‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34

பகுதி 8 : நச்சு முள் – 3

பெருமுரசம் ஒலிக்கத்தொடங்கும்வரை பூரிசிரவஸ்ஸின் எண்ணங்கள் சிதறிப்பரந்துகொண்டிருந்தன. எங்கோ ஒரு கணத்தில் இங்கே என்னசெய்கிறோம், யாருக்காக என்ற எண்ணம் வந்து உடனே திரும்பிச்சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததுமே அவனுடைய அழகிய மலைநிலம் நினைவுக்கு வந்து அக்கணமே கிளம்பிவிடுவான் என்ற புள்ளியை அடைந்து பெருமூச்சுடன் மீண்டான்.

அவ்வண்ணம் கிளம்ப முடியாது என உணர்ந்ததுமே எதற்காக அந்த வாக்குறுதியை துச்சளைக்கு அளித்தோம் என வியந்துகொண்டான். அது எவ்வகையிலும் எண்ணி எடுத்த முடிவு அல்ல. அக்கணம் அப்படி நிகழ்ந்தது, அவ்வளவுதான். ஏன் என்றால் அவன் அப்படிப்பட்டவன் என்பது மட்டுமே அவன் சென்றடையக்கூடிய விடை. இன்னமும் கணங்களால் கொண்டுசெல்லப்படும் சிறியவன். அம்பு அல்ல, இறகு. ஆம், அப்படித்தான் அவன் இருந்துகொண்டிருக்கிறான்.

போர்முரசத்தின் முதல் அதிர்வு அவனை திடுக்கிடச்செய்தது. உப்பரிகைக்கு வந்து குன்றின் சரிவுக்குக் கீழே அனல்பட்டு எறும்புப்புற்று கலைந்ததுபோல படைவீரர்கள் பலதிசைகளிலாக ஓடுவதை நோக்கி நின்றான். நதியலைகள் என முரசின் ஓசை சீரான தாளத்துடன் எழுந்து சூழ்ந்துகொண்டபோது அதுவரை இருந்த அலைக்கழிப்புகளும் ஐயங்களும் விலகி மெல்ல உள்ளமெங்கும் ஓர் விரைவு நிறைந்தது.

அது அவன் பங்குகொள்ளப்போகும் முதல்போர். சௌவீரத்தை பாண்டவர்கள் தாக்கியபோது அவன் உதவிக்குச்செல்ல விழைந்தான். சோமதத்தர் தடுத்துவிட்டார். சலன் அது அப்போது பால்ஹிகநாட்டுக்கு உகந்தது அல்ல என்று விலக்கினான். அந்தப்போரை அகக்கண்ணில் கண்டபடி அவன் படுக்கையில் பலநாள் விழித்துக்கிடந்தான். இது அந்தப்போரின் இன்னொரு வடிவம். அதையே மீண்டும் நடிப்பதுபோல இத்தருணம். இதில் அவன் ஈடுகட்டமுடியும். ஒருமுறை, ஒருகணம் அர்ஜுனனை களத்தில் சந்திக்கவேண்டும். அவன் கவசங்களில் ஒன்றையேனும் உடைத்தால், அவன் ஒருகணமேனும் தன்னையெண்ணி அச்சம்கொள்ள முடிந்தால் அது தன் முழுமை. பால்ஹிகர்களுக்காக… நாடுகடத்தப்பட்ட பால்ஹிகபிதாமகருக்காக… சௌவீரர் தன் மஞ்சத்தில் துயில்மறந்து புரண்ட இரவுகளுக்காக…

கச்சையை இறுக்கியபடி வெளியே வந்து முற்றச்சேவகனிடம் ஒரு புரவியை வாங்கிக்கொண்டு வளைந்துசென்ற பாதையில் பாய்ந்திறங்கி கீழே சென்றான். கோட்டையை ஒட்டிய மரப்பட்டைச்சுவர்கொண்ட பாடிவீடுகளிலிருந்து படைவீரர்கள் எருமைத்தோலாலும் தோதகத்தி மரப்பட்டைகளாலும் ஆமையோடுகளாலும் இரும்புச்சங்கிலிகளாலும் செய்யப்பட்ட கவசங்களை அணிந்துகொண்டு படைக்கலங்களுடன் திரண்டுகொண்டிருந்தனர்.

அந்தச்சிறுகோட்டைக்குள் பல்லாயிரம் பேர் தங்கியிருப்பது அவனுக்கு வியப்பை அளித்தது. அதற்குள் நுழைகையில் அதை ஓர் எறும்புப் புற்று என அவன் எண்ணியது எத்தனை சரியானது என எண்ணிக்கொண்டான். படைக்கலங்களாகவும் கேடயங்களாகவும் கவசங்களாகவும் இரும்பு நீரலையென ஒளிவிட்டபடி சென்றுகொண்டிருந்தது. உயிர்கொண்ட இரும்பு. குருதிகொள்வதற்காகவே மண்ணின் கருவறைக்குள் இருந்து எழுந்து வந்த பாதாளநாகங்களின் குளிர்நஞ்சு.

அத்தனைபேர் திரண்டுகொண்டிருந்தபோதிலும் ஓசை மிகக்குறைவாக இருந்தது, அதுவும் எறும்புகளைப்போலத்தான். கட்டளைகளை கொடியசைவுகளும் ஆங்காங்கே எழுந்து விழுந்த எரியம்புகளுமே அளித்தன. படைவீரர்கள் நூறு நூறுபேராக கூடி ஒருவரோடொருவர் உடலொட்டி கரியவண்ணம் பூசப்பட்ட கேடயங்களை வெளிப்பக்கமாக பிடித்துக்கொண்டு சீராகக் காலெடுத்து வைத்து நடந்தனர். ஆயிரங்காலட்டைகள் போல நெளிந்து ஊர்ந்து சென்ற நூற்றுவர் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. கைகால்கள் இணைந்து ஒரு பெரும் பூச்சி ஒன்று பிறந்து வந்தது. கொடிகள் அதன் உணர்கொம்புகள். முரசுகள் அதன் செவிகள்.

மானுட உடல் என்பது ஒவ்வொன்றும் ஒரு முழுமை. முழுமைகள் ஒன்றுடன் ஒன்று பிசிறில்லாது இணையமுடியும் என்பதை அந்தப்படைநகர்வை நோக்கியபோது பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனுடைய பால்ஹிகபூமியில் அத்தனைக் கற்களும் உருளைக்கற்களே. கீழிருந்து வரும் கட்டடச்சிற்பிகள் அவற்றைக்கொண்டு இல்லங்களை அமைக்கமுடியாதென்பார்கள். ஒவ்வொரு உருளைக்கல்லும் முழுமைவடிவு கொண்டு தனித்தது, அது இன்னொன்றை ஏற்காது என்பார்கள்.

“யானைகளையும் எருமைகளையும் பன்றிகளையும் ஒன்றின் மேல் ஒன்றென நிறுத்தமுடியாதல்லவா?” என்றார் சிந்துநாட்டுச் சிற்பியான பூர்ணகலிகர். ”சமநிலத்துக் கற்கள் பெரிய ஒரு கல்லில் இருந்து உடைபட்டவை. உடைவையே வடிவமெனக்கொண்டவை. அவற்றின் வெட்டுகளும் சரிவுகளும் ஒடுங்கல்களும் உந்தல்களும் பிறிதொன்றைத்தேடுகின்றன. முழுமை முழுமை என கூவுகின்றன. கட்டடமாக ஆகும்போதே அவை அமைதிகொண்டு காலத்தில் உறைந்து கண்மூடுகின்றன. உருளைக்கல்லோ தன்னுள் காலத்தை நிறைத்திருக்கிறது. ஒரு சொல்கூட எஞ்சாதிருக்கிறது.

ஆனால் அவன் நாட்டில் அவற்றை அடுக்கும் கலையை நூற்றாண்டுகளாக கற்றுத்தேர்ந்திருந்தனர். ஒரு பெரிய உருளைக்கல்லை ஐந்து சிறிய உருளைக்கற்கள் கவ்வியும் தாங்கியும் ஆயிரமாண்டுகாலம் அசையாமல் அமரச்செய்யும் என கண்டறிந்தவர்கள் அவர்கள். “ஒவ்வொரு கல்லுக்கும் அதற்கான இடமென்று ஒன்றுள்ளது. அதை கண்டுபிடித்து அமரச்செய்தால் தன் முழுமையை இழந்து பிறிதொரு முழுமையில் அது அமரும் இளவரசே” என்றார் மலைப்பழங்குடிச் சிற்பியான சுகேது. ஆனால் ஒவ்வொரு கல்லும் அங்கே கட்டுண்டிருக்கிறது. கரைந்திருப்பதில்லை என்பதை மலைவெள்ளம் வரும்போது அவைகொள்ளும் விடுதலையில் காணமுடியும்.

இங்கே மனிதர்கள் அதேபோல முழுமையிழந்து அடுக்கப்பட்டு பிறிதொரு முழுமையின் துளிகளாக மாறியிருந்தனர். பூரிசிரவஸ் அக்கணம் விழைந்ததெல்லாம் பெருவெள்ளத்தில் குதிப்பதுபோல அந்த மானுடப்பெருக்கில் பாய்ந்து மூழ்கியழிவதை மட்டும்தான். போரிலிருக்கும் பேரின்பமே அதுதானா? இனி நான் என ஏதுமில்லை என்ற உணர்வா? போரிடும் படை என்பது மானுடம் திரண்டுருவான மானுடப்பேருருவா? அந்த விராடவடிவம் ஒவ்வொருவனின் உள்ளத்திலும் இருப்பதனால்தான் அவன் தன் இறப்பையும் பொருட்டெனக்கொள்வதில்லையா?

பெருந்திரளில் அன்றி தன்னை மறந்த பேருவகையை மானுடன் அடைய முடியாது. ஆகவேதான் திருவிழாக்கள். ஊர்வலங்கள். அத்தனை திருவிழாக்களும் இறப்பு நிகழாத போர்களே. பழங்குடிகளுக்கு போரும் திருவிழாவும் ஒன்றே. இக்கணம் நான் இருக்கிறேன். ஒரு துள்ளல். ஒரு எழல். அதன்பின் நான் இல்லை. அது மட்டுமே இருக்கும். ஒற்றை விழைவு. ஒற்றைச் சினம். ஒற்றைப்பெருங்களிப்பு.

கண் எட்டும் தொலைவு வரை குன்றின் சரிவெல்லாம் படை திரண்டு வந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அவன் புரவியில் சென்றான். தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டது ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்ட யாளி. தன் வாலை சுழற்றிக்கொண்டது. தலையைத் திருப்பி தன் உடலை நோக்கியது. நாவுகளால் தன் விலாவையும் கால்களையும் நக்கிக்கொண்டது. ஒவ்வொரு நூற்றுவர் குழுவுக்கும் மூன்று கொடிக்காரர்களும் மூன்று முரசுகளும் மூன்று படைத்தலைவர்களும் இருந்தனர். ஒற்றைப்பேருடலான அந்தப்படைக்குள் ஒவ்வொரு நூற்றுவரும் தனிப்படைகளாகவும் இருந்தனர்.

கங்கைக்கரையின் பின்மாலை வெம்மை மிக்கது. காற்றில் நீராவி நிறைந்திருந்தது. அத்தனை வீரர்களின் ஆடைகளும் வியர்வையால் நனைந்திருந்தன. பல்லாயிரம் உடல்களில் இருந்து எழுந்த வியர்வை வீச்சம் உப்புச்சமவெளி ஒன்றில் நிற்பதுபோன்ற உளமயக்கை அளித்தது. குதிரைகள் மேல் வியர்வைமணிகள் உருண்டு அடிவயிற்றில் சொட்டின. அவை குளம்புகளை மாற்றிவைத்து உடலை ஊசலாட்டி வெம்மையை ஆற்றிக்கொண்டன. பெருமூச்சு விட்டு பிடரி சிலிர்த்தன. தொலைவில் கொம்பு ஒன்று ஊதியதும் முகப்பில் நின்ற நூற்றுவர் குழு கோட்டைக்கதவு வழியாக வெளியே சென்றது. அந்த இடத்தை அடுத்த குழு நிரப்ப மானுட உடல்களின் நதி ஓடத்தொடங்கியது.

கைகளில் இருந்த சிறிய கொடியை வீசி ஆணையிட்டபடி குதிரையில் சுருதசன்மர் அவனைக் கடந்து சென்றார். அவன் அவரை அழைக்க கையைத் தூக்கியபோதுதான் அங்குள்ள செவிநிறைக்கும் பெருமுழக்கத்தை உணர்ந்தான். அதைத்தான் அதுவரை அமைதி என உணர்ந்துகொண்டிருந்தான். தோல் காலணிகள் லாடங்கள் சகடங்கள் மண்ணில் பதியும் ஒலி. ஆடைகளின் படைக்கலங்களின் கவசங்களின் ஒலி. பல்லாயிரம் கொடிகள் படபடக்கும் ஒலி. பல்லாயிரம் மூச்சுகளின் ஒலி. அந்த முழக்கத்தில் தன் குரல் ஒரு கொப்புளமாக வெடித்தழியும்.

அவன் புரவியைத் தட்டி சுருதசன்மருக்கு இணையாக விரைந்தபடி “நான் அங்கநாட்டரசரை பார்க்கவிழைகிறேன் சுருதசன்மரே, மூத்த கௌரவரின் ஆணை” என்றான். அவனை அவர் அடையாளம் காண சில கணங்களாயின. மூன்றாம் முறை அவன் உதடுகளை வாசித்து “நான்காவது காவல்மாடத்தின் உச்சியில் இருக்கிறார். வெண்ணிற எரியம்பு அவருடையது” என்றார். பூரிசிரவஸ் புரவியைத்திருப்பி கோட்டைமேல் நோக்கியதுமே நான்காவது காவல்மாடத்தை கண்டுகொண்டான். அதுதான் கோட்டையின் எட்டு காவல்மாடங்களில் மிக உயரமானது.

கோட்டைக்குக் கீழே புரவியை நிறுத்திவிட்டு காவல்வீரனிடம் முத்திரைமோதிரத்தைக் காட்டி குறுகலான மரப்படிகளில் சிற்றோட்டமாக வளைந்து வளைந்து ஏறி கோட்டைக்குமேல் சென்று அங்கே தனித்து எழுந்து நின்ற ஒன்பது அடுக்குக் காவல்மாடத்தை அடைந்தான். முதல் ஏழு அடுக்குகளில் சிறிய வாளிச்சகடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வளையங்களில் சுருள்விற்களை இழுத்து அம்புகளை பொருத்திக்கொண்டிருந்தனர். முள்நிறைந்த காட்டுக்கனி போலிருந்தது நூற்றுக்கணக்கான அம்புகளை ஏந்திய சகடம். அதன் விற்கள் சினந்த நாய் என முனகின.

எட்டாவது மாடத்தில் இரு கோல்வீரர்கள் அருகே நின்றிருந்த பெருமுரசும் ஏழு வீரர்கள் ஏந்திய வண்ணக் கொடிகளும் இருந்தன. அருகே மூவர் எரியம்புகளுடன் காத்திருந்தனர். அவன் மேலும் செங்குத்தான படிகள் வழியாக ஏறிச்சென்றடைந்த ஒன்பதாவது மாடத்தில் கர்ணன் தனித்து நின்றிருந்தான். அவனருகே நால்வர் நிற்குமளவுக்கு மட்டுமே இடமிருந்தது. சுழன்றடித்த காற்றில் அவன் ஆடைகளும் நீள்குழலும் பறந்துகொண்டிருந்தன. நாற்புறமும் திறந்த பெருஞ்சாளரங்களுக்கு அப்பால் உருகிய வெள்ளிப்பிழம்பு என வானொளி. ஒளிக்குச் சுருங்கிய விழிகளுடன் அவன் கோட்டைக்கு அப்பால் விரிந்து கிடந்த கங்கையின் அலைநீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான்.

ஓசைகேட்டு சற்று அதிர்ந்து கலைந்த கர்ணன் திரும்பிநோக்கினான். பூரிசிரவஸ் தலைவணங்கி விழிநோக்கி நின்றான். கர்ணனின் விழிகளில் வெறுப்பு தெரிகிறதா என்று அவன் எண்ணம் துழாவியது. ஆனால் தன்னுள் ஆழ்ந்து தனித்தலைபவனின் பொருளின்மையே அவற்றில் தெரிந்தது. பூரிசிரவஸ் “படைநகர்வுக்கு நான் தங்களுக்கு உதவவேண்டுமென மூத்த கௌரவர் விழைந்தார்” என்றான். “படைநகர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் இருநாழிகையில் படைகள் படகுகளில் ஏறிவிடும்” என கர்ணன் சுட்டிக்காட்டினான்.

கீழே தசசக்கரத்தின் படித்துறையில் ஏழு பெரும்படகுகள் பாய்தாழ்த்தி நின்றிருந்தன. அவற்றிலிருந்து நீண்ட நடைப்பாலங்களின் வழியாக அம்புகள் செறிந்த சகடப்பொறிகளை உருளைச்சகடவண்டிகளில் வடத்தால் இழுத்து ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்தக்காட்சி முற்றிலும் ஒலியில்லாமல் தெரியக்கண்டபோதுதான் அங்கே முழுமையான அமைதி நிலவுவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அந்த மேடை கீழிருந்து மிக உயரத்தில் இருந்தது. அத்துடன் அங்கு கிடைமட்டமாக கங்கைக்காற்று பீறிட்டுச்சென்றுகொண்டிருந்தது. கீழிருந்த ஒலிகளேதும் மேலே வந்து சேரவில்லை. கீழே கோட்டைக்குள் இருந்து சீராக வெளியே வழிந்து துறைமேடையில் அணிவகுத்து அமைந்துகொண்டிருந்த படைகள் ஓசையில்லாமல் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மேலே என்ன பேசுவதென்று அறியாமல் பூரிசிரவஸ் கீழே நோக்கியபடி நின்றான். இத்தனைக்குப் பிறகும் இவரை எப்படி பின்திருப்ப முடியும் என எண்ணிக்கொண்டான். எந்த நம்பிக்கையில் துச்சளைக்கு அந்தச் சொல்லை அளித்தேன்? பேடை முன் மயில் தோகை விரிப்பதுபோல ஆண் சொல்விரிக்கிறான். புன்னகையை கர்ணன் பார்க்கலாகாது என திரும்பி படகுகளை கூர்ந்து நோக்குவது போல நடித்தான். அங்கிருந்த ஒளியால் கண்கள் கூசி நீர்வழிந்தது. மேலாடையால் துடைத்துக்கொண்டான்.

கொடிகள் அசைய படகுகளில் வீரர்கள் ஏறத்தொடங்கினர். பூரிசிரவஸ் திரும்பி “நமது சூழ்கைமுறை என்ன?” என்றான். “அதை அங்கே காம்பில்யத்தின் கோட்டைமுகப்பை அடைவதுவரை முடிவுசெய்யமுடியாது. அவர்களுக்கு நாம் கிளம்பும் செய்தி எத்தனை விரைவாகச் சென்று சேர்கிறதென்பதையும் நம்மை வெளியே வந்து கங்கைமுகத்திலேயே செறுக்க முயல்கிறார்களா இல்லை கோட்டைக்குள்ளேயே ஒடுங்கி தாக்குப்பிடிக்க முயல்கிறார்களா என்பதையும் பொறுத்தது அது” என்றான் கர்ணன்.

“ஆனால் யாதவப்பேரரசியின் ஒற்றர்களை நான் நம்புகிறேன். அவர்கள் திறன் மிக்கவர்களாகவே இருப்பார்கள். இந்நேரம் இங்கிருந்து பறவைகள் சென்றிருக்கும். நாம் சென்றிறங்குகையில் எரியம்புகள் காத்திருக்கும். படைக்கலம் பூண்டு பாண்டவர்கள் நம்மை களம்காண்பார்கள்…” புன்னகையுடன் “கோட்டைக்குள் இருக்க பார்த்தனின் ஆணவம் ஒப்பாது. அவன் என்முன் களம் நிற்பான், ஐயமே இல்லை” என்றான்.

கர்ணன் பேசியபோதுதான் அவனுக்கு தன்னிடம் சினமேதும் இல்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். இயல்பாகவே அவனிடம் ஒரு மூத்தவனின் தோரணை இருந்தது. கைகளைச் சுட்டி “நமது படைகள் படகிலேறிக்கொண்டால் எதிர்க்காற்றை வென்று இரவெல்லாம் சென்று கருக்கிருட்டில்தான் காம்பில்யத்தை அடையும். சத்ராவதிக்கு செய்தி சென்றுவிட்டது. அஸ்வத்தாமனின் படைகள் நமக்கு சற்றுமுன்னரே காம்பில்யத்தை வந்தடையும். ஜயத்ரதனும் இந்நேரம் கிளம்பியிருப்பான். செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். மூவரும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளில் காம்பில்யத்தை தாக்குவோம்…” என்றான்.

“போர் விரைவில் முடிந்துவிடும் என்றீர்கள்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் சிந்தனையுடன் “அது அக்கணம் எழுந்த அகவிரைவின் சொல். பார்த்தன் இருக்கையில் போர் எளிதில் முடியாது” என்றான். “எந்தக் கணக்கிலும் அவனை குறைத்து மதிப்பிடமுடியாது. தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமைகொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில். அவர்களே கர்மயோகிகள் எனப்படுகிறார்கள். அவன் அத்தகையோரில் ஒருவன்.”

தன்னுள் நிகழ்ந்த பல கணிப்புகளின் முடிச்சுகளை தொட்டுத்தொட்டு ஓடி வந்து நின்று சொல்தேர்ந்து பூரிசிரவஸ் “மூத்தவரே, அவர் தங்களை விட மேலானவரா?” என்றான். அவன் எதிர்பார்த்ததுபோல கர்ணன் சீண்டப்படவில்லை. மிக இயல்பாக “அதிலென்ன ஐயம்? இன்று பாரதவர்ஷத்தில் பார்த்தனுக்கு நிகரென எவருமில்லை” என்றான்.

பூரிசிரவஸ் மேலும் சொல்தெரிந்து “தாங்கள் பரசுராமரிடம் கல்விமுழுமை அடைந்தவர் என்கிறார்கள்” என்றான். “ஆம், அதுவும் உண்மை. அவனைவிட தோள்வல்லமை எனக்குண்டு. அவன் எண்ணிப்பாராத கல்விவிரிவினையும் அடைந்துள்ளேன். ஆனால் அவன் உள்ளம் இளமை நிறைந்ததாக இருக்கிறது. சினமற்றவனாக, விருப்பற்றவனாக இருக்கிறான். இளமைக்குரிய தூயவிழைவே உருவானவன். அவன் அம்புகளின் கூர்மையாக அமைவது அந்த இந்திரவீரியமே.”

கைகளை விரித்தபின் “நான் அப்படி அல்ல. என் அம்புகளை மழுங்கச்செய்பவை என் ஆற்றாமையும் சினமும்தான். புண்பட்ட வேங்கையின் விரைவு அதிகம். ஆனால் அது விரைவிலேயே களைத்துவிடும்” என்றான் கர்ணன். “பார்த்தனை நான் ஒரே ஒருமுறை களத்தில் கண்டிருக்கிறேன். அவனைச்சூழ்ந்திருக்கும் தெய்வங்களையும் அப்போது காணமுடியுமெனத் தோன்றியது. இளைஞரே, நான் பார்த்தனாகவேண்டுமென்றால் எனக்கென எதையும் விரும்பக்கூடாது.” கர்ணன் கசப்பான புன்னகையுடன் “இப்பிறவியில் அதற்குரிய நல்லூழ் எனக்கு அமையவில்லை” என்றான்.

சிலகணங்களிலேயே அவனுடன் மிக அணுக்கமாகிவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அங்கு வந்ததே அவனை போரிலிருந்து விலக்கத்தான் என்ற எண்ணம் வந்ததுமே அவன் அகம் வெளியேற வழிதேடும் அடைபட்ட கானகவிலங்குபோல முகர்ந்து தவிக்கத் தொடங்கியது. சூழ்ச்சியறியாதவனாக, சொல்தேர்ந்து பேசத்தெரியாதவனாகத்தான் கர்ணனை அவன் துரியோதனன் அவையில் மதிப்பிட்டான். ஆனால் சூழ்ச்சிக்கும் நுண்சொல்லுக்கும் அப்பால் தலையுயர்த்தி நின்றிருந்தான். நகரங்களுக்கும், சமவெளிகளுக்கும், காடுகளுக்கும் மேல் நான் இங்கில்லை என நின்றிருக்கும் விண்குலாவும் மலைமுடி என.

”அப்படியென்றால் இந்தப்போர்…” என்று பூரிசிரவஸ் தொடங்குவதற்குள் “நான் வெல்வேன். அதில் ஐயமில்லை. அவர்கள் ஐவரும் கோட்டைவிட்டு என் முன் வருவார்கள். அவர்களை நான் தனியனாக களத்தில் சந்தித்து வெல்வேன். புண்ணும் மண்ணும் நிறைந்த உடல்களுடன் அவர்கள் தலைகுனிந்து மீள்வார்கள். அது நிகழும். நிகழாது நான் களம் விட்டு விலகப்போவதில்லை” என்று கர்ணன் சொன்னான். அக்கணம் வரை இருந்த தன்னந்தனிமை சூழ்ந்த கர்ணன் கலைந்து அங்கு வஞ்சம் கொண்ட பிறிதொருவன் நின்றிருந்தான்.

அடிவாரம் முதல் உச்சிப்பாறைவரை மலை ஒன்றே என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இந்த விரிவை அள்ள என்னால் இயலாது. ஆனால் இதை குலைத்துச் சரிக்க முடியும். நான் மலைகளைச் சரித்து ஊர்களை அமைக்கும் கலையறிந்த மலைமகன். அதற்கான வழி எங்கோ உள்ளது. சிறிய விரிசல். எறும்பு நுழையும் பாதை. “யுதிஷ்டிரர் போர்முனையில் கொல்லப்படுவாரென்றால்….” என அவன் தொடங்குவதற்குள்ளேயே “கொல்லப்படமாட்டார்” என்றான் கர்ணன். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் தோற்பார்கள், கொல்லப்படமாட்டார்கள்.” மிகமெல்ல பூரிசிரவஸ் நெஞ்சுக்குள் நாகம் ஒளிரும் விழிகளுடன் எழுந்து ஓசை தேர்ந்தது. தொலைதூரக் காலடிகளை அறிந்தது.

“ஆனால் அவர் கொல்லப்படாமல் மூத்தகௌரவரின் முடிநிலைப்பதில்லை” என்றான். “தருமன் கொல்லப்படவேண்டியதில்லை. அவர்கள் தோல்வியடைந்தாலே போதும். அஸ்தினபுரிக்கு எதிராக படைகொண்டுவந்து தோற்றோடினார்கள் என்ற பழியே தருமனை முடிப்பூசலில் இருந்து முழுதாக விலக்கிவிடும்” என்றான் கர்ணன். நாகம் பத்தி விரித்து வால் சொடுக்கிக் கொண்டது. அதன் நச்சு நா பறந்தது. மிகமிக மெல்ல அது கூர்ந்தது. அசைவிழந்தது.

“நான் சூதர் சொற்களிலிருந்து தங்களைப்பற்றி ஒன்று கேள்விப்பட்டேன். இளைய பாண்டவர் அர்ஜுனனும் தாங்களும் நோக்குக்கு ஒன்றுபோலிருப்பீர்கள் என்று. அவைக்களத்தில் நீங்கள் சென்று அவர் எழுந்து வந்தபோது பிறிதொரு வடிவில் நீங்களே வருகிறீர்கள் என்றே எண்ணினேன்” என்றான். கர்ணனின் விழிகள் இயல்பாக அவனை நோக்கியபின் விலகிக்கொண்டன. தன் சொற்களின் நஞ்சு அவனைத் தாக்கவில்லை என பூரிசிரவஸ் உணர்ந்தான். “மூத்தவரே, இந்தப்போர் என்பதுகூட நீங்கள் உங்களுக்கெதிராகச் செய்வதுதானோ என்று ஒருமுறை தோன்றியது.”

கர்ணனின் விழிகளில் அதிர்வைக் கண்டதுமே அச்சொற்கள் சென்று சேர்ந்துவிட்டன என்பதை புரிந்துகொண்டான். மேலும் சொற்களைத் தெரிந்து “அவ்வகையில் பார்த்தால் அஸ்தினபுரியின் படைகள் அஸ்தினபுரிக்கு எதிராகப்போரிடுகின்றன. களத்தில் தங்கள் தலைகளை தாங்களே வெட்டிக்கொள்கின்றன” என்றான். கர்ணன் “நான் உம்முடன் சொல்லாடும் நிலையில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் படைகள் கிளம்பவேண்டும்” என்றான்.

“இப்போரைக்குறித்து சூதர்கள் எப்படி சொல்லடுக்கப்போகிறார்கள் அங்கரே? இதற்குப்பதிலாக அங்கநாட்டரசர் ஆடிமுன் நின்று தன் கழுத்தை அறுத்திருக்கலாமே என்றா?” என்றான் பூரிசிரவஸ். அந்தக்கணத்தில் கர்ணனின் இறுதிச்சரடும் அறுந்தது. பூரிசிரவஸ் எண்ணியிருக்காத கணத்தில் கர்ணன் திரும்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தலைக்குள் வெடித்த பேரொலியுடன் மறுபக்கச் சுவரில் முட்டி பூரிசிரவஸ் கீழே விழுந்தான். கையை ஓங்கியபடி நின்று மூச்சிரைத்த கர்ணன் “செல்லும்… இனி நீர் என் முன் வந்தால் தலைகொய்யாமல் அடங்க மாட்டேன்” என்றான்.

“அதுவே நிகழட்டும்” என்று கையூன்றி எழுந்து அமர்ந்தபடி மெல்லியகுரலில் பூரிசிரவஸ் சொன்னான். “நான் இதையே மீண்டும் சொல்வேன். ஏனென்றால், இன்றுகாலை என்னை மூத்தகௌரவர் தோள்தழுவினார். அஸ்தினபுரியின் மதவேழத்தின் அணைப்பை அறிந்த எவரும் மீள்வதில்லை என்பார்கள் சூதர்கள். இன்றுமுதல் நான் இந்த இளைய வேழத்தின் அடிமை. இதன் நலனன்றி பிறிது என் நோக்கில் இல்லை. ஏனென்றால் நான் புண்பட்ட வேங்கை அல்ல. தன் புண்ணன்றி எதையும் எண்ணாத சிறியோனும் அல்ல” என்றான்.

“செல்லும்…” என கர்ணன் உறுமினான். கருநாகமென ஒளியுடன் நெளிந்த நீள்கரங்கள் அலைபாய்ந்தன. பறக்கும் மேலாடையும் குழலுமாக வானத்தின் பகைப்புலத்தில் விண்ணெழுந்த தேவன் என நின்றான். “சென்றுவிடும்… இக்கணமே.” பூரிசிரவஸ் “நான் இறப்புக்கு அஞ்சவில்லை அங்கரே. என் சொற்களைச் சொல்லிவிட்டு இறக்கிறேன். எதற்காக இந்தப்போர்? அங்கே மணவரங்கில் உங்கள் கைநழுவிய இலக்கை இங்கே சமர்களத்தில் வென்றெடுக்கலாமென்றா எண்ணுகிறீர்கள்? முடியாது. ஆடிப்பாவையுடன் போர் புரிந்து வென்றவர் எவருமில்லை என்ற சொல்லை நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றான்.

“உங்கள் வஞ்சத்திற்கு விழவேண்டியது அஸ்தினபுரியின் குருதியல்ல. எவர் முன் தருக்கி நிற்க விழைகிறீர்கள்? எந்த தெய்வத்தை வென்றெடுக்க முனைகிறீர்கள்?” என்று உடைந்தகுரலில் பூரிசிரவஸ் மேலும் கூவினான். “என்னிடம் கௌரவகுலத்து இளவரசி வந்து இறைஞ்சினார், உங்கள் வஞ்சத்துக்கு அஸ்தினபுரியின் சிறப்பும் மகிழ்ச்சியும் பலியாகிவிடலாகாதென்று. உங்கள் குருதிச்சுவை தேரும் கூர்வாளால் குருகுலமே அழிந்துவிடக்கூடாதென்று. அதை உங்களிடம் சொல்லவே வந்தேன்.”

கர்ணன் விரைந்த காலடிகளுடன் அவனைக் கடந்து படிகளில் இறங்கினான். பூரிசிரவஸ் எழுந்து நின்று அவன் முதுகை நோக்கி “நீங்கள் இழந்தவற்றை மீள அடையமுடியாது என்று உணராதவரை உங்கள் அகம் அடங்குவதில்லை அங்கரே. இன்று அல்லும்பகலும் ஆடிநோக்கி நடிக்கும் பேதையல்லவா நீங்கள்? நான் வந்தகணத்தில் கூட நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தது அவனை அல்லவா?” என்றான். கர்ணன் படிகளின் நடுவே கைகள் பதற நின்று திரும்பி நோக்கினான். “என் வருகையால் ஏன் திகைத்தீர்கள்? ஏன் உங்கள் விழிகள் பதைத்தன?”

கர்ணனின் கழுத்தில் தசைநார்கள் இழுபட்டன. மீசை இழுபட கன்னம் ஒருபக்கமாக கோணலாகியது. அவன் மேலேறிவரப்போகிறான் என பூரிசிரவஸ் எண்ணியகணம் கர்ணன் சரசரவென கீழிறங்கினான். பூரிசிரவஸ் எழுந்து தானும் விரைவாகப் படிகளில் இறங்கியபடி “நம் நிழல்களின் ஆடல் நம்முடையதல்ல அங்கரே. அவை தழலின் மாயங்கள் மட்டுமே” என்றான். சீற்றத்துடன் கையை ஓங்கி உறுமியபடி திரும்பிய கர்ணன் அவன் விழிகளைச் சந்தித்து திகைத்து நின்றான். ஓசைகேட்டு முரசுக்கொட்டிலில் இருந்த இரு வீரர்கள் எட்டிப்பார்த்தனர்.

கர்ணன் திரும்பி அடுத்தபடிக்கட்டில் இறங்கி மறைந்தான். பெருமூச்சுடன் தோள் தளர்ந்த பூரிசிரவஸ் தன் கன்னத்தை தொட்டுப்பார்த்தான். அடிபட்டுக்கன்றிய இடம் மிகமென்மையாக தொடுகையுணர்ந்து கூசியது. வாயோரம் கிழிந்திருந்த இடத்தில் சற்று குருதிச்சுவை தெரிந்தது. திரும்பி காவலர்களை நோக்கியபின் அவன் நீர்த்துளி என முன்னும் பின்னும் ஒரு கணம் ததும்பித்தயங்கிவிட்டு படியேறி மீண்டும் ஒன்பதாவது அடுக்கை நோக்கி சென்றான்.

நான்கு திறந்த சாளரங்கள் வழியாகவும் காற்று சுழன்றடித்தது. மேலாடையைப் பிடிக்க முனைந்தவன் அதை அப்படியே பறக்கவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். சாய்ந்த மாலையொளி பரவிய கங்கையலைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது முதல்முறையாக அவன் தன்னைப்பற்றிய கசப்பை அடைந்தான். நாவால் தொட்டு அந்த குருதியை மீண்டும் அறிந்தான். ஆடை படபடத்தது, இழுத்து விண்ணில் வீழ்த்த விழைவதுபோல. அழவேண்டுமென்று, எழுந்தோடி புரவியேறி தன் மலைமடிப்புகளை நோக்கி சென்று முகில்வெண்மைக்குள் புதைந்துகொள்ளவேண்டுமென்று விழைந்தான்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகோட்டை
அடுத்த கட்டுரைபங்குச்சந்தை- கடிதம்