அகிலனின் ஒரு வாசகர்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது, முகநூலில் நான் நண்பராக இருக்கும் திரு.நிறை மதி அவர்கள் உங்களின் எழுத்துக்களைப் பற்றியும், திரு. அகிலன் அவர்களை நீங்கள் விமர்சித்ததாக சில பதிவுகளையும் இட்டுள்ளார். இது சரியானதுதானா? அகிலனின் எழுத்துகள் நவீன வாசகனுக்கு, வாசிக்க உகந்ததல்லவா?

மேலும், விஷ்ணுபுரம் பற்றியும் விமர்சனம் செய்துள்ளார், இதற்க்கு தங்களது மேலான பதிலை எதிர்பார்கிறேன்.

*

அகிலன்

இன்று இன்னொரு நல்ல எழுத்தாளர் பற்றி. தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் இவர்தான் முதன்முதலில் ஞான பீட விருது வாங்கியவர். (அதற்கடுத்து வாங்கியவர் ஜெயகாந்தன்.) பரிசு கிடைத்தது சித்திரப் பாவை என்ற இவரின் நூலுக்கு.

“அகிலன், காங்கிரஸ்காரர் என்பதால் இந்த பாரதீய ஞானபீட விருது அவருக்கு கிடைத்தது. ஒரு டெம்ப்ளேட் கதையில்கூட ஆசிரியனின் தரிசனம் இலக்கியத்தை உருவாக்கிவிடமுடியும். அங்கே (தகழியின் செம்மீனில்) புறவய யதார்த்தம் இல்லை. ஆனால் ஆசிரியன் உருவாக்கும் தரிசன யதார்த்தம் உள்ளது. சித்திரப்பாவையில் இவை இரண்டுமே இல்லை.

ஆகவே அதில் புதுமையை எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. சொல்லிச்சொல்லிப் பழகிய கதை. சொல்லித்தேய்ந்த களம். வார்ப்புரு கதாபாத்திரங்கள். வழக்கமான கதைத்திருப்பங்கள். வழக்கமான வசனங்கள். வழக்கமான முடிவு.

சித்திரப்பாவையின் உரைநடையைப் பரிதாபம் என்றே சொல்லவேண்டும்”

இது ஞான பீட விருது பெற்ற ஆசிரியருக்கு அவரது நூலுக்கு ஒரு இலக்கிய கர்த்தா வாசித்த பாராட்டுப் பத்திரம் / விமர்சனம்.
அந்த இலக்கிய கர்த்தா யார்?

ஜெயமோகன்.

இவரின் எழுத்துக்கள் மட்டும் காவியம்

மனிதர்கள் மனிதர்களாகத்தானே இருப்பார்கள் Mr.ஜெய மோகன். அவர்கள் வாய் வழியாகத்தானே உணவு உட்கொள்வார்கள். அவர்கள் எல்லோரையும் போல மணம் புரிந்து குழந்தை பெற்றுத்தானே இன
விருத்தி செய்வார்கள்……வித்தியாசமான பாத்திரப் படைப்பு என்றால் எப்படி இருக்க்க வேண்டுமோ?

சித்திரப்பாவை தொடர்கதையாக வந்த நாவல். ஆகவே அந்தக் கதை எட்டாம்கிளாஸ் பாஸ் பண்ணின வீட்டில் இருக்கும் வாராந்தரி வாசிக்கும் பெண்களுக்காக அவர்களின் ஸ்டாண்டர்டில் எழுதப்பட்ட கதையாம், இந்த எழுத்து சித்தர் சொல்கிறார். இவரென்ன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் பீஷ்ம பிதாமகரா என்ன?

சீரியலுக்கு வசனம் எழுதிக் காசு பார்க்கும் ஒரு எழுத்தாளர் இன்னொரு படைப்பாளியைப் பற்றி இவ்வளவு நாகரிகமாக எழுதுகிறார் என்றால் இவர் படைத்த காவியம் தான் என்ன? “விஷ்ணு புரம் என்ற இவரின் நாவல் ஒன்றை வாசிக்க எடுத்து வந்தேன். ஒரு வால்யூம் படிக்க 1 மாதம் ஆயிற்று. அந்த மூன்று வால்யூம்களை நான் படிக்க எடுத்துக்கொண்ட மொத்த நாட்கள் 65. என் வாழ் நாளிலேயே ஒரு கதையை வாசிக்க எடுத்துக்கொண்ட அதிக பட்ச நாட்கள் இதுதான்.

இந்த இடத்தில் இன்னொன்று சொல்லிக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. 2450 பக்கங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் வாசிக்க நான் எடுத்துக்கொண்டது 6 நாட்கள். 1010 பக்கங்கள் கொண்ட Gone with the Wind வாசிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் 6. 1070-1080 பக்கங்கள் கொண்ட Atlas Shrugged வாசிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் 8.

ஜெமோவின் கதையை பீர்பலின் குதிரையைப்போல பின்னாலிருந்து பத்துப் பேர் தள்ள வேண்டி இருந்தது. முன்னால் இருந்து பத்துப்பேர் இழுக்க வேண்டியிருந்தது. எனக்குத் தூங்க வேண்டும் போலிருந்தால் அந்த 65 நாட்களும் விஷ்ணு புரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். கதையில் பல இடங்களில் தனது பாண்டித்யத்தையும், தான் எவ்வளவு விஷயங்களைப் படித்து ஆராய்ச்சி செய்து இதை எழுதியிருக்கிறேன் என்றும் படம் காட்டவே இவர் அதிகம் முயற்சி செய்திருக்கிறார்.

‘புறவய யதார்த்தம்’, ‘தரிசன யதார்த்தம்’ ‘வார்ப்புரு கதாபாத்திரங்கள்’ போன்ற சொற்பிரயோகங்களினால் தங்களின் மேதாவிலாசம் காட்டி தம்மை மேதைகள் என்று இவர்களே கட்டம் கட்டி வாசகர்களிடம் இருந்து தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த கதை காவியம் மஹாபாரதம். ஆனால் (Sun TVயில் ) இவரின் வசனங்களைக் கேட்கும் போது நாம் மஹாபாரதம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகமே வருகிறது. Such a drab. இவர்களெல்லாம் தங்களைப் பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டு தங்களின் தலைக்குப் பின்னால் இவர்களாகவே ஒரு ஒளி வட்டத்தைக் (halo) கற்பனை செய்து கொண்டு விடுகிறார்கள். வேடிக்கை மனிதர்கள்.

ஆக ஞானப் பீடப்பரிசை முடிவு செய்தவர்கள் எல்லாம் மாங்காய்களா?
நான் தலைப்பைத்தாண்டி வெகு தூரம் போய் விட்டேன்.இப்போது ஜெய மோகனைக் காய்ச்சி ஊற்றுவதை விடுத்து அகிலனைப் பற்றிய எழுத்தைத் தொடர்கிறேன்.

அகிலனின் நாவல்களும் சிறுகதைகளும் இங்கிலீஷ் ஜெர்மன் செக் ரஷ்யன், சீன, மலாய் (English, German, Czech, Russian, Polish, Chinese, and Malay) மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.அவர் எழுதிய நாவல்களில் நான்வாசித்தவற்றை அட்டவணை இடுகின்றேன்.

1.சித்திரப் பாவை
2.பாவை விளக்கு
3.பெண்
4.சினேகிதி
5.நெஞ்சின் அலைகள்
6.பால் மரக் காட்டினிலே
7. வேங்கையின் மைந்தன்
8.கயல்விழி
9.தங்க நகரம்
10.ஒரு சிறுகதைத் தொகுதி (பெயர் நினைவில்லை)

அகிலன் அவர்கள் ஒன்றும் காவியம் படைக்கவில்லை. நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். மற்றவர்களைப் போல பம்மாத்துப் பண்ணத் தெரியவில்லை அகிலாண்டம் சாருக்கு.

அவர் எழுதிய வற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை அவரின் பாவை விளக்கு, வேங்கையின் மைந்தன்,கயல்விழி, அப்புறம் சித்திரப்பாவை. அவரின் குழந்தைகளுக்கான தங்க நகரமும் பிடிக்கும்.
இவரெலாம் கமர்சியல் எழுத்தாளராம். இந்த ஜெ மோ வகையறா எல்லாம் பெரிய அறிவு ஜீவிகளாம். எங்களுக்கு அறிவு ஜீவிகளுக்கு அம்மாவுக்கு அம்மாவான Ayn Rand ஐயும் தெரியும் அவங்க அம்மாவையும் தெரியும். அகிலன் அவர்கள் எழுதியதை இன்றும் வாசிக்க முடியும் ரசிக்கமுடியும் உங்களுடைய எழுத்துக்களை அவ்வளவு கூர்ந்து படித்துப்புரிந்துகொள்ள அவை என்ன வேதங்களா Mr.ஜெயமோகன்?

*

நன்றி

கோவிந்தராஜ் ராமதாஸ்
மஸ்கட், ஓமன்

அன்புள்ள கோவிந்தராஜ் ராமதாஸ்

திரு நிறைமதி அவர்களுக்கு 60 வயது கடந்திருக்கும் என நினைக்கிறேன். இனிமேல் அவரை தொந்தரவு செய்து என்ன பயன்? அவருடைய பி.எப்,பென்ஷன் கேஸ், ஷுகர் மூட்டுவலி பிரச்சினைகள் கட்டுக்கடங்கி இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்

ஒருவேளை இளைஞர் என்றால் இனி அவரை மாற்ற பெந்தேகொஸ்தே பாதிரிமார்களால் கூட முடியாது.

இரண்டு செய்திகள்.

ஒன்று நான் எந்த டிவி சீரியலுக்கும் வசனம் எழுதவில்லை. சீரியலுக்கு வசனம் எழுதுவது தவறும் அல்ல. நாவலுக்கு வசனம் எழுதுவதுதான் தவறு. [நான் அகிலனை குறிப்பிடவில்லை]

இரண்டு, திருவாளர் நிறைமதி ஏன் குறைப்பட்டுக்கொள்கிறார் என்று புரியவில்லை. ஒரு செருப்பு வாங்கினாலோ சட்டை வாங்கினாலோ அதிகநாள் உழைத்தால்தானே மதிப்பு? பொன்னியின் செல்வனை விட விஷ்ணுபுரம் நின்று உழைக்கக்கூடியது என்றால் கொடுத்த காசுக்கு மதிப்புதானே?. நண்பர் கோணங்கியின் நூல்களை அவருக்குப் பரிந்துரைக்கிறேன். எஞ்சிய வாழ்நாள் முழுக்க நின்று ஏன் என்று கேட்கும்

வேறென்ன?

ஜெ

முந்தைய கட்டுரைவாசகர்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)