கோட்டை

அன்புள்ள ஜெ,

மலைகளின் மடி கனத்துக் கொண்டே செல்கிறது. எளிமையான மலைக்குடிகள் இன்று வலுவான கூட்டமைப்பாகிவிட்டனர். இன்றைய அத்தியாயத்தின்(வெண்முகில் நகரம் 31) இறுதியில் மறிமானுடன், எருது சகிதம் வரும் பிதாமகரின் தோற்றம் அனைத்தையுமே இணைத்து விட்டது. (ஏனோ நீலகண்ட பறவையைத் தேடி நாவலில் மணீந்திர நாத் ஆற்றிலிருந்து எழுந்து வரும் அந்த தோற்றம் நினைவுக்கு வந்தது!) பூரிசிரவஸ் குருஷேத்ரத்தில் ஓர் பெருவீரனாக மட்டுமே எனக்கு அறிமுகம். அவனைச் சுற்றி ஓர் அழகான குறுநாவல் இப்பகுதி.

இன்றைய அத்தியாயத்தில் அவன் கோட்டை ஒன்றைக் கட்டி உதிரியாய் இருக்கும் மக்களை ஒரே திரளாக இணைக்க இயலும் சாத்தியம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. கோட்டையின் முக்கிய பயனாக அவன் கருதுவது எல்லையை. உடலின் எல்லையை ஒவ்வொருவரும் அறிந்துள்ளது போல் குழுவின் எல்லையை அறிந்திருக்க வேண்டும் என்பது ஓர் பெரிய தரிசனமாகத் தோன்றுகிறது. எல்லையை அறியும் பொழுதே உருவம் சாத்தியப் படுகிறது. உருவம் என்ற ஒன்று வரும் போது தான் செயல்களின் சாத்தியங்கள் புலப்படுகின்றன. எல்லை என்ற ஒன்றே கட்டுப்பாட்டைக் கொண்டுவருகிறது. எல்லை என்ற ஒன்றே தன்னுணர்வைக் கொடுக்கிறது. எல்லை என்ற ஒன்றே அடையாளத்தைக் கொடுக்கிறது. எல்லை என்ற ஒன்றே பாதுகாப்பைக் கொடுக்கிறது. எல்லை என்ற ஒன்றே அச்சத்தைக் கொடுக்கிறது. அவ்வச்சமே அதைப் போக்கும் வழிகளைக் கண்டுகொள்ள உதவுகிறது. வீரத்தை வளர்க்கிறது. எல்லையே முறைமைகளை வகுக்கிறது. எல்லையே பொருளாதாரத்தைப் பலப்படுத்துகிறது. எல்லையே ஓர் குழுவுக்குச் சாத்தியமான அனைத்தையும் நல்குகிறது.

இந்த எல்லை நாடு, வீடு, தனிமனிதன் என்று இடத்துக்கிடம் வரையறுக்கப் படும் தோறும் மானுடம் தன் கர்மங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டும், நுண்மையாக்கிக் கொண்டும், விரிவாக்கிக் கொண்டும் செல்கிறது.

இந்த எல்லையின் மகத்துவத்தைக் கண்ட அந்த ஆதி மனம் தான் கடவுளையும், அதன் எல்லைகளையும் வகுத்திருக்க வேண்டும். பூரிசிரவஸ் சொல்லும் அதே மூன்றடுக்கு நிலை தான் இந்திய பெருநிலத்தின் மெய்யியல் பண்பாட்டிலும் நிலவுகிறது. மக்கள் திரளை ஒன்றிணைக்க மதம் என்னும் வெளிக்கோட்டை. அதனுள்ளே ஒவ்வொரு குலக்குழுவுக்கும் உரித்தான சிறு தெய்வ வழிபாடுகள். அதன் பிறகு பெருந்தெய்வங்களின் இடமான இரண்டாம் கோட்டை. இந்த சிறுதெய்வங்களின் சாராம்சத்தோடு கூடிய வழிபாடும், முறைகளும். முறையான அனுமதி பெற்றே அணுகச் சாத்தியமான உட்கோட்டையாக, அரண்மனையாக ஞானம் மற்றும் தத்துவம். அங்கே தெய்வங்கள் இல்லை. அங்கே சென்று வருபவர்களும், அங்கேயே வாழ்பவர்களும் மனிதர்கள் தான். எல்லாரும் சென்று சேர சாத்தியமான இடம் தான். ஆனால் முறையான அழைப்பு வேண்டும்.

எண்ண எண்ண ஓர் மிகப் பெரிய அக எழுச்சி. மானுட மனதை எவ்வளவு நெருக்கமாகச் சென்று சந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர். எப்பேற்பட்ட ஓர் இனத்தின் நீட்சி நான்?! நன்றி ஜெ. மீண்டும் மீண்டும் நம் பண்பாட்டை எழுதிக் கொண்டேயிருப்பதற்கு.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34