எங்கும் குறள்

நகைச்சுவை
சுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அதைப்பற்றி என்ன சொன்னாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதே. மேலும் பேருந்தில் பல்வேறு மனநிலைகளில் நாம் குறளைப் படிக்க நேர்வதனால் குறள் நம்பமுடியாத மனநிலைகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்கிறது.

குறள் மீதான வாசிப்பை இருவகைகளில் முக்கியமாகப் பகுக்கலாம். சொற்பொருள் தெரிந்து வாசிப்பது. தெரிந்து வாசிப்பவர்கள் அந்தரத்தில் ஏணியை நிறுத்தி ஏறும் வித்தைக்காரர் போல ஏறித் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை அடைகின்றனர். ”எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியார் திண்ணியராகப்பெறின்” என்று அதற்கு வள்ளுவப்பெருந்தகையே அனுமதியும் வழங்கியிருக்கிறார். பெண்ணியர் என்றும் பாடபேதம் உண்டு.

இரண்டாம் முறை, எப்பொருளும் தெரியாமல் வாசிப்பது. தமிழ்நாட்டில் பின்னதே அதிகம். வாசிப்பவரின் தேவையும் சூழலும் வாசிப்பை நியாயப்படுத்துகின்றன. கற்றிலன் ஆயினும் கேட்க என்றுதானே குறளார் கூற்று?

அறிவுடையோர் ஆவ தறிவார் அ·திலார்
அ·தறி கல்லாதவர்.

என்ற குறளை நெசவாளர் குடிப்பிறந்த எங்கள் கல்லூரி தோழன் ”அறிவுடையோர் தறியில் அமர்ந்திருப்பார். கல்லாதவர் அதே தறியின் கல்லாவில் இருப்பார்கள்” என்று ஆத்மார்த்தமாகப்பொருள்கொண்டு சொல்லிவந்தான். வள்ளுவருக்கு நடைமுறை வாழ்க்கை தெரிந்திருப்பதற்கான அழியா ஆதாரமாக அவன் அதைச் சொல்லிச் சொல்லிக் களிப்படைவான். அதேபோல

யாகவா ராயினும் நா காக்க காவாக்கால்
சோ காப்பர் சொல்லிழுக்கு பட்டு

என்ற குறளுக்கு ‘யாகவா முனிவராக இருந்தாலும் நாவை அடக்குவது நல்லது. இல்லையேல் சோவிடம் மாட்டிக்கொண்டு இழுக்குப் படவேண்டியிருக்கும்’ என்று ஒரு நண்பர் போதையில் பொருள் கொள்ளும்போது உடனிரு சாட்சியாக விளங்கா நின்றிருக்கிறேன்.

சின்னவயதில் குறள்பாக்களைத் திரித்து திரிக்குறள் அல்லது கிறள் அமைப்பது ஒரு இளமைப்பாண்டித்திய வெளிப்பாடு. பலான விஷயங்களை குறளில் சொல்வதென்பது சற்றே பயின்றபின் கைவரும் கலையாம். யான் கற்ற பள்ளியில் முப்பது வருடம் கழித்து இப்போதும் யானியற்றிய ஏராளமான நாலாவதுபால் கிறள்கள் புழங்குகின்றன என்பதை சமீபத்தில் அறிந்தேன். எழுச்சியுடன் எழுதப்படும் கவிதைக்கு  அழிவிலை என்பதற்கான சான்றாம் அது. ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்ற குறளுக்கு அடியேனளித்த கிறளுக்காகவே எம்மை உச்சிமோந்து போற்றுவர் உளர், காலணி கழற்றித் தூற்றுவர் பலர்.

தினைத்துணையாம் தப்பு வரினும் பனைத்துணைமார்க்
குறைப்பானே பலவேசம் பயல்.

செய்முறைப் பயிற்சி செய்தாஅடி செய்முறை
செய்யலேண்ணாலும் கிட்டும் அடி.

போன்ற எளிய கிறள்கள் இப்போது இளம் மாணாக்கர் நடுவே புழங்குவதை எம் மைந்தனாரிடம் கேட்டும் அறிய நேர்ந்தது.

கேள்வி வாரப்ப நிலம் நோக்கும் கேக்காதப்ப
தாம் நோக்கி மெல்ல நகும்.

என்ற கிறள் எம் மைந்தனார் வகுப்பில் கேள்விக்கு தாம் பதிலிறுக்கும் விதம் குறித்து அவரே  இயற்றியது என்று அறிந்தேன். எம்மைந்தனாருக்கு பல் சற்றே எத்து ஆதலினால் இவர் அவற்றை கிளிப் போட்டு சரிசெய்து கொண்டார். [ அப்போது இவர்தம் குரல் சற்றே மழலையாக இருந்தமையால் கிளிப்பேச்சு கேட்க வா என்று நண்பர் கூறுவதுண்டாம்] எனினும் பல்லவன் என்ற அடைமொழி இவருக்கு நீடிக்கிறது. இதையொட்டி இவர் குறளை மாசறக்கற்று வள்ளுவர் கூற்றாக இக்குறளைப் பள்ளியில் பரப்பினார்.

பல்லார் பகைகொண்டால் பத்து மடங்கு தீமையாக்கும்
நல்லோர் தொடர்பை விடுலே.

‘பல்லோரை பகை கொண்டேண்ணா பத்து மடங்காக்கும்லே அடி!” என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டென அறிந்தோம்.  எண்ணைபோட்டு அழுந்தச்சீவி விபூதி அல்லது சிலுவை போட்டு வந்து ”முருகா” என்றும் ”ஏசப்பா” என்றும் அடிக்கடி கூறும் நல்லபையன்களை இவர் அறவே வெறுத்து அவருடன் சேர்பவர்களுக்கு அடி கொடுப்பது வழக்கம்.

குறளை ஒவ்வொருவரும் அவர்தம் நூலெனவே கருதி அவரவருக்குரிய குறள்களைக் கண்டடையலாம். அஞ்சல்துறை ஊழியர் கூட்டத்தில் துணைத்தலவர் ஒருவர் தன் உரையை  நிறைவுசெய்யுங்காலை

அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

என்றகுறளைச் சொல்லி ‘அறிவார் தொழில் அஞ்சல். அவரை அஞ்சாதவர் பேதைமைகொண்டோர்’ என்று விளக்கமளித்த பின் அப்பொருளே அச்சூழலில் புழங்குகின்றது.

எனினும் பொதுவாக அரசூழியர் அவர்களுக்கே உரிய குறளாக சிலவற்றை சென்னி மீது வைத்து போற்றி வருகின்றனர்.

தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

தூங்கிக்கொண்டேசெய்ய வேண்டிய அலுவலக வேலையை அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் வீட்டில் அதேபோல வேலைசெய்தால் வினையாக முடியும் என்பது இக்குறளின் சாரம்.

கை அறியாமை  உடைத்தே பொருள்கொடுத்து
மெய் அறியாமை கொளல்.

என்பது அரசூழியர் பலர் நெஞ்சில் ஆணியென அறையப்பட்ட குறள். கையோடு கை அறியாமல் பொருள் கொடுத்து அந்த உண்மை வெளியே தெரியாமல் பலன் பெறுவதே குடிமக்களின் கடமை என்பதே இக்குறளின் பொருள்.  மெய் என்பது அரசு குறித்த உண்மைகள் என்றும் பாட பேதம் உண்டு.  வள்ளுவர் காலத்திலே கைந்நீட்டு அல்லது நீட்டுக்கை இருந்திருக்கிறது எத்துணை எழுச்சியூட்டும் எண்ணம்!

ஏன், பதநீர் விற்பனையாளர் சங்கம் கூட குறளுக்குள் தங்கள் இடத்தைக் கண்டடையவில்லையா என்ன?

தெளிவு இலதனை தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்

இளிக்க வைக்கும் பட்டைச் சாராயம் குடித்து ஏதப்பாடு படுவதற்கு கொஞ்சமேனும் அஞ்சக்கூடிய எவரும் காலையில் நல்ல தெளிவையே அருந்த விரும்புவார். தெளிவு என்றால் பதநீர் என்று வையாபுரிப்பிள்ளை அகராதியே சொல்கிறது. தெளிவழியக் குடிக்கவேண்டியதே தெளிவு.

சிசில் ஆப்டிகல்ஸ் கடையில் வள்ளுவர் கண்ணாடி பற்றி எழுதிய

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அ·தின்றேல்
புண்ணென்று உணரப்படும்

என்ற குறளை எழுதி மாட்டியிருக்கிறார்கள். சரியான ஓட்டம் உடைய கண்ணாடி அணியாத கண்களில் புண்போல வலி ஏற்படும் என்பதே வள்ளுவர் கூற்று. வள்ளுவருக்கு மூக்குக் கண்ணாடி பற்றித் தெரியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் காலத்துக்கு முன்னரே கலீலியோ கண்ணாடி போட்டிருந்தாரெனத் தெரிகிறது.  மேலும் முக்காலமறிந்த முப்பாலறிஞனுக்கு இதுகூடத் தெரிந்திருக்காதா என்ன?

வட்டிக்குப் பணமளிக்கும்  நாகம் பிள்ளை

பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்ற குறள் தனக்காகவே குறளாசிரியன் எழுதியதென எண்ணுகிறார். பற்று தீர்த்து அற்றுபடி செய்பவனிடம் மட்டுமே மேலும் பற்று வைக்க வேண்டும். அவன் பற்று தீர்ப்பவனாதலால் அவனுடைய பற்றுவரவுக் கணக்கையே தொடச்சியாக முயற்சி செய்து தீர்த்துக்கொள்ளவும் வேண்டும் என்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத்தந்த ஞானியாகவே அவர் வள்ளுவரைக் காண்கிறார்.

இவர்களைத் தவிர தனக்கெனத் தானே குறளை யாப்பவரும் உளர். குறள் எவரும் எழுதத்தக்க எளிமையுடையதானதனால் ஆளுக்கு ஐந்து குறள் எழுதிக்கொளல் எவருக்கும் எளிதே. எழுதுபவர் கவிஞனாக வரலாற்றில் இடம்பெற்றவர் என்ற பெருமிதத்தை அடைந்து இப்பக்கம் கபிலனும் அப்பக்கம் வள்ளுவனும் தோள்களில் இடிக்க இடத்துக்காக இருவரையும் தோள்நகர்த்தி உந்துபவர் ஆகிறார்.

சிறுநீர் மருத்துவர்கள் சித்த மருத்துபவர்கள் உணவே மருந்தென்பவர் மலர் மருத்துவம் சுவர் மருத்துவம் பார்ப்பவர் யோகக்கல் விற்பவர் ராசிசக்கரம் உருட்டுபவர் யாவருக்கும் உண்டு அவரவர் குறள்கள். சொந்தமாக குறளில்லார் சிந்திக்க அறியாதார் என்று சொல்வது பைந்தமிழ் மரபு.

அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க
அகல்யாவைக் காதலிப் பவர்.

நலம் வேண்டின் நாகம்மை வேண்டும், குலம் வேண்டின்
வேண்டுக கோலம்மை துணை.

போன்ற உள்ளூர்க் கல்லூரி ஆக்கங்கள் குறளின் ஆக்கத்தை அதர் வினாய் சென்று ஊக்கம் கொண்டவை என்று சொல்லலாம்.

வல.சுப.சரவணமுத்துப்பிள்ளை சித்தர் நீரிழிவு மருத்துவமனையில் எழுதப்பட்டுள்ள குறள் ஒன்று மருத்துவரின் தமிழறிவைக் காட்டுகிறது

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடு நீராரில் காணப்படும்

அடிக்கடி நிறைய சிறுநீர் வருதல் மறவிக்குணம் சோம்பல் தூக்கம் அதிகமாதல் ஆகிய நான்கு குணங்களும் கெடுநீர் என்ற நீரிழிவு நோயாளியின் அடையாளங்களாகுமாம் . இவைபோக, மருத்துவரின் சொந்தக்குறள் ஒன்று நீரிழிந்தார் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து விளங்குகின்றது.

சுகரெனும் நோயேறிக்கொண்டார் சிறுநீர்
கணமேனும் காத்தல் அரிது.

முந்தைய கட்டுரைகொடுமணல் அகழாய்வு
அடுத்த கட்டுரைசெ. இராசுவும் இஆபவும்