«

»


Print this Post

லீனா மணிமேகலை


அன்புள்ள ஜெ,

இந்தக்கட்டுரையை திண்ணை இதழில் வாசித்தேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=21005024&format=html

தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம் By சின்னக்கருப்பன்

இதிலே சொலப்பட்டுள்ள கீழ்க்கண்ட விஷயம் உண்மையானதா?

லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஜெயமோகன் தனது நண்பர் மீது மிகவும் பிரியம் கொண்டவர். அந்த அன்பு இப்போது அவரது நண்பருக்கு உதவிய லீனா மணிமேகலை மீது இருக்கிறது.

அது என்ன உதவி? அந்த ப் பெண்மணி கமலாசுரையா சம்பந்தமான உங்க கட்டுரைக்கு பதிலாககௌங்கலை திட்டி பேசினார் என்று இணையத்திலே வாசித்தேன். லீனா மனிமேகலையை உங்களுக்கு எப்படித் தெரியும்?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

வேறு ஒரு சந்தர்ப்பத்திலே சொல்லியிருக்கிறேன், உங்களிடமும். லீனா மணிமேகலை எனக்கு அறிமுகமானது 2004ல். அவர் நடத்தி இரு இதழ்களே வெளிவந்த திரை என்ற சினிமா இதழில் வெளியிட என் நண்பரும் மலையாள திரைக்கதையாசிரியருமான லோகிததாஸ் அவர்களின் பேட்டியை கேட்டார். நானே அந்தப் பேட்டியை எடுத்துக்கொடுத்தேன். அந்தப்பேட்டி இப்போது உயிர்மை வெளியீடாக வந்துள்ள ‘லோகி’ நூலில் உள்ளது. அப்போதுமுதல் லீனா எனக்கு பழக்கம். பின் அவர் கணவர் ஜெரால்ட். இப்போதும் ஜெரால்டுடன் நல்ல உறவு உள்ளது.

கஸ்தூரிமான் படம் எடுத்த போது லோகி ஒரு முட்டாள்தனம் செய்தார். அதற்குக் காரணம் அப்போது அவரை தங்கள் வலைக்குள் வைத்திருந்த சில சினிமாத்தரகர்கள். கஸ்தூரிமான் படத்தை முன்னரே தொலைக்காட்சிக்கு விற்காமல் ‘ஓடியபின்’ விற்கலாமென முடிவுசெய்தார். ஓடவில்லை. பின்பு அதை விற்க முயன்றபோது முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அடிமாட்டுவிலை சொன்னார்கள். அதைக் கேட்டு லோகி கண்ணீர் விட்டார்.

எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. தெரிந்த ஒரே ஆள் லீனா மனிமேகலை. நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் லோகியின் நிலையைச் சொல்லி உதவும்படி கோரினேன். லீனா அவரே வந்து லோகியைச் சந்தித்து அவரே அழைத்துச்சென்று பலவகையில் பேரம்பேசி ஏற்கனவே இன்னொரு தொலைக்காட்சி கேட்டதைவிட எட்டு மடங்கு விலைக்கு அதை விற்றுக்கொடுத்தார். லோகிக்கு அந்தப்படம் சம்பந்தமாக கையில் கிடைத்த ஒரே தொகை அதுவே.

பொதுவாக இச்சந்தர்ப்பங்களில் யாரும் உதவ மாட்டார்கள். புரோக்கர் என்றபேரே மிஞ்சும். உதவினாலும் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள்.லீனாவுக்கு லோகியை தெரியாது. ஒரு கலைஞனாக அவர்மேல் கொண்டிருந்த மதிப்பினாலேயே அந்த உதவியைச் செய்தார். கடைசி வரை லோகி அந்த உதவியைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்று லோகி பட்ட கஷ்டங்களை நினைக்கையில் அந்த உதவியையும் அந்த உதவிக்குப் பின்னால் இருந்த மனநிலையையும் பெரிதும் மதிக்கவே தோன்றுகிறது. லோகியைப்பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளில் ஒரு பகுதி அது.

லீனாமணிமேகலை சம்பந்தமாக இப்போது நிகழும் இலக்கிய அரசியல் அற்பத்தனமானது. லீனா ஒருவகையில் கவிதை எழுதிப்பார்க்கிறார். எனக்கு அது கவிதையாக இல்லை. அது என் கருத்து. லீனா என்னை ‘ஆணாதிக்கப் பன்றி’ என்று [ஆங்கிலத்தில்தான்] சொல்வார். அது அவரது கருத்து.

இங்கே உள்ள ஒரு பண்பாடு என்ன என்றால் இந்து அமைப்புகளின் கலாச்சாரப்போலீஸ்தனம் பாசிசம். கம்யூனிஸ்டுகள் செய்தால் முற்போக்கு. இஸ்லாமியர் செய்தால் வழிபாட்டுரிமை. அந்த அபத்தமான இரட்டைவாதம் வெளிவர இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது அவ்வளவே.

கமலா சுரையா விஷயத்தில் நான் எழுதியது அவரை எனக்குத் தெரியும் என்பதனால் உருவான தனிப்பட்ட மனப்பிம்பம். சொல்லப்படாதவையும் தெரியும். லீனா மணிமேகலை என்னை விமரிசிக்காவிட்டால் அவர் எப்படி பெண்ணியராக முடியும்? ஆனால் தரமில்லாது வசைபாடவில்லை என்றே கேள்விப்பட்டேன்.

பொதுவாக பிறருக்கு இயல்பாக உதவுவது ஒரு பெருங்குணம். இலக்கியத்தில் திலகவதி,சுப்ர பாரதி மனியன்,பாவண்ணன் யுவன் சந்திரசேகர், அழகியசிங்கர் ,லீனா மனிமேகலை போன்றவர்கள் ஒரு உதவி தேவையான இடத்தில் முன்னின்று அதைச் செய்வார்கள் என்று அறிந்திருக்கிறேன். அதில் இலக்கியக்கொள்கைகளை பார்க்க மாட்டார்கள் என. அந்த உதவிகளைப் பெற்றவர்களே அவர்களை வசைபாடுவதையும் அறிந்திருக்கிறேன். காரணம் உதவிபெற்றவரின் சுய இழிவே.

என்வரையில் எல்லா வேறுபாடுகளையும் மீறி அந்த உதவிகளுக்குப் பின்னால் உள்ள மனநிலை போற்றத்தக்கது.

ஜெ

http://www.jeyamohan.in/?p=4195
http://www.jeyamohan.in/?p=4190
http://www.jeyamohan.in/?p=3293

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7256

4 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  இப்படி பொருள் கொள்ளலாமா- ஒரு மனித அபிமானியாக லீனாவை பிடிக்கும், ஆனால் ஒரு கவிதாயினி யாக பிடிக்காது.

 2. sivamgss

  மனிதாபிமானம் என்பது வேறே, தனிப்பட்ட உணர்வுகள் வேறே. அதை நன்றாக விளக்கமாகச் சொன்னதற்கு நன்றி. மற்றபடி லீனாவின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடு இல்லை.

 3. V.Ganesh

  ‘ஆணாதிக்கப் பன்றி’ மிக மிக முக்கியமான வார்த்தை. ஆங்கிலத்தில் MCP என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அப்படி பட்டவரா? என் மாணவி என்னையும் “ஆணாதிக்க ஜன்மங்கள்” என்று கூறுவாள். அது பெண்களின் தாழ்வு மனப்பான்மை என்றே நான் கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?
  { வைரஸ் எல்லாம் பொய் விட்டது என்று நம்புகிறேன்}

 4. tdvel

  ஆஸ்திரேலியா , அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றபோதெல்லாம் எங்களை உடன் அழைத்துச்சென்றீர்கள். இப்போது எங்களுக்குத் தெரியாமல் எங்களை விட்டுவிட்டு தனியே எங்கு சென்றிருக்கிறீர்கள்? அசோகவனத்திற்கா? திரைவானில் மின்னவா? அல்லது எங்கள் சள்ளைத்தனத்தில் சலித்தா?
  த.துரைவேல்

Comments have been disabled.