இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்

உலகமெங்கும் நாவல் என்ற வடிவம் சென்றுசேர்ந்த காலம் என 1800 களின் இறுதியைச் சொல்லலாம். அப்போது அவ்வடிவத்தால் பெரிய அதிர்ச்சியை அடைந்தவர்கள் முழுக்க மரபான காவிய வாசகர்கள். உலகமெங்கும் அவர்கள் நாவலை நிராகரித்துப்பேசிய ஏராளமான பதிவுகள் உள்ளன

அவர்கள் நாவலுக்குச் சொன்ன குறைகளை இப்படிச் சொல்லலாம்

1. அது தேவையற்ற தகவல்களை சொல்கிறது. அழகுணர்ச்சி அற்ற வெறும் விவரணைகளை அளிக்கிறது.

2 வாழ்க்கையைச் சொல்லவேண்டியதில்லை. வாழ்க்கையின் உச்சங்களையும் அழகுகளையும் சாராம்சத்தையும் சொன்னால் போதும்

3 அது எளிய மக்களைப்பற்றிப் பேசுகிறது. அவர்களைப்பேசவேண்டியதில்லை. நூல்நாயகர்களாக வரவேண்டியவர்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர்கள்

அந்தக்குறைகள் எல்லாமே உண்மை. ஆனால் அவையெல்லாம்தான் நாவலின் அடையாளங்கள் ஆயின. காவியத்தில் இருந்து நாவலை வேறுபடுத்தும் சிறப்பம்சங்களே அவைதான்

நாவல் தகவல்களின் கலை. பிரம்மாண்டமான தகவல்குவையை கலைப்படைப்பாக ஆக்குவதே நாவலின் அடிப்படை வெற்றி எனலாம். அதை நாவலைப்பற்றி எழுதிய பல முதன்மையான அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்

நாவல் வாழ்க்கையை சித்தரிக்கிறது. காட்சிப்படுத்துகிறது. அதை நிகர் அனுபவமாக ஆக்கிக்காட்டுகிறது. காவியங்களை நாம் அகன்று நின்று வாசிக்கிறோம். நாவலுக்குள் சென்று வாழ்கிறோம்.

நாவல் மானுட உச்சங்களைப்பற்றி மட்டும் பேசுவதல்ல. மானுடனின் எளிமையை, கீழ்மையை, சரிவையும் பேசுவது. அவ்வகையில் நவீன ஜனநாயகமும் நாவலும் இணைந்துபிறந்தவை. பிரிக்கமுடியாதவை

உலகமெங்கும் நாவல் என்ற வடிவம் பிறந்தபோதே பின்னர் விமர்சகர்களால் கிரேட்நாவல் என்று சொல்லப்படும் ‘பெருநாவல்’ வடிவம் பிறந்துவிட்டது என்பது வியப்புக்குரியது. அவ்வகையில் மானுடத்தின் பெரும் நாவல் படைப்புகள் எல்லாமே நாவல் உருவான பதினெட்டாம்நூற்றாண்டிலேயே நிகழ்ந்துவிட்டன. இன்றும் அவையே கோலோச்சுகின்றன. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மார்ஷல் புரூஸ்த் முதல் தாமஸ்மன் வரை ஒரு நீண்ட பட்டியல் உள்ளது

ஆச்சரியமென்னவென்றால் நாவல் என்னும் வடிவம் சீன, ஜப்பானிய மொழிகளில் மேலும் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே பிறந்துவிட்டிருந்தது. நாம் ஐரோப்பாவில் நாவல் பிறந்ததையே நாவலின் தோற்றம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

சீனப்பெருநாவல் மரபு என்று 14 ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச அரசர்களின் காலத்தில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் குயிங் மன்னர்களின் காலம் வரை நீடித்தது. அவற்றில் நான்கு பெருநாவல்கள் உச்சங்கள். மானுடம் உருவாக்கிய மாபெரும் நாவல்கள் அவை. மானுடம் உரைநடையில் அடைந்த மாபெரும் கலைவெற்றிகளும் அவையே என்னும் விமர்சகர்கள் உள்ளனர்

நீர்வேலி,[ ஷி ந்யான்], மூன்று அரசுகளின் கதை [லுவோ குவான்ஷான்] , மேற்குநோக்கியபயணம், [வு செங்கன்], செந்நிற அறையின் கனவு [கேவோ ஸ்யுகின்] ஆகியவை இன்று உலகமெங்கும் பேசப்படுகின்றன

ஜப்பானிய பெருநாவல் மரபு முன்னரே உலகமெங்கும் அறியப்பட்டது. அதில் ஜெங்கியின் கதை [முரசக்கி ஷிகிபு] தமிழிலும் கா அப்பாத்துரையால் சுருக்கமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டு நாவலான இதை உலகின் முதல்நாவல் என்பதுண்டு.

இந்த தொன்மையான பெருநாவல்கள் அனைத்துமே ஒரு பொதுத்தன்மை கொண்டிருக்கின்றன. இவை ஒருவகை நிகர் வரலாறுகள். மைய ஓட்ட வரலாறாக இருந்தவை வம்சவரலாறுகளும் அரசுகளின் வரலாறுகளும்தான். இவை அவற்றுக்கிணையாக அல்லது மாற்றாக உணர்ச்சிகரமான ஒரு வரலாற்றை உருவாக்குகின்றன. விழுமியங்களையும் கனவுகளையும் உள்ளடக்கிய வரலாறு என இவற்றைச் சொல்லலாம்.

வரலாறுகள் அமைச்சர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்டன. முதல் நாவல் என்று சொல்லப்படும் ஜெஞ்சியின் கதை தாசியால் எழுதப்பட்டது. இந்த வேறுபாடே போதும் என நினைக்கிறேன்.

பின்னர் உரைநடையில் நாவல் எழுதப்பட்டபோது எங்கும் அதன் முதல் வடிவமாக இருந்தது ‘இன்னொரு வரலாற்றை சமைப்பது’ என்பதே. இந்த ஒற்றை வரியில் உலகப்பெருநாவல் மரபையே வரையறுக்க முடியும். வரலாற்றை புறவயமாகச் சொல்வது தல்ஸ்தோயின் பாணி. மனிதர்களின் அகம் வழியாக உணர்வுகளின் எண்ணங்களின் வழியாக மட்டுமே சொல்வது தஸ்தயேவ்ஸ்கியின் பாணி. இரண்டுமே உலகில் வலுவாக வேரூன்றின

உலகமெங்கும் சென்றுசேர்ந்தது இந்த பெருநாவல் மரபுதான். ஆகவே நாவல் உருவான ஆரம்பகாலகட்டத்தில் எல்லா மொழிகளிலும் நேரடியாக பெருநாவலுக்கான முயற்சிகளே உருவாயின. மலையாளத்தில் இந்துலேகா [சந்துமேனன்] மார்த்தாண்ட வர்மா [சி வி ராமன்பிள்ளை] கன்னடத்தில் சாந்தலா [கே.வி.அய்யர்] வங்காளத்தில் ஆனந்தமடம் [பங்கிம்சந்திரர்] கோரா [தாகூர்] குஜராத்தியில் ஜெயசோமநாத் [ கெ.எம் முன்ஷி] போன்றவை நினைவுக்கு வருகின்றன

ஆனால் தமிழில் இந்தப்பெருநாவல் மரபு பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை. சரியாகச் சொல்லப்போனால் பெருநாவல் மரபின் சில அம்சங்களை எடுத்து உருவாக்கப்பட்ட வணிக-கேளிக்கை எழுத்துமுறையே இங்கே வலுவான செல்வாக்கைச் செலுத்தியது. என் பார்வையில் இங்கே செல்வாக்கைச் செலுத்திய நாவல் என்பது ரெயினால்ட்ஸின் லண்டன் அரண்மனை ரகசியங்கள் எனற நாவல்தான்

அந்த வணிகக் கேளிக்கை எழுத்துக்கு எதிரானதாக இங்கே நாவல் உருவாகி வர மேலும் காலம்பிடித்தது. வலுவான தமிழ்நாவல்கள் நாற்பதுகளில்தான் உருவாகி வந்தன. ஆனால் அவை அடுத்தகட்ட நவீனத்துவ நாவல்களை முன்னுதாரணமாகக் கொண்டன

உலகப்போக்கு என ஒன்றை பொதுமைப்படுத்துவது இலக்கியத்தை புரிந்துகொள்வதற்கே என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறேன். இதை மிகச்சரியான வரலாறாகச் சொல்லமாட்டேன். இப்படி சிந்திக்கலாமே என்ற ஒரு சிபாரிசு மட்டுமே இது

நவீனத்துவநாவல் என்பது பெருநாவல் மரபுக்கு எதிரான ஒரு போக்கு. அது பெருநாவல் மரபின் இரு அம்சங்களை நிராகரித்தது. 1. வரலாறு 2 புறவயமான யதார்த்தம் .

விளைவாக தனிமனிதனை மையமாக்கிய, அந்தரங்கத்தின் வெளிப்பாடாக மட்டுமே நிற்கக்கூடிய படைப்புக்கள் உருவாகி வந்தன. ‘தனிமனிதனின் அகம்’ என அவற்றை மிகப்பொதுப்படையாக வகுக்க முடியும்

ஓர் எல்லையில் காம்யூவின் அன்னியன் மறு எல்லையில் ஜாய்ஸின் யுலிஸஸ் ஆகியவை இந்த வகை எழுத்துமுறைக்கான உதாரணங்கள். காம்யூ எண்ணி எண்ணிச் சொல்லும் அகம் ஜாய்ஸால் மொழிப்பெருக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்தவகையான நவீனத்துவ எழுத்துமுறையே தமிழில் நாவலாக அறிமுகமாகியது. அதையொட்டிய நாவல்களிலேயே நாம் சாதனைகளை படைத்தோம். பொய்த்தேவு [க.நா.சு] தலைமுறைகள் [நீல பத்மநாபன்] ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி] 18ஆவது அட்சக்கோடு [அசோகமித்திரன்] என நமக்கு ஒரு பட்டியல் உள்ளது.

மலையாளத்தில் பெருநாவல் மரபு தகழியின் கயறுடன் முழுமைக்கு வந்தது. ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நவீனத்துவநாவலுக்கான தொடக்கமாக அமைந்தது.

கன்னடத்தில் மண்ணும் மனிதரும் [சிவராம காரந்த்] முழுமையடையச்செய்த பெருநாவல் மரபை அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நவீனத்துவநாவல் வடிவை நோக்கிக் கொண்டுவந்தது.

மகத்தானபெருநாவல்களை உருவாக்கிய வங்க மரபு கணதேவதை, ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி, பாதேர் பாஞ்சாலி[விபூதிபூஷண் பந்தியோபாத்யாய], நீலகண்டப்பறவையைத் தேடி[அதீன் பந்த்யோபாத்யாய] அடுத்தகட்ட நகர்வை சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கறையான் வழியாக நிகழ்த்தியது.

இந்த வகை எழுத்துமுறை உலகமெங்கும் அடுத்தவகையான எழுத்துக்கு வழிவிட்டதை நான் உணர்ந்தேன். நவீனத்துவநாவல் முறை என்னைக் கவர்ந்தது, ஆனால் அது எனக்கானதல்ல என்று தோன்றியது.

1991ல் நான் நாவல் கோட்பாடு என்ற நூலை எழுதினேன். அந்நூலை நவீனத்துவநாவல் வடிவுக்கு எதிராக அடுத்தகட்ட நாவலெழுத்துக்கான அறைகூவல் என்று சொல்லலாம்.

அன்று நவீனத்துவத்தின் மூன்று அடிப்படைகளும் மறுக்கப்பட்டுவிட்டிருந்தன.

ஒன்று, தனிமனிதன் என்பவன் வரலாற்றால், சூழலால், தற்காலிகமாக வரையறுக்கப்படுபவன் மட்டுமே என்றும் அவன் உறுதியான மாறாத ஓர் அமைப்பு அல்ல என்றும் வாதிடப்பட்டது.

இரண்டு இலக்கியத்தின் மொழி மற்றும் வடிவம் என்பது முற்றானது அல்ல.அது அந்தக் காலகட்டத்தின் விளைவாக உருவாகக்கூடியது. ஆகவே கச்சிதமான வடிவம் மொழி என ஏதும் இல்லை.

மூன்று, இலக்கியம் முன்வைக்கும் மையத்தரிசனம் என்பது அப்படைப்புக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. புனைவுக்கு நேரடியான தத்துவமதிப்பு என ஏதுமில்லை.

இந்த மூன்று அடிப்படைகளும் அழிந்தபின்னர் எழுதப்படும் நாவல் என்னவாக இருக்கும் என்பதே என் வினாவாக இருந்தது. அது மீண்டும் ஒருவகை பெருநாவல் என்று எண்ணினேன்.

1 அது வரலாற்றை உருவாக்கும்.

2 தரிசனத்தை முன்வைக்கும்.

3 முழுமையை நோக்கிச் செல்லும் வடிவம் கொண்டிருக்கும்

ஆனால் இவை எல்லாமே புனைவின் விளையாட்டுக்கள் என்றும் தெரிந்துவைத்திருக்கும். ஆகவே அது வரலாற்றை ஒரு ஆட்டமாக முன்வைக்கும். மையத்தரிசனத்தை உருவாக்கியும் மறுத்தும் விரிவான விவாதத்தை உருவாக்கும். முழுமை நோக்கிச் செல்லும் வடிவத்தை ஒருமை வழியாக அல்லாமல் கூட்டுத்தன்மை வழியாக கலைதல் வழியாக அடைய முயலும்

*

இச்சிந்தனைகள் தமிழில் தொடர்ச்சியான விவாதங்களை உருவாக்கின. அதை தமிழில் சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் நாவல் பற்றி எழுதப்பட்டவற்றில் எவரும் காணமுடியும். அடுத்தகட்ட நாவல் எழுத்தில் வந்த மாறுதல்களில் இச்சிந்தனைகளின் பாதிப்பு உண்டு என்பதே என் எண்ணமாக உள்ளது.

இன்று மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நாவலெழுத்தில் இந்தப்போக்கே மேலோங்கியிருக்கிறது. மலையாளத்தில் இரண்டாயிரத்திற்குப்பிறகான நாவல்களில் டி.பி.ராஜீவனின் பாலேரிமாணிக்யம் ஒரு நள்ளிரவுக்கொலையின் கதை, டிபிஎன் கோட்டூர் வாழ்க்கையும் எழுத்தும், டிடி ராமகிருஷ்ணனின் பிரான்ஸிஸ் இட்டிக்கோரா போன்ற நாவல்கள் இத்தகையவை. அவை வரலாற்றை உருவாக்குகின்றன. வரலாற்றை விளையாடுகின்றன. கன்னட எழுத்தின் போக்கும் இதுவே என என் நண்பர் விவேக் ஷன்பேக் ஒருமுறை சொன்னார்

தமிழில் 2000த்துக்குப்பிறகான நாவல்களில் இந்தப் பொது அம்சத்தைக் காணலாம். இந்தக்கட்டுரையில் இந்த அம்சத்தை மட்டுமே நான் குறிப்பிட விழைகிறேன். இவற்றின் கலைமதிப்பை அல்ல. ஜோ டி குரூஸின் கொற்கை, ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை, எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், நெடுங்குருதி, இமையத்தின் செடல், கோணங்கியின் பாழி, பிதிரா, பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யுவன் சந்திரசேகரின் மணல்கேணி, வெளியேற்றம், பகடையாட்டம் போன்ற நாவல்களுக்கெல்லாம் ஏதேனும் பொதுக்கூறை கண்டுபிடிக்கமுடியும் என்றால் இதுதான். அவை தனிமனிதனின் உலகை வரலாற்றில் வைத்து விரிக்கின்றன. மாற்று வரலாறாக ஆகின்றன. வரலாற்றைக்கொண்டு விளையாடுகின்றன

அவ்வகையில் சமீபத்தில் வந்த பலநாவல்களை குறிப்பாகச் சுட்ட முடியும். பூமணியின் அஞ்ஞாடி ஒரு நிகர்வரலாற்றை உருவாக்குகிறது. சொ தருமனின் கூகையில் கூடவே ஒரு மெல்லிய பகடியும் ஓடிச்செல்கிறது.முருகவேளின் மிளிர்கல் உண்மையான வரலாற்றை தொன்மமாக ஆக்க முயல்கிறது. கௌதம் சன்னாவின் சமீபத்திய நாவலான குறத்தியாறு நாட்டார் தொன்மத்தைக்கொண்டு ஒரு வரலாற்றை உருவாக்க முயல்கிறது.

இதையொட்டித்தான் இலக்கியத்தின் வரலாற்று மதிப்பு என்ன என்ற வினா எழுகிறது. தங்கள் வரலாற்றை எழுத்தாளன் திரித்து எழுதுகிறான் என்று மக்கள் தெருவுக்கு இறங்குகிறார்கள்.

நாவல் என்பதே ஒரு வகையில் திரிக்கப்பட்ட வரலாறுதான். ஆசிரியனின் பார்வைக்கு ஏற்ப, அவனுடைய இலக்குக்கு ஏற்ப அதை மாற்றியமைப்பதே கலை எனப்படுகிறது. அதை இனிமேல்தான் நாம் பேசிப்பேசி நிறுவவேண்டியிருக்கிறது.

ஆனால் இதை ஒரு புனைவுவிதியாகச் சொல்லமாட்டேன். ஏனென்றால் கலை என்பது இத்தகைய நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. இது ஒரு பொதுப்போக்கு மட்டுமே. இப்பொதுப்போக்கை அடையாளம் காட்டமட்டுமே செய்கிறேன். இது ஏன் நிகழ்கிறது, இதன் வண்ணவேறுபாடுகள் என்ன, கலைமதிப்பு என்ன , இதற்கும் நம் பண்பாட்டுக்குமான ஊடாட்டம் என்ன என்பதெல்லாம் மேற்கொண்டு ஆராயவேண்டியவை

ஏனென்றால் நான் கடைசியாக வாசித்த நல்ல தமிழ்நாவல் தேவிபாரதியின் நிழலின் தனிமை. எல்லாவகையிலும் அது பழையபாணி நவீனத்துவ அமைப்புள்ளது. உறுதியான ஒற்றைபப்டைக் கதை. திருப்பம் கொண்ட சினிமாப்பாணி கட்டமைப்பு. தனிமனிதனின் அகக்கொந்தளிப்பு. ஆனால் அதன் உண்மையின் வீரியம் அதை முக்கியமான கலைப்படைப்பாக ஆக்கியிருக்கிறது.இலக்கியக்கொள்கைகளை விவாதிக்கலாம். படைப்பு கலையாக ஆகும் விந்தையை விவாதிக்கவே முடியாது

நன்றி

[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கருத்தரங்கில் ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 46