உப்புள்ளவரை…

ராய் மாக்ஸ்ஹாம் அவர்களின் உலகின் மிகப்பெரிய வேலி என்ற நூலை எனக்கு ஒரு நண்பர் அளித்தார். வழக்கம்போல ஒரு நாகர்கோயில் சென்னை ரயில்பயணத்தில் இதை வாசித்து முடித்தேன். நான் அன்று சென்னையின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப்பற்றிய செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தமையால் என் சிந்தனைகளை பெருமளவுக்கு கொந்தளிக்கச்செய்தது இந்நூல்

ஆகவே இதைப்பற்றி ஒரு நீளமான அறிமுகக்குறிப்பை என் இணையதளத்தில் எழுதினேன். நூலின் உள்ளடக்கம் மற்றும் அதன் மீதான என் கருத்துக்களை அதில் தொகுத்திருந்தேன். மிகப்பரவலாக வாசிக்கப்பட்டது அக்கட்டுரை. நம் நண்பர்கள் ராய் மாக்ஸ்ஹாமை லண்டனில் நேரில் சந்திக்கவும் இந்நூலின் மொழியாக்க உரிமையைப்பெறவும் அது காரணமாக ஆகியது.

அவ்வகையில் ராய் மாக்ஸ்ஹாம் அவர்களைத் தொடர்புகொண்ட லண்டன் நண்பர்கள் கிரிதரன் ராஜகோபாலன், சிவா கிருஷ்ணமூர்த்தி, முத்துக்கிருஷ்ணன் போன்றவர்கள் நன்றிக்குரியவர்கள். இதை உடனடியாக மொழியாக்கம் செய்த சிறில் அலெக்ஸ் மற்றும் வெளியிடும் வெ.அலெக்ஸ் இருவருக்கும் என் பாராட்டு

இந்நூலை நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அடிப்படைகளில்.

ஒன்று இது சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய கல்வித்துறை எந்த அளவுக்கு தேங்கிச்சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்திய வரலாற்றையே கட்டமைத்த ஒன்று இந்த உப்புவேலி. ஓர் உலக நிகழ்வென்றே சொல்லலாம். கோடிக்கணக்கானவர்களின் இறப்புக்குக் காரணமானது. ஆனால் ராய் இந்தியா வந்து இதைப்பற்றி விசாரித்தபோது எந்த இந்திய ஆய்வாளருக்கும் எதுவும் தெரியவில்லை. அவரே தேடிக் கண்டுபிடிக்கிறார்
4
இந்தியக் கல்வித்துறையின் முனைவர்களும் பேரறிஞர்களும் எத்தனை பெரிய பம்மாத்துக்கள் என பொட்டிலறைந்தாற்போல காட்டுகிறது இந்நூல். இந்திய அரசு உயர்கல்வித்துறைக்கு கோடிக்கணக்காக வரிப்பணத்தை அள்ளி வீசுகிறது. பல்லாயிரம் முனைவர்கள் இங்கே உலவுகிறார்கள். கருத்துச்சொல்கிறார்கள்

ஆனால் அவர்கள் எவரும் மூல ஆவணங்களை வாசிப்பவர்கள் அல்ல. ஏற்கனவே எழுதியவற்றைக்கொண்டு எதையாவது எழுதுபவர்கள் மட்டுமே. அந்த எழுத்துக்கள் ஆய்வல்ல, ஆய்வரசியல். அதற்கான நிதிக்கொடைகள் மற்றும் பல புறவழி உதவிகள் அவர்களுக்குண்டு. அதற்கப்பால் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. அவர்கள் பெரும்பாலும் வெறும் இதழாளர்கள், நகலெடுப்பாளர்கள், கருத்துப்பிரச்சாரகர்கள் மட்டுமே

இப்படி ஒரு நூல் எழுதப்பட்டிருப்பதே நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடம். நமது வரலாற்றில் நமது கண்முன் உள்ள ஒரு விஷயத்தை கண்டுசொல்ல ஓர் ஆய்வாளர் பிரிட்டனிலிருந்து வரவேண்டியிருக்கிறது. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே என்னதான் நடந்தது என்ற திகைப்பை நாம் அடைகிறோம்.
6
லட்சக்கணக்கான சம்பளமும் நிதிக்கொடைகளும் பெற்று பேராசிரியர்கள் தொழிலதிபர்கள் போல வாழப்பழகிவிட்டார்கள். அவர்களிடம் இனிமேல் களஆய்வைப்பற்றியெல்லாம் பேசிப்பயனில்லை.இங்குள்ள இங்குள்ள கல்விதுறையினரல்லாத ஆய்வாளர்கள்தான் இப்பணியை மேலெடுக்கவேண்டியிருக்கிறது. நாம் இதைப்போல இன்னும் பலவற்றை கண்டெடுக்கவேண்டியிருக்கலாம். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையட்டும்.

இரண்டாவதாக, இந்நூல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் நிர்வாக முறை பற்றி, அதன் சுரண்டலமைப்பு பற்றி, அதன் விளைவான பஞ்சங்கள் பற்றி மிகவிரிவான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. இன்றும் நம் உளவியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது இப்பெரும் பஞ்சங்களே.

சுதந்திரத்திற்குப்பின் நாம் மெல்லமெல்ல இப்பஞ்சங்களைப்பற்றிப் பேசுவதை விட்டுவிட்டோம். குறிப்பாகக் கல்வித்துறையினர். ஏனென்றால் அதைப்பற்றிப்பேசுவது மேலைநாட்டினருக்குப்பிடிக்காது என இங்குள்ளவர்கள் தாங்களே கற்பனை செய்துகொண்டார்கள். காரணம், அவர்களை மகிழ்வித்து ஏதேனும் பெற்றுக்கொள்வதற்காகவே இங்கே கல்வித்துறை ஆய்வுகள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன

ராய் அளிக்கும் கறாரான பஞ்சகால சித்தரிப்பும் அவர் அதற்கு அளிக்கும் அறிவியல்பூர்வமான காரணங்களும் மிகமிக முக்கியமானவை. ஆழமானவை. இன்றைய அரசியலைப் புரிந்துகொள்வதற்குக்கூட உதவியானவை. இந்திய அதிகாரிவர்க்கம் உருவாகி வந்த கதையையே உப்புவேலியின் உருவாக்கத்துடன் இணைத்து ராய் பேசுகிறார்

மூன்றாவதாக, இந்நூல் காந்தியைப்புரிந்துகொள்ள மிக உதவிகரமானது. காந்தியின் உப்புசத்தியாக்கிரகம் என்பது ஏன் உப்பை முதன்மைக்குறியீடாகக் கொண்டது என்பதற்கான விளக்கம் இந்நூலில் உள்ளது. வட இந்தியா முழுக்க ஏன் உப்பு புனிதமானதாக உள்ளது என இது காட்டுகிறது. நமக் ஹராம் என்ற ஒற்றைச் சொல்லில் இருந்து இந்நூலை நோக்கி பெரும் சமூகவியல் பயணம் ஒன்றைச் செய்ய முடியும்.
7
பிற இந்தியத்தலைவர்கள் இந்தியாவின் மேல்மட்டத்து அரசியலை மட்டுமே பேசியபோது காந்தி அடித்தள மக்களிடமிருந்து தன் கருத்துக்களையும் குறியீடுகளையும் பெற்றுக்கொண்டார் என இந்நூல் காட்டுகிறது. அவரது ஆற்றலின் ஊற்றென்ன என இதைக்கொண்டு நாம் அறியலாம்

தமிழுக்கு மிக முக்கியமான கொடை இந்நூல். எளிய பயணநூலின் வடிவில் எழுதப்பட்டுள்ளது இது. ஆனால் நமக்குள் ஒரு முற்றிலும் புதிய சிந்தனைப்போக்கை தொடங்கிவைக்கக்கூடும்

சென்ற காலங்களில் மிகச்சில சிந்தனையாளர்களுக்கு மட்டுமே சாத்தியமான தொடக்கம் இது. அவ்வகையில் எம்.என்.ராய், டி.டி.கோஸாம்பி, தரம் பால் ஆகியோரின் வரிசையில் ராயை வைக்க எனக்குத் தயக்கமில்லை

ஜெ

[ராய் மாக்ஸ்ஹாம் எழுதிய உப்புவேலி நூலின் மொழியாக்கத்திற்கான முன்னுரை]

உலகின் மிகப்பெரிய வேலி

முந்தைய கட்டுரைமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்