மாலை நேரத்து மயக்கம்

நகைச்சுவை

மாலைநாளிதழுக்கும் காலைநாளிதழுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை தெரிந்து கொண்டபின்னர் அவற்றைப்பற்றிப் பேசுவதே முக்கியமானது. காலையில் வருபவை நாளிதழ்கள். மாலையில் வருபவை தாளிதழ்கள்தான்.ஆகவே மாலை நாளிதழை அதற்குரிய நுகர்வோரிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டிய தேவையும் கட்டாயமும் அவற்றை நிகழ்த்துவோருக்கு இருக்கிறது.

அதாவது காலைநாளிதழ் இளைஞனுக்கு அளிக்கும் ஊக்க மருந்து. மாலைநாளிதழ் முதியோருக்கு அளிக்கப்படும் மறு ஊக்க மருந்து. வீரியம் அதிகமாகத்தான் இருக்கவேண்டும். மாலைநாளிதழ்களின் உதவியாசிரியர்களை பொதுவாக விசித்திரவீரியர்கள் என்று சொல்லலாம். எந்த ஒரு செய்தியிலும் பற்றி எரியும் ஓர் அம்சம் உண்டு என்பதை அவர்கள் கண்டுகொண்டு அவற்றை வீரியத்துடன் எழுதியாகவேண்டும். ‘சூடான செய்தி’ என்பது பழைய சொல். ‘வெடிச்செய்தி’ என்பதே புதிய சொல். நெல்லைப்பகுதி நாளிதழ் ஒன்று தன் வேனுக்கு விலாவில் HIGHLY EXPLOSIVE  என்று எழுதி வைத்திருந்ததாகச் சொல்ல்லப்படுவது பொய்யல்ல.

எரியும் செய்திகள் பலவகை. படிப்பவர்களின் வயிறு எரிவது முதல் பாணி. ”முதியவர் கைது!!!! லாட்ஜில் நான்கு அழகிகளுடன் ஜல்ஸா!!!!!”. எரியும்செய்திக்குபின்னால் வரும் குறி ஆச்சரியத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணுவது பிழை, அது எரிதழலின் அடையாளமே. செய்திக்குரியவரின் ஆத்மாவே பற்றி எரியும் செய்திகளும் உண்டு ”மாமனாருக்கு அடி உதை !!! மருமகளிடம் வம்பு?”. தேசம் எரியும் செய்திகள். ”பாராளுமன்றத்தில் அமளி !!! எம்பிக்குதித்த எம்பிக்கள்!!!”. நாட்டுமக்கள் எரியும் செய்திகள் அவ்வப்போது, ”ரூ நாலாயிரம் கோடி அபேஸ்?”

ஆசாமி, ஜல்ஸா, கும்மாளம், அபேஸ்,கைவரிசை,கம்பிநீட்டல்,கட்டிப்புரண்டு சண்டை, அடிதடி, கதறக்கதறக் கற்பழிப்பு, ஓட்டம், துரத்தித்துரத்திப் படுகொலை, வெட்டிக்கொலை, குத்திக்கொலை, கள்ள உறவு, கள்ளக்காதல் போன்ற கலைச்சொற்கள் மாலைநாளிதழ்களை உற்சகமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. அக்கலைச்சொற்களில் அறிமுகம் இல்லாதவர்களே ”அழகிகள் கைது!!!” என்ற செய்தியைத்தொடர்ந்து அவ்வழகிகளுக்கு முறையே 48, 46, 39 வயதாகியிருப்பதை புரிந்துகொள்ளாமல் அல்லல்படுவார்கள். விபச்சார அழகிகள் என்ற கலைச்சொல்லின் சுருக்கமே அழகிகள். விபச்சாரம் செய்யும் அனைவருமே அழகிகள் என்று பொருள். காரணம் அவை விபச்சாரத்துக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளன.

செய்திகளுக்கு பல பரிணாமங்களை குறியீடுகள் மூலம் கொடுக்க முடியும் என்பதை மாலைநாளிதழ்கள் நிறுவியிருக்கின்றன. ‘நாகர்கோயிலில் சினிமா படப்பிடிப்பு’ என்பது செய்தி. ‘நாகர்கோயிலில் சினிமா படப்பிடிப்பு !!!!’ என்பது பரபரப்புச்செய்தி. நூறுகோடி லஞ்சம் என்பது ஊகம். ‘நூறுகோடி லஞ்சம்?’ என்பது அதிரடிச் செய்தி. ‘இளம்பெண் மாயம்’ என்ற செய்தியை ‘இளம்பெண் எங்கே?’ என்றால் நம்மருகே அவள் நின்றுகொண்டிருக்கும் உணர்ச்சியை நாம் அடைந்து திரும்பிப்பார்க்கிறோம் அல்லவா? பெண் இளம்பெண் ஆகும்போது செய்திக்கு விறுவிறுப்பேறும். 

கொட்டைச்செய்தி என்று இன்னொன்று உண்டு.’ஆபரேஷன் தேவையில்லை’ என்ற வீக்க விளம்பரம் அல்ல. மந்திரி வருகை என்பது சிறிய செய்தி. அதை ‘க்க்க்க்கொட்டை’ எழுத்தில் போட்டால் அது கொட்டைச்செய்தி!!!.  சமீபகாலத்தில் ஒரு மாலைநாளிதழ் வாசகர்களுக்கு ஒரு பூதக்கண்ணாடியை இலவச இணைப்பாக வழங்கப்போவதாகச்செய்திகள் சொல்கின்றன. அதை அணிந்து பார்த்தால் ‘சான்றிதழ் காணவில்லை’ விளம்பரம்கூட கொட்டை எழுத்துச்செய்தியாகி நாளிதழே பற்றி எரியுமாம்.

மாலைநாளிதழ் நெல்லைப்பதிப்பில் ‘கயத்தாறு அருகே கொலை’ ‘கோயில்பட்டி அருகே பஸ் மோதியது’ போன்றசெய்திகளுக்கு நிரந்தரமான டெம்ப்ளேட் இருந்துவந்தது. நேரம் பெயர்கள் போன்றவை மட்டும் தினமும் நிரப்பப்படும். பரிதாபமாகச் செத்தார். கதறி அழிதது பரிதாபமாக் இருந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தார் போன்ற சொற்றொடர்களை ஒருவகை சொற்களாகவே நாம் காணவேண்டும்.

பொதுவாக கடற்கரை மீனவர்களுக்காகவே மாலைநாளிதழ்கள் வெளிவருகின்றன என்பது ஒரு உள்த்தகவல். அவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்கப்போய்விட்டு மாலையில் திரும்புகிறார்கள். கடல் கொந்தளித்துக்கொண்டே இருப்பதை பார்த்து பழகிய அவர்களுக்கு நிலம் உறுதியாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆகவேதான் செய்தி அலைகள். பொதுவாக அவர்களுக்கு எல்லாமே கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். மிளகாய் பஜ்ஜிக்கு தூவுவதற்கு நல்லமிளகுப்பொடி கேட்பவர்கள்.

இதைத்தவிர நாளிதழ்களின் பிரதான நுகர்வோர் அதை காகிதஜமுக்காளமாக பயன்படுத்துபவர்கள். பேருந்து நிலையத்தில் தூங்குவது ரயில் நிலையத்தல் தூங்குவது , ரயிலின் பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே தூங்குவது போன்றவற்றுக்கு மாலைநாளிதழ்கள் ஏற்றவை என அனுபவத்தால் சொல்கிறேன். சூடான செய்திமீது படுப்பது குளிருக்கு அடக்கமாக இருக்கும். அபிமான நடிகை மீது படுப்பதற்காக மூன்று ரூபாய் தாராளமாகக் கொடுக்கலாம். நெருக்கமான ரயிலில் அமர்ந்து பிதுங்கிஅழுந்தி அரைத்தூக்கத்தில் செல்லும்போது ஆண்கள் அருகே பெண்கள் இருந்தால் நடுவே மாலைநாளிதழ் வைக்கப்படுவது கற்புக்கு அரண்.

மாலைநாளிதழ்களின் புகைப்படத்துக்கென ஒரு போஸ் உண்டு. இது ‘தந்திபோஸ்’ என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘ராணிபோஸ்’ என்றும் சொல்லபப்டுவதுண்டு.’பொண்ணு பாக்கிறதுக்கு ராணி மாதிரி இருப்பா’ என்ற சொல்லாட்சிக்கு பக்கவாட்டில் பார்க்கலாம் என்றே தென்தமிழ்நாட்டில் பொருள்.காமிராவுக்கு நேராக தோள் இருக்கும்படி நின்று திரும்பிப்பார்த்து சிரிப்பது அது. முந்தானை கீழிறங்கியிருக்க வேண்டுமென்பதில்லை, அப்படித்தான் அது இருக்கும். எண்பதுகளில் மாலைநாளிதழ் புகைப்படக்காரர் பிராமண வார இதழில் வேலைக்குச்சென்று கர்நாடக சங்கீத நட்சத்திரத்திடம் ”அம்மா கொஞ்சம் இப்டி திரும்பி நின்னு புடவையை எறக்குங்க’ என்று பழக்க தோஷத்தில் சொல்லி அமிருதவர்ஷினி ராகத்தில் பாடப்பெற்றதாக தகவல்.

காகிதக்கைக்குட்டைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே நம் மாலைநாளிதழ்கள் அப்பணியை ஆற்றிவருகின்றன. கை, முகம் துடைப்பதுடன் பின்பக்கம் துடைக்கவும் பயன்படுமென்பதை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகங்கள் காட்டுகின்றன. வடை போண்டா பஜ்ஜி போன்றவற்றை நாளிதழ்களில் வைத்து ஓர் அழுத்து அழுத்தி எண்ணை அகற்றி உண்பது தமிழர் நாகரீகம். அவற்றையே சிலர் பின்பக்கக் காகிதமாக பயன்படுத்தும்போது நடப்பது எளிதாக ஆகிறது என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் எல்லா தமிழ் மாலை நாளிதழ்களுக்கும் மும்பை தாராவியில் செம்பதிப்பு உண்டு. அங்கே பெண்கள் சமையலறையிலேயே நாளிதழ் விரித்து கடன்கழித்து பொட்டலமாக கட்டி ரயில்வேக்கு சமர்ப்பிக்கிறார்கள். மும்பையில் பொட்டலங்களை யாரும் எடுப்பதில்லை என்பது வெடிகுண்டுகளில் இருந்து அந்நகரைக் காக்கும் கவசம் . தொல்தமிழர் மராத்தி நாளிதழை அதற்கு பயன்படுத்துதல் பண்பாட்டிழுக்கு.

மாலைநாளிதழ்களை சில்லீஸ்இட்டிலி என்று இதழாளர் சொல்வதுண்டு. காலைநாளிதழையே பிய்த்துப்போட்டு அதில் காரமும் உப்பும் கடுமையாக்குவது சமையல்குறிப்பு. பொதுவாக வானொலி மாலைநாளிதழ்களுக்கு அவசியமானது. மாநிலச்செய்திகளை நேரடியாகவே எழுதிஎடுத்து விடலாம். மாலைநாளிதழ்களில் உலகச்செய்திகளும் வருவதுண்டு ‘அழகிகளுடன் ஜல்ஸா, லண்டன் அமைச்சர் கைது?’. ‘எட்டுவகையில் சொறிந்துகொள்ளும் நைஜீரியக் குரங்கு’ வகை.இவர்கள் லண்டன் அழகிகள். ஜல்ஸாவும் லண்டன் ஜல்ஸா.

மாலை நாளிதழ்களுக்கு மாலைநாளிதழ்களே போட்டி. ஒரு மாலைநாளிதழில் மாமனாருக்கு விஷம் கொடுத்துவிட்டு கொழுந்தனாருடன் ஓடிய பெண்ணைப்பற்றி படிக்கிறோம். மற்றொன்றில் எட்டுவயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டதைப்பற்றி படிக்கிறோம். இரண்டில் எது சூடான செய்தி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நடுவே ”ஆட்சிக்கலைப்பு?’ என்றொரு வெடி. ‘தனிஈழத்துக்காகச் சாகத்தயார்’ போன்ற நகைச்சுவைகள்.

இந்நிலையில் ஒரு காலைநாளிதழே மாலைநாளிதழுக்குப் போட்டியாக வந்துசேர்ந்தது. தலைப்புச்செய்திகளே ரத்தினச்சுருக்கமாக அமைந்தன ‘லபக்!’ ‘கோல்மால்!’ போன்ற தமிழ்ச்சொற்களுடன் ”ஆ!” ”ஓ!!’ ‘அய்யய்யோ!!!” ”அய்யாங்!!!” போன்ற ஒலிகளும் தலைப்புச்செய்தியாக ஆயின. தலைப்புச்செய்திகளை மட்டும் வேகமாக வாசித்துவிட்டு ஆபீசுக்கு ஓடிவரும் எங்கள் சூபர்வைஸர் பத்மனாபபிள்ளை அந்தப்பழக்கத்தை இதன் பின்னரும் மாற்றிக்கொள்ளவில்லை.”நமக்கு அவ்ளவு நூஸ் போரும் சார்… நாம என்ன அரசியலா செய்யுகோம்?”

ஆனால் கிராமங்களில் மாலைநாளிதழ்களைக் கூவி விற்கும் தக்கலை சண்முகவேல் போன்றவர்களிடம் மாலைநாளிதழ் உதவியாசிரியர்கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. ”திமுக ஊழியர் கொலை, அதிமுக முன்னாள் அமைச்சர் கைது” என்ற கூப்பாட்டு இரு தனிச்ச்செய்திகள் திறம்படக் கலந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம் மூன்று ரூபாயைக் கொடுத்தபின்னரே உணர்வோம்.

நாள் தோறும் ஏமாந்தபின்னரும் சண்முகவேலின் நாநயம் நம்மை ஏமாற்றி விடுகிறது. ” மூதாட்டி கதறக்கதறக் கற்பழிப்பு, கல்லூரி மாணவருக்கு கலெக்டர் விருது” என்ற செய்தியை நம்பி, பஸ் கட்டணம் தவிர டீகுடிக்க வைத்திருந்த கடைசி மூன்றுரூபாயைக் கொடுத்து அவசரமாக ஒரு பிரதி வாங்கியமைக்காக என்னையும் மறுநாள் மாலைநாளிதழ் கொட்டைச்செய்தியில் போடுவதே முறை.

[மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2008 ஆகஸ்ட்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33