அரவிந்த் கேஜரிவால் மீதான நம்பிக்கையை நான் சற்றே இழந்தேன் என்று தான் சொல்லவேண்டும். அவர் டெல்லி ஆட்சியைக் கைவிட்டதும் சரி அதன்பின்னர் தேசிய அளவில் போட்டியிட்டதும் சரி அரசியல் அபத்தங்கள் என்றே எண்ணினேன்.
ஆனால் அவர் மீதான மதிப்பைக் கைவிடவில்லை. பாராளுமன்ற தேர்தலில்கூட நான் அரவிந்த் கேஜரிவாலின் கட்சியை மட்டுமே ஆதரித்தேன்.
இன்று கேஜரிவால் மீண்டெழுந்திருக்கிறார். இது பலவகையிலும் ஒரு வரலாற்று வெற்றி. சமீபத்தில் இந்த வெற்றிச்செய்தி பெரிய உவகையை அளித்தது
கேஜரிவாலின் வெற்றியை மூன்று கோணங்களில் அணுகுகிறேன். இந்திய அரசியலில் ஒரு சாமானியன் அவனுக்கு தீவிரம் மட்டும் இருந்தால் ஓர் அரசியல் சக்தியாக எழமுடியும் என்பதை கேஜரிவாலின் வெற்றி காட்டுகிறது.
இங்கே அரசியலில் எழுந்து வந்தவர்கள் பெரும்பாலும் வாரிசுகள்- ராஜீவ்காந்தி போல. அல்லது விசுவாசிகள் – நரசிம்மராவ் போல. அல்லது ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்து அதன் ஏணியில் ஏறியவர்கள்- மோடி போல. அல்லது வேறு துறையின் புகழுடன் அரசியலுக்கு வந்தவகள் – என்.டி.ராமராவ் போல
கேஜரிவால் தன் சொந்த அடையாளத்துடன் , முழுக்க முழுக்க அரசியல் வழியாகவே எழுந்து வந்திருக்கிறார். சுயமாக ஒரு கட்சியை உருவாக்கி வென்றிருக்கிறார். இந்த வெற்றி அவ்வகையில் ஒரு புதிய தொடக்கம். இந்தியாவெங்கும் இதைப்போல சாமானியர்களின் கட்சிகள் உருவாகுமென்றால் நம் அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழலாம்
இரண்டு,ஆம் ஆத்மி இந்தியாவில் எந்த சித்தாந்தத்தையும் விட ஊழல் ஒழிப்பு என்பதையே முதன்மைக்கொள்கையாகக் கொன்டு உருவாகி வந்த ஒரு கட்சி. இன்றைய இந்தியாவின் தலையாய சிக்கலே ஊழல்தான். அனைத்து தளங்களிலும் ஊழலே சீரழிவை திறமையின்மையை தேக்கத்தை உருவாக்கியிருக்கிறது
கேஜரிவாலின் வெற்றி இந்தியாவெங்கும் ஊழலுக்கு எதிரான உணர்வை உருவாக்குமெனில் அதுவும் ஒரு பெரிய தொடக்கம். ஊழலே முதன்மை பிரச்சினையாக வரும்காலத்தில் தேர்தல்களில் பேசப்படவேண்டும். ஊழலற்றவர்கள் மக்களாதரவு பெற அது வழிவகுக்குமென்றால் எல்லா கட்சிகளிலுமே மாற்றம் நிகழக்கூடும்
மூன்றாவதாக, மேலும் மேலும் பிரம்மாண்டமானதாக ஆகிக்கொண்டே செல்லும் நம் கார்ப்பரேட் அரசியல் -கார்ப்பரேட் தேர்தலுக்கு எதிரான ஒரு அமைப்பாக இன்று ஆம் ஆத்மி உள்ளது. அதன் எளிய தெருமுனை அரசியலே இந்தியச்சூழலில் உகந்தது. கோடிகளை விட மக்கள் செல்வாக்கு ஆற்றல்கொண்டது என அது நிரூபித்திருக்கிறது
ஆகவே ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறேன். இந்திய ஜனநாயகத்தின் ஆற்றலையும் தகுதியையும் இவ்வெற்றி காட்டுகிறது.
கேஜரிவால் சென்ற காலகட்டங்களில் செய்த பிழைகளை தவிர்த்திருக்கிறார். மதவாதிகளின் ஆதரவை நிராகரித்தமை அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது. அந்த நிதானம் ஆட்சியிலும் காட்டப்படவேண்டும்.
கேரளத்தில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நேர்மையான அரசியல்வாதி அவரது எதிரியாகவும் ஒரு நேர்மையாளரையே அடைகிறார். கேஜரிவால் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்திய அரசியலில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை ஒரு பெரும் அரசியல் விசை என்பதை நிறுவியிருக்கிறார்