அண்ணா- கடிதம்

அன்புள்ள ஜெ,

அண்ணா, நில கையகப்படுத்துதல் தொடர்பாக போராட்டத்தில் இறங்கியதைப் பற்றி சில வார்த்தைகள்:

மன்மோகன் சிங்கையோ, மோடியையோ நாம் அந்தக்கால இந்திய சினிமா ஜமீந்தார் போல உருவகப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில், இருவரும், நில கையகப்படுத்துதல் தொடர்புள்ள பல அதிகாரிகளும், நல்லதை நினைத்தே அச்சட்டம் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

இதுவரை நிலம் கையகப் படுத்துதலில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஜமீந்தார் போலத்தான் நடந்து கொண்டுள்ளனர். இப்போது வரவேண்டிய சட்டம், இழப்பீட்டுத் தொகையை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகரிக்கிறது. இடையில் உள்ளவர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதில் குறைகள் உள்ளன. அவற்றை, எடுத்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட அண்ணாவுக்கு தகுதி உண்டு.

Zaraf Zafarwala போன்றவர்கள் மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசி, பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். அப்படி ஒரு முயற்சியை ஏன் அண்ணா எடுத்திருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் அறிவுரை கூற தகுதியுள்ள பெரியவர் போல அவர் நடந்து கொண்டிருக்கலாமே?

காந்தி போன்ற சொல்வன்மை இல்லாதிருப்பினும், தன் செயல்களாலும், ஒழுக்கத்தினாலும் அண்ணா மரியாதைக்கு உரியவராகவே இருக்கிறார். நியாயம் இருக்கும் நிலையில், அவர் வார்த்தைக்கு நிச்சயம் மரியாதை இருக்கும். ஜனநாயகத்தில் பேச்சு வார்த்தைக்கு இருக்கும் இடத்தை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். அரசியல்வாதிகள்போல போராட்டத்தில் இறங்குவதை, அவர் தகுதியிலிருந்து இறங்குவதாகவே நான் பார்க்கிறேன்.

– ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்,

காந்தியைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசும்போது மிகச்சிறிய விஷயங்களைக்கூட ஏன் விளக்கி விளைக்க் ஓயவேண்டியிருக்கிறது என நான் வியப்பதுண்டு. அண்ணா மீது நீங்கள் மதிப்பை இழந்ததைக் காணும்போது காந்திமீதும் மதிப்பிழப்பது எளிது என புரிகிறது

ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ‘தொந்தரவு செய்தல்’ அல்ல. மக்களின் கருத்தை திரட்டுதல் . அதை ஒரு அதிகாரசக்தியாக ஆக்கி ஆட்சிக்கு எதிராக நிறுத்துதல். அந்த இரு சக்திகளின் சமரசமே உண்மையான தீர்வைகொண்டு வரும்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -33
அடுத்த கட்டுரைகேஜரிவால் -கடிதங்கள்