சூரியதிசைப் பயணம் – 17

 

இன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு நல்ல நடைபாதை இருந்தது. ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. சாலையிலேயே சுற்றிவந்தோம். ஷில்லாங்கை ஒரு அழகிய சிறிய சுற்றுலாநகரம் எனலாம். ஊட்டியுடன் ஒப்புநோக்க சுத்தமானது

சாலையில் ஒருவர் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் ஓடினார். அவனுக்கு என்ன வயது என்றார். இரண்டு என்றார். அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். நாற்பத்தைந்து வயதான சிங் ஒரு சண்டைப்பயிற்சி நிபுணர். சென்னையில் எண்பதுகளில் சினிமா வாய்ப்புக்காக வந்து தங்கிஇருந்தார். உள்ளே நுழைய முடியவில்லை. திரும்பி சொந்தமாகத் தொழில் செய்கிறார்

மேகாலயாவில் மறுபடியும் தீவிரவாதிகள் ஆங்காங்கே தலைதூக்குகிறார்கள் என்றார் சிங். அவர்கள் கனிவளத்தை எடுக்க விடுவதில்லை. சாலைகளை தடுக்கிறார்கள். சந்தைகளை தடுக்கிறார்கள். அரசு என்னதான் செய்கிறது என்று குமுறினார். அன்றுதான் மேகலய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருந்தது. தீவிரவாதப்போக்கு கொண்ட சில குறுங்குழுக் கட்சிகளின் ஆதரவுடன்

இவர்கள் வேண்டுமென்றே தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள். தீவிரவாதிகள் மிகச்சிலரே. அவர்களை இவர்கள் சுதந்திரமாக உலவ விடுகிறார்கள். ஏனென்றால் தீவிரவாதம் அதிகாரிகளுக்கு லாபகரமானது. அரசியல்வாதிகளுக்கும் லாபகரமானது. தீவிரவாதம் வந்து மேகாலயா அழியும். அதற்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்வார்கள். அந்த நிதியில் பெரும்பகுதி ஊழலுக்காக போகும். ஓரிரு துளிகள் கூட மக்களிடம் வந்து சேராது. காஷ்மீரில் நடப்பதும் இதுவே என எண்ணிக்கொண்டேன்

முதுகில் சுமைதூக்கும் கருவிகளுடன் பிகாரிகள்ஷில்லாங் சாலைகளில் சுற்றி வந்தோம். பல டோன்போஸ்கோ நிறுவனங்கள் இருந்தமையால் வழி சொன்னவர்கள் குழப்பி அடித்தார்கள் ஷில்லாங்கில் அரசாங்கத்தை விட்டால் மிகப்பெரிய அமைப்பே டோன்போஸ்கோ நிறுவனம் என்றால் மிகையல்ல. மிகப்பெரிய கல்விநிறுவனங்களை அவர்கள் நடத்துகிறார்கள். மிகமுக்கியமான பல சேவை அமைப்புக்களை அவர்கள் அமைத்துள்ளனர். அதன் பெரிய பொறுப்புகளில் பெரும்பாலும் கேரள கத்தோலிக்கர்களே உள்ளனர். டோன்போஸ்கோ அமைப்பு இல்லாமல் ஷில்லாங்கின் வளர்ச்சி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காதுவடகிழக்கின் கிறித்தவ அமைப்புகளைப்பற்றி பலவகையான சித்திரங்கள் உள்ளன. இந்த தொடரை எழுதிக்கொண்டிருக்கையிலேயே பல கடிதங்கள் வந்தன. எண்பதுகளில் வடகிழக்கின் அமைதியை நிலைநாட்டும்பொருட்டு ராஜீவ்காந்தி அரசு சில கிறித்தவ மிஷனரிகளைத் திரும்ப அனுப்பியது. அதையொட்டி கிறித்தவ சேவைநிறுவனங்கள் அனைத்துமே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்ற சித்திரம் உருவாகியது.

 

தொடர்ந்து பல்வேறு அன்னியநிதி பெறும் கிறித்தவ அமைப்புக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கைகள் எடுக்கும்போது இந்தச் சித்திரம் வலுவாகவே உருவாகி நீடிக்கிறது. நாகாலாந்தின் பிரிவினைப்போராட்டத்தில் நேரடியாகவே சில கிறித்தவக்குழுக்கள் ஈடுபட்டன என்பதும் உண்மை. ஆனால் இதைப்பற்றிய பொத்தாம்பொதுவான பேச்சுக்களே நம் காதில் அதிகம் விழுகின்றன

உண்மையில் இங்குள்ள கிறித்தவ அமைப்புக்களை இரண்டாகப்பிரிக்கவேண்டும். கத்தோலிக்கர்கள், சீர்திருத்தக் கிறித்தவர்கள் போன்ற பெரிய கிறித்தவ மத அமைப்புக்கள் மதமாற்ற நோக்கம் கொண்டவை என்றாலும் அவை இந்திய எதிர்ப்புத்தன்மை கொண்டவை அல்ல. அவை அகில இந்திய அமைப்புக்கள். அவற்றில் பணியாற்றுபவர்கல் பெரும்பாலும் இந்திய மையநிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் ஒரு தேசிய நோக்கே அங்கே உருவாகும். குறிப்பாக கிறித்தவ மலையாளிகளில் இந்தியதேசிய எதிர்ப்பாளர்களை எவ்வகையிலும் காணமுடியாது

 

கிறிஸ்தவக் குறுங்குழு மதங்களை எப்போதும் பெரிய கிறித்தவசபைகளில் இருந்து பிரித்தே பார்க்கவேண்டும். அவை பல நோக்கங்கள் கொண்டவை. பலவகைகளில் அன்னிய நிதி பெறுபவை. அவற்றின் செயல்பாடுகள் நிழலானவை. அத்துடன் கிறித்தவப்பெயர் கொண்ட சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் தன்னிச்சையான செயல்பாடுகள் கொண்டவை. அவர்கள் பலசமயம் மையஓட்ட கிறித்தவச்சபைகளுக்கே எதிரானவை. அவர்களே இங்கு பிரிவினைவாதத்தின் துணைச்சக்திகளாகச் செயல்பட்டவர்கள்

வடகிழக்கின் கிறித்தவ பேரமைப்புகள் தொடர்ந்து பெரிய அளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளன. மேகாலயாவும் நாகாலாந்தும் கிட்டத்தட்ட கிறித்தவ மாநிலங்கள். மணிப்பூர் விரைவாக மாறிவருகிறது. அருணாச்சலப்பிரதேசமும் பெரும்பாலும் கிறித்தவ மாநிலமே. மதம் மாற்றுவதென்பது கிறித்தவத்தின் சாராம்சமான கொள்கை என்பதனால் அது பிழையானது என்றோ தடுக்கப்படவேண்டியது என்றோ நான் நினைக்கவில்லை. மதமாற்றத்தடைச்சட்டம் எதுவானாலும் அதை எதிர்ப்பேன்.

 

கிறித்தவம் ஆங்கிலக்கல்வியை அளிக்கிறது. சிறந்த மருத்துவச்சேவையை அளிக்கிறது. பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் செய்த முக்கியமான அரும்பணியை இன்று அது அங்கே செய்துகொண்டிருக்கிறது– இனக்குழுக்கள் நடுவே உள்ள மோதல்களை அது அணைக்கிறது. விளைவாக ஒரு நவீன சிவில் சமூகம் அங்கே உருவாக வழிகோலுகிறது. பெரும் அர்ப்பணிப்புடன் அதைச்செய்யும் கிறித்தவ அமைப்புகள் நன்றிக்குரியவை. ஆனால் பௌத்தம் போல அது பழங்குடி பண்பாட்டையும் தெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொள்வதில்லை. ஐரோப்பியமயமாக்கி முற்றாக அழிக்கிறது. ஆனால் அது அதன் அடிப்படை இயல்பு. அவ்வழிவு வேறு எவ்வகையிலேனும் தவிர்க்கப்படவேண்டும் என்று மட்டுமே சொல்லமுடியும்

அப்படிப்பட்ட பெரும்பணியை இந்து அமைப்புக்களும் செய்யமுடியும். வனவாசி கல்யாண் கேந்திரா போன்ற சில அமைப்புகள் ஓரளவு பணியாற்றுகின்றனவே ஒழிய இந்து அமைப்புக்கள் இங்கே ஒன்றுமே செய்யவில்லை என்பதே உண்மை. இந்துசமூகத்தின் பெரும் கொடைகளைப் பெறும் ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகள் வெறுமே உண்டுகொழுக்கும் சாமியார்களுக்குரியவையாக மாறிவிட்ட நிலையில் இந்துக்களுக்கு கிறித்தவர்கள் சேவையுடன் மதமாற்றமும் செய்வதை குறைசொல்லும் எந்த தகுதியும் இல்லை.

நாங்கள் அங்கிருக்கையில்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அன்னை தெரஸாவின் நோக்கம் மதமாற்றம் மட்டுமே என்று சொன்னது விவாதமாக ஆயிற்று. அதில் எந்த ஐயமும் இல்லை. அன்னை தெரஸா நூற்றுக்கணக்கான முறை அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தன் மதநம்பிக்கையின்படி காந்திகூட சொர்க்கத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் சொன்னது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதில் எந்த ரகசியமும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொன்னதை விவாதமாக்கவேண்டியதில்லை. ஆனால் மதமாற்றத்தை தடுப்பதற்காக கிறித்தவ அமைப்புகளின் பெரும் கல்விச்சேவையை தடுக்க முயன்றால் அதுவே கண்டனத்துக்குரியது. நிகரான, வென்று செல்லும் சேவைமூலம் அவர்களை இந்துத்துவர்கள் வென்றெடுக்கட்டும். அதை ஓர் அறைகூவலாகவே கொள்ளட்டும்.

 

ஆனால் இன்று வடகிழக்கின் நிலைமை வேறு. எல்லா வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசக்குடியேறிகளின் ஆக்ரமிப்பில் உள்ளன. வங்கதேசக்குடியேறிகள் மிக வலுவாக பாப்புலர் ஃபிரட்ன்ட் போன்ற அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான ஒருங்கிணைவு தேவை என்ற அளவில் வடகிழக்கு அரசியல் மாறிவிட்டிருக்கிறது. அதைப்பற்றிய பேச்சுக்கள் அங்குள்ள நாளிதழ்களில் தொடர்ந்து கண்ணில்பட்டன

வடகிழக்கு செய்தித்தாள்களில் தொடர்ந்து கண்ணில்பட்ட செய்திகள் , கடிதங்கள் அன்னியநிதி அமைப்புகளைப்பற்றியவை.பிரபல அரசியல் சிந்தனையாளரான மது கிஷ்வர் சமீபத்தில் அன்னியநிதியமைப்புகளை அரசு முழுமையாகவே தடைசெய்ய வேண்டும், என்று ஒரு கோரிக்கைமனுவை உருவாக்கி அதில் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றிய நிறைய செய்திகளைக் கண்டேன். அதேபோல தீஸ்தா செதல்வாட் தம்பதியினர் அன்னிய நிதிபெற்று ஊழல் செய்ததைப்பற்றிய கட்டுரைகளும் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

இத்தகைய அரசியல் புரிதல்களை பயணங்களில் சில மின்னல்களாகவே அடைவோம். ஒன்று அங்கே நாம் ’முயன்று’ எதையும் கேட்டறிய முயலக்கூடாது. எவரிடமும் வேண்டுமென்றே உரையாடக்கூடாது. செய்தித்தாள்களில் கண்ணில்படுபவை,சாதாரணமாக நம் கவனத்திற்கு வரும் சின்ன விஷயங்கள், அரட்டைகளில் காதில் விழுபவை ஒட்டுமொத்தமாக உருவாக்கும் சித்திரமே முக்கியமானது

 

நிர்வாகவியலில் ஒரு கொள்கை உண்டு. ஒருவனை எத்தனை தூரம் ஆவணங்கள், சான்றுகள் வழியாக அறிந்தாலும் நேரில் பார்க்காமல் மதிப்பிடக்கூடாது. நேரில்பார்ப்பது பத்துநிமிடமாகக்கூட இருக்கலாம். ஆனால் அது பல்லாயிரம் பக்கங்களுக்கு நிகரானது. நான் எல்லாவற்றையும் வாசித்து அறிந்தபின்னரே பயணம் செய்வேன். ஆனால் பயணங்கள் அளிக்கும் நேரடியான மனப்பதிவு எப்போதுமே வாசிப்பறிவை பலமடங்கு கடந்துசெல்கிறது.

டோன்போஸ்கோ அருங்காட்சியகம் திறக்க மேலும் அரைமணிநேரமாகும் என்றனர். ஆகவே காலையுணவு தேடிச்சென்றோம். எல்லாக்கடைகளிலும் காலையில் அரிசிச்சோறும் மீன்குழம்பும்தான். சப்பாத்திகூட இல்லை. நான் அரிச்சிச்சோறு சாப்பிட்டேன். மீன் சற்று கெட்டுப்போனது. குமட்டிக்கொண்டே இருந்தது. நாலைந்து கொக்கோக்கோலா குடித்து அதை செரிக்கவேண்டியிருந்தது.

இங்கே வெறும் அரிசியை வாழையிலையில் வைத்து வேகவைத்து தருகிறார்கள். கொழகொழவென்ற சோறு. ஆனால் ஓரளவு சுவையாகவே இருந்தது. மணிப்பூரில் கிடைத்த அரிசி அப்பம் என நினைத்து ஏமாற்றம் அடையாவிட்டால் மேலும் சுவையாக இருந்திருக்கக்கூடும்.

டோன்போஸ்கோ அருங்காட்சியகம் இந்தியாவில் நான் கண்ட மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்று. அற்புதமான வடிவமைப்பு. மிகச்சிறந்த நிர்வாகம். ஒருநாள் முழுக்கச் செலவிடாமல் இதைப்பார்த்து முடிக்கமுடியாது. ஏழு அடுக்குகளில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள வெவ்வேறு பழங்குடிகளின் பண்பாடுகள். இனத்தனித்தன்மைகள். கலைகள், மதங்கள் ஆகிய அனைத்தும் பல்வேறுவகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இங்குள்ள புகைப்படங்கள், பழங்குடிக் கலைப்பொருட்கள் மிக மதிப்பு வாய்ந்தவை. மதங்களுக்கிடையேயான மைய இழை ஒன்றே எனக் காட்டும் பகுதியும் மிகுந்த நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. டோன்போஸ்கோ அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பதிவும் சிறப்பானது. எப்போதும் சிறுவர்கள் நடுவே இருப்பவராக காட்டப்படும் டோன் போஸ்கோ என் இளமைமுதலே மனம் கவர்ந்தவர்

 

மதியம் கிளம்பி நேராக கௌஹாத்திக்குக் கிளம்பினோம். வழியில் படாபானி என்று ஓட்டுநரால் அழைக்கப்பட்ட ஏரியைக் கண்டோம். மலைச்சூழலில் ஓர் அணைக்கட்டால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் பெயர் உமையம் .அதில் சுற்றுலாப்படகுகள் மிதந்த ஷில்லாங்குக்கான நீர்மின்சாரத் தயாரிப்புக்கு ஆதாரமானது. அதை காரில் சுற்றிக்கொண்டு இறங்கிச்சென்றோம்

 

நீண்டபயணம். எங்கள் வடகிழக்குப்பயணத்தின் முடிவு. மொத்தமாக அத்தனை காட்சிகளும் கண்களுக்குள் குழம்பிக்கிடந்தன. நினைவு ஒவ்வொன்றாகத் தொட்டு எடுக்கையில் வேறு சில நினைவுகள் ஊடே கலந்தன. சிலசமயம் லடாக் காட்சிகளும் ஊடே வந்தன. அனைத்தும் அடங்கி செம்மையான நினவடுக்குகளாக ஆக நாளாகும். சென்ற இடங்களைப்பற்றி ஊருக்குப்போனபின்னர் தொலைபேசியில் பேசிப்பேசித்தான் தெளிவடைவோம்

வடகிழக்கு என்ற இந்தியப்பகுதி பற்றி ஒட்டுமொத்தமான ஒரு பொதுப்புரிதல் வந்துள்ளது எனலாம். ஆனால் என்னென்ன நம்முள் சென்றுள்ளது என இனிமேல்தான் தெரியும். மேற்கொண்டு வடகிழக்கு பற்றிச் சிந்திக்கையில் எங்கோ ஆழத்தில் ஒரு காட்சி வந்து முன்னும். சிலசமயம் எளிமையான காட்சியாகக்கூட இருக்கும். ஆனால் அது ஓர் அறிதலை அளிக்கும். அது அளிக்கும் தெளிவிற்க்கு நிகரே இல்லை.

26 மாலையில் கௌஹாத்தி விமானநிலையத்தை அடைந்தோம். ஐந்து மணிக்கு விமானம். அது கல்கத்தா வழியாக இரவு பத்துமணிக்கு சென்னையை அடைந்தது. கொசு நிறைந்த விமானம். எங்களுடன் அவையும் சென்னைக்கு வந்து இறங்கின.

விமானநிலையத்திற்கு சுரேஷ்பாபுவும் செந்தில்குமார் தேவனும் வந்திருந்தனர். கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் நேராக ரயில்நிலையம் சென்றனர். வசந்தகுமாரும் ராஜகோபாலனும் அவர்களின் வீடுகளுக்கு பேருந்தில் சென்றனர். நானும் கெ.பி.வினோதும் காரில் சென்னைக்குள் நுழைந்தோம். நானும் பதினோரு மணிக்கு பேருந்தைப்பிடித்திருக்கலாம். அமர்ந்து பயணம் செய்ய முதுகு ஒப்பவில்லை

ஆகவே சென்னையில் ஒரு விடுதியில் அறைபோட்டேன். மறுநாள் ஊருக்குச் செல்ல திட்டம். இரவு கண்மூடுகையில் உள்ளே ஓடியவை வடகிழக்கின் முகங்கள், நிலம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32
அடுத்த கட்டுரைவண்ணக்கடல்- கேசவமணி