பெரியசாமி தூரன்

PeriasamyThooran
பெரியசாமி தூரன்

முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, திருவட்டாறு, குழித்துறை, பாறசாலை போன்ற பெரிய கோயில்களில் வருடத்தில் பத்துநாள் திருவிழா.

பெரும்பாலான பெரிய திருவிழாக்கள் மன்னர்காலத்திலேயே ஒழுங்குசெய்யப்பட்டவை. கதகளி, ஓட்டந்துள்ளல், திருவாதிரைக்களி போன்ற கேரளச் செவ்வியல் கலைகள் முக்கியமாக நடக்கும். கதகளியில் எனக்கு ஒரு பித்து உண்டு. சிறிய அம்மன், சாஸ்தா கோயில்களில் அவற்றை நடத்துபவர்களின் ருசியை நம்பலாம் கம்யூனிஸ்டுகள் அன்று பல கோயில்களைக் கையில் வைத்திருந்தார்கள். குறிப்பாக மஞ்சாலுமூடு கோயிலில் நடக்கும் மலையாள சமூக நாடகங்கள் மிகவும் பிரபலம். பாட்டு கச்சேரிகள் சில இடங்களில் இருக்கும். எங்கள் குழு மாதம் இரு திருவிழாவுக்குச் சென்றுவிடுவோம். அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது

அப்போதுதான் நயினாரின் பாடலைக் கேட்டேன். தொழில்முறைப் பாடகர் அல்ல.வற்கலை ராதாகிருஷ்ணனின் கதாபிரஸங்கம் தொடங்குவதற்கு முன்பு ஒரு மணிநேரம் ‘சும்மா’ ஒரு பாட்டு, பக்கமேளம் உள்ளூரிலேயே. அவரது கணீரென்ற குரல் முதலியேயே என்னைக் கவர்ந்தது. சுத்தமான தமிழ்ப்பாடல்களை மட்டுமே பாடினார். ஒரு பாடலைக் கேட்டு என்னவென்றே தெரியாத மன எழுச்சிக்கு ஆளாகி நான் கண்ணீர் சிந்தினேன். ‘என்னடா? என்னடா?’ என்று நண்பர்கள் உலுக்கினார்கள். சொல்லத்தெரியவில்லை. மனம் பாகாக மாறி ஓடி மறைந்துவிட்டது. ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்!”

இன்றும் அவ்வனுபவத்தை என்னால் மீட்டெடுக்க முடிகிறது. நான் அன்றுகூட பக்தன் இல்லை. கடவுள் நம்பிக்கை எங்கொ இருந்தாலும் அது பகவதிமீது தானே ஒழிய முருகனோ சிவனோ விஷ்ணுவோ அல்ல. நவீன இலக்கிய வாசிப்பு அதி தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி தொடர்பும், ஈடுபாடும் இருந்தது. அப்படியும் ஒன்று என்னை மீறி நிகழ்ந்துவிட்டது. மனிதவாழ்க்கையின் மீட்பற்ற பிரம்மாண்டமான தனிமையையும் அதன் கையறுநிலயையும் நான் சட்டென்று உணர்ந்தேன் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சியை வைத்து என்னை நெடுங்காலம் நண்பர்கள் கிண்டல்செய்வார்கள்.

மேலும் நாலைந்து வருடம்கழித்து பழைய குமுதம் இதழில் ஒரு செய்தியை வாசித்தேன். கோவையில் ஓர் அரங்கில் மதுரை சோமு அந்தப்பாடலை பாடினார். ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்” சோமு எப்படிப் பாடியிருப்பார் என்பதை இசைரசனை உள்ளவர்கள் ஊகிக்க முடியும். அதைக் கேட்டுக்கொண்டிருந்த குள்ளமான, கண்ணாடி போட்ட, ஒரு மனிதர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாராம். அந்த மனிதர் பெயர் பெரியசாமி தூரன். அவர்தான் அந்தப்பாடலின் ஆசிரியர்.

*

பெரியசாமி தூரன் சிறுபிள்ளைகளுக்கெல்லாம் தெரிந்த பெயர். ஆரம்பப்பள்ளிமுதல் சிறுவர்கள் அவர் எழுதிய பாடல்களைப் பாடித்தான் வளர்ந்திருப்பார்க்ள். பெ.தூரன் என்றபெயரை நானெல்லாம் பேத்தூரன் என்று நெடுநாள் சொல்லிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நண்பரின் குழந்தையும் அவ்வாறே சொல்வதைக் கேட்டேன். குழந்தைகள் வாயில் பெயர் ஒலிப்பதென்பது பெரிய அதிருஷ்டம். தூரனுக்கு அந்த யோகம் இருந்தது.

ஆனால் கணிசமான தமிழர்கள் ஆரம்பப்பள்ளிக்கு பிறகு தூரனைப்பற்றி எதையுமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். தூரனுக்கு மூன்று முகங்கள் உண்டு. குழந்தையிலக்கிய ஆசிரியர், தமிழிசைப்பாடலாசிரியர். இவ்விருதளங்களிலும் இன்றும் அவரது பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மகாராஜபுரம் சந்தானத்தின் இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சுத்தானந்த பாரதியார், பெரியசாமி தூரன் இருவரில் ஒருவர் இயற்றிய கீர்த்தனைகளில் ஒன்று வந்துவிடும். சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களின் கச்சேரிகளிலும் தூரனின் கீர்த்தனைகள் ஒலிக்கும்.

ஆனால் தூரனின் வாழ்க்கையின் பெரும்பகுதி வேறுவகையான பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடுகளுக்காகவே செலவிடப்பட்டது. தமிழகம் கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர் அவர்.

kavimani
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை
vaiyapuri pillai
எஸ்.வையாபுரிப்பிள்ளை

நவீனத்தமிழின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவக்கியவர்கள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெ.தூரன், என்ற மூவரைச் சொல்லலாம். தேசிகவினாயகம்பிள்ளையின் கல்வெட்டு ஆராய்ச்சி முறைமை, வைபாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி, பெ.தூரனின் கலைக்களஞ்சியம் ஆகியவை முன்னோடிப் பணிகள். வழிகாட்டிக கொடிகள்.

அறுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் மிக அதிகமாக தமிழுக்குப் பங்களிப்பாற்றிய ஆட்சி தொடக்க இருபதாண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியே என்பதே உண்மை. தமிழை ஒரு நவீன மொழியாக உருவாக்கவும், அன்றாடப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தொலைநோக்குள்ள திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பேரறிஞர்கள் அவற்றில் பொறுப்பில் அமர்த்தப்பட்டு போதிய நிதியும் ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க நூலக இயக்கம் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது. இந்தச்செயல்பாடுகளில் அன்றைய கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையும் வழிகாட்டலும் மிக முக்கியமானவை.

 .

ts
தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்

விளைவாக தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் முயற்சிகள் தமிழில் நிகழ்ந்தன. இன்றும் நாம் புழங்கும் பலநூறு ஆட்சிச்சொற்கள் அப்போது ஆட்சிச்சொல்லாக்க குழுவினரால் உருவாக்கப்பட்டவை. இந்திய மொழிகளில் முன்னோடி முயற்சியாக ஒரு முழுமையான பேரகராதி உருவாக்கப்பட்டது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் அந்தப் பேரகராதிக்கு இன்றுவரை உரிய முறையில் மறுபதிப்பு கொண்டுவரக்கூட பிறகுவந்த ஆட்சிகளால், மொழிக்கென அவர்கள் செலவழித்த கோடானுகோடிகளால் முடியவில்லை. இதை தீவிர திராவிட இயக்க ஆதரவாளரான தமிழாய்வாளர் ஆ.இரா.வெங்கடாடலபதியே குறிப்பிட்டிருக்கிறார். பிறகு அகராதி முயற்சிகள் பல நடந்தன. அவையெல்லாம் திறனற்ற நகல் முயற்சிகளாக நீண்டு முடிவடையாமலேயே நின்றுவிட்டன.

அதேபோல முக்கியமானது தூரனின் பெரும் கலைக்களஞ்சியம். ஒரு மொழியின் முதல் பேரகராதியும் முதல் கலைக்களஞ்சியமும் எத்தகைய மகத்தான சாதனைகள் என்பதை இன்று பலரும் எண்ணிப்பார்ப்பதேயில்லை. கலைக்களஞ்சியத்துறையின் தலைவராக இருந்த போதிலும் கிட்டத்தட்ட தனியாளாகவே அவர் அப்பெரும்பணியை செய்து முடிக்கவேண்டியிருந்தது என்பதை தமிழ்ச்சூழலை வைத்துப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

தூரன் தன் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய நாட்களில் அவரது உழைப்பைப்பற்றி சமகால அறிஞர்களான கி.வ.ஜகன்னாதன் போன்றவர்கள் பெரிதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 20 வருடங்கள் ஒவ்வொருநாளும் விழித்திருக்கும் நேரம் முழுக்க அவர் அதில் ஈடுபட்டிருந்தார். நகலெடுக்கும் வசதிகளும் பிற வசதிகளும் இல்லாமலிருந்த அக்காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் கையாலேயே குறித்துக்கொண்டு எழுதி அகர வரிசை அட்டைபோட்டு வேலைசெய்துகொண்டே இருந்திருக்கிறார். ஒரு சாதாரண உரையாடலின் போது சில நிமிடங்கள் பேசிவிட்டு ஓரமாக நகர்ந்து தன் வேலையில் மூழ்கிய தூரனைப்பற்றி கி.வ.ஜ சொல்கிறார்.

கலைக்களஞ்சியத்துக்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஒன்றையும் தூரன் உருவாக்கினார். இக்கலைக்களஞ்சியங்களின் அருமையை அறிய வேண்டுமென்றால் கால் நூற்றாண்டு கழித்து பெரும் நிதியுதவியுடன் பலநூறு பேர் எழுத தஞ்சை தமிழ் பலகலைக்கழகம் உருவாக்கிய வாழ்வியல் களஞ்சியம் என்ற கலைக்களஞ்சியத்துடன் ஒப்பிட வேண்டும். பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.

தூரனின் கலைக்களஞ்சியத் தொகுதிகளின் பயன் என்ன? எளிமையாக ஒன்றை கவனித்துப் பார்க்கலாம். அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள். தூரனின் கலைக்களஞ்சியம் நூறாக ஆயிரமாக பிளந்து பரவி தமிழ் அறிவுலகை உருவாக்கியது என்றால் மிகையல்ல.

அத்துடன் அனைத்து தளங்களுக்கும் தமிழைக் கொண்டு போக தூரன் செய்த ஆரம்பகால கடும் முயற்சி கலைச்சொற்களை தேவையாக்கியது. பலவகையான சொற்றொடர் முறைகளை தேவையாக்கியது. அந்தச் சவாலை அவர் சத்தித்ததாலேயே அவரது கலைக்களஞ்சியம் நவீனத்தமிழுக்கு அடித்தளமாக அமைந்தது.

நான் என் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் தூரனின் கலைக்களஞ்சியத்தொகுதியின் தீவிர வாசகனாக இருந்தேன். அக்காலத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கட்டுரை பேச்சுப்போட்டிகளுக்காக நாங்கள் நண்பர்கள் முண்டியடித்து, அக்கலைக்களஞ்சியங்களை நூலகமாக இருந்த ஆசிரியர் ஓய்வறையில் தரையில் அமர்ந்து படித்து குறிப்பெடுப்போம். வேறு கலைக்களஞ்சியங்கள் எதையுமே கண்டிராத அந்த வயதில் அந்தக் கிராமத்துப் பள்ளியில் அந்நூல்கள் மானுட அறிவின் பிரம்மாண்டத்தை உணர்த்துவனவாக இருந்தன.

ஈரோடு மாவட்டம் மஞ்சக்காட்டு வலசை என்ற கிராமத்தில் 1908ல் செப்டெம்பர் 26 ஆம் நாள் பிறந்தார் தூரன். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு. தந்தை பழனியப்பக் கவுண்டர். தாய் பாவாத்தாள். மொடக்குறிச்சியில் ஆரம்பப்பள்ளிக்கல்வி பெற்றபின் ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி முடித்தார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது.

1939ல் காளியம்மாளை மணம்புரிந்துகொண்டார். மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு குழந்தைகள்.தூரன் 1927 சென்னை மாநிலக்கல்லூரியில் அறிவியல்பாடங்களில் இண்டர்மிடியட் படித்து வென்றார். 1929ல் கணிதத்தில் எல்.டி பட்டம்பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபபளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் இயங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர் முறைப்படி மரபிசையைக் கற்றுத்தேர்ந்தார்.

சிறு வயதிலேயே உறுதியான காங்கிரஸ்காரர். சுதந்திரத்துக்குப்பின் தி.சு.அவினாசிலிங்கம் அழைப்பை ஏற்று 1948 முதல் 1968 வரை இருபதாண்டுக்காலம் தன்னாட்சி உரிமையுடன் இயங்கிய தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் பொறுப்பில் இருந்து கலைக்களஞ்சிய வெளியீட்டில் ஈடுபட்டார். சராசரி 750 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக இந்நூல் வெளிவந்தது. அத்தகைய ஒரு கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் வெளிவந்தது. பின்னர் தன் சொந்த முயற்சியால் 1976 வரை உழைத்து சராசரி 100 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார்.

தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்து ‘பாரதி தமிழ்’ என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தூரன் கவிதைகள், கதைகள், இதழியல்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என கிட்டத்தட்ட 20 நூல்களை படைத்திருக்கிறார். தூரனின் கவிதைகள் பாரதி கவிதைகளின் பாதிப்பில் எழுந்த நேரடியான மொழி எழுச்சி கொண்டவை. ஆனால் பாரதியிடம் இருந்த நவீன படைப்புத்திறன் அவரிடம் இல்லை. இலக்கியப் படைப்பாளியாக தூரனின் பங்களிப்பு முக்கியமானதல்ல.

தூரன் 1980 முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1987 ல் ஜனவரி 20 ஆம் நாள் மரணமடைந்தார். கடைசிக்காலத்தில் கிட்டத்தட்ட முழுமையான புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே இருந்தது. சிற்றிதழ் சார்ந்த சூழலில் மட்டுமே அவரது பெரும் சாதனைகளைப்பற்றிய மெல்லிய பிரக்ஞை எஞ்சியிருந்தது. ‘நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்லமாட்டாங்களே ராமசாமி” என்று அவர் வாதநோய் கண்டு படுக்கையில் இருக்கையில் பார்க்கவந்த சுந்தர ராமசாமியிடம் கண்ணீர் மல்கச் சொன்னார்.

தூரனைப்பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும் பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.

தூரனின் நூற்றாண்டு முடிந்த பின்னர் இதை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். தான்சார்ந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் தன் இறுதிச்சொட்டு உழைப்பை அளித்து மறைந்த அந்த எளியமனிதரைப்பற்றி சம்பிரதாயமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. எளிமை, தனக்குள் மூழ்கி உழைக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை அடிப்படை விழுமியங்களாக இருந்த ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி பெரியசாமி தூரன்.

தூரன் பற்றிய சுட்டிகள்

பெரியசாமி தூரன் பாடல்கள் –டி கெ சங்கரநாராயணன்

http://sanimoolai.blogspot.com/2008/10/blog-post.html
http://groups.google.com.br/group/minTamil/msg/9662f6db6f265c70

http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=89&cid=14&aid=4786&m=c

http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html

======================================

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 27, 2008

முந்தைய கட்டுரைதொடங்குமிடம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42