கேஜரிவால் -கடிதங்கள்

2

முதலில் ஜெ. வுக்கு நன்றி.

வயது வந்தோருக்கான வாக்குரிமை என்னும் மகத்தான ஜனநாயக விழுமியத்தின் சாதனைகளுள் இது முக்கியமானது.

தில்லி மக்களின் அடிப்படைத் தேவைகளில் நடைபெறும் ஊழல்கள் மக்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதன் வெளிப்பாடும் கூட.

இதில் இரண்டு அடிப்படை விஷயங்கள்:

1. ஊழல் என்பது அரசாங்க அதிகாரிகள் மட்டுமே செய்வதல்ல. பொதுவில் ஊழல் ஒழியப் பேசிவிட்டு, தனி வாழ்வில் தேவைப்படும் போது ஊழலை உபயோகிக்கும் மனநிலை கொண்ட சமூகம் நமது. தீவிரமாக, இதில் கேஜ்ரிவால் அரசு இயங்கும் போது வரும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

2. நிறுவனம்: ஒரு பொலிட்பீரோ Vs கேஜ்ரிவால் என்னும் அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் இருப்பதை வரும் செய்திகள் சொல்கின்றன. பிரஷாந்த் பூஷண் போன்ற தலைவர்கள் விலகியிருப்பதில் இருந்து ஊகிக்க முடிகிறது. இதில் சில முக்கியமான பரிசோதனை முயற்சிகள் உதாரணமாக இருக்கின்றன. அருணா ராயின் SKSS அதில் ஒன்று. இதற்கு எந்த விதமான நிர்வாக அமைப்பும் கிடையாது. மக்கள் கூடி முடிவு செய்வார்கள். அவ்வளவே. ஆனால், 5 ஆண்டுகள் என ஒரு இலக்கு வைத்து இயங்கும் ஒரு அரசு முயற்சிக்கு, தலைமை என்பது அவசியம். ”பாஞ்ச் ஸால்,கேஜ்ரிவால் என்னும் கோஷம் இந்த் தேர்தலில் மிகப் பிரபலமான ஒன்று. எனவே, கேஜ்ரிவால் என்னும் மனிதரின் தலைமையை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆலோசனை சொல்லும் ஒரு இடத்தில் பொலிட்பீரோ இருப்பதே நடைமுறையில் பயன் தரும்.

மாறாக, அவர் பொலிட்பீரோவின் முடிவுகளைச் செயல்படுத்தும் ஒரு பொம்மையாக இருக்க வேண்டும் என பொலீட்பிரோ இருந்தால், உள் முரண்களால் ஆ.ஆ.பா நஷ்டப் படும். இதையும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் எனப் பார்க்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை ஒப்பு நோக்க, தில்லி முதல் மந்திரி ஒரு நகர மேயர் போலத்தான். குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளில்தான் பங்காற்ற முடியும். அதைத் தான் தில்லி மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே இத்தேர்தல் முடிவு சொல்லும் சேதி.

பாலா
unnamed

ஜெயமோகன் அவர்களுக்கு

கேஜரிவால்

இந்த வெற்றி இன்று மிக முக்கியமான ஒன்று தான். ஆணால் இவரைப்பொறுத்த வரை அவசரப்படக்கூடாது என்றே கொஞ்சம் பயதோடும் எதிர்பார்ப்போடும் இருக்க வேண்டியதாக உள்ளது


ஒரு அழுத்தமான எதிர்விசையாக மட்டுமே இவர் செயல் பட்டால் போதும் என்று தோன்றினாலும் அது மட்டுமே இவர் சந்திக்கக்கூடிய பெரும் இடரா என்று தோன்றுகிறது.

மற்றும் இது போன்ற வெற்றி, கொடுத்ததை உபயோகிக்காமல் விட்டு திருப்பி வருவது, தில்லியில் மட்டும் தான் சாத்தியம் என்றும் தோன்றுகிறது.

நன்றி
வெ. ராகவ்

அன்புள்ள ஜெ, வணக்கம்!

கேஜ்ரிவால் இந்திய அரசியலில் ஒரு தற்செயல் வெற்றி.
வெறும் கோஷம் மூலமே மக்களின் வெறுப்பு மற்றும் எதிர்ப்பு அரசியலை அறுவடை செய்தவர்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘நீதிக்கு தண்டனை’ படம் வெற்றி பெற்றதைப் போல!
இதை நம்பித்தான், மாபெரும் அரசியல் ‘ஞானி’யும் களம் இறங்கினார். நீங்களும் ஆதரித்தீர்கள்.
அப்போது ஒரு நமட்டு சிரிப்பைத்தவிர உங்களுக்கு தருவதற்கு என்னிடம் எதுவுமில்லாதிருந்தது.
பின்னர், மனம் திருந்திய மைந்தராக அவரும் வந்தார்!

தற்சமயம், ‘போங்கடா நீங்களும் உங்க கவர்மெண்ட்டும்’ பாணியிலான விஜயசாந்தியின் படம் மாபெரும் வெற்றியடைந்ததைப்போல,டெல்லியில் கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருக்கிறார்.கொஞ்சம் நிதானமாக பார்த்தால்
பாஜக வின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் இல்லை.கொள்ளை போனது காங்கிரசின் வாக்கு வங்கிதான்!
(70 இடங்களில் 63 ல் டெபாசிட் இழந்திருக்கிறது) அதனுடன் சிந்தாமல்,சிதறாமல் முஸ்லிம் – கிறிஸ்தவர்கள்-இடதுசாரிகள் -திரிணாமுல் -வெளிநாடுகளில் இருந்து குடியேறிய டெல்லி முஸ்லிம் வாக்காளர்கள்….இதெல்லாம் ஒன்று சேர்ந்து கேஜ்ரிவாலே எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்துவிட்டார்கள்!

இது தமிழ் நாட்டிலும் பல முறை நடந்திருக்கிறது. உதாரணம் 1984,1996 சட்டமன்றத் தேர்தல்கள். டெல்லியில் நடந்தது,காங்கிரசும் -சிறுபான்மை மத அமைப்புகளும் திரைமறைவில் கைகோர்த்து ஆடிய (வெற்றிகரமான)
கபட நாடகம். எனவே, ‘ஊழலுக்கு எதிராக மக்கள் சிலிர்த்தெழுந்துவிட்டார்கள்’ என்றெல்லாம் எழுதி மக்களை கொச்சைப் படுத்த வேண்டாம். திடீரென ஒரு தெருச்சண்டை நடக்கும் போது கூடி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, போகும் போது தன் நண்பர்களுடன் நியாய – அநியாயங்களை பேசிக்கொண்டு போவார்கள்….டெல்லியில் வித்தியாசமாக வாக்குச் சீட்டு கையிலிருந்தது. உணர்ச்சிவசப்பட்டு போட்டுவிட்டார்கள். ஒரு ஆறுதல் என்னவென்றால், இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ‘மோசம் போய்விட்டோமே’ என்று Letters To The Editor க்கு கொட்டி தீர்ப்பார்கள். வழக்கம் போல் மீண்டும் ஜனநாயகம் (?) அடுத்த தேர்தலில் வெல்லும்!!

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன் – திருவண்ணாமலை.

முந்தைய கட்டுரைஅண்ணா- கடிதம்
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்