோ அதுவும் உடையும். ஒரு கணம்…. அர்ஜுனன் தோற்கப்போகிறான். பெரும்புகழ் பார்த்தன். வில்லேந்திய இந்திரன்… திகைக்கிறான். திகைப்பு அகலும் இக்கணத்தில் இதோ…
அவன் அகம் நிலையழிந்த கணத்தில் நகுலனின் அம்பு அவன் மார்புக்கவசத்தை உடைத்தது. மறுகணமே அவன் திரும்பி நகுலனின் வில்லை உடைத்தெறிந்தான். நகுலன் தன் தேர்த்தூணுக்குப்பின்னால் செல்வதற்குள் அவன் தோளில் பூரிசிரவஸ்ஸின் அம்பு தைத்தது. அப்போது தன்னைச்சூழ்ந்த அமைதியை பூரிசிரவஸ் கேட்டான். படைகள் அசைவிழந்திருந்தன. அத்தனை விழிகளாலும் அந்தச்சூழல் கர்ணனையும் அர்ஜுனனையும் நோக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி தழலென நெளிந்தாடினர். அவர்கள் நடுவே அம்புகளால் ஆன ஒரு பாலம் காற்றில் நின்றிருந்தது.
பெருமரமொன்று கிளையோலத்துடன் சரிந்துவிழுவதுபோல படைகள் எழுப்பிய அமலை கேட்டது. சில கணங்களுக்குப்பின்னர்தான் அது கிழக்குவாயிலில் என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். அங்கே பெருமுரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டன. தத் தத் ததா! தத் தத் ததா! தத் தத் ததா! வெற்றிமுரசு! அஸ்தினபுரியின் படையின் ஒட்டுமொத்தப் படைக்கலங்களும் ஒரே கணத்தில் சரிவதை பூரிசிரவஸ் கண்டான். “ஜயத்ரதன்!” என்று எவரோ கூவினர் “சைந்தவர் பின்வாங்கிவிட்டார்” என்று இன்னொரு குரலெழுந்தது. தன்னையறியாமலேயே அஸ்தினபுரியின்படை ஒரு எட்டு பின்னடைந்தது.
மரக்கிளைகளில் நீர்த்துளிகளென ததும்பி நின்ற பாஞ்சலாப்படையை அந்தச் சிறிய அசைவு தூண்டியது. அவர்கள் படைக்கலங்களைத் தூக்கியபடி அமலையாடிக்கொண்டு முன்னால் பாய்ந்தனர். கர்ணன் திரும்பி நோக்கிய கணம் அவன் வில் உடைந்து தெறித்தது. அவன் விரைவாக புரவியில் திரும்பி அருகே நின்ற வீரனின் வில்லை எடுத்துக்கொண்டபோது அவன் புரவியின் விலாவில் அர்ஜுனனின் வில் பாய்ந்தது. புரவியில் கையூன்றி காற்றில் எழுந்து பாய்ந்து அருகிருந்த வீரனின் புரவியில் ஏறிக்கொண்டு கர்ணன் திரும்பி அம்புவிட்டு அர்ஜுனனை தடுத்தான். ஆனால் அதற்குள் அஸ்தினபுரியின்படைகள் பின்னடைந்து விட்டன. கர்ணனையும் பூரிசிரவஸ்ஸையும் பாஞ்சாலப்படைகள் சூழ்ந்துகொண்டன.
வடக்குவாயிலிலும் பேரோசை எழுந்தது. அங்கும் பசியடங்கிய சிம்மம்போல வெற்றிமுரசு ஒலிக்கத்தொடங்கியது. அஸ்தினபுரியின் படைகள் சிதறித்திரும்பி ஓடி கோட்டைவாயிலருகே ஒடுங்கி வெளியே பீறிட்டுச்சென்றன. துரியோதனனின் கொம்பூதி அவர்களை நிறுத்தும்பொருட்டு கூவிக்கொண்டே இருந்தான். கைகளை வீசி துரியோதனன் கூச்சலிட்டான். அவன் ஆணையிடுவதைக் கேட்டு துச்சாதனன் படைகளைக் கடந்து சென்று கைவிரித்து நின்று அவர்களை செறுக்க முயன்றான். மறுபக்கம் கைவிடுபடைகளின் அருகே நின்ற துச்சலன் கொடியை வீசியபடி அவர்களுக்கு ஆணையிட்டான்.
ஆனால் அவர்கள் எதையுமே அறியவில்லை. படை என்பது ஒரு விலங்கு என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். அது திரும்பிச்செல்ல முடிவெடுத்துவிட்டிருந்தது. கரையுடைந்த வெள்ளம்போல அது ஒழுகிச்சென்று துறைமேடையில் பரவி படகுகளை நோக்கி சென்றது. இரு விளிம்புகளும் பிரிந்து கங்கைக்கரைக் குறுங்காடுகளை நோக்கி ஒழுகியிறங்கின.
அப்போதும் உச்சவிரைவுடன் கர்ணனும் அர்ஜுனனும் போர் புரிந்துகொண்டிருந்தனர். “மூத்தவரே” என்று பூரிசிரவஸ் அழைத்தான். கர்ணன் அதை கேட்கவில்லை. அவனைச்சூழ்ந்து பாஞ்சாலத்தின் நூற்றுக்கணக்கான வில்லவர்கள் தங்கள் அம்புகளை குறிநோக்கிவிட்டதையும் அவன் அறியவில்லை. பூரிசிரவஸ் வில்லைத் தாழ்த்தி “மூத்தவரே” என மீண்டும் அழைத்தான். கர்ணன் அப்போதுதான் தன்னை உணர்ந்து திரும்பி நோக்கினான். ஒருகணத்தில் அனைத்தையும் புரிந்துகொண்டான். அவன் வில் தாழ்ந்தது. மறுபக்கம் அர்ஜுனனும் புன்னகையுடன் தன் வில்லைத் தாழ்த்தினான். பாஞ்சாலப்படைகள் ஒற்றைபெருங்குரலாக வெடித்தெழுந்தன.
கர்ணன் கூரிய அம்பொன்றை தன் கழுத்தை நோக்கி மேலெடுத்த கணம் துரியோதனன் “கர்ணா, நில்” என்று கூவினான். “வேண்டாம்… உன் உயிரை நீ எனக்களித்திருக்கிறாய்.” கர்ணனின் கையில் அந்த அம்பு சிலகணங்கள் நின்று நடுங்கியது. பின் அதை கீழே போட்டுவிட்டு பற்களைக் கடித்தபடி தோள்களை குறுக்கிக்கொண்டு அவன் தலைகுனிந்தான்.
கோட்டையின் வலப்பக்க வழியில் பாஞ்சாலப் படைப்பிரிவு முரசொலியும் கொம்பொலியும் துணைக்க அமலையாடியபடி வந்தது. அதன் முகப்பில் புரவியில் வந்த பீமனையும் சகதேவனையும் பூரிசிரவஸ் கண்டான். அங்கு நிகழ்ந்ததை அவர்கள் ஓசையிலிருந்தே அறிந்திருந்தனர். தலைகுனிந்து நின்ற கர்ணனைக் கண்டதும் பாஞ்சாலர்கள் கூச்சலிட்டு நகைத்தபடி படைக்கலங்களை வானில் வீசிப்பிடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.
பாஞ்சாலப்படைகளால் சூழப்பட்டு கதைதாழ்த்தி நின்ற துரியோதனன் பீமனை நோக்கவில்லை. ஆனால் அவன் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலாலும் பீமனைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான் என்று பூரிசிரவஸ் நினைத்தான். அவன் பெருந்தோள்கள் தளர்ந்தன. விழுந்துவிடுவான் என்பதுபோல மெல்ல ஆடினான். அவனுக்குப்பின்னால் துச்சாதனன் அப்போதும் கதை தாழ்த்தாமல் நின்றுகொண்டிருந்தான். பீமன் அப்பால் தன் புரவியை நிறுத்திவிட்டு இடையில் கைகளை வைத்துக்கொண்டு அதன்மேல் அசையாமல் அமர்ந்திருந்தான்.
தோளில்வழிந்த குருதியை மரவுரியால் அழுத்திப்பிடித்தபடி தருமன் தேர்த்தட்டில் ஏறி நின்றான். அவனைக்கண்டதும் அமலையோசை அடங்கி படை அமைதிகொண்டது. அர்ஜுனனிடம் “இளையோனே, இது போரல்ல, போர்விளையாட்டு மட்டுமே” என்றான். திரும்பி துரியோதனனிடம் “சுயோதனா, இதோ நீ என்னை வென்றிருக்கிறாய். நீ விழைந்ததுபோல் என் குருதி இங்கே விழுந்திருக்கிறது. இந்த விளையாட்டை முடித்துக்கொள்வோம். சென்றுவா” என்றான்.
துரியோதனன் நிமிர்ந்து தருமனை நோக்கினான். “சுயோதனா, இதை உன் இளையோரின் விளையாடலாகக் கொள்க! ஒருபோதும் இதை ஒரு போர்வெற்றி என எங்கள் சூதர்கள் பாடமாட்டார்கள். இதன் பொருட்டு நீ எதையும் இழக்கப்போவதில்லை என நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். குடிமூத்தவனாக என் இளையோரை வாழ்த்திவிட்டுச்செல்” என்றான் தருமன் மீண்டும்.
துரியோதனன் கண்களைச் சுருக்கி உதடுகளை இறுக்கி அசைவில்லாது நின்றான். பெருவெள்ளம் ஓடும் நதி என அவன் உடற்தசைகள் இறுகி நெளிந்தன. கழுத்தில் நரம்புகள் இறுக தலை மட்டும் அசைந்தது. பூரிசிரவஸ் “ஆம் இளவரசே, இது ஒரு விளையாட்டுப்போரென்றே இருக்கட்டும்… தம்பியரை வாழ்த்துங்கள்” என்றான். அச்சொற்கள் நீரில் இலைகள் விழும் அசைவை துரியோதனன் உடலில் உருவாக்கின.
தருமன் திரும்பி நோக்கியதும் அர்ஜுனனும் நகுலனும் விற்களை தேர்த்தட்டில் வைத்து துரியோதனனை வணங்கினர். துரியோதனனின் வலக்கை வாழ்த்துவதற்காக எழப்போவதை பூரிசிரவஸ் கண்டான். ஆனால் மறுகணம் அவன் திரும்பி அருகே நின்ற புரவியில் ஏறிக்கொண்டு விரைந்தோடிச்சென்றான். அவன் சென்றவழியில் பாஞ்சாலப்படை பிளந்து விலகியது. ஒருகணம் கர்ணனை நோக்கியபின் அவ்வழியே துச்சாதனனும் சென்றான்.
பூரிசிரவஸ் “மூத்தவரே” என்று கர்ணனை அழைத்தான். அந்த அழைப்பை ஓர் உடல் உலுக்கலுடன் அறிந்த கர்ணன் திரும்பி அவனை நோக்கினான். அந்த விழிகளைக் கண்ட பூரிசிரவஸ் நெஞ்சதிர்ந்தான். அவை இரு கூழாங்கற்களென உயிரற்றிருந்தன. முகம் சடலமெனத் தெரிந்தது. ஏதோ ஒன்று அவனுள் சொல்ல அவன் நிமிர்ந்து நோக்கினான். மூன்றாவது காவல்மாடத்தின் பன்னிரண்டாவது மாடவளைவில் செவ்வண்ணப் பட்டுச்சேலையின் அசைவு தெரிந்தது.
பூரிசிரவஸ் கர்ணனின் புரவியின் கடிவாளத்தை ஒரு கையால் பற்றி அதைத் திருப்பிக்கொண்டு தன் புரவியை உதைத்தான். இரு புரவிகளும் பாஞ்சாலப்படை நடுவே சென்றபோது வீரர்கள் விலகி விரிந்தனர். சடலத்தை ஏந்திச்செல்வதுபோல கர்ணனின் புரவி சீரான பெருநடையில் சென்றது. தனக்குப்பின்னால் பாஞ்சாலப்படைகளின் களிக்கூச்சலை பூரிசிரவஸ் எதிர்பார்த்தான். ஆனால் கற்சிலைக்குவியலென நின்றிருந்தது பாஞ்சாலப் படை.
வண்ணக்கடல் பற்றி கேசவமணி கட்டுரை
அனைத்து வெண்முரசு விவாதங்களும்