கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, காலஞ்சென்ற இசை அமைப்பாளர் திரு, ஏஏ ராஜ் அவர்களைப்பற்றிய தங்களது கட்டுரை எனது மனதை மிகவும் வருடிய ஒன்று. சற்றுமுன்தான் இந்தக்கட்டுரையை நான் படித்தேன்.

தங்களைப்போலவே நான் எனது பள்ளிநாட்களில், சரியாக நான் பத்தாவது படிக்கும்போது ஒருதலைராகமும், பன்னிரண்டாவது படிக்கும்போது தணியாததாகமும் வெளியானது. அந்த நாட்களில் சிலோன் ரேடியோவில் பலமுறை பூவே நீ யார்சொல்லி பாடலையும் அவளொரு மோகன ராகம் பாடலையும் கேட்டு அர்த்தம் புரியாத வயதில் அதன் இசைக்காகவே நான் மயங்கி பலமுறை டீக்கடைகளிலும், பொது இடங்களிலும் இசைத்தட்டுகளில் கேட்டுள்ளேன். தற்போது ஆங்கிலப் பேராசிரியராக கிட்டத்திட்ட இருபது வருடங்களாக அரசுப்பணியில் பணிபுரிந்து வரும் நான், இதுபோன்ற மறக்கப்பட்ட பெரும் கலைஞ்ர்களைப்பற்றி வரும் செய்திகளை கண்டு மிக்க மகிழ்ச்சியடைவேன்.

தங்களது இந்தக்கட்டுரை ஒவ்வொருவரும் படித்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் தமிழ் சினிமா வியாபார நோக்கை கைவிடாததால் ஏற்பட்டுவரும் பல இழப்புகளை இளைய சமுதாயத்திற்கு உங்களைப்போன்றவர்கள் உணர்த்தி வருவது பாராட்டத்ததக்கது. பெரியாரைப்பற்றிய உங்களது கட்டுரை உண்மையை உரைக்க தாங்கள் என்றும் அஞசியதில்லை என்ற நிலையை பலருக்கும் உணர்த்தியுள்ளது.

உங்களது அந்தக் கட்டுரையை நான் பலரிடமும், ஏன் பெரியாரின் வழித்தோன்றல்களாக தங்களைக் காட்டிக் கொண்டு வரும் பலரிடமும் விவாதித்து உங்கள் கட்டுரையில் உள்ள உண்மைகளை எடுத்துக் கூறியுள்ளேன். எனது சக ஆசிரியர் ஒருவர் தங்கள் படைப்பு ஒன்றை ஒப்பு இலக்கியத்திற்கு எடுத்துக்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள், உங்கள் எழுத்துப்பணியும், சமுதாயப்பணியும் தொடர எனது வாழ்த்துக்கள். உங்களை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். காலம் கைகூடும் என நம்புகிறேன்.

நன்றியுடன்

முனைவர்.வி.எஸ்,இராமகிருட்டிணன்

வணக்கம்,

“புத்தாண்டுச் சூளுரை” கட்டுரை படித்தேன். அழகான,தெளிவான ஒரு பதிவு.
நானும் என் நண்பர்களும் படித்து மகிழ்ந்தோம், பயனும் அடைந்தோம் என
நம்புகிறேன். ஆனால் இதில் ஒரு பிழை இருப்பதை மறுக்க முடியவில்லை . வெற்றி
என்பது எப்படி வாழ்கிறோம் என்பதில் இருக்கிறது, எவ்வளவு வெற்றி
பெறுகிறோம் என்பது வாழ்கை ஆகாது என்கிற கருத்தை நீங்கள் முன் வைப்பதற்கு
தேவையான தகுதி நீங்கள் அப்படிப்பட்ட நினைவோடு வாழ்வை நடத்தியதே ஆகும்.
நீங்கள் உங்கள் துறையில் எவ்வளவு வெற்றி பெற்றீர் என்பது அல.

நன்றி,
ரவி
அன்புள்ள ஜெ,

நேற்று யதேச்சையாக இந்தத் தளத்தைக் கண்டறிந்தேன். கண்ணீரைப் பின்தொடர்தலில் நீங்கள்
விவரித்துள்ளவற்றில் சில நாவல்கள் வாசிக்கவும், தரமிறக்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
www.openreadingroom.com

அழிந்த பிறகு, முதலில்லாததும் முடிவில்லாததும், பன்கர் வாடி, கறுப்பு மண், அக்னி நதி, வாழ்க்கை ஒரு நாடகம், உம்மாச்சு போன்ற நாவல்களைக் கண்டதும் சிலிர்ப்பாக இருந்தது.

நீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். உரக்க. அதை அப்படியே பதிவும் செய்து வருகிறேன். அந்த ஃபோல்டரை உங்களுக்குப் பகிர்ந்திருக்கிறேன். நேரப்பின் பார்வையிடவும்.

மூதாதையர் குரலை அமெரிக்க மண்ணிலிருந்து வாசிக்கும் போது, என் பாட்டனும், பூட்டனும் ஒரு நாட்டை நிர்மாணிக்கப் பட்ட பாட்டை நினைத்துக் கண்ணீர் வந்து விட்டது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
அடுத்த கட்டுரைமின் தமிழ் பேட்டி 2