சூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்

வடகிழக்குப் பயணம் பற்றி வினோத் ஒரு முக்கியமான அவதானிப்பைச் சொன்னார். இங்கு வந்தபின்னர்தான் இந்தியாவின் ஒவ்வொரு முகமும் ஒரு இனக்குழுத்தன்மையுடன் தெரியத் தொடங்குகிறது என்று. வடகிழக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் நீண்டகாலமாக இனக்கலப்பில்லாமல் தனித்தே செயல்பட்டவை. பிறரை வெறுத்தவை, கொன்றவை. ஆகவே இனக்கலப்பு நிகழவில்லை. இப்போதுதான் இனக்கலப்பு நிகழ்ந்து வருகிறது

அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா பகுதிகளில் இனக்கலப்பு குறைவு. மணிப்பூர் திரிபுராவில் அதிகம். இங்குள்ள பிரச்சினை இந்த இனத்தனித்தன்மைதான். நவீனக்கல்வி கற்கும் இளைஞர்கள்கூட இனக்குழுக்கள் சார்ந்த மாணவர் அமைப்புகளையே உருவாக்குகிறார்கள். இந்தியப்பெருநிலத்தில் இந்த இனக்குழுக்கள் குறைந்தது நாலாயிரம் வருடம் முன்னரே ஒன்றுடன் ஒன்று கலந்து பல சாதிகளாக மாறின. சாதியமைப்பு என்பது படிநிலைப்படுத்தபட்ட இனக்குழுக்களே.

இன்று இந்தியப்பெருநிலத்தில் இந்த முகங்கள் அனைத்தையும் ஒரே இந்து குடும்பத்தில் காணமுடியும் . இந்த இனக்கலலவையே இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளது. இந்த நீண்ட பயணத்திற்குப்பின்னர் திடீரென்று நம்மிடையேகூட எத்தனை மங்கோலிய முகங்கள் என பெரும் திகைப்பை அடைந்தேன். நெடுங்காலம் இந்த முகங்கள் மிக அண்மையானவையாக நினைவில் நீடிக்கும்.


[நிறைவு]