சூரியதிசைப் பயணம் – 16

பயணம் கிளம்பும்போது எப்போதும் நெடுநாட்கள் பயணம் செய்யவிருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும். பயணம் நீள நீள ஒவ்வொரு காட்சியும் பின்னகர்ந்துகொண்டே இருக்கும். நாலைந்து நாட்கள் கடந்தால் முதல்நாள் இறந்தகாலத்தில் எங்கோ ஒரு நினைவாக மாறிவிட்டிருக்கும்

பயணங்களில் நாட்கள் நீளமானவை. ஏனென்றால் அனுபவங்கள் செறிவானவை. காலத்தை நாம் அனுபவங்களைக்கொண்டே அளக்கிறோம். ஒருநாளில் காலையில் நிகழ்ந்தவையே மாலையில் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கும். அத்துடன் நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் இருப்பதனால் பழைய இடங்களை நினைத்தெடுப்பதும் கடினமானது

எங்கள் பயணம் முடியப்போகிறது என உணர்ந்தோம். இன்னும் ஒருநாள்தான். பயணம் முடியும்போது எங்கெங்கே என்னென்ன பார்த்தோம் என நினைத்தெடுப்பது ஒரு பெரிய இன்பம். அவஸ்தையும்கூட. ஆளுக்கொரு வரிசையைச் சொல்வார்கள். நடுவே காசிரங்கா போன்ற மிக முக்கியமான இடமே விடுபட்டிருக்கும். அதை நினைவுகூரும்போது ஒரு வெடிச்சிரிப்பு.

ஷில்லாங்கிலிருந்து காலையில் கிளம்பி அருகே உள்ள மாப்லாங் என்னும் பாதுகாக்கப்பட்ட வனத்தைப்பார்ப்பதற்காகச் சென்றோம்.இது காஸி இனக்குழு மக்களின் இடுகாடு. அவர்கள் சடலங்களை தங்கள் ஊரில் எரித்துவிட்டு இங்கே எலும்புகளைக் கொண்டுவந்து புதைக்கிறார்கள். அதன்மேல் நடுகற்களையும் பெருங்கற்களையும் நட்டுவைக்கிறார்கள். பெண்களுக்குக்கிடைக்கற்களால் ஆன அறைகள் உருவாக்கப்படுகின்றன

மாப்லாங் போன்ற பல காடுகள் இப்பகுதிகளில் உள்ளன. எண்பதுகளில் அரசு பல்வேறு திட்டங்களுக்காக இக்காடுகளை கண்மூடித்தனமாக அழிக்கமுற்பட்டபோது காஸி மக்கள் பெரும் போராட்டம் வழியாக இதைக் காத்துக்கொண்டனர்.

இன்றைய இந்திய நிர்வாகமுறையின் மையப்படுத்தப்பட்ட போக்கின் அழிவுத்தன்மைக்கு இதுவே சிறந்த உதாரணம். இக்காடுகளை அழிக்கும் முடிவை ஏதேனும் டெல்லி அதிகாரி எடுத்திருப்பார். அவருக்கு மேகாலயா பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. தெரியவைக்க ரத்தம் சிந்தப்பட்டாகவேண்டும்

காலைக்குளிரில் இருண்டு விரைத்து நின்றது காடு. அதைச்சுற்றி ஒரு பெரிய புல்வெளி. புல்வெளியிலும் காட்டுக்குள்ளிலும் ஏராளமான பெருங்கல்வடிவங்கள். உலகமெங்கும் கல்வட்டங்கள் உண்மையில் எதற்கானவை என்ற வினா உள்ளது. இங்கே அதற்கான பதில் உள்ளது. கல்வட்டங்களுக்குள் காஸிகள் அவர்களின் கடவுள்களை வைத்து உதிரபலிகொடுத்து வணங்குகிறார்கள்.

காட்டுக்கு ஒரு இருபது வயதான இளைஞன் காவல். அவன் எங்களுக்கு டிக்கெட் தந்து வழிகாட்டியாக அழைத்துச்சென்றான். காஸி இனக்குழுவினன். துல்லியமான சீன முகம். கிறிஸ்தவன். ஜான் என்று பெயர். யோன் என்று உச்சரித்தான்.காஸிகள் இன்று பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இன்று அவர்களில் சிலரே இனக்குழுச்சடங்குகளைச் செய்கிறார்கள்.

இறந்தவர்களுக்கு அங்கே வருடத்தில் ஒருமுறை நினைவுப்பூசையும் பலியும் செய்யப்படுவதாக அவன் சொன்னான். காளைதான் பலியாகக் கொடுக்கப்படும். அன்று காஸி இனக்குழுவின் குலத்தலைவர்கள் அனைவருமே அங்கே வருவார்கள்.

அங்கிருந்து சிரபுஞ்சி சென்றோம். உலகில் மிக அதிகமாக மழைபெய்யும் இடம் என பாடப்புத்தகங்களில் இடம்பெற்றது. சிரபுஞ்சியின் அசல் பெயர் ஸொஹ்ரா. இப்போது மேகாலய அரசு அப்பெயரை மீண்டும் சிரபுஞ்சிக்குச் சூட்டியிருக்கிறது.

சிரபுஞ்சி முக்கியமான சுற்றுலாத்தலமாக ஆகி அங்கே ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டபோது மரங்கள் அழிக்கப்பட்டன. மழையீர்ப்புத்தன்மை குறைந்தது. இன்று அது மெல்லமெல்ல மழை குறைவான பகுதியாக ஆகிவிட்டிருக்கிறது

இதைச்சூழ்ந்திருக்கும் ஸொஹ்ரா மலைகள் கீழே வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக்காற்றை தடுப்பதனால் இந்த மழை. ஆனால் ஒட்டுமொத்த மேகலாயவாவுக்கும் இந்த மழையால் பெரிய பயன் ஏதும் இல்லை. மழை உடனே மீண்டும் கடலுக்குச் சென்றுவிடுகிறது

இன்றைய சிரபுஞ்சி ஒரு குட்டி நகரம். ஏராளமான விருந்தினர் மாளிகைகள். தங்கும் விடுதிகள். நாங்கள் சென்றகாலம் சுற்றுலாப்பயணிகளுக்குரியதல்ல. ஆகவே ஒட்டுமொத்த சிரபுஞ்சியே காய்ந்து வெயில் மூடிக்கிடந்தது. ஆனால் வெப்பம் இல்லை. மலைக்காற்று குளிராகவே இருந்தது

சிரபுஞ்சியிலேயே மழையை இல்லாமலாக்கிய ஈரோடு கிருஷ்ணனின் புண்ணியபலத்தை வியந்தபடி நடந்தோம். சிரபுஞ்சியில் முகங்கள் கலவையாக இருந்தன. நிறைய பிகாரி உழைப்பாளிகள். சுற்றுலா இப்பகுதிக்கு சோறுபோடுகிறது.

இந்தப்பயணத்தில் நாங்கள் ஆறு மாநிலங்களையும் ஒரே மூச்சில் பார்க்கவேண்டும், ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றே எண்ணியிருந்தோம் மேலதிக சித்திரங்களை தனித்தனியாக வந்து முழுமைசெய்துகொள்ளவேண்டும் என்று எண்ணம்

ஆனால் வடகிழக்கு மாகாணங்களின் பிரம்மாண்டமான தொலைவுகள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் குலைத்துவிட்டன. சாலைகளும் பொதுவாக மோசம். சாலைகள் பெருமளவில் போடப்படுகின்றன. ஆகவே எங்கும் குண்டு குழி, தூசி.

இன்னும் ஒரு வருடம் கடந்து இப்பகுதிகளுக்கு சென்றால் நான்குவழிச்சாலைகளில் மின்னல்போலச் செல்லலாம். அப்போது இப்பகுதிகள் மைய ஓட்ட தேசியத்திலிருந்து விலகி நிற்பதும் குறையும் என நினைக்கிறேன். இந்த தொலைவு காரணமாக இம்முறை மிசோரம் செல்லமுடியவில்லை

மேகாலயாவில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை குகைகள். இந்தியாவிலேயே அதிகமான இயற்கைக்குகைகள் உள்ள ஊர் இது. பொதுவாகவே உலகமெங்கும் சுண்ணாம்புக்கற்கள் கொண்ட மலைப்பகுதிகளிலேயே இயற்கைக்குகைகள் அதிகம். சுண்ணாம்புக்கற்களுக்குள் உள்ள உப்புப்படிவங்கள் கரைந்து செல்வதனால் இவை உருவாகின்றன.

அத்துடன் இங்குள்ள பெருங்கற்களையும் தனியாகவே பார்க்கவேண்டும் மேகாலயாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட சிறிய பெரிய நடுகல்லிடங்கள் உள்ளன. இங்குள்ள இனக்குழுக்களைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டு அந்த இடங்களைப்பார்ப்பதே நல்லது.

மாதிரிக்கு ஒரு குகையையும் பார்த்துவிடுவோம் என எண்ணினோம். அதில் ஒரு சின்ன குளறுபடி வந்தது. எங்கள் அசாமிய ஓட்டுநர் அவரே முடிவுசெய்து சிரபுஞ்சியில் சில இடங்களுக்குக் கொண்டுசென்றார். எளிமையான சுற்றுலா இடங்கள் அவை. ஆகவே நேரம் வீணாகியது. எங்களுக்கு மேலும் ஒருநாள்தான் பயணம் எஞ்சியிருந்தது

முதலில் சிரபுஞ்சியில் இருந்த ஒரு அருவிக்குச் சென்றோம் மழைக்காலத்தில் அது அரிய காட்சியாக இருக்கக்கூடும். இப்போது நான்கு அடுக்காக ஒரு சிற்றோடையாகக் கொட்டுகிறது. சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்துக்கொள்ளும் இடங்கள் எத்தனை சலிப்பூட்டுவன என்று அங்கே தெரிந்தது
The-living-tree-root-brid-012+copy
சிரபுஞ்சியில் உள்ள மௌஸ்மாய் குகைக்குச் சென்றோம். முதலில் அதை மௌசுமி என்று வாசித்து மௌசுமி சட்டர்ஜி என்று ஒரு நடிகை இருந்தாளே என்றேன். ஆமாம் அவளுக்கு தெற்றுப்பல். குண்டாக இருப்பாள். ஆனால் அழகி என்றார் வசந்தகுமார்.

மௌஸ்மாய் குகை சுண்ணாம்புக்கல்லில் உருவானது. சட்டிஸ்கரில் நாங்கள் பார்த்த பிலங்களுக்கு நிகரானது. மேலிருந்து உருகி வழிந்து உறைந்ததுபோல சுண்ணாம்புப்பாறை பாறைவிழுதுகள். விளக்குகளும் படிகளும் அமைத்திருந்தாலும் பல இடங்களில் சரிந்தும் தவழ்ந்தும்தான் செல்லவேண்டும் என்பதனால் ஒரு மெல்லிய உற்சாகத்தை அளிக்கும் பயணமாக இருந்தது அது

அங்கே அருகிலேயே ஒளியமைக்கப்படாத இரு குகைகள் இருந்தன. ஒன்றினுள் பத்தடி தூரம் வரை கிருஷ்ணன் மட்டும் இறங்கிப்பார்த்தார். ஒளியமைக்கப்படாத, மக்கள் சென்று வராத பிலம் என்பது பழக்கபடுத்தாத காட்டுயானை. அதனுள் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. அந்தத் திகில் ஒரு தனியனுபவம்தான். நான் அதற்கு தயாராகவில்லை

சிரபுஞ்சியின் முக்கியமான கவர்ச்சிகளில் ஒன்று ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அருவி. சிரபுஞ்சியில் இருந்து லாடவடிவமான மலைப்பள்ளத்தாக்கின் ஆழத்தில் விழும் ஏழு அருவிகள். நாங்கள் செல்லும்போது அருவிகள் எதிலும் நீரில்லை. பாடாத பாடகனைப்பார்ப்பதுபோல. மழையற்ற சிரபுஞ்சி என்பதையும் ஓர் அனுபவமாகக் கொள்ளலாம்

பிற இடங்களை விரிவாகவே திட்டமிட்டிருந்தோம். சிரபுஞ்சியில் மழை இருக்காதென்று தெரியுமென்பதனால் சும்மா பார்ப்போம் என்பதே எண்ணமாக இருந்தது. ஆகவே அருகே இருந்த உயிர்வேர்ப்பாலத்தைக் காண்பதைப் பெரியதாக திட்டமிடவில்லை. அங்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பது எங்கள் மனதில் எழவில்லை

மேகாலயாவுக்கே உரிய ஒரு சிறப்பம்சம் இந்த உயிர்வேர்வேலி. ஒரு ஆழமான நதியை அள்ளது பள்ளத்தாக்கை கடப்பதற்காக உருவாக்கப்படுகிறது இது. இருபக்கமும் ஆலமரம் போன்ற வேர்நீண்டு வளரும் மரங்கள் நடப்பட்டு அவற்றின் இளம்வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு இந்த பாலம் அமைக்கப்படுகிறது. ஒரு பாலம் உருவாகி முடிக்க இருபதாண்டுக்காலம் வரை ஆகும். ஆனால் உருவானபின் அழியவே அழியாது. வளர்ந்து தடித்தபடியே இருக்கும்

சிரபுஞ்சி அருகே இரண்டு உயிர்வேர்ப்பாலங்கள் உள்ளன. ஒன்று இரண்டடுக்குப்பாலம். மாலை ஐந்து மணியளவில் அங்கே போய்ச்சேர்ந்தோம். பிறகுதான் தெரிந்தது ஆயிரத்தைநூறு படிகள் இறங்கிச்சென்றுதான் அந்த பாலத்தை அடையமுடியும். மீண்டும் அதேயளவு உயரம் ஏறிவரவேண்டும்

ஏறிவருவதைப்பற்றி ஒன்றுமில்லை. ஆனால் ஐந்துமணிக்கே இருட்டிவிட்டது. மூன்றுமணிநேரம் ஆகும் சென்று மீள. அங்கே சென்றாலும் ஒன்றும் பார்க்கமுடியாது. ஏமாற்றத்துடன் திரும்பினோம். அருவியையும் ஏழுசகோதரிகளையும் தவிர்த்திருந்தால் பார்த்திருக்கலாம். இணையத்தில் கொஞ்சம் அதைப்பற்றி பார்த்திருக்கலாம்.

சிரபுஞ்சியில் தங்கலாமென எண்ணியிருந்தோம். ஆனால் அப்போது ஏழுமணிதான் ஆகியிருந்தது. ஷில்லாங்குக்கே சென்றால் மறுநாள் காலையில் ஷில்லாங்கைச்சுற்றியிருக்கும் இடங்கள் சிலவற்றைப்பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்ற எண்ணம் வந்தது. ஓட்டுநரிடம் திரும்ப ஷில்லாங்குக்கே செல்லும்படி சொல்லிவிட்டோம்

நல்லவேளையாக ஷில்லாங் செல்லும் சாலை நனறாகவே இருந்தது. நிறைய மலைவளைவுகள் என்பதுதான் பிரச்சினை. ஷில்லாங்கில் மாலையில் நன்றாகவே குளிரும். ஆகவே இம்முறை நல்ல கம்பிளிகள் கிடைக்கும் ஒரு விடுதியைக் கண்டடையவது என முடிவுசெய்தோம். வழக்கம்போல கடுமையாகப் பேரம் பேசி சுமாரான விடுதியில் நாற்றமடிக்கும் கம்பிளிகளுடன் கூடிய அறையை கண்டடைந்தோம்.

குளித்துவிட்டு அமர்ந்தபோது பார்க்காமல் போன வேர்வேலியை எண்ணிக்கொண்டிருந்தேன். மறுமுறை சிரபுஞ்சிக்கு வந்தாகவேண்டும் என்று உறுதிகொண்டேன். நல்ல மழைபெய்யும் நாளில் அந்த வேலியைப் பார்க்கச் செல்லவேண்டும்.

முந்தைய கட்டுரைவடகிழக்கு- சில குறிப்புகள்
அடுத்த கட்டுரைகேஜரிவால்