ராய் கோவைச்சந்திப்பு -வெ.சுரேஷ்

கடந்த புதனன்று அரங்கா கூப்பிட்டு ராய் மாக்ஸம் வெள்ளி இரவன்று கோவை வருவதாகவும், சனிக்கிழமை ஏதேனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாமா என்றும் கேட்டார் பிப்ரவரி மத்தியிலிருந்தே கடுமையான அலுவலகப் பணி. சனிக்கிழமைகள் முழு நாள் ஆபீஸ். (தியாகு புத்தக நிலையத்தில் ஓரிரண்டு மணி நேரங்கள் தவிர) அவ்வப்போது ஞாயிறுகளிலும் சில மணி நேரங்கள் அலுவலகம் என்று போய்க்கொண்டிருக்கிறது.

4

இந்த சனிக்கிழமை , திங்கட்கிழமையன்று நடைபெற இருக்கும் ஒரு அலுவல் கூட்டத்துக்கு தயார் செய்ய வேண்டியும் இருந்தது. அரங்காவிடம் இயலாமையை சொன்னேன். ஆனாலும் நம் ஊருக்கு வருபவரை சந்திக்காமலேயே போய்விடுமோ என்றும் கவலையாக இருந்தது.வழக்கமாக சனியன்று தியாகு புத்தக நிலையத்துக்கு வருகை தரும் நண்பர்களுக்கும் இந்த சனிக்கிழமை பார்த்து ஏதேதோ வேலைகள். ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டுவிட்டேன்.

இந்நிலையில் காலையில் ஜெவின் தளத்தில் இன்று தியாகு புத்தக நிலையத்தில் ராய் மாக்ஸமுடன் சந்திப்பு இருக்கும் என்று பார்த்ததும் வியப்பும் குழப்பமும். .(பிறகு அந்த அறிவிப்பு மாறிவிட்டது,) மேலும் காலையில் நேரத்திலேயே நண்பர் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தாயாரின் இறப்புக்கு திருப்பூர். செல்லவேண்டியும் வந்தது. அதையும் முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு ஒரு அவசர விசிட் அடித்துஒரு 2 மணி நேரம் வெளியே போய்விட்டு வருவதாக சொல்லிவிட்டு சரியாக 12 மணிக்கு தியாகு புத்தக நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்.

அப்போதுதான் காரிலிருந்து இறங்கி ராய்,விஜயராகவன் செந்தில் குமார் தேவன் விஜயசூரியன் ஆகியோர் உள்ளே நுழைந்தார்கள். அரங்காவும் சிறில் அலெக்சும் காரிலேயே சற்று வெளியே போய்விட்டு வந்து சேர்ந்து கொள்வதாகக் கூறி சென்றார்கள்.

1
நல்லவேளையாக வழக்கமாக வரும் நண்பர்கள் அமரநாதன்,அன்பழகன் வந்திருந்தனர். சற்று நேரத்தில் மித்திரன் சாரும், கண்ணனும் சேர்ந்து கொண்டனர். வழக்கத்தை விட பெரிய ஜமாதான். புகைப்படத்தில் பார்த்ததை விட இன்னும் சற்று வயதானவராகவே இருந்தார். திரு,ராய். அரங்காவும் விஜயராகவனும் தாத்தா என்றே குறிப்பிட்டுக் கொண்டனர்.

வெள்ளைக் காரர்களோடு பேசுவதில் அவர்களது accent தான் பெரிய பேஜார். ஆனால் ராய் 22 முறை இந்தியா வந்திருந்து நம் இந்திய ஆங்கிலத்துக்கு ஓரளவு பழகியிருந்ததால் உரையாடல் ஓரளவு சரளமாகவே போயிற்று. ஆரம்ப கட்ட சம்பிரதாயங்களுக்குப் பின் வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்தார். பல ஆங்கிலேய indophile களைப் பற்றியும் பேசினோம். Abraham Eraly பற்றிக் குறிப்பிட்டு அவர் இந்தியாவிலேயே பாண்டிச்சேரியில் வசித்து வந்தும் கூட இந்தியர்களுக்கு அவ்வளவு அறிமுகம் ஆகாமல் இருந்தது பற்றி வியந்தார். Dalyrimple ஐ விட சிறந்த எழுத்தாளர் அவர் என்றார். Dalyrimpleன் முகலாயர் மீதான விமர்சனமற்ற பார்வை தமக்கு உவப்பானதல்ல என்றார். குஷ்வந்த் சிங் தனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளர் என்றார்.தன் புனைவுகளைப் பற்றியும் பேசினார்.

2
அப்படியே நூலகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு சில புத்தகங்களைப் பார்த்து மேற்கத்தியர்களுக்கே உண்டான பாணியில் புருவம் தூக்கி, உதட்டைப் பிதுக்கி தோள் குலுக்கினார்..ஆங்கிலேயரின் கல்லறைகள் பற்றிய பேச்சு வந்ததும் நீலகிரியில் அவை இருக்கும் இடம் பற்றிக் கேட்டார். உடனே தியோடோர் பாஸ்கரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு குன்னூரிலும் ஊட்டியிலும் அவை இருக்கும் இடங்களை அவரிடம் கொடுத்தோம்..
3

பின் பலகாரங்களும் காபியும் வந்ததும் ரசித்து உண்டு அருந்தினார்.உரையாடல் terrible என்றாலும் பலகாரங்கள் terrific என்றார் . ஆங்கிலேயராயிற்றே, கிரிக்கெட் பற்றிக் கேட்காமல் இருக்க முடியுமா? அதுவும் உலகக் கோப்பை சமயத்தில். உடனேயே இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தைக் குறித்து தலை குனிந்து வருத்தப் பட்டார். காலிறுதியில் இந்தியா இங்கிலாந்து மோதல் வருமோ என்றதும் சற்று மகிழ்ந்தார்.பின் ஒரு கேள்வியை வைத்தார். நோபல் பரிசும் பெற்றும் wisden almanac இடம்பெற்ற ஒரு ஐரிஷ் எழுத்தாளர் யார் என்றார். உடனே நினைவுக்கு வரவில்லை அவருக்குமே. பின் கூகுளிட்டு samuel becket என்று கண்டுபிடித்தோம்.(அப்படியா?) கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. நண்பர் காரில் ஏறப் போகும் போது உங்களுக்கு Bertrand Russel இன் சாயல் இருக்கிறது என்று சொன்னதும் மிகவும் மகிழ்ந்து போனார். தான் எப்போதும் தன் மாணவர்களிடம், எவ்வளவு சிக்கலான விஷயங்களையும் எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமானால் ரஸ்ஸலையே படிக்கச் சொல்வேன் என்று கூறி சந்தோஷமாக விடை பெற்றார். இதை கேட்டதும் நண்பர் அமரநாதன் என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் என்றார்

6
நண்பர்கள் அழைத்தபடி குன்னூர் ஊட்டி போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அலுவலகப் பணி மற்றும் அடுத்த நாள் கோவையில் இருந்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தினாலும் போக முடியவில்லை. இருந்தாலும் நழுவிப் போய்விடுமோ என்று பயந்த ஒரு சந்திப்பு கைகூடியது பெருமகிழ்ச்சி.சிறில், அரங்கா விஜயராகவன், தேவன் விஜயசூரியன் ஆகியோருக்கு நன்றி.

சந்திப்பு குறித்து படங்களுடன் நண்பர் தியாகு தன FB பக்கத்தில் பதிந்திருக்கிறார்.

சுரேஷ் கோவை.

முந்தைய கட்டுரைராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37