இரு காந்திகள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை.

கீழத்தஞ்சைப்பகுதியின் இய்ற்கை அமைப்பு தனித்தன்மை கொண்டது. கடலை ஓட்டிய வரை வயல்வெளிகள். கடலோரமாக ஆற்றுவண்டலால் உருவாகும் சதுப்புநிலமே கடலின் உப்புநீர் வயல்வெளிக்குள் ஊறிவராமல் தடுக்கிறது. இந்த சதுப்புநிலம் ஒரு வீண்நிலம் அல்ல. ஒருவகையான இயற்கைக் கோட்டை. இதை அழித்துவிட்டு இங்கே இறால் பண்ணைகள் கொண்டுவருவதே திட்டம்.

இதன்படி இச்சதுப்புநிலங்கள் நிண்டகாலக் குத்தைகைக்கு இறால்முதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதை ஒட்டிய வயல்பரப்புகளையும் அவர்கள் விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். இங்கே உப்பளம்போல பெரிய பாத்தி கட்டி அங்கே கடலின் உப்புநீரை தேக்கி அதில் இறால்களை வளர்த்தார்கள். உப்பு நீர் ஊறி அதற்குப்பின்னால் உள்ள வயல்வெளிகளின் மண்ணை முழுக்க உப்பாக்கியது.

இதற்கெதிராக தன்னிச்சையான விவசாயிகள் எதிர்ப்பு உருவாகியது. இறால் பண்ணைகளின் முதலாளிகள் அரசியல்வாதிகள் என்பதனால் அனேகமாக எந்த அரசியல் கட்சியும் அப்போராட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை. இந்தியக்கம்யூனிஸ்டுக்கட்சியின் ஆதரவு இருந்தாலும் அது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில் இடதுசாரி தீவிர இயக்கங்கள் உள்ளே புகுந்தன. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஊக்கமெடுக்காததன் இடைவெளியை பயன்படுத்துவதே அவர்களின் நோக்கம். தமிழகம் முழுக்க ‘இறால் பண்ணை அழிப்பு போராட்டம்’ என்று ஆளுயரத்திற்கு எழுதிப்போட்டார்கள். கூடவே பாராளுமன்றன் பன்றிகளின் தொழுவம், இந்தியதேசியம் ஒரு மாமாவேலை போன்ற வசைகள். தனித்தமிழ்நாடுக்கோரிக்கையையும் இறால்பண்ணை ஒழிப்பையும் இணைத்துக்கூட துண்டுபிரசுரங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெரிய வன்முறை வெடிக்கும் என்ற எண்ணம் சுவரெழுத்துக்கள் மூலம் உருவாக்கபப்ட்டது.

திருவாரூரில் அவர்கள் நடத்திய இறால்பண்ணை அழிப்பு போராட்ட நாளில் நான் அங்கே இருந்தேன். பதினேடு பேர் பேருந்து நிலையம் அருகில் இருந்து கிளம்பினார்கள். பல இடங்களிலும் தேடியபின் யாரோ கொண்டுவைத்திருந்த ஒரு மண்வெட்டியை ஒருவர் கையில் வாங்கிக்கொண்டார். கிளம்பி கோஷங்கள் போட்டபடி நடந்தார்கள். இந்தியாவே தமிழகத்துக்கு விடுதலைகொடு, காசுமீரத்தை நசுக்காதே, போன்ற பல கோஷங்கள் நடுவே இறால் பண்ணை பற்றியும் ஒலித்தது. இருநூறடி தூரத்துக்குள் அவர்களை போலீஸ் கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு போலீஸ் இறால் பண்ணைகளுக்கு கடுமையான காவல் போட்டதுடன் அதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை நக்சலைட் முத்திரை குத்தி கடுமையாக ஒடுக்கவும் ஆரம்பித்தது. இறால்பண்ணை எதிர்புப் போராட்டம் நின்றது. இடதுசாரி தீவிர இயக்கங்கள் தமிழிசை கோரி இசை எதிர்ப்புப் போராட்டத்துக்கு சுடச்சுட நகர்ந்தார்கள்.

இந்நிலையில்தான் சர்வோதயத் தலைவரான ஜெகன்னாதனையும் கிருஷ்ணம்மாளையும் கண்டு விவசாயிகள் தங்களுக்கு உதவும்படி அழைத்தார்கள். ஜெகன்னாதன் அவர்களிடம் தன்னுடைய போராட்டத்தால் அவர்களுக்கு இழப்பு ஏதும் இருக்காது, ஆனால் பலன் பெற சற்றே தாமதமாகும் என்றார். அதுவரை கட்சி பேதம் இல்லாமல் மனம் சோர்வுறாமல் கூடவே நிற்க வேண்டும், முடியுமா என்றார். விவசாயிகளுக்கு வேறு வழியே இல்லை.

 

முதலில் கிராமம் கிராமமாகச் சென்று கூலித்தொழிலாளர்கள் பெண்கள் போன்றவர்களை திரட்டி அவர்களிடம் விஷயத்தை விளக்கினார் ஜெகன்னாதன். உண்மையில் அதை அன்றுவரை எவருமே செய்யவில்லை. போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருமே, குழந்தைகள் உட்பட, கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அம்மக்களின் ஆயிரம் பிரச்சினைகளை அவர் பஞ்சாயத்து செய்து தீர்க்க வேண்டியிருந்தது.

அதன் பின் ஒட்டுமொத்தக் கோரிக்கைகளை உருவாக்கி அரசுக்கு அனுப்பினார். எல்லா அதிகார வாசல்களையும் முறைப்படி தட்டினார். கோரிக்கைகளுக்கு அரசும் அதிகார வற்கமும் குறைந்தபட்ச வாக்குறுதிகளையாவது அளிக்க வேண்டியிருந்தது. இந்திய ஜனநாயகம் அளித்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது அவரது வழிமுறை. தங்களுக்கு ஆதரவான எல்லா சக்திகளையும் கூடவே சேர்த்துக் கொண்டார். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுக்கட்சி அவருக்கு உறுதுணையாக இருந்தது. ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ச்சியாக செய்திகள் வரச்செய்தார். உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அன்று நாடெங்கும் நடந்துவந்த சூழியல் போராட்டங்களுடன் தன் போராட்டத்தையும் இணைத்து அதற்கு ஒரு தேசிய முக்கியத்துவத்தை உருவாக்கினார். தஞ்சைக்கு வந்தனா சிவா, மேதாபட்கர், சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் வந்தார்கள். அதன் பின் முன்னைப்போல ஒரு மாவட்டப்போலீஸ் அதிகாரியோ ஆட்சியரோ அவரது விருப்பப்படி தீர்மானிக்கும் விஷயமாக அது இருக்கவில்லை

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை நிகழ்த்தினார் ஜெகன்னாதன். ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்கக் கூடிய முற்றிலும் வன்முறை இல்லாத போராட்டங்கள் அவை. அவற்றுக்கு வன்முறை முத்திரை குத்த அரசோ முதலாளிகளோ முடியாதவாறு பார்த்துக் கொண்டார். போராட்டம், பேச்சுவார்த்தை, வாக்குறுதிகளைப் பெறுதல், பெற்ற வாக்குறுதிகளுக்கு மேல் மீண்டும் போராட்டம் என்று விடாப்பிடியாக நிகழ்வது இப்போராட்டம்.

ஜெகன்னாதன் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996ல் இறால்பண்ணைகளுக்கு தடை விதித்தது. அந்த தீர்ப்பை விளக்கும் கூட்டத்துக்கு சென்னையில் நான் சென்றிருந்தேன். சுந்தர்லால் பகுகுணாவை அங்குதான் சந்தித்தேன். அந்தக் கூட்டம் பற்றி தினமணியில் ஒரு குறிப்பும் எழுதினேன். சுந்தர்லால் பகுகுணாவுடன் ஒரு பேட்டி எடுத்தேன். ஆனால் அதை எந்த இதழும் அப்போது பிரசுரிக்கவில்லை. ஒரு வார இதழ் சிறிய குறிப்பாக மாற்றி அச்சிட்டது, அவ்வளவுதான்.

வழக்கை அமுல்படுத்தக்கோரி மீண்டும் போராட்டம் நடத்தினார் ஜெகன்னாதன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்தார். அதற்குள் புதிய இறால்பண்ணைகளுக்கான பெரும் திட்டங்கள் கைவிடப்பட்டன. முதலீடுகள் செய்தவர்கள் வேறுவழியில்லாமல் சட்டத்தை பயன்படுத்தி போராடிக் கொண்டிருந்தாலும் இறால்பண்ணைகள் அனேகமாக நின்றுவிட்டன.

ஜனநாயகத்தில் எந்த ஒரு போராட்டமும் ஒரு சமரசம் மூலமே முடிய முடியும்.அந்த சமரசத்தின் விளைவு போராடுபவர்களுக்கு பெருமளவுக்குச் சாதகமாக இருந்தால் அதுவெ வெற்றி. தஞ்சைப்பகுதி விவசாயிகள் இன்றும் நினைவுகூரும் ஒரு போராட்டம் அது என சென்ற வருடம் திருவாரூர் சென்றபோது உணர்ந்தேன்.

இந்தப் போராட்டகாலத்தில் நான் ஜெகன்னாதனைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் திருத்துறைப்பூண்டி அருகே ஓரு சிற்றூரில் தங்கியிருந்தார். அப்போதே மூப்பின் தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். கிருஷ்ணம்மாள் என்னிடம் சுருக்கமாகப் பேசினார். ‘போராட்டம்னு போயி அந்த ஜனங்கள் கையில வச்சிருக்கிறதை தொலைக்க விடப்பிடாதில்லியா? அவங்களுக்கு நெலம் வேணும். வெள்ளாமை செய்யணும். அதுக்குண்டானதை செய்ய வேண்டியதுதான்’

காந்தியப்போராட்டத்தின் மூன்று அடிப்படைகளைச் சுருக்கமான சொற்களில் கிருஷ்ணம்மாள் சொன்னார். ஒன்று ”நம்ம மறுதரப்புக்கும் அவனுக்கான நியாயங்களும் வாழ்க்கையும் எல்லாம் உண்டு. அவன் அழிஞ்சு நாம வாழவேண்டாம். நம்மளை அவன் அழிக்கவும் வேண்டாம். அவனுக்கு என்ன சொல்ல இருக்குன்னு கேப்போம்…”

இரண்டு, ”காந்தியப்போராட்டம்னா பிடிவாதமா தொடர்ச்சியா போராடிக்கிட்டே இருக்கிறது. போராட்டம் பின்னாடிப்போறதுன்னா அப்ப நிப்பாட்டிக்கிடறது. பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பம் கெடைச்சாலும் அதை விடுறதில்லை.பேச்சுவார்த்தையும் போராட்டம்தாங்க”

மூன்று”சட்டபூர்வமாத்தாங்க எல்லாத்தையும் செய்யணும். அப்பதான் பேசுறதுக்கு எடம் இருக்கும். ஒரு சட்டத்தை எதுக்கறதா இருந்தா அதுகுண்டான காரணங்களை சொல்லிட்டு திட்டவட்டமா எதுக்கணும். அதையும் சட்டபூர்வமா செய்யலாம். சட்டத்தை மீறணுமானா அதையும் ஒரு மக்கள் போராட்டமாத்தான் செய்யணும்”

கிருஷ்ணம்மாள் சற்று கறாரான பேச்சும் கடுமையான சொற்களும் கொண்டவராக இருந்தார். ஜெகன்னாதனின் உடல்நிலை சார்ந்து அதிகமான கவனம் எடுத்துகொண்டார். அவரை பத்து நிமிடங்களுக்கு மேலாகப் பேசவிடவில்லை. என்னையும் அரைமணிநேரத்தில் கிளப்பிவிட்டுவிட்டார். ஜெகன்னாதனுக்கு இறைநம்பிக்கை இருந்ததா என்று ஊகிக்க முடியவில்லை. கிருஷ்ணம்மாள் அடிக்கடி கடவுளைப்பற்றிச் சொன்னார். ஏராளமானவர்களிடம் தினமும் பேசிபெபெசி மிக தேவையான விஷயங்களை மட்டும் ரத்தினச்சுருக்கமாக பேசி அடுத்த ஆளை நோக்கி சென்றுவிடும் வழக்கம் இருந்தது.

கிருஷ்ணம்மாளுக்கு அப்போதே கைகளும் தலையும் சற்று நடுங்க ஆரம்பித்திருந்தன. ஜெகன்னாதனுக்கு மறதியும் இருந்தது. அந்த முதிய தம்பதிகள் அதிகம் பேசிக்கொள்ளாமல் ஒருவரோடொருவர் காட்டிய பிரியமும் அக்கறையும் — அதை அவர்கள் இயல்பாக ஒருவருக்கொருவர் ஒத்திசைவுகொண்டு வாழ்ந்த முறை என்று சொல்லலாம் — என்னை மிகவும் நெகிழச்செய்தன. அவர்களின் மிக எளிமையான அன்றாட வாழ்க்கை காந்திக்கு உகக்கும் விதமாகவே இருந்தது. காந்தியத்தின் சமகால முக்கியத்துவத்தை நான் அறிந்தது அப்போராட்டங்கள் மூலமே.

கிருஷ்ணம்மாளுக்கு இப்போது 82 வயது. [1926] மாற்று நோபல் என்று அழைக்கப்படும் வாழ்வாதார உரிமைக்காப்பு விருது அவருக்கு இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாளை அவரது பெற்றோர் 10 வயதில் காந்தியவாதியும் சர்வோதய தலைவருமான சௌந்தரம் ராமச்சந்திரனிடம் கொண்டுசென்று விட்டுவிட்டார்கள். அவர் காந்திய இயக்கங்களிலேயே வாழ்ந்தவர். காந்தி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டவர். காந்தியுடன் ஒரே கூட்டமேடையில் அமர்ந்து பேசியவர்.

1950ல் சர்வோதய இயக்க போராளியான ஜெகன்னாதனை கிருஷ்ணம்மாள் திருமணம் செய்துகொண்டார். நிலமில்லா விவசாயிகளுக்காகப் போராடுவதகாக ‘காந்தி அமைதி நிலையம்’ என்ற அமைப்பை 1969ல் அவர்கள் இருவரும் சேர்ந்து அமைத்தார்கள். அவர்களுக்கு உபரி நிலங்களைப் பெற்றுத்தருவதற்கான இயக்கமாக LAFTI [Land For The Tillers Freedom] என்ற அமைப்பை 1981 ல் ஆரம்பித்தார்கள். ஆக்ரமிப்பில் இருந்த பல ஆயிரம் பொது நிலங்களைக் கண்டடைந்து சட்டபூர்வமாகப் போராடி நிலமில்லா விவசாயிகளுக்குப் பெற்றுத்தந்திதிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13000 ஏக்கர்.

 

சங்கரலிங்கம் ஜெகன்னாதனுக்கு இப்போது 95 வயது. நினைவாற்றல் பெரும்பாலும் இழந்த நிலையில் உள்ளது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த ஜெகன்னாதன் 1930ல் காந்தியின் அறைகூவலை ஏற்று படிப்பை உதறி சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.உப்பு காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைசென்று சுதந்திரம் கிடைப்பதுவரை சிறையில் இருந்தார். சுதந்திரம் கிடைத்தபின்னரே திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணம் இருந்தமையால் 1950ல் பூதான் இயக்கத்தில் இருந்த கிருஷ்ணம்மாளை மணம் புரிந்துகொண்டார். வினோபா பாவேயின் பூதான் இயக்கத்திலும் பின்னர் சர்வோதய இயக்கத்திலும் தொடர்ந்து எழுபதாண்டுகளாக சமூகப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

சோலை எழுதிய ‘புரட்சியில் பூத்த மலர்கள்’ என்ற வாழ்க்கை வரலாறு ஜெகன்னாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியின் சலியாத போராட்ட வாழ்க்கையைப்பற்றிய சிறந்த ஆவணம்.  1987ல் சுவாமி பிரணவானந்தா விருது, 1988ல் ஜம்னாலால் பஜாஜ் விருது, 1989ல் பத்மஸ்ரீ விருது, 1999ல் சுவிட்சர்லாந்து காந்தி அமைதிவிருது ஆகியவற்றை இத்தம்பதியினர் பெற்றுளனர். வாஷிங்டன் சியாட்டில் பல்கலை ஓபஸ் விருது அறிவித்திருக்கிறது. கடைசியாக ஸ்வீடனின் பெருமைக்குரிய விருது. [Rightlivelihood Award] சோமாலிய சமூகப்பணியாளர் ஆஷா ஹாகி, அமெரிக்கச் செய்தியாளர் அமி, ஜெர்மனிய டாக்டர் மோனிகா ஆகியோருக்கு இவருடன் சேர்ந்து பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

எல்லா விருதுகளையும் தங்கள் சேவையிலேயே செலவிட்டிருக்கிறார்கள் இத்தம்பதியினர். மாற்று நோபல் பரிசு கிட்டத்தட்ட 34 லட்ச ரூபாய் அடங்கியது. அதைக்கொண்டு ஒரு இலவச வீடுகட்டும் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கிருஷ்ணம்மாள்.

என்ன காரணத்தால் காந்தி புத்தர் ஏசு வரிசைக்கு வைக்கப்படுகிறார்? என்னிடம் மறைந்த சிற்பி லாரி பேக்கர் சொன்னார் ‘புத்தர் நிறைய புத்தர்களை உருவாக்கினார். ஏசு பல்லாயிரம் ஏசுக்களை உருவாக்கினார். காந்தி ஏராளமான காந்திகளை உருவாக்கியிருக்கிறார்’ . லாரி பேக்கர் கூட காந்தி உருவாக்கிய ஒரு காந்திதான்.

நம் கண்முன் வாழும் இரு காந்திகள். காந்திக்கு மரணம் இல்லை.

***

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 23, 2008

***

links:
http://www.rightlivelihood.org/jagannathan_pictures.html
http://www.rightlivelihood.org/jagannathan.html

***

முந்தைய கட்டுரைதாயார்பாதம்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19