பகுதி 7 : மலைகளின் மடி – 11
தூமபதத்தின் நுழைவாயிலை அஸ்வயோனி என்று பாடகர்கள் அழைப்பதுண்டு. மிக அருகே நெருங்கிச்சென்று அஸ்வபக்ஷம் என அழைக்கப்பட்ட கரியபாறைகளின் அடர்வை கடந்தாலொழிய அந்த சின்னஞ்சிறிய பாறையிடைவெளியை காணமுடியாது. குதிரையே விரும்பி வாலகற்றி அதை காட்டவேண்டும் என்பார்கள் பாடகர்கள். அயலவரைக் கண்டால் தன்னை மூடிக்கொண்டுவிடும்.
மலரிதழ்கள் போல எழுந்து விரிந்து நின்ற ஆறு பெரிய பாறைகளை கடக்கும்போது பேரோசையுடன் கீழே சரிந்துசெல்லும் சிந்தாவதியின் நீரோசை எழத்தொடங்கும். துமிப்புகை மூடிய இரண்டு பெரிய பாறைகளுக்கும் நீர்வழிந்து கருமையாக பளபளக்கும் நான்கு பாறைகளுக்கும் நடுவே சாட்டை கீழே விழுந்து கிடப்பதுபோல செல்லும் மூன்று வளைவுகள் கொண்ட பாதைக்கு அப்பால் தூமபதத்தின் பெரிய பாறைவெடிப்பு பிறப்புவாயில் என தெரியும்.
மேலே நின்றிருக்கும் பெரிய சாலமரம் ஒன்றின் வேர்கள் பாறைவிரிசல்களில் ஊறி வழிந்து தொங்கியாடும். அந்த வெடிப்புக்குள் நுழைவது வரை அதன் வழியாக மறுபக்கம் செல்லமுடியுமா என்ற ஐயம் எழும். பத்து குதிரைகள் ஒரேசமயம் உள்ளே நுழையும் அகலமும் ஐம்பது ஆள் உயரமும் கொண்டது அது என்று நுழைந்த பிறகுதான் தெரியவரும். இருபக்கமும் நீர் வழியும் பாறைகள் இருதிசை வெயிலையும் அறிந்தவை அல்ல என்பதனால் அங்கே இருளும் குளிரும் நிறைந்திருக்கும். ஒவ்வொருமுறையும் ஆழ்ந்த நீர்நிலை ஒன்றில் மூழ்குவதாகவே அதை பூரிசிரவஸ் உணர்வான்.
அதன் வழியாக மறுபக்கம் சென்றதுமே அதுவரை இருந்த குளிர் திடீரென்று குறைந்து பிறிதொரு நிலத்துக்கு வந்துவிட்டதை உணரமுடியும். அதுவரை இருந்த மங்கலான காற்றுவெளி கிழிந்து விலகி கண்களைக் கூசி நிறைத்து கண்ணீர் வழியச்செய்யும். ஒளிமிக்க வானம் கண்ணெதிரே மிக அண்மையில் என வளைந்து சென்று நிலத்தில் படிந்திருக்கும். சிந்தாவதியின் இருபக்கமும் பரவிய பச்சைவெளியில் இருந்து எழுந்து வானில் சுழலும் பறவைகளையும் இல்லங்களில் இருந்து எழுந்து மெல்ல பிரிந்துகொண்டிருக்கும் அடுபுகைக் கற்றைகளையும் காணமுடியும். மெல்லிய ஒலிகள் எழுந்து காற்றில் சிதறி மலைகளில்பட்டு திரும்பி காதுகளில் விழும். தெளிவாகக் கேட்பவை மணியோசைகள் மட்டுமே.
வலப்பக்கம் சரிந்துகொண்டிருந்த சிந்தாவதியின் அருவியை ஒட்டி இறங்கிச்சென்ற பாதையில் குதிரையில் செல்லும்போதே பூரிசிவரஸ் கீழே நகரத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த விழாக்களியாட்டுகளை பார்த்துவிட்டான். நகரமுகப்பிலிருந்து எரியம்புகள் எழுந்து வெடித்து அனல்மலர்களை விரித்து அணைந்தன. முரசொலியும் கொம்போசையும் மெல்லிய அதிர்வுகள் போல கேட்டுக்கொண்டிருந்தன. ரீங்காரமிட்டபடி துயிலும் பூனை போன்றிருந்தது நகரம். தெருக்களெங்கும் மக்கள் நெரித்துக்கொண்டிருப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது. கொடிகளும் மக்களின் மேலாடைகளும் ஒன்றான வண்ணக்கலவை நகரெங்கும் விரிந்தும் வழிந்தும் ததும்பியது.
ஒவ்வொருமுறை மலையிறங்கும்போதும் அந்த விழிநிறைக்கும் வான்வளைவும் நகரத்தின் சின்னஞ்சிறிய வண்ணக்குவியலும் அளிக்கும் உவகையை அவன் உடலெங்கும் உணர்வதுண்டு. அப்படியே மலையிலிருந்து பாய்ந்து இறகுபோல இறங்கி நகரில் சென்று நின்றுவிடவேண்டுமென விழைவான். ஆனால் அப்போது சலிப்புதான் எழுந்தது. திரும்பிச்சென்று பிரேமையின் கல்வீட்டின் இனிய வெம்மைக்குள் அமர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. மலைக்குமேல் நிறைந்திருக்கும் இனிய அமைதிக்கு செவியும் அகமும் பழகிவிட்டதுபோல தொலைவில் கேட்ட அந்த ஒலிச்சிதறல்களே அமைதியிழக்கச்செய்தன.
இன்னமும் மூன்றுநாட்கள். ஆம், மூன்றுநாட்கள். அதற்குமேல் நகரில் இருக்கலாகாது. விழவுமுடிந்ததும் பிதாமகரைத் தேடுவதாக அறிவித்துவிட்டு மலையேறி வந்துவிடவேண்டும். இந்தக்கோடையை முழுக்க பிரேமையின் வெம்மையான பெரிய கைகளின் அணைப்புக்குள் கழிக்கவேண்டும். அவள் இதழ்களின் மெல்லிய தழைமணத்தை அவள் தசைமடிப்புகளில் இருக்கும் பாசிமணத்தை அத்தனை அண்மையில் உணர்ந்தபோது புரவியிலிருந்து விழுந்துவிடுவதைப்போல ஓர் உணர்வெழுச்சியை அடைந்தான்.
சரிவுகளில் மிக விரைவாகவே புரவிகள் இறங்கிச்சென்றன. நிரைநிலத்தை அடைந்தபோது மலைச்சரிவுகளில் மலைநிழல்களும் முகில்நிழல்களும் மறைந்து வானம் மங்கலடையத் தொடங்கியிருந்தது. சிந்தாவதியின் கரைகளில் இலைகள் பசுங்கருமை கொள்ளத்தொடங்கி, பூசணிமலர்கள் அகல்சுடர்களாக ஒளிவிட்ட காய்கறித்தோட்டங்களில் மிகச்சிலரே இருந்தனர். அந்தியில் மலையிறங்கி வரும் விலங்குகளை அகற்றுவதற்காக விறகுகளை அடுக்கி தீயெழுப்பிக்கொண்டிருந்தனர். அவற்றின் தழலின் செம்மை நிறத்தைக் கண்டபோதுதான் இருட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
முகில்களற்ற தென்கிழக்கு வானில் செம்மை பரவாமலேயே இருள் வந்தது. நகரிலிருந்து எழுந்த எரியம்புகளின் ஒளி வானின் இருளை மேலும் காட்டியது. பட்டிகளில் முன்னரே அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் நடுவே மூட்டப்பட்டிருந்த தழலுக்கு அருகே முட்டி மோதி ஒரே உடற்பரப்பாக மாறி நின்று சீறல் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. நகரின் மணம் வரத்தொடங்கியது. கன்றுத்தொழுவுக்கும் ஆட்டுப்பட்டிகளுக்கும் ஓநாய்க்குகைகளுக்கும் போல மனிதர்களுக்கென ஒரு மணமிருப்பதை பூரிசிரவஸ் அறிந்தான்.
நகரின் எல்லைக்குள் நுழைந்ததும் பூரிசிரவஸ் மெல்ல தன் சோர்வை இழந்து அகவிரைவை அடைந்தான். வெயிலில் காய்ந்துகொண்டிருந்த சாணிமணம் நிறைந்த தெருக்களில் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் உவகை நிறைவதை உடலசைவுகளிலேயே உணர்ந்தான். அதை அவன் புரவியும் அறிந்தது. பெரும்பாலும் ஆளொழிந்துகிடந்த தெருக்களில் குதிரையை குளம்படியோசை சுவர்களில் பட்டு எதிரொலி எழுப்ப விரையச்செய்து மையச்சாலையை அடைந்தான்.
குளிர் எழத்தொடங்கியிருந்தாலும் அத்தனை வணிகர்களும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். மலைகளில் இருந்து இறங்கிவந்த மக்கள் தடித்த கம்பளியாடைகளுடன் கரடிகள் போல ஆடியசைந்து தெருக்களை நிறைத்திருந்தனர். பொதுவாகவே திறந்தவெளிமக்கள் ஒருவருக்கொருவர் கூவிப்பேசுபவர்கள். விழவுநேரத்தின் களிவெறியே அவர்களை மேலும் கூச்சலிட்டுப் பேசச்செய்தது. மிக அருகே ஒருவன் இன்னொருவனை அழைத்த ஒலியின் காற்றசைவையே காதில் கேட்க முடிந்தது.
நகரத்தின் அத்தனை தெருக்களிலும் அனற்குவை மேல் ஏற்றிவைக்கப்பட்ட பெரிய செம்புக்கலங்களில் மது விற்கப்பட்டதை பூரிசிரவஸ் கண்டான். இந்தமக்கள் குளிர்காலம் முழுக்க மதுவுண்டு மயங்கிக்கிடக்கிறார்கள். கோடையில்தான் சற்று உடலசைத்து வேலைசெய்கிறார்கள். அப்போதுகூட அவ்வப்போது மதுக்களியாட்டம் தேவையாகிறது. அமைதிநிறைந்த அசைவற்ற மலைகளை நோக்கி நோக்கி அவர்களின் சித்தமும் அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது. அகத்தின் அசைவின்மையை அவர்கள் மதுவைக்கொண்டு கலைத்துக்கொள்கிறார்கள்.
விதவிதமான மதுமணங்கள் ஒன்றாகக் கலந்து குமட்டலெடுக்கச்செய்தன. வஜ்ரதானியம், கோதுமை, சோளம் ஆகியவற்றின் மாவை கலந்து புதைத்து புளித்து நொதிக்கவைத்து எடுத்த சூரம் என்னும் மதுவே பெரும்பாலான கலங்களில் இருந்தது. இன்கிழங்கை புளிக்கவைத்து எடுத்த சுவீரம். பலவகையான காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சோமகம். ஊனை புளிக்கவைத்து எடுக்கப்பட்ட துர்வாசம். அத்தனைக்கும் மேலாக அகிபீனாவின் இலைகளைக் கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம். ‘காதலை புதைத்துவையுங்கள் கன்னியரே. அது கள்ளாகி நுரையெழட்டும். நினைவுகளை நொதிக்கவையுங்கள் காளையரே. அவை மதுவாகி மயக்களிக்கட்டும்.’ மலைப்பாடகனின் வரிகளை நினைவுகூர்ந்தான்.
நினைவுகூர்ந்தானா இல்லை வெளியே அவற்றை கேட்டானா என திகைக்கும்படி அவ்வரிகளை அப்பால் எவரோ பாடிக்கொண்டிருந்தனர். தெருக்களில் மதுவருந்தாத ஆணையோ பெண்ணையோ பார்க்கமுடியவில்லை. ஒருவரோடொருவர் பூசலிடுகிறார்களா குலவிக்கொள்கிறார்களா என்றே உய்த்தறிய முடியவில்லை. பாதையை முழுமையாக மறித்து நின்று கைகளை ஆட்டி பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் வாயில் ஊறிய கோழையை துப்பிக்கொண்டும் இருந்தனர். பல இடங்களில் ஒற்றன் அவர்களை அதட்டியும் காலால் உதைத்தும் விலக்கித்தான் அவனுக்கு வழியமைக்க முடிந்தது. புரவிகளில் உரக்கப்பேசியபடி சென்ற படைவீரர்களும் மதுவருந்தியிருந்தனர். அவர்களில் எவருமே தங்கள் இளவரசனை அடையாளம் காணவில்லை. அல்லது கண்டாலும் பொருட்டாக எண்ணவில்லை.
பூரிசிரவஸ் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அங்கே கூடியிருந்தவர்களின் குரல்கள் கலந்த முழக்கம் எழுவதை கேட்டான். சுவர்களிலிருந்தெல்லாம் அந்த ஓசை எழுந்து தெருக்களை ரீங்கரிக்கச்செய்தது. முற்றமெங்கும் நகர்மக்கள் கூடி களிமயக்கில் கூச்சலிட்டு சிரித்து ஆடிக்கொண்டிருந்தனர். உடலசைவுகளில் இருந்து அங்கே ஒரு பெரும் பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. பெண்களும் குழந்தைகளும்கூட களிமயக்கில் இருக்க நடுவே சிலகுதிரைகளுக்கும் மது புகட்டப்பட்டிருந்தது அவை தலையை அசைத்து இருமுவது போன்ற ஒலியெழுப்பியதில் தெரிந்தது. ஆங்காங்கே எரிந்த அனலைச் சூழ்ந்து சிறிய குழுக்களாக கூடி நின்று கைகளை கொட்டியபடி இளம்பெண்களும் ஆண்களும் பாடி ஆட, அருகே முதியவர்கள் நின்றும் அமர்ந்தும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
ஒற்றன் இடைகளையும் விலாக்களையும் தோள்களையும் பிடித்துத்தள்ளி உருவாக்கிய இடைவெளி வழியாக முற்றத்தில் அவன் நுழைந்ததும் அவன் புரவியை சுட்டிக்காட்டிய ஒருவன் “இவன்… இவன்…” என்று சொல்லி சிரிக்கத்தொடங்கினான். இன்னொருவன் அவனை நோக்கி வாயில் கைவைத்து “உஸ்ஸ்!” என்றான். புருவங்களை நன்றாகத் தூக்கி வாயை இறுக்கியிருந்த ஒருவன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தான். இருவர் திரும்பத்திரும்ப சில சொற்களை பேசமுயல ஒருவன் குதிரையை நோக்கி வந்து அப்படியே கீழே விழுந்தான். பலர் குதிரைக் கனைப்பொலி எழுப்பி சிரிக்க சிலர் திரும்பிப் பார்த்து அவனை சுட்டிக்காட்டியபின் மேலே சிந்தனை எழாமல் நின்றனர். அப்பால் எவனோ ஒருவன் கால்தளர்ந்து மண்ணில் விழுந்தான்.
அவர்கள் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட முறையில் இருந்தே அவர்கள் அருந்தியிருந்த மதுவை உய்த்தறிய முடியும் என்று தெரிந்தது. ஓசையை வெறுத்தவன் ஊன்புளித்த துர்வாசத்தை அருந்தியிருப்பான். அதுதான் செவிப்பறையை நொய்மையாக்கி ஒலிகளை பலமடங்கு பெருக்கிக் காட்டி உடலை அதிரச்செய்யும். சுவீரம் தலையை எடைகொண்டதாக ஆக்கி செவிகளை மூடிவிடும். அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள். சுவீரம் குடித்தவனும் துர்வாசம் குடித்தவனும் இணைந்தால் அங்கே அடிதடி நிகழாமலிருக்காது.
பத்துப்பதினைந்துபேர் அமர்ந்து விம்மியழுதுகொண்டிருந்த படிகளில் ஊடாகப் படுத்திருந்தவர்கள் மீது காலடி படாமல் எடுத்து வைத்து பூரிசிரவஸ் மேலே சென்றான். அரண்மனையின் இடைநாழியில்கூட படைவீரர்கள் மயங்கி விழுந்து துயின்றுகொண்டிருந்தனர். ஒரே ஒரு வாள் மட்டும் தரையில் தனியாகக் கிடந்தது. சிறிய மரக்கதவுக்கு அப்பால் இரு வீரர்கள் குழறிப்பேசிப் பூசலிடும் ஒலி கேட்டது. அரண்மனையே காவலின்றி திறந்து கிடந்தது. பந்தங்கள் தங்கள் நிழல்களுடன் அசைந்தாடிக்கொண்டிருக்க தூண்கள் நெளிந்தன.
அரண்மனையிலும் எவரும் தன்னிலையில் இருக்க வழியில்லை என அவன் எண்ணிக்கொண்டான் அவன் காலடியோசை கேட்டு வந்து தலைவணங்கிய சேவகனிடம் “அமைச்சர் எங்கிருக்கிறார்?” என்றான். ”அவையில் இருக்கிறார் அரசே” என்றான். அவனுடைய இறுக அழுந்திய வாயை நோக்கியதும் பூரிசிரவஸ் தெரிந்துகொண்டான், அவனும் மது அருந்தியிருக்கிறான் என்று. ”மூத்தவர்?” என்றான். அவன் புருவம் ஒன்றைத் தூக்கி “அவர்…” என்றபின் “தெரியவில்லை இளவரசே, நான் உடனே சென்று…” என்று கையை நீட்டினான்.
அவையில் அவன் நுழைந்தபோது சுதாமர் அங்கே இருக்கைகளை சீரமைத்துக்கொண்டிருந்த சேவகர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் வணங்கி “வருக இளவரசே” என்றார். “நேற்று முழுக்க தியுதிமான் மூன்றுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். அவரும் மகளும் இங்கு வந்திருக்கையில் தாங்கள் இங்கில்லாமலிருந்ததை ஏதோ உளப்பிழை என அவர் எண்ணுகிறார் என்று தெரிந்தது” என்றார். “ஆம், அது இயல்பே” என்றான் பூரிசிரவஸ். “ஏதோ விழா என்றான் ஒற்றன். என்ன நடக்கப்போகிறது?”
“இனிமேல் காத்திருக்கவேண்டியதில்லை என்று சல்லியர் நினைக்கிறார். பிதாமகர் மலையிலிருந்து எப்போது மீள்வார் என்று தெரியவில்லை. மீள்வாரா என்றும் ஐயமிருக்கிறது. ஆகவே அவருக்காக ஒரு பாதுகைக்கல்லை நாட்டி பூசை செய்து மீளலாம் என அவர் சொன்னார்.” “பிதாமகர் நம் நாட்டுக்கு வந்திருப்பதை நமது குலங்கள் நம்பவேண்டுமே” என்றான் பூரிசிரவஸ்.
“ஏற்கெனவே நம்பிவிட்டார்கள். சிபிரரின் இல்லத்தில் அவர் தங்கியதை அக்குடிப்பெண்கள் சொல்லி பிறர் அறிந்திருக்கிறார்கள். ஒருநாளில் அது பெரிய புராணமாக மாறி பொங்கி எழுந்துவிட்டது. மலைக்குடிகள் அனைவரும் அறிந்துவிட்டார்கள். இன்று காலைமுதலே மலைகளில் இருந்து மழைநீர் போல மக்கள் இறங்கிவந்து நகரை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். புதைக்கப்பட்ட அத்தனை மதுக்கலங்களும் அகழப்பட்டுவிட்டன. நாளை காலைக்குள் நகர் முழுமையாகவே நிறைந்துவிடும். இனி நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை” என்றார் சுதாமர்.
பூரிசிரவஸ் பெருமூச்சுடன் ”இப்படி ஒரு வருகைக்காக மக்கள் காத்திருந்தார்கள் போலும்” என்றான். “இளவரசே, மக்கள் புராணங்களை நம்புகிறார்கள். உண்மைகள் மேல் தீராத ஐயம் கொண்டிருக்கிறார்கள் என்றார் சல்லியர். அவர்களுக்கு புராணங்களை அளிப்போம். அதன்பொருட்டு அவர்கள் வாளுடன் வருவார்கள் என்றார்.” பூரிசிரவஸ் “சுதாமரே, வரும்போது பார்த்தேன். மிக எளிய மக்கள். கிடைக்கும் தருணங்களிலெல்லாம் குடித்து கொண்டாட விழைபவர்கள். இவர்களைத் திரட்டி வாளேந்தச்செய்து களத்தில் கொன்று நாம் அடையப்போவது என்ன?” என்றான்.
“இல்லையேல் இந்த வாழ்க்கையை இவர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியாது இளவரசே. ஒரு பேரரசு நம்மை வென்று நம் மீது கப்பம் சுமத்தினால் இவர்களை அடிமைகளாக ஆக்கி நாம் மலைகளைக் கறந்து பொன்னீட்டவேண்டியிருக்கும். இவர்கள் இப்படி வாழவேண்டுமென்றால் வாளேந்தியாகவேண்டும்” என்றார். அது தன் எண்ணம் என்பதுபோல அத்தனை அண்மையாக இருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றான். “அரசாக திரள்வதா அழிவதா என்ற வினா மட்டுமே இம்மக்கள்முன் இன்று உள்ளது” என்றார் சுதாமர்.
“நாளை என்ன சடங்குகள்?” என்றான் பூரிசிரவஸ். “புலரி முதல் வேள்வி தொடங்கிவிடும். எரியெழலும், கதிர்வணக்கமும், இந்திரகொடையும் முடிந்தபின் பித்ருசாந்திக்கான பிண்டவேள்வி. அதன்பின்னர் வேள்வியன்னத்துடன் ஊர்வலமாகச் சென்று ஏழன்னையர் ஆலயத்தின் வலப்பக்கம் பீடம் அமைத்து நடப்பட்டுள்ள பாதுகைக்கல்லுக்கு அதைப்படைத்து நான்கு வேந்தரும் மூன்று குடியினரும் தங்கள் முடியும் கோலும் தாழ்த்தி பாதவழிபாடு செய்வார்கள். வைதிகர் வலம்வந்து வாழ்த்தி திரும்பியபின்னர் ஏழு குருதிக்கொடைகள். குருதியன்னத்தை மன்னரும் குலத்தலைவர்களும் குடிகளும் கூடி பகிர்ந்துகொள்வார்கள்” என்றார் சுதாமர்.
“சல்லியர் ஐந்து நெறிகளை வகுத்துள்ளார்” என்று சுதாமர் தொடர்ந்தார். ”இக்கொடைநிகழ்வுக்குப்பின் பால்ஹிககுலத்தின் ஒவ்வொரு குடியும் தனது கொடியுடன் பிற ஒன்பது குலங்களின் கொடிகளையும் சேர்த்தே தங்கள் ஊர்முகப்பிலும் அரண்மனை முகடிலும் பறக்கவிடவேண்டும். அத்தனை குடிநிகழ்வுகளிலும் பத்துகுலங்களில் இருந்தும் குடிகள் பங்கெடுக்கவேண்டும். முதன்மை முடிவுகள் அனைத்தையும் பத்து குலங்களின் தலைவர்களும் மன்னர்களும் கூடியே எடுக்கவேண்டும். தனியாக எந்த நாட்டுக்கும் தூதனுப்பவோ தூது பெறவோ கூடாது. பால்ஹிகக் குடிக்கு வெளியே குருதியுறவு கொள்வதாக இருந்தால் பத்துகுலங்களில் இருந்தும் ஒப்புதல் பெறவேண்டும்.”
”பத்து குலங்களிலிருந்து எவையெல்லாம் இப்போது இதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன?” என்றான் பூரிசிரவஸ். “சிறுகுடிகளில் கரபஞ்சகம் இன்னமும் வந்துசேரவில்லை. குக்குடம் வருவதாக தூதனுப்பியிருக்கிறது. பிற இரு குலங்களின் தலைவர்களும் தங்கள் அகம்படியினருடனும் பரிசுகளுடனும் வந்துவிட்டனர். கலாதம் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறது. துவராபாலம் சில கட்டளைகளை போடுகிறது. பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சுதாமர்.
“அரசர்களில் சகர் வந்துவிட்டனர். யவனர் இதுவரை எந்தச்செய்தியையும் அளிக்கவில்லை. துஷாரர் வந்துகொண்டிருப்பதாக பறவைச்செய்தி வந்தது. அவர்கள் விடியலில் ஷீரபதத்தருகே வரக்கூடும்.” பூரிசிரவஸ் தலையசைத்து “நல்ல செய்திதான் அமைச்சரே. பிறர் வந்துவிட்டதாக அறிந்தால் யவனர் வந்துவிடுவார்கள். இரு மலைக்குடிகளையும் சற்று அழுத்தம் கொடுத்தால் சேர்த்துக்கொள்ள முடியும்.”
“ஆம், நாளை மாலை இங்கே கூடும் பேரவைதான் பால்ஹிககுலத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்யவிருக்கிறது. சல்லியரையே இப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்பது சௌவீரரும் தங்கள் தமையனும் ஏற்றுக்கொண்ட முடிவாக இருக்கிறது. சகநாட்டு அமைச்சர்களிடம் அதைப்பற்றிய குறிப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் அரண்மனையின் அவைக்கூடத்தில் இப்போது அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு வேறுவழியில்லை” என்றார் சுதாமர். “ஆம், அதற்கு முன் அவர்கள் துஷாரரின் கருத்தென்ன என அறிய விழைவார்கள்” என்றான் பூரிசிரவஸ்.
மறுபக்கம் அரசமாளிகைக்குள் செல்லும் சிறுவாயில் திறந்து சலன் விரைந்து உள்ளே வந்தான். “சுதாமரே” என்றவன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்து ”வந்துவிட்டாயா? உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நாளை பாதுகைக்கல் பூசையில் அனைத்து இளவரசர்களும் வாளுறுதி பூணவேண்டும் என்றார் சல்லியர். ஆகவேதான் உன்னை வரச்சொன்னேன். இன்று உனக்கு ஓய்வில்லை. நகருக்குள் சென்று செல்லும் வழிகளை சற்றேனும் சீரமைக்க முடியுமா என்று பார். சென்றமுறை சாலைகளில் நின்ற பசுக்களையும் குடிகாரர்களையும் கடந்து வெளியே செல்ல இரண்டு நாழிகை ஆகிவிட்டது” என்றான்.
பூரிசிரவஸ் ”வேண்டுமென்றால் பசுக்களை அகற்றுபவர்களுக்கு ஏதேனும் பரிசுகளை அறிவிக்கலாம்” என்றான். “எத்தனை பசுக்கள் என்று என்ன கணக்கு இருக்கிறது? குடிகாரர்கள் பசுக்களை கொண்டுவந்தபடியே இருப்பார்கள். நமது வீரர்கள் பின்பக்கம் பசுக்களை அவர்களுக்கு பாதிப்பணத்துக்கு கொடுத்தபடியும் இருப்பார்கள். கருவூலமே ஒழிந்துவிடும்” என்றான் சலன்.
சுதாமர் புன்னகைக்க பூரிசிரவஸ் “அப்படியென்றால்…” என்றான். கையை வீசித்தடுத்து “சாலையில் நின்றிருக்கும் பசுக்களில் சிலவற்றை பிடித்துக்கொண்டு வரச்சொல். அவற்றின் உரிமையாளர்கள் வந்து தடுத்தால் நாளை வைதிகர்களுக்கு ஆயிரத்தெட்டு பசுக்களை அரசர் அறக்கொடையாக அளிக்கவிருப்பதாகவும் அரண்மனைப்பசுக்கள் போதவில்லை என்றும் சொல்லும்படி ஆணையிடு. காலையில் சாலையில் ஒரு பசுகூட இருக்காது” என்றபின் சலன் “யவனரும் கிளம்பிவிட்டார் அமைச்சரே. செய்தி வந்துவிட்டது” என்றான்.
”நன்று” என்றார் சுதாமர். “ஆம். ஆனால் யவனர் ஏன் தயங்கினார், அவருக்கு ஏதேனும் வேறு திட்டங்கள் இருந்தனவா என அறிந்தாகவேண்டும். அதை அவர் இங்கே எவ்வகையில் வெளிப்படுத்துவார் என்பதும் கருத்திற்குரியது” என்றான் சலன். சுதாமர் “ஆம், அதை அவர் இங்கே வந்தபின்னர்தான் உய்த்துணரமுடியும்” என்றார். சலன் “நான் தந்தையிடம் இதைப்பற்றி பேசவேண்டும். அவர் மதுவருந்திவிட்டு படுத்துவிட்டார். சற்று நேரம் கடந்தபின் நீங்களே சென்று அவரை எழுப்பிவிட்டு எனக்குத்தெரிவியுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான்.
அவனைப் பார்த்தபின் பூரிசிரவஸ் புன்னகையுடன் “இப்போதே ஒருவரை ஒருவர் வேவுபார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமை எவ்வளவுநாள் நீடிக்கும்?” என்றான். “நீடிக்கும் இளவரசே, இதை உருவாக்குவது அச்சம். ஒற்றுமைமூலம் அச்சம் அகல்வதை அறிந்தபின் பிரிந்துசெல்லமாட்டார்கள். தொடர்ந்து மாறிமாறி ஐயுற்றும் வேவுபார்த்தும் விவாதித்தும் சேர்ந்தே இருப்பார்கள். அரசக்கூட்டுகள் அனைத்தும் இவ்வகையினவே” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்து “நான் உணவருந்தி சற்றுநேரம் படுத்துவிட்டு நகருக்குள் செல்கிறேன்” என்றான்.
தன் அறைக்குள் சென்று ஆடைகளை மாற்றாமலேயே படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பனிமூடிய மலைச்சரிவுகளை கண்டான். பிரேமையின் வெண்ணிறமான பேருடல். பெரிய கைகள். எத்தனை பெரிய கைகள். அவள் ஆடையின்றி இருக்கையில் மூன்று உடல்கள் நெருங்கியிருப்பதுபோலவே தோன்றுவன. அவளுக்குப்பிறக்கும் மைந்தனும் பெருந்தோள்கொண்டவனாக இருப்பானா? அவன் உடல் சிலிர்த்து உடலை ஒடுக்கி இறுக்கிக்கொண்டு புன்னகைத்தான். இருளுக்குள் மூடிய கண்களுக்குள் அத்தனை ஒளி எங்கிருந்து வந்தது? உள்ளேதான் அத்தனை ஒளியும் இருக்கிறதா? அந்த ஒளிப்பெருக்கை கண்கள் வழியாக மொண்டு வந்திருக்கிறானா?
அவன் சிபிநாட்டின் செந்நிறப்பெரும்பாலையில் நடந்துகொண்டிருந்தான். அவன்மேல் பனிக்கட்டிகள் விழுந்தன. ஒரு சிரிப்பொலி. திரும்பிப்பார்க்கையில் விஜயையை கண்டான். சிறிய கண்கள். சிறிய பற்கள். கேழைமான் போன்ற சின்னஞ்சிறு உடல். கேழைமான் போலவே அவள் துள்ளி விரைந்தோடினாள். நில் நில் என்று கூவியபடி அவன் அவளைத்தொடர்ந்து ஓடினான். நான்குபக்கமிருந்தும் ஏராளமான பெண்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். எல்லோருமே அவள் முகம் கொண்டிருந்தனர். ஆடிப்பாவைப்பெருக்கம் போல. அவன் திகைத்து ஒவ்வொரு முகமாக நோக்கி சுழன்றான். அவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்க விழித்துக்கொண்டான். இருண்ட அறையில் சற்று நேரம் விழி திறந்து கிடந்தபின் எழுந்தான்.
இன்னொரு நாள் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இன்னமும் நடுநிசி ஆகவில்லை என வெளியே கேட்ட ஓசைகளிலிருந்து அறிந்தான். இன்று ஒருநாள். நாளை சௌவீரரும் மத்ரரும் கிளம்பிச்செல்வார்கள். பிறரும் அன்றே கிளம்பக்கூடும். அவர்கள் கிளம்பவில்லை என்றாலும் தாழ்வில்லை. அவன் கிளம்பமுடியும். மலைப்பாதையில் சுழன்று ஏறிச்செல்லும் அவனை அவனே கண்டான். காற்றுப்பாதையில் செல்லும் செம்பருந்து போல. முகில்களுக்கு நடுவே கல்லடுக்கிக் கட்டப்பட்ட ஒரு அழகிய வீடு. அந்திவெயிலில் பொன்னென மின்னுவது. அங்கே வெண்முகில்களால் ஆன உடல்கொண்ட ஒரு பெண். ஆம், இன்னும் இருநாட்கள்.
வெளியே வந்தபோது சேவகன் வந்து வணங்கினான். “ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். நகரை பார்த்துவருகிறேன்” என்றான். சேவகன் கொண்டுவந்த வெந்நீர்த்தாலத்தில் முகம் கழுவி வேறு ஆடைகளை அணிந்துகொண்டு இடைநாழி வழியாக நடந்தபோது சிரிப்பொலி கேட்டது. சில கணங்கள் நின்றபின் மெல்ல சென்று மலர்வாடியை பார்த்தான். அங்கே சேடியர் சூழ விஜயையும் சித்ரிகையும் வேறு மூன்று இளவரசிகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை கண்டான். அனைவருமே சற்று மதுமயக்கில் இருப்பது சிரிப்பொலியில் இருந்து தெரிந்தது. யாரோ ஏதோ தாழ்ந்த குரலில் சொல்ல மீண்டும் சிரிப்பொலி வெடித்தெழுந்தது. ஒருத்தி எழுந்து அப்பால் ஓட பிறர் சிரித்தபடி அவளை துரத்திப்பிடித்துக்கொண்டனர்.
அவன் இடைநாழி வழியாக சென்றபோது சேவகன் வந்து “மூத்தவர் தங்களை அழைத்துவரச்சொன்னார்” என்றான். ”எங்கே இருக்கிறார்கள்?” என்றான். “சிற்றவைக்கூடத்தில். அங்கே மத்ரரும் அவரது இளையவரும் சௌவீரரும் இருக்கிறார்கள்” என்றான். திரும்பி மரப்படிகளில் ஏறி மேலே சென்று அரசரின் சிற்றவைக்கூடத்தை அடைந்தான் பூரிசிரவஸ். வாயிலில் நின்ற காவலன் அவன் வருகையை உள்ளே சென்று அறிவித்துவிட்டு கதவைத்திறந்தான். உள்ளே சென்று தலைவணங்கி விலகி நின்றான். சலன் “அமர்க!” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டான்.
தியுதிமான் அவனை கூர்ந்து நோக்குவதை உணர்ந்தான். அவையில் சோமதத்தரும் ஃபூரியும் இருக்கமாட்டார்கள் என்பதை அவன் முன்னரே எதிர்பார்த்திருந்தான். சலன் “இளையோனே, பால்ஹிகர்களின் பத்துகுலங்களும் ஒன்றாவது உறுதியாகிவிட்டது. புலரியில் நிகழும் அடிபூசனைக்குப்பின் அவைக்கூடத்தில் அரசுக்கூட்டு முறைப்படி உறுதிசெய்யப்பட்டு எழுதி கைமாற்றப்படும்” என்றான். ”அதற்கு முன்பு அஸ்தினபுரியுடனான நமது உறவை நாம் முறைமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கே கூடியிருக்கிறோம்.” பூரிசிரவஸ் தலையசைத்தான்.
சல்லியர் “அஸ்தினபுரியின் இரு தரப்பில் எவருடன் நாம் இணையப்போகிறோம் என்பதை இப்போதே முடிவெடுத்தாகவேண்டும். அதை முறைப்படி அவர்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும்” என்றார். ”அனைத்து முறைகளிலும் சிந்தனைசெய்தபின் கௌரவர்தரப்பில் இணைந்துகொள்வதே நமக்கு உகந்தது என்ற எண்ணத்தை அடைந்தேன். அதை இங்கே முன்வைத்தேன்” என்றார். சலன் “இளையோனே, நான் உன் எண்ணங்களையும் அறியலாமென விழைந்தேன்” என்றான்.
“ஏன் நாம் உடனே ஒருபக்கத்தை நோக்கி செல்லவேண்டும்?” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் நடுவே போர் நிகழும். அதில் ஐயமே இல்லை. அப்போரில் நாம் எவரை சார்ந்திருக்கிறோம் என்பதை முடிவெடுக்கவேண்டும்…” என்றார் சல்லியர். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ். “இளவரசே, போரில்தான் வலுவான கூட்டுகள் உருவாகின்றன. அவை அமைதிக்காலத்திலும் நீடிப்பவை. இப்போது பாண்டவர்களைவிட கௌரவர்களே நம் உதவியை நாடுபவர்கள். நாம் கௌரவர்களுடன் இணைந்துகொண்டால் சிந்து நாட்டை விழுங்கவரும் யாதவகிருஷ்ணனையும் அஞ்சி பின்னடையச்செய்யலாம்” என்றார் சல்லியர்.
சற்று நேரம் சிந்தித்தபின் “உடனே ஒரு போர் நிகழுமென நான் எண்ணவில்லை மத்ரரே” என்றான் பூரிசிரவஸ். “திருதராஷ்டிரர் இருக்கும்வரை யுதிஷ்டிரர் போருக்கு எழமாட்டார்.” சல்லியர் “இல்லை, சத்ராவதியில் இருந்து உளவுவந்தது. அஸ்வத்தாமன் தன் படைகளை ஒருங்கமைத்து அரண்களைமூடிக்கொண்டு காத்திருக்கிறார். எக்கணமும் பாஞ்சாலப் படைகள் தன்மேல் எழுமென எண்ணுகிறார்” என்றார்.
“அது அவரது ஐயம். அவ்வண்ணம் நிகழாதென்றே எண்ணுகிறேன். இன்றைய அரசுச்சூழல் இன்னமும் தெளிவடையவில்லை. இன்று நான்கு பெரும் விசைகள் உள்ளன. மகதமும் துவாரகையும் இருமுனைகளில் நிற்கின்றன. நடுவே அஸ்தினபுரி பிளவுண்டிருக்கிறது. இது போருக்கான சூழல் அல்ல. இவை மோதியும் இணைந்தும் இருமுனைகளாக ஆகவேண்டும். எப்போதுமே பெரிய போர்கள் இரண்டு நிகரான முனைகள் உருக்கொள்ளும்போது மட்டுமே உருவாகின்றன” என்றான் பூரிசிரவஸ்.
“என்ன நிகழுமென எண்ணுகிறாய்?” என்றான் சலன். “மகதம் வெல்லப்படுமென்றால் அரசியல் நிகர்நிலைகுலையும், தொடர்ந்த மோதல்கள்வழியாக இருமுனைகள் கூர்படலாம். அதுவரை ஒன்றுமே நிகழாது. யானைகள் இழுக்கும் வடங்கள் போல நான்குதிசையிலும் அனைத்தும் தெறித்து உச்சகட்ட நிலையில் அசைவிழந்து நிற்கும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அது நல்லது. நாம் காத்திருப்போம். நம்மை வலுப்படுத்திக்கொள்வோம். நமது கூட்டு வலிமையாகட்டும். நமக்கென படைகள் திரளட்டும்.”
“அதைத்தான் நான் அஞ்சுகிறேன் இளையோனே” என்றான் சலன். “இந்தக்கூட்டு குறித்த செய்தி துவாரகைக்கோ அஸ்தினபுரிக்கோ செல்லும்போது நம்மை முளையிலேயே கிள்ள அவர்கள் முடிவெடுக்கலாம்.” பூரிசிரவஸ் “அதற்கான வாய்ப்பு உள்ளது மூத்தவரே. ஆனால் அதற்காக நாம் வல்லமைகுறைவான எவருடனாவது சேர்ந்துவிடக்கூடாது. அது நம்மை அழித்துவிடும்” என்றான். “நாம்…” என சலன் தொடங்கியதும் சல்லியர் கையமர்த்தி “நான் இளையவன் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் இங்கிருந்து நாம் எம்முடிவையும் எடுக்கவேண்டியதில்லை” என்றார்.
”இளையவனே, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பிய துரியோதனனும் சகுனியும் கர்ணனும் இன்னமும் அஸ்தினபுரிக்கு சென்று சேரவில்லை. அவர்கள் கங்கைக்கரையில் பாஞ்சால எல்லையில் உள்ள தசசக்ரம் என்னும் ஊரின் கோட்டைக்குள் தங்கள் படைகளுடன் தங்கியிருக்கிறார்கள். நீ அங்கே சென்று அவர்களிடம் பேசு. அவர்கள் எண்ணுவதென்ன என்று அறிந்து வா” என்றார்.
“அவர்களை சென்று பார்ப்பதே ஒரு தரப்பை சார்வதாக எண்ணப்படுமே” என்றார் சுமித்ரர். “நான் பாண்டவர்களிடம் அவர்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது என்று பேசுகிறேன். குந்தியின் ஒற்றர்கள் கௌரவர் அவையிலிருந்து அச்செய்தியை பாண்டவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். அதனூடாக இரு தரப்புக்கும் நடுவே நாம் இருப்பதாகத் தெரிவோம்” என்றான் பூரிசிரவஸ்.
சலன் நகைத்து “இவன் என்றோ சக்ரவர்த்தியாகப் போகிறான் மத்ரரே. உறுதி” என்றான். சல்லியர் சிரித்து “எனக்கு மகள் இருந்தால் கொடுத்திருப்பேன். அதைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றார். பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன். நகர்க்காவலை சீர்பார்க்கவேண்டும்” என்றான்.
கதவைக் கடந்து இடைநாழி வழியாக படிகளை நோக்கி நடக்கும்போது சாளரம் வழியாக வந்த குளிர்காற்று அவன் மேல் படர்ந்து பிரேமையின் இல்லத்தையும் மலைச்சாரலையும் அவன் நெஞ்சில் எழுப்பியது. அவளுடைய பச்சைக்கண்களையும் பெரிய கைகளையும் நினைத்துக்கொண்டான். திடீரென்று எங்கோ நெடுந்தொலைவில் கடந்தகாலத்தின் ஆழத்தில் அவளும் அந்நிலமும் இருப்பதாகத் தோன்றியது.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்