நூலகம்

எட்டாவது படிக்கும்போது நான் ஒருமுறை ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி நூலகத்தைப் பார்த்தேன். எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி. வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைக்கூட்டிச்சென்ற துளசி அண்ணா புத்தகங்களை எடுத்துக்கொண்டு “வாடா”என்று கூப்பிட்டபோதுதான் விழித்தெழுந்தேன். வெளியே வந்தபோது ஏங்கி அழுதுகொண்டிருந்தேன். “என்னடா?”என்றார் அண்ணா. “இத்தன புக்கையும் நான் எப்ப படிக்கப்போறேன்?”என்றேன் விசும்பியபடி

ஏனென்றால் என் வீட்டிலேயே என் அம்மா உருவாக்கிய நூலகமிருந்தது. அதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் இரண்டாயிரம் புத்தகங்களுக்குமேலேயே இருந்தன. பாதிக்குமேல் அப்போதே நான் வாசித்திருந்தேன். விரைவிலேயே முடிக்கவேண்டும் என்ற திட்டம் இருந்தது. அப்போதுதான் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம் எனக்கு அறிமுகமாகியது. அதன்பின் அருமனை அரசுநூலகம். நான் நூலகப்பித்தன் என அறியப்பட்டிருந்தேன். அந்த வயதில் முழுநூலகத்தையும் வாசித்துமுடித்துவிடமுடியும் என்றும் பெரிய அறிஞர்கள் எல்லாருமே அப்படி வாசித்தவர்கள்தான் என்றும் நினைத்திருந்தேன்.

ஸ்காட் கிறித்தவக்கல்லூரியின் புத்தக அடுக்குகள் என்னை கனவிலும் துரத்திக்கொண்டிருந்தன. என் கனவில் அன்றைக்கும் இன்றைக்கும் மீளமீள வருவது நூலகம்தான். புராதனமான ஒரு நூலகத்தில் எவருமே கேள்விப்படாத நூல்களை நான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டே இருப்பேன். அந்தத் தலைப்புகளும் அட்டையின் ஓவியங்களும் எல்லாமே புத்தம்புதியவையாக இருக்கும். விழித்தெழுந்தபின் அப்படி ஒரு நூலே இல்லை என்பது மேலும் திகைப்பூட்டும். நாம் அறியாத ஒரு ஆழ்மன நூலகம் நமக்குள் இருக்கிறதா என்ன?

என் அம்மாவின் நூலகம் அவரது இறப்புக்குப்பின் பலராலும் கொண்டுசெல்லப்பட்டு மறைந்தது. நான் அப்போது பிச்சை எடுத்து அலையும் துறவியாகவும் நாடோடியாகவும் அலைந்துகொண்டிருந்தேன். மீண்டு வந்து கையில்காசு வரத்தொடங்கியதுமே நான் புத்தகங்களை வாங்கிச்சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். எனக்கென்று ஒரு நூலகம் அமைந்தது. இன்று என் வீட்டில் ஐந்தாயிரம் நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. என் வீட்டுச்சுவர்களெல்லாம் நூலக அடுக்குகளே

என்னிடமிருக்கும் பழைய புத்தகங்களில் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பேச்சுப்போட்டியில் பரிசுபெற்ற பாரதியார் கட்டுரைகள் ஒன்று. அதில் என் பழைய கையெழுத்தில் பா.செயமோகன் என்று எழுதியிருக்கிறேன். அன்றெல்லாம் எனக்கு தமிழ்வெறி கொஞ்சம் அதிகம். கல்லூரிக்காலத்தில் வாங்கிய நூல்கள் பல உள்ளன. அவை என் வீட்டில் இருந்து கைமாறிச்சென்று பிற இடங்களில் இருந்து என்னால் விலைகொடுத்து வாங்கி மீட்டெடுக்கப்பட்டவை!

என் நூலகத்தில் பெரும்பாலான நூல்கள் நான் வாசித்தவைதான். நூலகத்தை கையால் வருடிச்செல்வது எனக்குப்பிடிக்கும். நான் வாசித்த நூல்கள் ஓர் அழியாத உறவின் சின்னங்களாக நினைவை மீட்டும். தனிமையில் மனக்கொந்தளிப்புடன் வாசித்தவை. கண்கலங்கவைத்தவை. பித்துப்பிடிக்கவைத்து உடனடியாக கிளம்பி எங்காவது பயணம் செய்யவைத்தவை. எத்தனை நூல்கள். இந்நூல்கள் இல்லாவிட்டால் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்?

எனக்குப்பிடித்த நூல்கள் என்று எதைச்சொல்வேன். என்னிடம் இருக்கும் மகாபாரதநூல்கள் அனைத்துமே இருபத்தைந்தாண்டுக் காலாமாக நான் மீண்டும் மீண்டும் வாசிப்பவை. என் கைபட்ட அழுக்கு கொண்ட பக்கங்கள் கொண்டவை. தல்ஸ்தோய் தஸ்தய்வேவ்ஸ்கி செகாவ் துர்கனேவ் ஆகிய ரஷ்யப்பேரிலக்கியவாதிகள் எனக்கு குருநாதர்களைப்போல. ஹெர்மன் ஹெஸ், நிகாஸ் கசந்த் ஸகீஸ், தாமஸ் மன், மார்ஷல் புரூஸ்த், ரொமென்ய் ரோலந்த், விக்தர் ஹ்யூகோ, மேரி கொரெல்லி, எமிலி ஜோலா என ஐரோப்பிய பேரிலக்கியவாதிகள். எடித் வார்ட்டன், ஐசக் பாஷவிஸ் சிங்கர் என அமெரிக்க படைப்பாளிகள்.. இவர்கள் ஒவ்வொருவருடனும் எனக்குள்ள உறவு மண்ணில் வாழும் எவருடனும் இல்லை.

இந்திய எழுத்தாளர்களில் வங்கப் பேரிலக்கியவாதிகள் எனக்கு மிக முக்கியமானவர்கள். இவர்களைப்பற்றிப்பேசி பேசி தமிழ்ச்சூழலில் நிலைநிறுத்தவும் என்னால் முடிந்தது. முப்பெரும் பானர்ஜிக்கள் என்று சொல்லத்தக்கவர்கள் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, தாரசங்கர் பானர்ஜி, மாணிக் பந்த்யோபாத்யாய. விபூதிபூஷனின் பாதேர் பாஞ்சாலி தாரசங்கரின் ஆரோக்ய நிகேதன் மாணிக் பந்த்யோபாத்யாயவின் வனவாசி போன்றவற்றின் தமிழ் மலையாள வடிவங்கள் என்னிடமிருக்கின்றன

இந்தியப்படைப்பாளிகள் பலருடன் எனக்கு ஆழ்ந்த ஆன்மீகமான உறவுண்டு. சிவராம காரந்தின் கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும். ஊமைப்பெண்ணின் கனவுகள் போன்றவற்றை அவ்வப்போது தொட்டுப்பார்ப்பேன். அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டபறவையைத்தேடி குர்ரதுல்ஐன் ஹைதரின் அக்னிநதி போன்றவை என் வாழ்வின் முதன்மையான தருணங்களாக அமைந்த வாசிப்பனுவங்கள்

தமிழில் புதுமைப்பித்தனின் பழைய காஞ்சனை தொகுதி என்னிடமிருக்கிறது. கு.ப.ராஜகோபாலனுக்கு கலைமகள் போட்ட புனர்ஜென்மம் தொகுதியை வைத்திருக்கிறேன். ரா.அ.பத்மநாபனின் சித்திரபாரதி என்னிடமிருக்கிறது. இந்நூல்களெல்லாமே ஒருவகை ஆவணங்கள்.

நூலகம் என் வீட்டை நிறைவுசெய்கிறது. அது இல்லாவிட்டால் என் வீடும் வெறுமே உண்டு உறங்கி பூசலிட்டு மடியும் வெறும் சுவர்நடுப்பகுதியாகவே எஞ்சியிருக்கும். ஏன் நூல்கள்? மனிதனுக்கு இருப்பது மிக எளிமையான மாறாத சில்லறை வாழ்க்கைதான். நூல்கள் வழியாக நான் பலமடங்கு செறிவான விரிவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்.

நூல்கள் என் மொழியை கூர்மையாக்கின. நான் நினைப்பதை சொல்லவும் சொல்வனவற்றை பிறர் ஏற்றுக்கொள்ளவைக்கவும் என்னால் முடிந்திருக்கிறது. இன்றைய வாழ்க்கையில் எவனுக்கு சொல் வல்லமை இருக்கிறதோ அவனே வெல்வான். எந்தத்துறையிலானாலும். நூலகம் மொழியின் உறைவிடம்.

முந்தைய கட்டுரைகதையறிதல்
அடுத்த கட்டுரைபாடலிபுத்திரம் [சிறுகதை]