மத்தகம்,மாடன் மோட்சம்

அன்புள்ள ஜெயமோகன் சார் ..,

நலம் அறிய ஆவல். இன்று தங்களின் “மத்தகம்’ குறு நாவல் வாசித்தேன். நீங்கள் யானையை, குழந்தையை , ஊர் கிழவியை பற்றி எழுதும்போது அதில் மிக பிரியமான ஒரு உந்துதலை அடைந்து இருக்கிறேன் குறிப்பாக யானையை .. காடு நாவலில் குட்டப்பன் காட்டின் அரசன் யானைதான் என்று கூறும் இடத்தில் ,கீறக்காதன்  மழையில் வழி தவறி அலையும் பகுதிகளை விரும்பி வாசித்து இருக்கிறேன். இந்த குறுநாவலில் மையமே கேசவன் என்ற யானைதான் அதன் வழியே அதன் நுண்ணுணர்வை , ஞாபகசக்தியை  (அதன் முன்னாடி அதை திட்டி விடக்கூடாத ..!! ரொம்ப ஆச்சர்யமாட்டு உணர்ந்தேன், ஆசான் சொல்லுவார் அவனுக்கு பத்து மனுசில்லா என்று உண்மை தான் தொடர்ச்சியாக உள்ளே புக அது நல்ல வார்த்தை ) , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை யும் இளைய தம்புரான் கேசவனின் நட்பு , கூடவே இரண்டு பெண்களின் உலகை யும் சொல்லி போவது , கதைசொல்லி இறுதில் கேசவனின் மூலமாகவே இருந்து விடுவான் என்று நினைத்திருந்தேன் ஆனால் மத்தகத்தில் ஏறும் தருணம் யானையின் அப்போதைய மன இயல்பை புரிந்து கொள்ள முடிகிறது.
காடு நாவலை போல நினைந்து இருக்க மட்டுமே முடிந்த ..,  இந்த வெகு சாதாரண நடையின் மூலம் சொல்லிவிட முடியாத அத்துணை மனம் கொள்ளும் பகுதிகள் நிறைந்து கிடக்கிறது கேசவனின் மத்தகத்தில் .
ஒரு தேர்ந்த யானை பாகன் கதையை எழுதியது மாதிரி , அவருக்கு  மட்டுமே தெரிந்த அத்துணை யானை சார்ந்த தகவல்கள்,திடீர் , திடீர்  என கவித்துவம் ஆகும் உரைநடை  . கூடவே படைப்பின் அருமையான சமநிலை .காடு தந்த பாதிப்பில் இருந்து விலகுவதற்கு ஆகத்தான் இதை வாசித்தேன். நல்ல சுழி இந்த குறுநாவல் ஆனால் காடு திரும்பவும் வந்து அடைந்து தான் விட்டு இருக்கிறது சார்


Regards
dineshnallasivam


அன்புள்ள தினேஷ்

காடும் யானையும் ஒன்றுதான். காட்டின் ஆன்மாதான் யானை என்று எனக்கு தோன்றுவதுண்டு. காட்டுக்குள் நாம் உள்ளுணர்வால் உனரும் மதம் ஒன்று உண்டு- அதுவே யானைக்குள்ளும் உறங்குகிறது

இருண்ட அமைதியான காட்டுக்குள் இருந்து பாருங்கள் தெரியும்

ஜெ

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
சங்கச்சித்திரங்கள், காடு இரண்டையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக மாடன் மோட்சம் படித்ததன் விளைவாக இந்த மின்னஞ்சல்.
மாடனும் அப்பியும்  உரையாடும் தோரணை அவர்கள் இருவரும் தாத்தா பேரன் போலவே இருக்கிறது. மாடன் அப்பியின் முன்னோர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லவா? தோழமையுடன் இருக்கும் அவர்கள் உறவு அது ஒரு நிறுவனமாக மாறும் போது பிரிகிறது. கோவிலில் அந்த நெருக்கம் ஏற்பட வாய்ப்பு  இருக்கப்போவதில்லை, செல்வந்தர்களுக்கு சிறப்பு வரிசை இருக்கும்போது.
இந்த கதை மிகவும் நெருக்கமாக எனக்கு அமைகிறது. நீங்கள் தர்மபுரியில் இருந்த போது நிறைய சிறு தெய்வ வழிபாடு நடப்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அவை எல்லாம் இப்போது ஒரு நிறுவனமாக மாறுதல் அடைந்து எளியவர்களை அருகில் சேர்க்காமல் விலக்குகின்றன. எங்கள் குல தெய்வ கோயிலுக்கு சமீபத்தில்  சென்றேன். நகைக்கடை விளம்பரம் கருவறைக்கு முன்னால்!
நன்றிகள்!

தண்டபாணி!

Dr. M. Dhandapani,
Asst Professor( Plant Breeding and Farms)
Regional Research Station, TNAU,
Paiyur, Krishnagiri,

அன்புள்ள தண்டபாணி,

ஆம், ஒரு பொதுவான குறியீடாக ஆகி வழிபடப்படுவது எதுவும் நிறுவனமாக ஆகும். நிறுவனமாகும் போது நம்மிடமிருந்து அன்னியமாக ஆகும். காரணம் அதில் உள்ள  அதிகார அம்சம்தான். பெருமதங்களில் மட்டுமல்ல பழங்குடிகளின் மதங்களில்கூட உச்சகட்ட அதிகாரம் உண்டு என்பதைக் கண்டிருக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதிரைப்படத்தின் வெற்றி-தோல்வி
அடுத்த கட்டுரைஉலோகம் நாவல் தொகுப்பு