பகுதி 8 : நச்சு முள் – 2
அரசு சூழ்தல் கூட்டங்களில் எப்போதும் நிகழும் ஒன்றை பூரிசிரவஸ் கூர்ந்தறிந்திருந்தான். அங்கே ஒவ்வொரு கருத்தும் மறுக்கப்படும், ஐயப்படப்படும். சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்றென பிறந்து நீண்டுசெல்லும். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் அதுவே முடிவென அனைவருக்கும் தெரிந்துவிடும். அதன் பின் சொல்லெழுவதில்லை. அந்த முழுமைப்புள்ளியை அனைவரும் முன்னரே அறிந்திருந்தார்கள் என அப்போது தோன்றும். அதுவரை பொருளின்றி அலைபாய்ந்த கருத்தாடல் அந்தப் புள்ளியால் முழுமையாகவே தொகுக்கப்பட்டிருப்பதாக, அதைநோக்கியே வந்துகொண்டிருந்ததாக அதன்பின் தோன்றும்.
அத்தகைய புள்ளி துரியோதனனின் சொற்களில் நிகழ்ந்தது. அதன் பின் அனைவரும் சொல்லின்மையை அடைந்தனர். கர்ணனின் உடலில் இருந்து தெய்வமொன்று நீங்கிச்சென்றதைப்போல ஒரு தளர்வு குடியேறியது. சகுனியும் மெல்ல அசைந்தார். அதுவரை கேளாதிருந்த சூழலின் ஒலிகள் கேட்கத்தொடங்கின. எங்கோ எவரோ ஆணையிட்டனர். ஒரு கதவு காற்றில் அசைந்தது. குதிரை ஒன்று முற்றத்தில் கனைத்தது.
துரியோதனன் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டு பெருமூச்சுவிட்டான். பின்னர் பெரிய கைகளை கைப்பிடிமேல் வைத்துக்கொண்டு அமர்ந்து இயல்பாக ஆனான். அவன் உடலில் இருந்த இருபக்க நிகர்த்தன்மையை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். துரியோதனன் உடல் மிக இறுக்கமானதாக இருப்பதாக தோன்றிக்கொண்டே இருந்தது. உண்மையில் அவனை முதல்முறையாக துருபதன் அவையில் பார்த்தபோதே தோன்றிய எண்ணம்தான் அது. இவர் ஏன் இத்தனை கல்லாக இருக்கிறார் என்றே அப்போது எண்ணிக்கொண்டான்.
பின்னர் கூர்ந்தபோது அவன் தசைகள் அத்தனை இறுக்கமானவை அல்ல என்று தெரிந்தது. அவன் படைக்கலப்பயிற்சியை கைவிட்டு பலவருடங்களாகியிருக்கவேண்டும். தோள்களும் கைகளும் மிகப்பெரியதாக பாறையில் ஓடிய மாணைக்கொடி போல தடித்த நரம்புகளால் பிணைக்கப்பட்டதாக இருந்தபோதிலும்கூட உடல் எடைமிகுந்து வயிறு பருத்திருந்தது. அப்படியானால் ஏன் அவன் இறுக்கமாகத் தெரிகிறான் என எண்ணிக்கொண்டான். திரௌபதியின் மணவரங்கில் அத்தனை அரசர்களுக்கு நடுவிலும் அவன் தனித்துத் தெரிந்ததே அதனால்தான். அதை அவளும் எப்படியோ உணர்ந்திருந்தாள் என்பது அவன் வில்லெடுக்கச் செல்லும்போது அவள் உடலில் தெரிந்தது.
துரியோதனன் தன் கைகளை இருக்கையின் கைப்பிடிமேல் வைத்த அசைவு அவன் அகத்தை உலுக்கி அனைத்தையும் தெளிவாக்கியது. அவன் இரு கைகளும் முற்றிலும் ஒன்றைப்போல் பிறிதிருந்தன. அவற்றின் அசைவுகளும் முற்றிலும் நிகர்த்திருந்தன. அவன் அமர்ந்திருந்தமை அணுவிடை அளந்து சிற்பி அமைத்த சிற்பம் போலிருந்தது. அந்த நிகர்த்தன்மையே அவனை கற்சிலை எனக்காட்டியது என்றும் அதையே தன் அகம் இறுக்கமென புரிந்துகொண்டது என்றும் அவன் அறிந்தான்.
“பால்ஹிகரே, இப்போரில் தாங்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். “ஏனென்றால் இன்னமும் தங்கள் நாடுகள் எங்களுடன் ஓலை கைமாற்றவில்லை.” பூரிசிரவஸ் தலைவணங்கி “நானும் போரில் கலந்துகொள்ளவே விழைகிறேன் கௌரவரே” என்றான். துரியோதனனின் விழிகள் அவனை நோக்கி வினவ “எங்கள் குலங்களில் தனிப்பட்ட முறையில் போரில் கலந்துகொள்ள உரிமை எந்த வீரனுக்கும் உண்டு. நான் இன்றுவரை விரிநிலப்போர்களில் கலந்துகொண்டதில்லை” என்றான்.
துரியோதனன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. எத்தனை அழகிய புன்னகை என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இந்த மனிதனுக்காக என்றோ களத்தில் உயிர்துறக்கப்போகிறோம் என்ற எண்ணம் உள்ளத்தில் மின்னியது. அவன் உடல் சிலிர்த்தது. மறுகணம் அது முதிரா இளைஞனின் அகஎழுச்சி மட்டுமே என சித்தம் அதை கலைத்துப் போட்டது. பேரழகன், ஆம். ஐயமே இல்லை. துரியோதனன் ”என்ன பார்க்கிறீர்?” என்றான். பூரிசிரவஸ் நாணப் புன்னகையுடன் தலையசைத்தான்.
துரியோதனன் “உமது வருகை தக்க தருணத்தில் நிகழ்ந்திருக்கிறது. இப்போரில் நீர் கலந்துகொள்ளும். நாங்கள் பாண்டவர்களை வென்று அஸ்தினபுரியை ஆளும்போது எங்கள் சமந்த நாடாக பால்ஹிகம் அறியப்படும்” என்றான். தலைவணங்கி “அதுவே நாங்கள் விழைவது” என்றான் பூரிசிரவஸ். “சௌவீரத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பெற தங்களையே நம்பியிருக்கிறோம்.” துரியோதனன் மீசை அசைய இதழ் விரிய விழி மின்ன நகைத்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.
சகுனி தன் சால்வையை இழுக்கும் அசைவு அவர்களை ஒருவரோடொருவர் பிணைத்த சித்தம் கலைந்து விலகச்செய்தது. சகுனி எழுந்துகொண்டு “நாளை படைப்புறப்பாடென்றால் பணிகளை இன்றே ஒருக்கவேண்டும். நிறைய கடமைகள் உள்ளன” என்றார். எழுந்து அவருக்கு விடைகொடுத்தபடி “ஆம், நிகழட்டும். தங்களுடன் கர்ணனும் வருவான். இவ்விளையோனையும் சேர்த்துக்கொள்க! இவரும் படைநீக்கம் பயிலட்டும்” என்றான் துரியோதனன்.
கணிகர் எழுந்து கொள்ளும்பொருட்டு கைநீட்ட அப்பால் கதவருகே நின்றிருந்த ஊமைச்சேவகன் ஓடி வந்து அவரை பற்றித் தூக்கினான். வலியுடன் முனகியபடி அவர் நின்று நிமிர்ந்தபின் மீண்டும் தளர அவரது மையத்தில் ஒடிந்த உடல் மீண்டும் குறுகியது. அவன் கைகளைப்பற்றியபடி துரியோதனனுக்கு தலைவணங்கிவிட்டு சிற்றடி எடுத்துவைத்து வெளியே சென்றார்.
சகுனி “என் மாளிகைக்கு வாரும் பால்ஹிகரே” என்று சொல்லிவிட்டு முகத்தில் வலிச்சுளிப்புடன் தன் வலக்காலை மெல்ல மெல்ல அசைத்து வைத்து முன்னகர்ந்தார். பூரிசிரவஸ் அவரை வணங்கினான். அவர் மெல்ல வலப்பக்கம் சரிந்து செல்வதைக் கண்டபோது அவர் எடைமிக்க எதையோ கொண்டுசெல்வதுபோல தோன்றியது. அல்லது அவருடன் விழிக்குத் துலங்காத எவரோ துணைசெல்வதுபோல.
அவர்கள் செல்வதை வாயில் வரை நோக்கியபின் திரும்பி துரியோதனனை நோக்கினான். “தாங்கள் சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம் பால்ஹிகரே. கங்கைக்கரையின் சிறந்த மீனுணவை தங்களுக்காக சித்தமாக்கச் சொல்கிறேன்” என்றான் துரியோதனன். “ஆணை” என்றான் பூரிசிரவஸ் புன்னகையுடன்.
துரியோதனன் கர்ணனை நோக்கி திரும்பி “முதலில் அஸ்வத்தாமனுக்கும் ஜயத்ரதனுக்கும் செய்தி செல்லட்டும். படைகளுக்கான அனைத்து வரைவுகளும் இன்றுமாலைக்குள் சித்தமாகவேண்டும். இரவுக்குள் படகுகள் பாய்திறந்துவிடவேண்டும்… நான் மாலையில் படைநோக்குக்கு வருகிறேன். ஆவன செய்க!” என்றான். கர்ணன் “ஆம், இன்றே முடிந்துவிடும்” என்றான்.
அந்தக்கணத்தில் அங்கே ஏதோ ஒன்று நிகழ்ந்தது என பூரிசிரவஸ் உணர்ந்தான். இரு மதயானைகள் கொம்புகளால் மெல்ல தொட்டுக்கொண்டன. அது ஏன் என அவன் சித்தம் தவிக்கத் தொடங்கியது. கர்ணன் தலைவணங்கிவிட்டு வெளியே சென்றான். பூரிசிரவஸ்ஸை நோக்கி திரும்பிய துரியோதனன் அவன் தோளைத் தொட்டு “தாங்கள் வருவதை முன்னரே அறிவேன் பால்ஹிகரே. தாங்கள் சென்ற தொலைவுகளும் ஒற்றர் வழியாக தெரியவந்தன” என்றான்.
பூரிசிரவஸ் வினவுடன் நோக்க “பால்ஹிக பிதாமகரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க விழைகிறேன். நம் குலத்தில் இன்றுள்ள மூத்தவர் அவரே. அவருடன் ஒருமுறை தோள்பிணைத்து களம் நிற்க முடிந்தால் அது என் நல்லூழ் என்றே கொள்வேன்” என்றான். “அவர் மலைக்கே திரும்பிவிட்டார். மலைமகள் ஒருத்தியை மணந்திருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “அறிவேன். அவள் பெயர் ஹஸ்திகை. உங்கள் துணைவியும் அங்குதான் இருக்கிறாள். அவள் பெயர் பிரேமை” என்றான் துரியோதனன்.
பூரிசிரவஸ்ஸின் முகம் சிவந்து சற்று மூச்சு தடுக்கிக்கொண்டது. “மேலுமிரு பெண்களைப்பற்றியும் அறிவேன். சிபிநாட்டுப்பெண் தேவிகை. மத்ரநாட்டுப்பெண் விஜயை. சிபிநாட்டு வெண்ணிற அழகி ஒருத்தி. மஞ்சள்நிறமான மலைமகள் ஒருத்தி. பால்ஹிககுலத்து பேருடல் அழகி ஒருத்தி…” என்று சொல்லி அவன் தோளில் தட்டினான் துரியோதனன். “இனிய காதல்களால் நிறைந்திருக்கிறது உமது உள்ளம்… வாழ்க!” பூரிசிரவஸ் தலைவணங்கி “தங்கள் அருள் தேவை” என்றான்.
“உம்மைக் கண்டதுமே என் நெஞ்சால் தழுவிக்கொண்டேன். நான் முடிசூடும்போது மலைச்சாரலில் முந்நூறு கிராமங்களை உமக்களிக்கிறேன். உமக்கென ஒரு நாட்டை அமைத்துக்கொள்ளும். அங்கே தேவியர் மூவருடன் அரசாளும். உமது நாடு ஒருபோதும் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டவேண்டியதில்லை. என் அவையில் என்றும் நீர் கர்ணனுக்கு நிகராக என் தோழராகவே அமர்ந்திருப்பீர். வருங்காலத்தில் நம் குழந்தைகள் மணம் கொண்டு நாம் இணைந்தால் மேலும் மகிழ்ச்சி…” துரியோதனன் அவனை தன் பெரிய கைகளால் வளைத்து மார்புடன் தழுவிக்கொண்டான். “இனி நீர் எங்களில் ஒருவர். உமக்கு உடன்பிறந்தார் நூற்றுவர்” என்றான்.
தன் நெஞ்சு நெகிழ்ந்து விழி கசிவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். மண்ணில் எந்த மன்னனும் அப்படி தன்னை முழுமையாக நட்புக்கு திறந்து வைப்பதில்லை என்று எண்ணிக்கொண்டான். தன் தலையை துரியோதனனின் பெரிய தோள்களில் வைத்தான். “நானும் என் குலமும் தங்களுக்குரியவர்கள் இளவரசே” என்றான். ”தங்களுக்கென களம்பட வாய்ப்பிருக்குமென்றால் அதுவே என் நிறைவு.” ஏன் அப்படி சொன்னோம் என சொல்லிமுடித்ததுமே நாணினான். ஆனால் துரியோதனன் அவன் தலையைத் தட்டியபடி நகைத்தான்.
பூரிசிரவஸ் “இளவரசே, என் தந்தை ஒருமுறை சொன்னார். அஸ்தினபுரியின் மதவேழத்தின் அணைப்பை ஒருமுறை அடைந்தவன் தேவர்களால் சூழப்பட்டவன் என. அவரது மைந்தனும் இணையான மதவேழம் என இன்று அறிந்தேன்” என்றான். துரியோதனன் “அவருடன் என்னை நீர் ஒப்புமைப்படுத்தலாகாது. அவரது உளவிரிவை இப்பிறவியில் என்னால் அடைய முடியாது. அதை நான் நன்கறிவேன்” என்றான்.
துரியோதனனுக்குப்பின்னால் நிழலென நின்ற துச்சாதனன் வந்து பூரிசிரவஸ்ஸை தழுவிக்கொண்டான். அதன்பின் துச்சலன் தழுவிக்கொண்டான். அவர்களின் தொடுகைகள் கூட தமையனைப்போலவே இருப்பதை பூரிசிரவஸ் வியப்புடன் எண்ணிக்கொண்டான். ஒரு மனிதன் அத்தனை உடல்களில் எப்படி திகழமுடிகிறது? ஓர் உடலை நிறைத்து ததும்பி பிறவற்றிலும் நிறையும் ஏதோ ஒன்று அவனிடமிருக்கிறது.
பூரிசிரவஸ் துரியோதனனை வணங்கிவிட்டு வெளியே சென்றான். சுருதசன்மர் வந்து பணிந்து “தங்களுக்கான அறை கீழ்த்தளத்தில் உள்ளது இளவரசே” என்றார். “வருக!” என அழைத்துச்சென்றார். குன்றின் சரிவிலேயே அந்த அரண்மனையும் இறங்கி நின்றிருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். படிகள் தடித்த மரத்தாலானவை என்பதனால் ஓசையெழுப்பவில்லை. அரண்மனை முழுக்க காற்று குளிர்ப்பெருக்காக சுழன்று சென்றுகொண்டிருந்தது.
“இந்த அறையில் தங்களுக்கான அனைத்தும் சித்தமாக உள்ளன… ஓய்வெடுங்கள்” என்றார் சுருதசன்மர். “நான் சற்றுநேரம் தங்களுக்கு பணிசெய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அஸ்தினபுரியில் இருந்து இளவரசி இங்கு வருகிறார்கள். படகு அணுகிவிட்டதென பறவைச்செய்தி வந்தது. நான் ஆவன செய்யவேண்டும்.” பூரிசிரவஸ் “எந்த இளவரசி?” என்றான். சுருதசன்மர் “அஸ்தினபுரிக்கு ஒரே இளவரசிதான் இளவரசே. குருகுலத்தவர் நூற்றைந்துபேருக்கும் ஒரே தங்கை” என்றார்.
பூரிசிரவஸ் முகம் மலர்ந்து “அவர் பெயர் துச்சளை அல்லவா?” என்றான். சுருதசன்மர் “ஆம், பாரதவர்ஷத்தில் அவர்களை அறியாதவர்கள் குறைவு. சூதர்களின் பாடல்களே நூற்றுக்கும் மேலாக உள்ளன” என்றார். பூரிசிரவஸ் “இங்கே படைப்புறப்பாடு நிகழ்கையில் அவர்கள் ஏன் வருகிறார்கள்?” என்றான். “படைப்புறப்பாடு நிகழப்போவது எவருக்குமே தெரியாது. இளவரசி தமையன் தந்தையுடன் பூசலிட்டு இங்கே தங்கியிருப்பதாக எண்ணுகிறார். அவரை அமைதிப்படுத்தி அழைத்துச்செல்லும்பொருட்டு வருகிறார்.”
பூரிசிரவஸ் ”உண்மையில் இங்கே தேவையாவது அதுதான்…” என்றபின் விடைகொடுத்தான். சேவகன் கொண்டுவந்த உணவை உண்டபின் ஆடைமாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்துக்கொண்டான். நீண்ட படகுப்பயணம் உடலில் எஞ்சியிருந்தமையால் தொட்டிலில் ஆடுவதுபோல் உணர்ந்தான். கண்களுக்குள் குருதியின் அலைகள். பின்னர் துயின்றுவிட்டான்.
அவன் விழித்துக்கொண்டபோது குளியல்பொருட்களுடனும் மாற்று ஆடைகளுடனும் சேவகன் காத்திருந்தான். குளியலறை மிகச்சிறியதாக இருந்தாலும் சேவகன் திறனுள்ளவனாக இருந்தான். ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோது சுருதசன்மர் வந்து அறைவாயிலில் நின்று “வணங்குகிறேன் இளவரசே” என்றார். “படைப்புறப்பாட்டுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டனவா?” என்றான் பூரிசிரவஸ். “நான் இப்போதே கிளம்பி படைகளை பார்க்கவேண்டும்.”
“ஆணைகளை அங்கநாட்டரசர் முன்னரே எழுதிவிட்டிருந்தார்” என்றார் சுருதசன்மர். “அவை அனைவருக்கும் சென்றுவிட்டன. கீழே படைகள் கவசமும் படைக்கலமும் கொண்டு எழுந்துவிட்டன. இன்னும் நான்கு நாழிகைக்குள் அவை படகுகளில் ஏறிவிடும்.” பூரிசிரவஸ் திகைப்புடன் “அத்தனை விரைவாகவா? ஆயிரம்பேராவது இருப்பார்களே?” என்றான். “நமது படைகள் மட்டுமே எட்டாயிரம் பேர். ஜயத்ரதனின் இரண்டாயிரம் பேர். அஸ்வத்தாமனின் பத்தாயிரம்பேர்” என்றார் சுருதசன்மர். “நாநூறு படகுகள். எழுநூறு யானைகள்…”
பூரிசிரவஸ்ஸின் திகைப்பை நோக்கி புன்னகைத்த சுருதசன்மர் “அவை எப்போதும் புறப்படச்சித்தமாக இருப்பவை இளவரசே” என்றார். “அங்கநாட்டரசர் தாங்கள் விழித்ததும் பாடிவீட்டுக்கு அழைத்துவரச்சொன்னார். ஆனால் அதற்கு முன் தங்களை சந்திக்கவேண்டுமென இளவரசி விழைந்தார். அதைச் சொல்லவே வந்தேன்” என்றார். பூரிசிரவஸ் “இளவரசியா?” என்றதுமே புரிந்துகொண்டு “என்னை தனியாக சந்திக்கவா?” என்றான். “ஆம்” என்றார் சுருதசன்மர். “பின் பக்கம் சூதர்சாலை அருகே ஒரு சிறிய அவைக்கூடம் உள்ளது. அங்கே” என்றார்.
”நான் இதோ கிளம்பிவிடுகிறேன்… தெரிவித்துவிடுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இளவரசி முன்னரே அங்கே காத்திருக்கிறார்கள்” என்றார் சுருதசன்மர். “இப்போதே செல்வோம்… “ என்று உடைவாளை கையிலெடுத்தபடி பூரிசிரவஸ் சொன்னான். சுருதசன்மருடன் மரத்தாலான தரை ஒலிக்க நடந்து இடைநாழிகளை சுற்றிக்கொண்டு சூதர்சாலைக்கு அருகே சென்றான். உள்ளே நான்கு சூதர்கள் அமர்ந்து யாழ்களை பழுதுநோக்கிக்கொண்டிருந்தனர். சுருதசன்மர் “சற்று பொறுங்கள்” என கதவைத் திறந்து நோக்கிவிட்டு “உள்ளே செல்லலாம்” என்றார்.
பூரிசிரவஸ் உள்ளே நுழைந்து சாளரத்தோரம் நின்றிருந்த துச்சளையை நோக்கி தலைவணங்கினான். முதல்கணம் எழுந்த எண்ணம் அவள் துரியோதனனை போலிருக்கிறாள் என்பதுதான். நிமிர்ந்த பெரிய உடல் கொண்டிருந்தாள். உயிர்மின்னும் கரிய நிறம். சுருளாக தோளுக்குப்பின் பொழிந்த அடர்கூந்தல். செறிந்த புருவங்கள். கரிய ஒளி மின்னும் நீண்ட பெருவிழிகள். உருண்ட கன்னங்களுடன் படர்ந்த முகம். காதோரம் மென்மயிர் இறங்கி சுருண்டு நின்றது. சிறிய மாந்தளிர் நிற உதடுகளுக்குப் பின்னால் இரு பற்களின் வெண்ணிற நுனி.
பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் இளவரசியை வணங்குகிறேன். தங்களைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன். தங்களைக் காண்பதில் உவகை கொள்கிறேன். இச்சந்திப்பால் பால்ஹிககுலம் வாழ்த்தப்படுகிறது” என்றான். முறைமை சார்ந்த சொற்களை ஏன் கண்டுபிடித்தார்கள் என அப்போது தெரிந்தது. அவை சந்திப்புகளைத் தொடங்க பேருதவிபுரிபவை. திகைத்து நிற்கும் சித்தம் தொட்டெடுக்க எளிதானவை. முன்னரே வகுக்கப்பட்டவை என்பதனால் தீங்கற்றவை.
“தங்களைப்பற்றியும் நான் நன்கறிவேன்” என்று துச்சளை சொன்னாள். “இங்கு வரும்போதே தாங்கள் இங்கே வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தங்களை சந்திப்பதும் என் எண்ணத்திலிருந்தது.” “அது என் நல்லூழ்” என்றான் பூரிசிரவஸ். “அமர்க!” என அவள் பீடத்தை காட்டினாள். அவன் அமர்ந்ததும் தானும் அமர்ந்துகொண்டாள். அவள் உள்ளூர அல்லல் கொண்டிருப்பது விரல்நுனிகளின் அசைவில் தெரிந்தது. விழிகள் அவனை நோக்கியபின் திரும்பி சாளரத்தை நோக்கி மீண்டன. விழிக்குமிழிகளில் சாளரம் தெரிந்தது.
முதல்நோக்கில் அவளுடைய கரியபேருடல் அளித்த திகைப்பு விலகி அவள் அழகாக தெரியத்தொடங்குவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். திரண்ட பெருந்தோள்கள். வலுவான கழுத்து. உருண்ட பெரிய செப்புமுலைகள். அத்தனை பெரிய உடலுடன் அவள் அமர்ந்திருக்கையில் எவ்வண்ணமோ மென்மையான வளைவுகள் நிகழ்ந்து அருவி தழுவிக் கரைத்த மலைப்பாறையின் குழைவுகள் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். துரியோதனனுக்கும் அவளுக்குமான வேறுபாடே அந்தக் குழைவுகள்தான்.
அப்போதுதான் துரியோதனனை எண்ணும்போதெல்லாம் ஏன் திரௌபதியையும் எண்ணினோம் என அவன் அகம் உணர்ந்தது. அவனைப்போலவே அவளுடலும் முற்றிலும் நிகர்நிலை கொண்டது. ஆகவே அவளும் சிலை என்றே தோன்றினாள். ஆனால் கற்சிலை அல்ல. உருகும் உலோகத்தில் வார்க்கப்பட்டவள். அவன் பெருமூச்சுவிட்டான். ஒவ்வொரு பெண்ணின் முன்னாலும் இப்படித்தான் எண்ணங்களில் நிலையழிந்துபோகிறோம் என தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டதும் புன்னகை செய்தான்.
“நான் வந்தது எந்தைக்கும் தமையனுக்கும் இடையே இருக்கும் ஐயங்களை அகற்றுவதற்காகவே என அறிந்திருப்பீர்கள் பால்ஹிகரே” என்றாள் துச்சளை. “ஆனால் இங்கு வந்தபின்னர்தான் அறிந்தேன், முதலில் தீர்க்கவேண்டிய பூசல் என்பது என் தமையன்களுக்கு நடுவேதான் என்று. அதன்பொருட்டே உங்களைத் தேடிவந்தேன்.” பூரிசிரவஸ் “தங்கள் ஆணையை ஏற்க சித்தமாக உள்ளேன் இளவரசி” என்றான்.
”நீங்கள் இன்று அவையில் பேசியதையும் அறிந்தேன். இது எவருக்கும் நலன் செய்யாத போர். எவ்வகையிலாவது இப்போரை நிறுத்தமுடியுமா?” என்று துச்சளை கேட்டாள். “இப்போதே படைகள் எழுந்துவிட்டன. இதை நிகழ்த்துபவர் அங்கநாட்டரசர். அவருடைய தனிப்பட்ட சினமே இதை முன்னெடுக்கிறது.” பூரிசிரவஸ் ஒரு கணம் தயங்கியபின் “இல்லை” என்றான். அவள் திகைத்து விழிதூக்க “இது முதல் கௌரவரின் சினம்” என்றான்.
அவள் விழிகள் அவன் விழிகளை சிலகணங்கள் சந்தித்து நின்றன. பின் அவள் கை எழுந்து தோளில் விழுந்த குழலை பின்னுக்குத்தள்ளியது. அந்த இயல்பான அசைவில் அவள் காற்றில் பிரியும் கருமுகில் போல் எடையற்றவளானாள். கழுத்து மெல்ல வளைய இதழ்கள் பிரிய ஏதோ சொல்லவந்தபின் அடங்கி தலையை அசைத்தாள். பூரிசிரவஸ் “நான் என்ன செய்ய இயலும்?” என்றான்.
“எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நானறிந்த ஒரேவழி எவ்வகையிலேனும் மூத்தவர் சகதேவனை நீங்கள் சந்திக்கமுடியுமா என்று முயல்வதுதான். அவரிடம் நிலைமையைச் சொல்லி இப்போரை நிறுத்தமுடியுமா என்று பாருங்கள்…” பூரிசிரவஸ் “இளவரசி, இப்போரை முன்னெடுப்பவர் மூத்த கௌரவரும் அங்கநாட்டரசரும். அதை அவர் எப்படி நிறுத்த முடியும்?” என்றான். “அதையும் நானறியேன். ஒருவேளை பாண்டவர்கள் இவர்கள் விழையும் எதையாவது அளிக்க முடிந்தால்…” என்றபின் துச்சளை கைகளை வீசி “என்னால் சிந்திக்கவே முடியவில்லை” என்றாள்.
“மேலும் நான் எப்படி இப்போது கிளம்ப முடியும்? படைப்புறப்பாட்டில் ஒத்துழைப்பதாக நானே மூத்தகௌரவருக்கு வாக்களித்திருக்கிறேன். இப்போது கிளம்பி காம்பில்யம் செல்வதென்பது காட்டிக்கொடுத்தலாகவே பொருள்படும்” என்றான். துச்சளை “அதை நானும் சிந்தித்தேன். நீங்கள் என் தூதராகச் செல்லலாம். அதை நானே மூத்தவரிடம் சொல்கிறேன்” என்றாள். பூரிசிரவஸ் “அதை அவர் விரும்பமாட்டார்” என்றான். “ஆம், ஆனால் படைப்புறப்பாட்டை அவர்களிடமிருந்து மறைத்து திசைதிருப்பும்பொருட்டே இந்த தூது என அவரிடம் சொல்கிறேன். அவர் அதை ஏற்பார்” என்றாள்.
அவளுடைய தோற்றம் அளித்த சித்திரத்துக்கு மாறாக அவள் மிகக்கூரியவள் என்ற எண்ணத்தை பூரிசிரவஸ் அடைந்தான். பேருடல் கொண்டவர்கள் எளிய உள்ளம் கொண்டவர்கள் என ஏன் உளமயக்கு ஏற்படுகிறது? அவர்களின் உடல் விரைவற்றது என அகம் மயங்குகிறது. உள்ளமும் அப்படியே என எண்ணிக்கொள்கிறது. இரண்டுமே பெரும்பாலும் பிழையானவை. துச்சளை “சகதேவரிடம் என் துயரை சொல்லுங்கள் பால்ஹிகரே. இந்நிலையில் என்ன செய்யமுடியும் என்று அவரும் நீங்களும் இணைந்து முடிவெடுங்கள்…” என்றபின் சற்று தயங்கி “காம்பில்யம் இப்படைப்புறப்பாட்டை அறிந்துவிட்டது என இவர்கள் அறிந்தால்கூட படைப்புறப்பாடு நின்றுவிடக்கூடும்” என்றாள்.
கூர்ந்து நோக்கியபடி “அதாவது நான் இப்படைப்புறப்பாட்டை பாண்டவர்களுக்கு காட்டிக்கொடுக்கவேண்டும், இல்லையா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, அப்படி அல்ல” என்று துச்சளை கைநீட்டி பதறியபடி சொன்னாள். “தாங்கள் சென்றாலே அதை சகதேவர் உய்த்தறிந்துவிடுவார். பாண்டவர்களில் மிகக்கூரியவர் அவரே. அது போரை நிறுத்துமெனில் ஏன் அதை செய்யக்கூடாது? அனைவருக்கும் நலம் பயக்கும் ஒன்றல்லவா இது?” அவள் குரல் தழைந்தது. “என் உடன்பிறந்தார் போரில் எதிர்நின்று அழியக் கூடாது. அதன்பொருட்டே இதை சொல்கிறேன்.”
பூரிசிரவஸ் “இல்லை, நான் அதை செய்யமுடியாது இளவரசி. என் மீறும்சொல் பொறுத்தருளவேண்டும்” என்றான். “நான் செய்வதன் விளைவு தார்த்தராஷ்டிரருக்கு எதிரானதாக அமைந்தால்கூட நான் அவருக்கு இரண்டகம் செய்ததாக ஆகும். இன்றுதான் நான் அவரது தோள்தழுவினேன். வாழ்வும் இறப்பும் அவருடனேயே என அகத்தே உறுதிகொண்டேன்.” துச்சளை “அதை நான் அறிந்தேன். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன். என் தமையனின் நலனை நாடுவதில் எனக்கிணையானவர் நீங்கள் என்பதனால்…” என்றாள்.
“நான் அங்கநாட்டரசரிடம் பேசுகிறேன்…” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, அவர் ஒப்பமாட்டார். நான் மாதுலரிடம் பேசினேன். கணிகரிடமும் கூட சற்றுமுன் பேசினேன். ஏதும் செய்யமுடியாது. அங்கநாட்டரசரும் தமையனும் உறுதிகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். நான் என்ன செய்வதென்றறியாமல் தவிக்கிறேன்.” அவள் விழிகளில் நீர் பரவுவதை பூரிசிரவஸ் கண்டான். உதடுகளை அழுத்தியபடி “பெருந்தீங்குகள் நிகழவிருக்கின்றன என என் அகம் சொல்கிறது… அதைத் தவிர்க்க என்ன செய்யமுடியும் என்றும் அறியேன்…” என்றாள்.
தன் கையிலிருந்த பட்டுச்சால்வையால் விழிகளை துடைத்துக்கொண்டாள். பின் நிமிர்ந்து “எத்தகையவளானாலும் பெண் ஓர் ஆணிடம்தான் உதவிகோரவேண்டியிருக்கிறது” என்றாள். பூரிசிரவஸ் தன் நெஞ்சுக்குள் குளிர்ந்த அசைவொன்றை உணர்ந்தான். “நான்…” என்று அவன் சொல்லத் தொடங்க “மேலும் சொற்கள் என்னிடமில்லை. நான் உங்களை நம்பி வந்தேன்” என்றாள். நெஞ்சு படபடக்க பூரிசிரவஸ் சில கணங்கள் அமர்ந்திருந்தான். காதுகளில் அணிந்திருந்த குழை கழுத்தைத் தொட்டு ஆடியது. சுருள்குழல்கள் அதன்மேல் பரவியிருந்தன.
பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஒன்று செய்யலாம். அஸ்வத்தாமரிடம் பேசிப்பார்க்கலாம். அங்கநாட்டரசரிடம் நிகர்நின்று பேசுபவர் அவர் என்றார்கள்” என்றான். “இன்றே நீங்கள் உத்தரபாஞ்சாலம் செல்லமுடியுமா என்ன?” என்றாள் துச்சளை. “ஆம், விரைவுப்படகிருந்தால் சென்றுவிடலாம்.” துச்சளை அவனை நோக்கிய விழிக்கு அப்பால் சித்தம் வேறெங்கோ சென்று மீண்டது. “பால்ஹிகரே, அஸ்வத்தாமர் ஒருபோதும் ஒப்பமாட்டார்” என்றாள்.
அவன் ஏன் என விழிதூக்க “உத்தரபாஞ்சாலத்தை காம்பில்யம் தாக்கக்கூடுமென அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார். இப்போது அஸ்தினபுரியின் படைகளுடன் இணைந்து ஒரு தாக்குதலை நிகழ்த்தமுடியும் என்றால் அதுவே அவரது அரசுக்கு நல்லது. அவர் இன்று முதன்மையாக சத்ராபுரியின் அரசர், அதன்பின்னரே கௌரவர்களின் துணைவர்” என்றாள். அவள் சொல்லத்தொடங்கியபோதே அதை பூரிசிரவஸ் தெளிவுற உணர்ந்திருந்தான்.
அத்தனை சொற்களும் ஒழிய அறையில் நிறைந்திருந்த காற்று எடைகொண்டு அவர்களை சூழ்ந்துகொண்டது. ஆடைநுனியை சுழற்றிக்கொண்டிருந்த கைகளை விடுவித்து அவள் விரல்கோர்த்துக்கொண்டு மெல்ல சாய்ந்தாள். பெருமூச்சுடன் “நான் எளியவள். என்னால் முடிந்ததை செய்யலாமென எண்ணினேன்” என்றபின் எழுந்துகொண்டாள். “தங்களுக்கு தொல்லைகொடுத்தமைக்கு வருந்துகிறேன் இளவரசே” என்றாள். யானைத்துதிக்கைக்கு மட்டுமே உரிய மென்மையுடன் பின்பக்கம் சரிந்து கிடந்த ஆடையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள்.
“என் தமையன் குண்டாசியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இவர்கள் செய்த வஞ்சத்தால் அகமுடைந்து களிமகனாகிவிட்டார். இருநாட்களுக்கு முன் என்னை வந்து சந்தித்து அழுதார். உடனே கிளம்பிச்செல்லாவிட்டால் உடன்பிறந்தார் களத்தில் குருதிசிந்துவர் என்றார். அவரது கண்ணீரே என்னை இங்கே வரச்செய்தது” என்றாள் துச்சளை. “உன்னால் மட்டுமே அதை தடுக்கமுடியும் இளையவளே என்று அவர் சொன்னபோது என் நெஞ்சு சற்று தருக்கியிருக்க வேண்டும். அதற்கு இது உகந்த முடிவுதான்… வருகிறேன்.”
அவள் உடலில் செல்வதுபோன்ற அசைவு நிகழ்ந்தாலும் காலடிகள் நிலம்பெயரவில்லை. பூரிசிரவஸ் எழுந்தான். அவளுடைய விரிந்த தோள்களில் கரியபரப்பு இழுத்துக்கட்டப்பட்ட பழந்துடியின் தோலென மின்னியது. அவள் உடலின் தனித்தன்மை என்ன என அப்போதுதான் அவன் அறிந்தான். அவள் தோளெலும்புகளும் கழுத்தின் எலும்பும் மிகப்பெரியவை. பிரேமையின் கழுத்தைவிட. ஏன் இப்போது அவளை நினைக்கிறோம் என வியந்துகொண்டான். மல்லர்களுக்குரிய எலும்புகள். ஆனால் அவற்றிலும் முழுமையாகவே பெண்மையின் எழில் கூடியிருக்கிறது.
தன் பார்வைதான் அவளை நிற்கச்செய்கிறது என அவன் உணர்ந்தான். ஏதாவது சொல்லவேண்டும், ஆனால் என்ன சொல்வதென்று புரியவில்லை. வெற்றுரைகள் அப்போது இரக்கமற்றவையாக ஆகக்கூடும். அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்து கழுத்தில் ஒரு மெல்லிய சொடுக்கலாக முழுமைகொண்டது. தணிந்த குரலில் “நீங்கள் திரௌபதியை பார்த்தீர்களா?” என்றாள்.
பூரிசிரவஸ் திகைத்து “ஆம், நான் மணநிகழ்வில் பங்கெடுத்தேனே” என்றான். “பேரழகியா?” என்றாள். அவள் கண்களில் தெரிவதென்ன என அவனுக்குப் புரியவில்லை. “அத்தனை ஆண்களும் அப்படி எண்ணுகிறார்கள்” என்றான். அவள் சட்டென்று வெண்பற்கள் தெரியச்சிரித்து “மிகநுட்பமான மறுமொழி… நன்று” என்றாள். “அழகென நூலோர் வகுத்தவை அவளில் உண்டா என அறியேன். அவளைக் கண்ட ஆண்களெல்லாம் அவளை எண்ணிக்கொண்டிருப்பார்கள்.”
“நீங்களுமா?” என்றாள். பூரிசிரவஸ் அவள் விழிகளை நோக்கி “மெய் சொல்வதென்றால் ஆம்” என்றான். அவள் மீண்டும் சிரித்து “உண்மை சொன்னதற்கு நன்றி. அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையேல் இத்தனை சிடுக்குகள் விழுந்திருக்காது” என்றபின் “அவளை சந்திக்க விழைகிறேன். அஸ்தினபுரியின் மக்களெல்லாம் இன்று அவளைப்பார்ப்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். பூரிசிரவஸ் “அவள் அஸ்தினபுரியின் அரசி அல்லவா?” என்றான்.
“ஆம், இச்சிக்கல்கள் முடிந்து அவள் நகர்நுழைந்தால் அனைத்தும் சீரமைந்துவிடும் என நினைக்கிறேன். பெருங்கருணை கொண்டவள் என்கிறார்கள். அவளால் அனைத்தையும் புரிந்துகொள்ளமுடியும்…” பெருமூச்சுடன் “அவ்வண்ணம் நிகழட்டும்” என்றபின் “வருகிறேன். நலம் திகழ்க!” என்று தலைவணங்கி முன்னால் சென்றாள். அவள் ஆடையின் பொன்னூல்கள் மின்னி உலைந்தன. கூந்தலில் தொங்கிய மணிச்சரம் நெளிந்தது.
பூரிசிரவஸ் “இளவரசி” என்று அழைத்தான். அவள் அவ்வழைப்பை எதிர்பார்த்தவள்போல நின்றாள். “நான் அங்கநாட்டரசரை தடுத்து நிறுத்துகிறேன்” என்றான் பூரிசிரவஸ். அவள் வியப்புடன் நோக்க “அது ஒன்றே வழி. அவர் சித்தத்தை கலைக்கிறேன். அவரை இப்போரிலிருந்து பின்வரச் செய்கிறேன்” என்றான். அவள் முகம் மலர்ந்தது. கண்களில் கனிவு வந்தது. “நினைத்திருப்பேன்” என்றபின் வெளியே சென்றாள்.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்