அன்புள்ள ஜெ.வுக்கு,
தங்களின் நாவல் கோட்பாடு புத்தகத்தை படித்த பிறகு தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலை படிக்கும் ஆவல் ஏற்பட்டது. அந்த நாவல் மிகச்சிறப்பான அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அதை பற்றிய என்னுடைய சிறிய அனுபவம்.
மரணம் என்பது என்ன? மரண தேவதையான மறலி எப்போது வருவாள். எப்படி வருவாள்? மரணத்தின் நிறமென்ன? சுவை என்ன? உருவமென்ன? ஆத்தர் பௌ(மனைவி) போல இருப்பாளோ? மஞ்சரியை (முன்னாள் காதலி) போல இருப்பாளோ? ஜகத் மஷாய் (குருவும் தந்தையுமான) போல இருப்பாரோ?
ஜீவன் மசாய் மரணத்தை புரிந்து கொள்ள செய்யும் முயற்சியே இந்த நாவல்.
தந்துகோஷால், ரானா படாக், விபின் மற்றும் தன் மகன் வனவிஹாரி போன்றவர்களின் மரணத்திற்கு குறைந்த பட்ச காரணம் காணும் ஜீவன் மஷாய் அதஸியின் குழந்தை ஏன் இறக்கிறான் என்ற காரணத்தை அறியமுடியவில்லை.
தன் மகன் வனவிஹாரியின் மரணத்தை ஜீவன் மஷாய் ஏற்றுக்கொள்ளும் விதம் ஆச்சரியம்.
நடக்கும் நிகழ்வுகளை ஒத்துக்கொள்ளாமை தான் வலியோ?
அதே நேரத்தில் அலோபதி டாக்டரான பிரத்யோத் தன் மனைவியின் உடல் நலமின்மையின் போது அடையும் பதட்டம். இதைத்தான் நாம் மேற்கிலிருந்து கற்றுக்கொண்டோமோ? நம்முயை மரபிலிருந்து விட்டோமோ?
அகால மரணம்தான் கொடியது முதியதில் வரும் மரணம் அமிர்தம் என்கிறார். (இப்பொழுதெல்லாம் முதிய வயதில் வரும் மரணத்தை நாம் எளிதில் விடுவதுமில்லை. அவர்களும் எளிதில் ஏற்றுக்கொள்வதுமில்லை. பெரும்பாலான நேரங்களில் கஷ்டப்பட்டும் கஷ்டப்படுத்தியும் தான் இறக்கிறார்கள்)
ஆயுர்வேதம் ஐந்தாவது வேதம் என்கிறது நாவல். அதில் மரணத்தைப் பற்றிய அணுகுமுறை இதுதான்.
மறலி தன் வருகையை உறுதிப்படுத்திவிட்டால் ஆயுர்வேத மருத்துவர்கள் மரணத்தோடு போராடுவதில்லை. உறுதியாகா இடத்தில் அவளை விடுவதுமில்லை.
அந்த மறலியின் வருகையை உறுதி செய்வதுதான் ஜீவன் மஷாய் நம் மரபிலிருந்து கற்றுக்கொண்ட நாடி வைத்தியமோ?
ஜீவன் மஷாய்க்கு மருத்துவ முறைகளை தேர்ந்தெடுப்பதில் egoவோ முன்முடிவோ இருப்பதில்லை. அவருடைய நோக்கமே மறலியின் வருகையோடு போராடுவதுதான் தடுப்பது அல்ல. தள்ளிப்போடுவதுதான். அல்லது நோயாளியை ஏற்றுக்கொள்ள வைப்பது.
இடையிடையே மகாபாரதத்திலிருந்து ம்ருத்யு பிறந்த கதை, அபிமன்யு மரணத்தை ஏற்றுக்கொள்ளும் வித்தை பற்றிய விமர்சனம் என நாவல் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.
கடந்த ஒரு மாதமாக என்னை வங்காள சமூகத்தில் ஆயுர்வேத மற்றும் அலோபதி பற்றிய மருத்துவ முறைகளின் அறிதலோடு வாழ வைத்ததற்கு நன்றி ஜெ.
ஒரே நாளில் சிபி நாட்டில் பால்ஹிகரோடும் பூரிஸிரவஸ்ஸோடும் வடகிழக்குப் பயணத்தில் கிராங்க்ஸுரி அருவியை பார்த்தும், பிருஹதாரண்யகத்தில் ககலோரின் தத்துவக் கேள்விகளோடும் வாழ்க்கை மிக சுவாரஸ்யமாகவும் தீவிரமாகவும் செல்வதற்கு உங்களும் எப்படி நன்றி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை!
கடந்த நான்கு வருடங்களாக தங்களை தீவிரமாக பின்தொடரும் உங்கள் அன்பு வாசகன்.
ரா. சந்திரசேகரன்
ஈரோடு