அன்பிற்கினிய ஆசிரியருக்கு,
நாகர்கோயில் சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.
மேகாலயாவைப்பற்றி சில தகவல்கள் தங்களுடன் பகிர எண்ணுகிறேன். மேகாலயா ஒரு சுவாரசியமான மாநிலம். அங்குள்ள மூன்று வாசிகளான காசி, ஜைந்தியா மற்றும் காரோக்கள் அவரவர் பாணியில் வேறுபட்டவர்கள். இதில் காசி மற்றும் ஜைந்தியா குழுவினர் கிட்டத்தட்ட தங்கைகள் என்று கூறலாம். பெண் கொடுத்து எடுக்கும் வழக்கம் கூட எளியதே.
காசி இனத்தவர்கள் எண்ணிக்கையில் பத்து லட்சமாக இருப்பார்கள் ( மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை முப்பத்தைந்து லட்சம் வரை இருக்கலாம்). அவர்கள் ஒரு சிறிய குழு. ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்துவைத்திருப்பர். ஷில்லாங்கில் சாலையில் நடந்து செல்லும்போது மக்கள் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருப்பர். ஒரு சிறிய குழு அதிலும் அவர்களுக்கான ஆட்சிமுறை கொண்ட குழுவில் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தே இருக்கும். காசி சமூகத்தில் கிட்டத்தட்ட ரகசியங்களே கிடையாது. எனக்கு இது மிகவும் ஆச்சர்யமும் கிளர்ச்சியும் தரக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. எப்படி ஒரு சமூகத்தில் ரகசியங்களே இல்லாமல் இருக்கும் என்று. இது முற்றிலுமாக நடைமுறை இல்லை என்றாலும் இங்கு பெரும்பாலும் ரகசியங்கள் கிடையாது என்றே கூறுகின்றனர் (வாசிக்க – Janice Pariat’s Boats on Land). மேலும் அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் மலைகளால் அவர்களுக்கே திரும்ப வந்து சேர்வதுண்டு என்ற ஒரு தொன்மமும் இங்கு உண்டு. அது மலைகளில் முட்டி மோதி வெளியே செல்வதும் கிடையாது, சிர்ரபுன்ஜீயில் பேயும் மழை போல. காசி இனத்தைச் சேர்ந்த என் தோழி இதை மிக எளிமையாக சொல்வாள். ஆனால் எனக்கு அது பல இலக்கியங்களுக்கான ஊற்றாகப் படுகிறது.
இது ஒரு பெண் வழிச் சமூகம். கேரளாவைப் போல அது அழியவில்லை. இன்றும் சொத்தும் பெயரும் பெண்ணுக்கு மட்டும் தான். ஒரு பெண்ணை மணந்துகொண்டால் அவளின் குடும்ப பெயரைத்தான் ஆண் எடுத்துக்கொள்ள வேண்டும். திருமணம் இங்கு காதல் திருமணங்கள் மட்டுமே. தரகர்களே இங்கு இல்லை. அவரவர் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். பொருளியல் சிக்களைத்தவிர பெரும்பாலும் வேறு எதுவும் எழுவதில்லை. திருமணத்தில் பிறக்கும் பிள்ளைகளும் தாயின் பெயரைத்தான் எடுத்துக்கொள்வார்கள். எனவே இங்கு ‘அப்பன் பெயர் தெரியாதவன்’ என்ற வசையோ/வழக்காடலோ கிடையாது. அனாதை குழந்தைகளே இந்தச் சமூகத்தில் கிடையாது. ஆணுக்குச் சொத்தும் கிடையாது பெயரும் கிடையாது. இதனால் ஆண்கள் சிலர் மனச் சிக்கலில் இருப்பதைப் பார்த்துள்ளேன். இதனால் சூது குடி போன்றவை இங்கு உண்டு.
அவர்களுக்கான மன்னரும் (சியெம் என்று அழைக்கப்படுவார்) அமைச்சர்களும் எல்லாம் ஆண்களே. ஆம் இன்றும் அந்த முறை உண்டு. நிலம் என்பது அரசிடம் கிடையாது. மக்களிடமே உள்ளது. அது தொடர்பான எந்த சிக்கலுக்குள் மன்னரையே மக்கள் அணுகுவார்கள். வெளியாட்களுக்கு நிலம் கிடையாது. குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதுவும் நிலத்தின் சொந்தக்காரர் மனம் நோகாத வரை மட்டுமே. தனி நீதிமன்றம் மற்றும் அவர்களுக்கானச் சட்டங்கள் உண்டு. அதற்கான வழக்கறிஞர்களும் உண்டு (நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அளவுக்கா என்று தெரியவில்லை) இந்த ஆட்சி கட்டமைப்பில் பெண்களுக்கு இடமே கிடையாது. இது ஒரு சுவாரசியமான முரண். ஆனால் இந்திய அரசியல் சாசனப்படி நடக்கும் ஆட்சியில் பெண்கள் இருக்கின்றனர். இங்கிருக்கும் உள்துறை அமைச்சர் பெண் தான். காசியும் ஜைந்தியாவும் நிறைந்த மேகாலயாவில் காரோ முதல்வர் தான் உள்ளார். ‘சங்மா’ என்பது காரோ பெயர்.
குடும்பத்தின் அத்தனைச் சொத்துக்களும் வீட்டின் கடைசிப் பெண்ணிற்கு மட்டுமே. அவள் தான் குடும்பத்தின் பழைய சொத்துக்களையும் பெயரையும் பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் பெரும்பாண்மையான கடைசிப் பெண்கள் அந்த கிராமத்தை/நகரத்தை விட்டு வெளியில் வருவதில்லை. குடும்பத்தில் பெண் இல்லை என்றால் ஆணின் கடைசி தங்கைக்கோ தங்கையின் மகளுக்கோ அது சேரும்.
காசி மொழி வேறு ஜெயந்திய மொழி வேறு. இவை இரண்டிலும் இருந்து அடிப்படையாகவே காரோ மொழி வேறு. வடகிழக்குப் பழங்குடிகளில் காசியும் ஜைந்தியாவுமே முதலில் வந்தவர்கள். இது ஆதாரப்பூர்வமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் இருக்கும் தொன்மக் கதைகள் சில ஜப்பானிய தொன்மக் கதைகளுடன் அப்படியே ஒத்துப் போகின்றன. குறிப்பாக நிலா சூரியன் மேகம் மற்றும் மலைகளைப் பற்றியவை . தொன்மங்கள். இது வேறு இனத்திலும் இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை.
அழகியலும், கொண்டாட்டமும், இசையும் இன்ன பிற ஏற்ற தாழ்வுகளும் கொண்ட சமூகம். ஆனால் பெரும்பாலான எந்த ஒரு வடகிழக்கு இனக்குழுவிலும் பட்டினி என்பதே கிடையாது. அவர்களை அவரவரின் கிராமமோ குழுவோ பார்த்துக்கொள்ளும். அதற்கு மீறிய பொருளியல் சிக்கல்கள் இங்கு உள்ளன.
பொதுவாக வடகிழக்கைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள், எளிமையானவர்கள், விருந்தோம்பலில் சிறந்தவர் என்று கூறுவது இங்குள்ள யாருக்கும் பிடிப்பதன்று. என் தோழி ஒரு முறை ஒரு வெளி மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் ‘இங்கு மக்கள் அனைவர்களும் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு …’ என்று பேச ஆரம்பித்தபொழுது அவள் மிகவும் சினம் கொண்டாள். இங்குள்ளவர்களும் அனைவரைப்போலத் தான் என்று கூறுங்கள் என்று வாதிட்டாள். நல்ல விதமாக தனித்தவர்கள் என்று கூறுவதும் இவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது.
காசி இனத்தவர்கள் பெரும்பாலும் கிறித்தவத்திற்கு மாறியவர்கள். எனினும் பெரும்பான்மையானவர்களின் பெயர்கள் அவர்களின் மொழியில் தான் இருக்கின்றது. மேலும் ‘செங்காசி’ என்ற இவர்களுக்குள்ளான குழு இந்த மதமாற்றத்திற்கு எதிராக உள்ளது. பெரும் திருவிழாக்களை நடத்துவது மக்களை மாற விடாமல் பார்த்துக்கொள்வது என்று அதற்கான வேலையை செய்கிறார்கள். இவர்களை இந்துக்கள் என்ற விரிந்த போர்வைக்குள் அடக்க இயலாது. மிக செறிவான ஒரு சமூகம் இது. பழங்குடி என்று நம் மனதில் இருக்கும் பழங்குடி என்னத்திற்குள் இவர்களை அடைப்பது நியாயமன்று. ஆரம்பக் கல்வி மிகப் பரவலாக சென்றுள்ளது. அதற்கு கிறித்தவம் நிச்சியம் ஒரு முக்கியக் காரணம். நல்ல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி உள்ளது. கிறித்தவமும் இவர்களின் பழமையான பழக்கங்களும் சேர்ந்து ஒரு விதமான அழகிய கலவையை இவர்களுக்குக் கொடுத்துள்ளது.
இதை, நீங்கள் விரும்பும்பட்சத்தில், பலரும் வாசிக்கும் தங்கள் தளத்தில் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
ராம்குமார்