பகுதி 7 : மலைகளின் மடி – 12
பூரிசிரவஸ் அரண்மனை முகப்புக்கு நடக்கும்போது தன் உடலின் எடையை கால்களில் உணர்ந்தான். திரும்பச்சென்று படுக்கையில் உடலை நீட்டிவிடவேண்டுமென்று தோன்றியது. முகத்தை கைகளால் அழுத்தி வருடிவிட்டு களைத்த குரலில் சேவகனிடம் “புரவியை ஒருக்கச் சொல்” என்றான். அவன் வணங்கி முன்னால் ஓடினான். எவரிடமென்றில்லாத சினம் அவனுள் ஊறி நிறைந்திருந்தது. தன் தாடை இறுகியிருப்பதை உணர்ந்து அதை நெகிழச்செய்துகொண்டான்.
முற்றத்திலிருந்து வந்த காற்றிலேயே மதுவின் நாற்றமும் கூட்டத்தின் ஓசையும் அனலொளியும் கலந்திருந்தன. அந்த வாள் இடைநாழியில் அப்படியே கிடந்தது. அதை காலால் தட்டி வீசினான். அது மரச்சுவரில் பட்டு உலோக ஒலியுடன் சுழன்று சென்று நின்றது. அப்பால் எவரோ “யாரடா அவன் சோம்பேறி?” என்று குழறிய குரலில் கேட்டான். உடைவாளை உருவி அவனை வெட்டி வீழ்த்தவேண்டுமென எழுந்த சினத்தை மீண்டும் பற்களைக் கிட்டித்து அடக்கிக்கொண்டான்.
முற்றத்தில் இறங்கியபோது அலைகலந்த நீர்ச்சுழியில் குளிரக்குளிர இறங்குவதுபோலிருந்தது. அரைவட்டமான வெளியில் கூட்டம் மேலும் செறிந்திருந்தது. கடுமையான பனி அவர்கள் மேல் பொழிந்து குதிரைகளின் உடல்களை சிலிர்க்கச்செய்தது. அவ்வப்போது வீசியகாற்றில் தழல்களும் கூடாரத்துணிகளும் தழைந்தாடின. பனிச்சாரலால் அரண்மனையின் மரமுகடுகள் நனைந்து வழிந்தன. ஆனால் இளையோர் அதை பொருட்படுத்தாமல் குடித்து களியாடிக்கொண்டிருந்தனர். காட்டீச்சை ஓலையால் செய்யப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்ட மெல்லிய மழையாடைகளைப் போர்த்தியபடி குழந்தைகளும் முதியவர்களும் முற்றம் முழுக்க பரவி துயின்றுகொண்டிருந்தனர்.
பூரிசிரவஸ் புரவியில் ஏறி நகர்த்தெருக்கள் வழியாக சென்றான். பசுக்களாலும் குடித்து மயக்கேறி விழுந்து கிடந்த மலைமக்களாலும் தெரு நிறைந்திருந்தது. ஆனால் வணிகர்கள் ஊன்கொழுப்பு எரிந்த விளக்குகளுடனும் மதுக்கலங்களுடனும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். பசுக்களை பிடித்துவருவது குறித்து சலன் சொன்ன எண்ணத்தை அவன் நினைத்துக்கொண்டான். மயங்கி ஆடிக்கொண்டிருந்த நகரில் பெண்களை பிடித்துக்கொண்டு சென்றால்கூட எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அறைக்குள் இருந்தே போடப்படும் திட்டங்களில் இருக்கும் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையை எண்ணியபோது தாடையின் இறுக்கம் நெகிழ்ந்து புன்னகை எழுந்தது.
ஏழன்னையர் கோயிலருகே வலப்பக்கமாக கல்லில் அமைக்கப்பட்ட பெரிய பீடத்தின்மேல் குடைவாக இரண்டு பெரிய பாதங்கள் செதுக்கப்பட்ட கல் வைக்கப்பட்டிருந்தது. மானுட அளவைவிட இருமடங்கு பெரிய பாதங்கள். இரண்டு கல்சிற்பிகள் அப்போதும் அதை செம்மைசெய்துகொண்டிருந்தனர். அவனைக்கண்டதும் முதிய சிற்பி நிமிர்ந்து “வணங்குகிறேன் இளவரசே” என்றார். பூரிசிரவஸ் “விடிவதற்குள் முடிந்துவிடுமா?” என்றான். “சிறியவேலை. நேற்றே முடித்துவிட்டேன். நிறைவாக இல்லை என்று சற்று முன்னர்தான் தோன்றியது” என்றார் சிற்பி. பின்னர் “எளிய சிற்பம்தான். ஆனால் இனி நெடுங்காலம் இது இறைவடிவமாக வணங்கப்படும் அல்லவா?” என்றார்.
புன்னகையுடன் அவன் அணிவாயிலையும் தோரணங்களையும் பார்த்தான். அனைத்தும் முன்னர் பலமுறை அங்கே செய்யப்பட்டவைபோலவே இருந்தன. சலன் இம்முறை வேறுவகையில் மேலும் சிறப்பாக அமைய என்னென்ன ஆணைகளை விடுத்திருப்பான் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அந்நகரம் மலைக்காற்று உருவாக்கும் மணல்குவை போல. அது தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்ளமுடியாது. கூர்ந்து நோக்கினால் சென்றமுறை நிகழ்ந்த அத்தனை பிழைகளும் மீண்டும் நிகழ்ந்திருக்கும் என்று தோன்றியது.
எரியம்பு ஒன்று ஷீரபதத்திற்கு அப்பால் எழுந்தது. காவல்மாடத்தில் இருந்து மேலும் இரு எரியம்புகள் எழுந்தன. மும்முறை எரியம்பு பரிமாறப்பட்டதும் பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். துஷாரர் படைகள் நெருங்கிவிட்டன. அரண்மனையிலிருந்து எரியம்பு எழுந்தது. பன்னிருவர் கொண்ட காவலர்படை ஒன்று குதிரைகளின் குளம்போசை சுவர்களெங்கும் எதிரொலிக்க சாலைவழியாக வந்தது. பசுக்களையும் குடிகாரர்களையும் அதட்டியபடி அவர்கள் எதிரே வந்து நின்றனர்.
முன்னால் வந்த நூற்றுக்குடையோன் “துஷாரர் வந்துவிட்டார்கள் இளவரசே. எதிர்கொண்டு அழைத்துவர ஆணை” என்றான். “அமைச்சர் மூத்த இளவரசரை அழைத்துச்செல்லும்படி சொன்னார். அவர் துயின்றுகொண்டிருக்கும் இடமே தெரியவில்லை. ஆகவே மாத்ர இளவரசர்களை அழைத்துச்செல்கிறோம்.” அதன்பின்னர்தான் பூரிசிரவஸ் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் பார்த்தான். இருவரும் பெரிய மழையாடைக்குள் முகம் தெரியாமல் குனிந்து அரைத்துயிலில் இருந்தனர். “செல்லுங்கள்” என்றபின் அவன் நகருக்குள் நுழைந்தான்.
நகர் முழுக்க குடிகாரர்கள்தான் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் நிறைந்திருந்தனர். அனைத்து இல்லங்களும் கதவுகள் விரியத்திறந்து உள்ளறைகளில் எரிந்த ஊன்நெய் விளக்குகளைக் காட்டியபடி மனித அசைவில்லாமல் நின்றிருந்தன. இந்நகரை ஒன்றும் செய்யமுடியாது என எண்ணிக்கொண்டான். அனைத்தும் எப்போதும் எப்படி நிகழுமோ அப்படித்தான் நிகழும். இந்நகரை கட்டுப்படுத்தும் ஆணை என ஏதுமில்லை. இது நகரமே அல்ல. ஒரு மக்கள்திரள். அல்லது மக்கள் திரளும் ஒரு இடம். ஒரு நிலச்சுழி. வேறொன்றுமில்லை.
மீண்டும் திறந்த இல்லங்களை நோக்கியபடியே சென்றான். அப்போது அவன்மேல் எடைமிக்க ஒன்று விழுந்தது போல அவ்வெண்ணம் வந்தது. உடல் உவகையால் நடுங்க “ஆம்!” என்று சொல்லிக்கொண்டான். “ஆம் ஆம் ஆம்” என உள்ளம் துள்ளியது. அந்த உவகையின் சில அலைகளுக்குப்பின்னரே அவ்வெண்ணத்தை சொற்களாக ஆக்கிக்கொள்ள அவனால் முடிந்தது. அது ஒரு நகரமாக ஆகாமலிருக்கக் காரணம் ஒன்றே. அதைச்சுற்றி ஒரு கோட்டைவேண்டும்.
மலைகள் சூழ்ந்திருக்கையில் பாதுகாப்புக்கென கோட்டை தேவையில்லைதான். ஆனால் கோட்டை கண்கூடான எல்லை. இன்று அந்நகரம் ஓர் அக உருவகம் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் அதன் எல்லை ஒவ்வொன்று. கோட்டை அதற்கொரு உடலை அளிக்கிறது. அதன்பின்னரே அந்நகரம் விழிகளால் பார்க்கப்படுவதாகிறது. தங்களை இம்மக்கள் இன்று ஒரு கூட்டமாகவே உணர்கிறார்கள். கோட்டைக்குப்பின் அவர்கள் ஒரு பேருடலாக உணர்வார்கள். ஒரு கொடியசைவு ஓர் எரியம்பு ஒரு முரசொலி அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும்.
எண்ண எண்ண அவ்வெண்ணம் விரிந்தபடியே செல்லும் அகவிரைவால் அவன் குதிரையை விலாவணைத்து விரையச்செய்தான். சேறு தெறிக்க அது இருண்ட தெருவில் துள்ளிச்சென்றது. கோட்டையை மூன்று வட்டங்களாக அமைக்கவேண்டும். அரண்மனையை மக்கள் நெருங்கலாகாது. அதைச்சுற்றி உள்கோட்டையும் காவலரண்களும் தேவை. அதற்குள் அழைப்புள்ள அதிகாரிகளும் உயர்குடியினரும் வணிகர்களும் மட்டுமே செல்லவேண்டும். மக்களுக்கு அரண்மனை அச்சமூட்டும் ஓர் அறியமுடியாமையாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் அதை அவர்கள் எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அதைப்பற்றிய கதைகளை உருவாக்கிக்கொள்வார்கள். அதிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்களே பேசிப்பேசி எடையை ஏற்றிக்கொள்வார்கள். அந்நிலையில்தான் அவை மீறமுடியாமலாகின்றன.
அடுத்த வட்டத்திற்குள் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்கும் மாளிகைகள். அதற்கு வெளியே வணிகர்களும் உழவர்குடிகளும். இறுதியாக கோட்டைக்காவலர்கள். அவ்வாறு கோட்டை அமையும் என்றால் மெல்லமெல்ல குடிகாரர்களும் குடியிலிகளும் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் வெளியே தள்ளப்படுவார்கள். மூன்றாம் அடுக்கில் அவர்களின் இடங்கள் அமையும். அங்கு செல்வதே இழிவென ஆகும். அவர்கள்மேல் காவலர்களின் கட்டுப்பாடு உருவாகும். அவர்கள் அங்கு வாழ்வதே தண்டனைக்குரியதென்றாகும். மேலும் கீழ்மக்கள் கோட்டைக்கு வெளியே வாழ்பவர்களாக ஆவார்கள். அவர்கள் குடிகளாகவே எண்ணப்படமாட்டார்கள்.
அவன் அக்கோட்டையை முழுமையாகவே அகக்கண்ணில் கண்டுவிட்டான். சத்ராவதியிலும் காம்பில்யத்திலும் உள்ளது போன்ற மிக உயரமான பெரிய கோட்டை தேவையில்லை. ஆனால் அது குடிகளால் கடக்கமுடியாததாக இருக்கவேண்டும். குடிகளை அது சூழ்ந்துகொள்ளவேண்டும். உடலை ஆடை மூடியிருப்பதைப்போல. உடையின்மையை எண்ணினாலே உடல் அஞ்சி சிலிர்த்துக்கொள்ளவேண்டும்.
நின்று திரும்பிப்பார்த்தபோதுதான் அரண்மனையின் மணியோசை தன் சிந்தையொழுக்கை தடுத்திருப்பதை அறிந்தான். மணியோசை கேட்டதும் முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் இணைந்த ஓசை எழுந்தது. உறுமியபடி ஒரு பெரும் மிருகம் எழுந்துகொள்வது போல நகர் விழித்துக்கொண்டது. தொலைவிலிருந்து வரும் புயலின் ஒலி என நகர்மக்கள் விழித்துக்கொள்ளும் ஒலி தொடங்கி மெல்லமெல்ல வலுப்பெற்றபடியே வந்து முழக்கமாக மாறி சூழ்ந்துகொண்டது. இன்னும் சற்று நேரத்தில் விழுந்து கிடந்த குடிகாரர்கள் எழுந்துவிடுவார்கள். முகம் கழுவி உடைமாற்றி உணவுண்டு மீண்டும் பிறந்தெழுபவர்கள் போல நகரை நிறைத்துவிடுவார்கள். இந்த மக்களின் களியாட்டத்துக்கான விடாயை தேவர்கள் கூட நிறைத்துவிடமுடியாது.
பாரதவர்ஷத்தில் அத்தனை நகரங்களும் படைக்கலமேந்திய வீரர்கள் போலிருக்கின்றன. எதிரிகளுக்காக விழி கூர்ந்து காத்திருக்கின்றன. இந்த மக்கள் பற்பல தலைமுறைகளாக எதிரிகளை அறியாதவர்கள். எதிரி வந்து வாயிலில் நிற்பது வரை அவர்களுக்கு எதிரி என்றால் என்ன பொருள் என்று சொல்லிப்புரியவைக்கவும் முடியாது. ஆனால் ஒரு கோட்டை அவர்களுக்கு எதிரியைப்பற்றிய எண்ணத்தை அளித்துவிடும். கன்னங்கரியதாக கண்மூடினாலும் தெரிவதாக அது அவர்கள் முன் நின்றுகொண்டே இருக்கும்.
இன்று அவர்களின் சித்தம் இந்த பத்து மலைமுடிகளையும் தழுவிப்பரந்ததாக உள்ளது. சில ஆண்டுகளிலேயே அந்தக்கோட்டைக்குள் அது நத்தை என சுருண்டுகொள்ளும். அதற்கு வெளியே இருப்பதெல்லாம் எதிரி என உணர்வார்கள். அதற்குள் இருக்கையில் மட்டுமே பாதுகாப்பை அறிவார்கள். அது ஆடையல்ல, கவசம். அதன்பின் இந்நகரில் எவரும் வீட்டு வாயிலை திறந்துபோடமாட்டார்கள். அவன் புன்னகைத்துக்கொண்டான். அச்சமே வீரத்தின் அடித்தளம். எத்தனை ஆழ்ந்த அறிதல். அதை அறிய உண்மையிலேயே அச்சம் வந்து வாயிலை முட்டவேண்டியிருக்கிறது.
நகரை விட்டு வெளியே சென்று மலைப்பாதைச்சுருளில் ஏறி ஏறிச் சென்றான். நகரில் அனைத்து விளக்குகளும் எரியத்தொடங்கியதை காணமுடிந்தது. அவன் அகன்று செல்லச்செல்ல நகரின் ஓசை வலுத்தமையால் அவன் முன்செல்லவேயில்லை என அகம் மயக்கு கொண்டது. திரும்பாமல் சென்றபோது தனக்குப்பின்னால் அவன் ஒரு கோட்டைசூழ்ந்த பால்ஹிகபுரியை கண்டான். பெரிய காவல்மாடங்கள் மேல் கொடிகள் மலைக்காற்றில் படபடக்கும் நகரம். கணமும் பொறுக்கமுடியாதென்று தோன்றியது. இத்தனைநாள் ஒரு கோட்டைநகர் இல்லாது எப்படி அரசிளங்குமரன் என்று எண்ணிக்கொண்டோம் என வியந்தான்.
ஏழாவது பாதைவளைவின் அருகே மலைமேல் நின்றிருந்த நீண்ட பாறைத்துருத்துக்குமேல் ஏறி நின்றுகொண்டு கீழே பார்த்தான். அறியாமலே அங்கே வந்தது ஏன் என அவன் அப்போது அறிந்தான். சென்றமுறை மலையேறும்போது அங்கிருந்துதான் நகரை முழுமையாகப்பார்த்தான். கைகளால் அள்ளி எடுக்குமளவுக்கே சிறிய கூழாங்கல்கூட்டம் என எண்ணியிருந்தான். ஒரு கோட்டை கட்டவேண்டும் என்ற எண்ணத்தை ஆன்மா அப்போது அடைந்திருக்கிறது. அள்ளி எடுக்கும் அந்தக்கைகளை கோட்டை என சித்தம் புரிந்துகொள்ள அத்தனை நேரமாகியிருக்கிறது.
கோட்டை கட்டுவது மிக எளிது என்ற எண்ணம் வந்தது. எண்ணம் அப்படி பெரும் திரைச்சீலை ஓவியம்போல ஒரு காட்சியாக கண்முன் சரிவதை வியப்புடன் எண்ணிக்கொண்டான். மலைகளில் எல்லாம் பாறைக்கூட்டங்கள் சரிந்து நின்றிருந்தன. அவற்றை தாங்கி நிற்கும் மண்ணைத் தோண்டி உருட்டி கீழே போட்டுவிட்டால் கோட்டையை கட்டுவதற்கான கற்கள் நகர் அருகிலேயே வந்து குவிந்துவிடும். சகடங்களில் அவற்றை ஏற்றிக்கொண்டுசென்று கோட்டைமேல் ஏற்றிவிடமுடியும். எருதுகளே போதுமானவை.
அவன் அங்கே நின்று பால்ஹிகபுரியின் கற்கோட்டையை பார்த்தான். தென்கிழக்காக ஷீரபதம் நோக்கி ஒரு வாயில். வடமேற்காக தூமபதம் நோக்கி இன்னொரு பெருவாயில். வடக்கிலும் தெற்கிலுமாக இரு சிறிய வாயில்கள். இரு பெருவாயில்களிலும் மரத்தாலான உயரமான மூன்றடுக்குக் காவல்மாடங்கள். முதலடுக்கில் எரியம்பு விடும் காவலர்கள். இரண்டாம் அடுக்கில் முரசுகளும் மணிகளும். மூன்றாம் அடுக்கில் காவலர்களின் தங்குமிடங்கள். தென்கிழக்குப் பெருவாயிலில் தொடங்கும் அரசவீதி நகர்நடுவே அரண்மனைக்கோட்டையை நோக்கி சென்று உள்நுழையும்போது அதன் இரு கிளைகள் இரண்டாகப்பிரிந்து அரண்மனைக்கோட்டையை வளைத்து பின்னால் வந்து இணைந்து மீண்டும் அரசவீதியாக ஆகி வடமேற்குப் பெருவாயிலை நோக்கி வரவேண்டும்.
விடியத்தொடங்கியபோதும் அவன் அங்கேயே நின்றிருந்தான். கோட்டைக்கான செலவுகள் என்னென்ன என எண்ணிக்கொண்டான். மானுட உழைப்பு மட்டுமே செலவாக இருக்கமுடியும். கோட்டையை குளிர்காலத்தில் கட்டினால் மலைக்குடிகளை மலையிறங்கி வரச்செய்ய முடியும். உடனே புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். கீழ்நிலத்திற்குச்சென்று அங்கு ஏராளமாகக் கிடைக்கும் விலைகுறைவான மதுவை வாங்கி பீப்பாய்களில் ஏற்றி கழுதைகளில் கொண்டுவந்து கூலியுடன் சேர்த்துக்கொடுத்தால் மலைக்குடிகள் வந்து குழுமுவதில் ஐயமே இல்லை. குடியை நிறுத்துவதற்கான செயலையும் குடியைக்கொண்டே செய்யவேண்டியிருக்கிறது.
பால்ஹிகநாடு அந்தக் கோட்டைக்குப்பின்னரே உருவாகும் என எண்ணிக்கொண்டான் இன்றுவரை ஒரு தொன்மையான ஜனபதம்தான் இங்கிருந்தது. மறக்கப்பட்டது. அணுகப்படாதது. ஆகவே தன்னைத் தானே வியந்துகொண்டு ஒளிந்திருந்தது. ஆனால் கோட்டை கட்டும் செய்தி உடனே கீழே சென்றுவிடும். அது ஓர் அறைகூவலாகவே கொள்ளப்படும். பால்ஹிகநாட்டின் கருவூலத்தில் அத்தனை செல்வமிருப்பதை சிந்து கங்கை நிலத்திற்கு முரசறைந்து அறிவிப்பதுதான் அது. ஆனால் அதுவும் நன்றே. எதிரிகள் உருவாகட்டும். எதிரிகளே இந்தப்பழங்குடித்தொகையை அரசாக ஆக்கப்போகிறார்கள். ஊழ் கனிந்ததென்றால் இந்த மலையடுக்குகளின் மேல் ஒரு பேரரசும் எழக்கூடும்.
கோட்டைகட்டும் எண்ணம் உருவானதற்குப்பின்னால் இருந்தது பால்ஹிகக்கூட்டமைப்பைப்பற்றிய எண்ணமே என அவன் மேலும் உணர்ந்தான். அக்கூட்டமைப்பு உருவானபின்னர் அத்தனை எளிதாக கீழ்நிலநாடுகள் படைகொண்டு வரமாட்டார்கள். சௌவீரத்தின் மேல் படைகொண்டுவந்த பாண்டவர்கள் பால்ஹிகப்பேரரசை தொடங்கிவைத்தார்கள் என கீழ்நிலத்து அரசர்கள் அறியட்டும். அவர்களின் அமைச்சர்கள் அவையமர்ந்து சிந்திக்கட்டும். ஆனால்… அவ்வெண்ணம் உருவானதுமே அவன் நீர்ப்பாவையை கையால் கலைப்பதுபோல அழித்தான். அலையடித்து அலையடித்து அது கூடிக்கொண்டது.
கௌரவரை பார்க்கச் செல்வதைப்பற்றி சல்லியர் சொன்னதுமே அவன் நெஞ்சு ஒருகணம் அதிர்ந்தது. ஏன்? அஸ்தினபுரியையோ காம்பில்யத்தையோ பாண்டவர்களையோ கௌரவர்களையோ சுட்டும் எந்தச்சொல்லும் திரௌபதியின் முகமாக மாறிவிடுகிறது. அச்சொற்களுடன் இணைந்த சொற்கள்கூட ஒன்று இன்னொன்றில் முட்டி முட்டி அவளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்கள் அரசியல் பேசியபோது அவன் ஆழம் அவளை எண்ணிக்கொண்டிருந்தது. அதனால்தான் பாண்டவர்களுக்கு எதிரான அரசியலை அவன் தவிர்த்தானா? இக்கோட்டையைப்பற்றிய கனவு அதிலிருந்தே முளைத்ததா? மீண்டும் அவளைப்பார்த்தால் எப்படியோ இப்படியொரு கோட்டையை கட்டப்போவதை சொல்லிவிடுவானா?
புரவியில் ஏறி சரிவில் விரைந்தான். எண்ணங்களை அந்த விரைவில் எழுந்த காற்றே சிதறடித்து பின்னால் வீழ்த்திவிடும் என எண்ணியவன் போல. ஆனால் எண்ணங்கள் அந்த புரவிக்காலடித்தாளத்துடன் சேர்ந்து விரைவுகொண்டன. புரவியை நிறுத்தி மூச்சிரைத்தபோது வந்து சேர்ந்துகொண்டன. உண்மை, அவள்தான். இத்தனை பெண்களை அள்ளி அள்ளிப்போட்டு அவன் நிரப்பிக்கொண்டிருக்கும் வெற்றிடம். கண்களை மூடிக்கொண்டு இமைப்படலத்தில் வெங்குருதி செல்லும் சுழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.
பின்னர் நிறைவுகொண்ட சோர்வுடன் புரவியைத்தட்டி பெருநடையில் செல்லவிட்டான். அப்பால் நகரத்திற்குள் முரசுகளும் கொம்புகளும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. மக்களின் ஓசையும் பின்னணியில் அலையடித்தது. எரியம்புகளைக்கொண்டு மன்னர்களின் அணிவகுப்பு தென்கிழக்கு நுழைவாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். அங்கே சடங்குகள் நடக்கும்போது தன்னை தேடுவார்கள் என்று தெரிந்தாலும் விரைந்து செல்லவேண்டுமென்று தோன்றவில்லை. இல்லை, அதுவல்ல என்று மீளமீள சொல்லிக்கொண்டாலும் நீரலைகளாக அச்சொற்கள் அலையடிக்க அடிப்பாறையென அவ்வுண்மை நின்றுகொண்டிருந்தது.
நகருக்குள் நுழைந்தபோது சற்று திரும்பி சிபிரரின் இல்லம் நோக்கி சென்றான். திரும்பியதுமே அவ்வேளையில் ஏன் அப்படித்தோன்றியது என்று எண்ணிக்கொண்டான். சிபிரரின் இல்லத்தில் எவருமில்லை. அவன் புரவியை விட்டு இறங்கி மூடிய கதவை நோக்கியபடி நின்றான். இல்லத்திற்குப்பின்னாலிருந்து பசுமாட்டை இழுத்துக்கொண்டு வந்த கிழவி நெற்றியில் கைவைத்து நோக்கி “பிதாமகர் இன்னமும் மலையிறங்கி வரவில்லை வீரரே” என்றாள். தலையசைத்துவிட்டு அவன் புரவியில் ஏறிக்கொண்டான்.
அந்த இல்லம் நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே நின்றிருக்கிறது. கட்டுமானங்களில் அதைக்கட்டியவர்களோ அதில் வாழ்பவர்களோ படிவதே இல்லை. அவர்கள் காற்றுபோல அதன்மேல் கடந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. அதைக்கட்டியவர் இன்று நினைவுகூரப்படுகிறார். அவரது பெயரைச் சொல்லியே அக்கல்கட்டுமானம் அங்கே நின்றிருக்கிறது. அவரது அச்சங்கள் தயக்கங்கள் சினங்கள் அனைத்தும் மண்மறைந்துவிட்டன. அவன் ஒரு கோட்டையை கட்டலாம். எதற்காக என்றாலும் அது அங்கே இருக்கும். அவனுடைய எளிய விருப்புவெறுப்புகள் அதிலிருக்காது. அந்தக்கல்லும் மண்ணும் மட்டும் அங்கே இருக்கும். நெடுங்காலத்துக்குப்பின்னரும் அவனுடைய பெயரை அது சொல்லிக்கொண்டிருக்கும்.
அந்த எளிமையான எண்ணம் ஏன் அத்தனை விடுதலையுணர்ச்சியை அளிக்கிறது என அவனே வியந்துகொண்டான். இத்தனை சிறிய விடையால் நிறைவுறச்செய்யும் தத்தளிப்பையா இத்தனை தொலைவுக்கு சுமந்து வந்தோம். இல்லை, எதனாலும் கோட்டை கட்டும் எண்ணத்தை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் அத்தனை பேரூக்கத்துடன் அதை அடைந்துவிட்டான். அதை விட்டு விலகாதிருக்க எளிய அடிப்படைகளைத்தான் உள்ளம் தேடிக்கொண்டிருந்தது, கண்டடைந்தது. அவன் புரவியிலமர்ந்தபடி புன்னகைத்தான். எத்தனை எளியவன் மானுடன். அவ்வெண்ணம் மேலும் விடுதலையை அளித்தது. ஆம், நான் மிக எளியவன். இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் எண்ணப்பேரொழுக்குக்கும் அப்பால் சின்னஞ்சிறு மானுடன். அவ்வளவுதான்.
தென்கிழக்கு நோக்கிச்சென்ற அரசப்பெருவீதியை அடைந்தபோது புரவி திகைத்து நின்று செருக்கடித்தது. வீதிமுழுக்க மக்கள் தோளோடு தோள் என நெருங்கி நின்றனர். பேச்சொலிகள் அடங்கி அவர்கள் எரியம்புகளுக்காக வானை நோக்கிக்கொண்டிருந்தனர். பூரிசிரவஸ் ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். அனைத்திலும் பெரும் வழிபாட்டுணர்வு நிறைந்திருந்தது. முந்தைய இரவெல்லாம் குடித்துக்களித்தவர்கள் வேறு மக்கள் என தோன்றியது. ஆனால் அவ்விரு இயல்புகளுமே மலைக்குடிகளுக்குரியவை அல்லவா என அவன் எண்ணம் மீண்டும் முன்னால் சென்றது.
வேல்களை நீட்டி கூச்சலிட்டபடி ஏழு புரவிவீரர்கள் தென்கிழக்கு வாயிலில் இருந்து வந்தனர். கூட்டம் பிளந்து வழிவிட்டது. “வழியில் நிற்காதீர்கள். புரவிகளை தடுக்காதீர்கள்” என்று அவர்களின் தலைவன் கூச்சலிட்டபடியே சென்றான். அவர்களால் உருவாக்கப்பட்ட இடைவெளி வழியாக பூரிசிரவஸ் உள்ளே நுழைந்துவிட்டான். புரவி தயங்கினால் சென்று சேர முடியாதென்று உணர்ந்தவனாக குதிமுள்ளால் புரவியை குத்திச் செலுத்தினான். அது புரிந்துகொண்டு உரக்கக் கனைத்தபடி மண்ணில் குளம்படிகள் விழுந்து ஒலிக்க விரைந்தோடியது. இருபக்கமும் எழுந்த வசைச்சொற்கள் சிதறி பின்னால் சென்றன.
தென்கிழக்கு வாயிலில் நின்றிருந்த அரசப்படைகளின் பின்பக்கம் அவன் சென்றபோது சுதாமரின் முதன்மைச்சேவகன் சுபகன் அவனை கண்டுவிட்டான். “இளவரசே” என்று கூவியபடி ஓடிவந்தான். “அமைச்சர் நூறுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். முன்னால் செல்லுங்கள்… வாருங்கள்” என்றான். நிரைநிரையாகச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தை வலப்பக்க இடைவெளி வழியாக புரவியில் கடந்து சென்றான். “அணியேதும் செய்யாமலிருக்கிறீர்கள் இளவரசே. இந்த எளிய கம்பளியாடையிலா விழவில் கலந்துகொள்வீர்கள்?” என்றான் சுபகன். “தாழ்வில்லை. நான் காவலன் அல்லவா?” என்றான் பூரிசிரவஸ்.
நீண்ட அரச அகம்படிப்படையினரைக் கடந்து முன்னால் சென்றான். சகநாட்டின் கொடிகளேந்திய காவல்படைகளும் அணிச்சேவகர்களும் சூதர்களும் அணிப்பரத்தையரும் சென்றனர். அதன் பின்னர் மத்ர நாட்டு அணியினர். பின்னர் சௌவீரர். தொடர்ந்து கலாத, துவாரபால குடிகளின் அணிநிரை. அணிஊர்வலத்திற்கு முன்னால் சௌவீரரும் மத்ரரும் நின்றனர். அப்பால் முகப்பில் பால்ஹிகப் படைகள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வந்த அரண்மனைப்பெண்களின் அணி தாலச்சேடியரும் அணிச்சேடியரும் சூழ சென்றுகொண்டிருந்தது. அவன் விழிகள் அத்தனை கூட்டத்திலும் விஜயையை கண்டுகொண்டன. அவள் விழிகள் அவனை சந்தித்ததும் அவள் எங்கிருந்தீர்கள் என விழிதூக்கி வினவினாள். வேலை என அவன் உதடுகளை குவித்துச் சொல்லி புன்னகைசெய்தான்.
ஒன்பது குலக்கொடிகளையும் வரிசையாக ஏந்தி ஒன்பது சேவகர்கள் வெண்புரவிகளில் முன்னால் செல்ல அவர்களுக்குப்பின்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் சென்றனர். சல்லியரும் தியுதிமானும் சுமித்ரரும் சோமதத்தரும் முன்னால் செல்ல அவர்களுக்குப்பின்னால் சகநாட்டு அரசர் பிரதீபனும் கலாத குடித்தலைவர் சுக்ரரும் துவாரபால குடித்தலைவர் துங்கரும் சென்றனர். ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களின் குலங்களின் இளவரசர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
ஃபூரி திரும்பி அவனை நோக்கி சிரித்தான். அவன் திரும்பியதைக் கண்டு தானும் திரும்பிய சலன் பூரிசிரவஸ்ஸைக் கண்டு சினத்துடன் பார்வையை திருப்பிக்கொண்டான். ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவனை நோக்கி வியப்புடன் புன்னகை செய்தனர். அவன் சென்று அவர்கள் நடுவே நின்றுகொண்டான்.
முரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இணைந்து ஒற்றைப் பேரிசையாக ஆகி அது மழைக்காலச் சிந்தாவதி போல பொங்கி நுரைந்து இறங்கிச் சுழித்து கடந்து சென்றது. ருக்மாங்கதன் அவனிடம் “எங்கே சென்றிருந்தீர்கள்? தங்கள் மூத்தவர் கடும் சினம் கொண்டு கூச்சலிட்டார்” என்றான். ருக்மரதன் “எங்களுக்குத்தெரியும் என ஏன் அவர் எண்ணுகிறார் என்றே தெரியவில்லை மூத்தவரே” என்றான். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.
ஏழன்னையர் கோயிலின் பூசகன் தோளில் விரித்திட்ட சடைகளுடன் செம்பட்டாடை மேல் செந்நிறக்கச்சையும் கையில் தாலமுமாக அரசர்களை நோக்கி வந்தான். சன்னதம் கொண்டவன் போல அவன் மெல்ல துள்ளிக்கொண்டிருந்தான். செந்தூரம் பூசப்பட்ட முகத்தில் சிவந்த விழிகளில் தெய்வ வெறி எழுந்திருந்தது. அவன் அரசர்களை நெருங்கும்போது மறுபக்கம் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் சிலர் வேல்களுடன் ஓடுவதை பூரிசிரவஸ் கண்டான். யாரோ ஏதோ கூவினர். சல்லியர் திரும்பிப்பார்த்தார். வீரர்களின் காவலைக் கடந்து யாரோ ஆயனோ வேளானோ அவ்வழி புகுந்துவிட்டிருக்க வேண்டும் என பூரிசிரவஸ் எண்ணினான். “இந்த மூடர்களின் காவல்…” என சலன் சொன்னதுமே அது யாரென பூரிசிரவஸ் கண்டுகொண்டான்.
“நிறுத்துங்கள்… அவர்தான் பால்ஹிகர். நம் பிதாமகர்!” என்று அவன் கூவினான். அனைவரும் திரும்பி நோக்கினார்கள். “நிறுத்துங்கள்… அவர் நமது பிதாமகர்… மலையிறங்கும் நம் பிதாமகர்” என்று கைதூக்கிக் கூவியபடி பூரிசிரவஸ் மத்ரரையும் சௌவீரரையும் கடந்து மறுபக்கம் ஓடினான். வேலுடன் பாய்ந்த வீரர்கள் திகைத்து நின்றனர். முரசொலியும் முழவொலியும் நின்றன. கொம்புகள் தழைந்தன. வியப்பொலிகள் மட்டும் நிறைந்த அமைதியில் கைநீட்டி “பிதாமகர்!” என்று கூவியபடி பூரிசிரவஸ் ஓடினான்.
பால்ஹிகரும் சிபிரரும் ஒரு மலைமகனும் வந்துகொண்டிருந்தனர். பால்ஹிகர் பெரிய காட்டெருது ஒன்றை தன் தோளில் போட்டு அதன் கால்களை இருகைகளாலும் பற்றியிருந்தார். மலைமகன் தோளில் ஒரு மறிமான் கிடந்தது. பையையும் படைக்கலங்களையும் சிபிரர் வைத்திருந்தார். அந்தப்பெரிய அணிநிரையைக் கண்டு திகைத்து அவர்கள் அங்கேயே நின்றனர். பூரிசிரவஸ் திரும்பி இசைக்கலங்களை ஏந்தியவர்களிடம் கைகாட்டினான். கூட்டத்தின் வாழ்த்தொலிகளும் பேரிசையும் இணைந்து வெடித்தெழுந்து காற்றை நிறைத்தன.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்