மேகங்கள் உலவும் இடம் என்பதனால் மேகாலயா என்று பெயர். இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக மழைபொழியும் இடங்களில் ஒன்று இப்பகுதி. ஆனால் கேரளம் போல வருடம் முழுக்க மழைபொழிவதில்லை. நாங்கள் செல்லும்போது மழை இல்லை. தூசு பறந்த தெருக்களும் அறுவடைமுடிந்து ஓய்வெடுக்கும் வயல்களுமாக வெறிச்சிட்டு கிடந்தது மேகாலயா
மழைக்காலம் ஜூனில் தொடங்கி செப்டெம்பர் வரை. மழை என்பது சாதாரணமாக பத்துநாட்கள் கூட நின்று பொழியும். ஆனால் வெள்ளம் வருவதில்லை. பெய்தமழை சில நிமிடங்களிலேயே சரிவான மலை நிலத்தில் அருவிகளாக கொட்டி ஓடி மறைந்துவிடும். எங்குபார்த்தாலும் பச்சைப்பசேலென்ற காடுகள்.மேகாலயாவைப் பார்க்க மிகச்சிறந்த பருவம் என்பது ஆகஸ்ட், செப்டெம்பர்தான். அப்போது இங்கே பச்சை நிறம் மட்டுமே இருக்கும்.
திரிபுராவிலிருந்து மீண்டும் மணிப்பூர் வந்தோம். சில்ச்சார் என்ற சிறிய நகரில் இரவு தங்கினோம். அதிகச் சுற்றுலாவசதிகள் இல்லாததனால் விடுதிகள் விலை அதிகமாகவும் வசதிகள் குறைவானவையாகவும் இருந்தன. நல்ல குளிர் வேறு. வெந்நீர் குழாயில் வராது, கொண்டுவந்து தந்தார்கள். பகல் முழுக்க புழுதியாடி செல்வதனால் மாலையில் குளியலைப்போட்டபின்னர் படுப்பதே என்னுடைய வழக்கம். தலைக்கும் சோப்பு போட்டுக்கொள்வேன்.
குளித்து கட்டுரையை எழுதி இணையத்தில் ஏற்றியபின்னர்தான் படுக்கவேண்டும். அன்றிரவே குறிப்புகளை எழுதுவதில் உள்ள சிறப்பு என்பது அன்று எது மனதில் நிற்கிறதோ அது இயல்பாக பதிவாகும் என்பதுடன் அன்றைய நிகழ்வுகளை முறையாகத் தொகுக்கவும் அது உதவும் என்பதுதான். இரவில் பழங்கள்தான் உணவு. பிறர் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு பழங்களுடன் திரும்பிவருவார்கள்.
கம்பளிகளை நேரடியாக உடலில் படும்படி போர்த்திக்கொள்வது அபாயகரமானது என்பதை நேர் அனுபவத்தில் அறிவேன். கண்ணுக்குத்தெரியாத ஒருவகை பூச்சி உடலில் குடியேறிவிடும். கடும் அரிப்பு இருக்கும். மருத்துவ சிகிழ்ச்சை வழியாகவே அதை அகற்றமுடியும். ஆகவே எப்போதும் இரண்டு மெல்லிய போர்வைகளை நானே கொண்டுசெல்வேன். ஒன்று விரிக்க. இன்னொன்று போர்த்திக்கொள்ள. அதன்மேல் கம்பளியைபோர்த்துவேன். கம்பிளியில் நம் உடலின் குளிர் பரவி கதகதப்பு ஏற்பட அரைமணிநேரம் ஆகும். அதுவரை ஈரத்துணிக்குள் கிடப்பதுபோலத்தான் இருக்கும்
காலையில் எழுந்து ஷில்லாங் கிளம்பினோம். மேகாலயா கனிவளம் மிக்க மாநிலம். நிலக்கரியும் சுண்ணாம்புக்கல்லும் இம்மாநிலத்தின் செல்வங்கள். சுண்ணாம்புக்கல் இப்பகுதியில் முன்பு எழுந்த தொடர் எரிமலை எழுச்சிகளில் இருந்து உருவானது. கந்தகம் கலந்தது. ஆகவே சற்று மஞ்சள் ஓடிய வெண்மை நிறம். இங்கே முக்கியமான சில சிமிண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. ஆகவே சாலைகளில் லாரிப்போக்குவரத்து அதிகம்.
ஷில்லாங்கை மதியம் சென்றடைந்தோம். ஷில்லாங் வடகிழக்கின் செழிப்பான மாநகரம். நம் கவனத்தை முதலில் கவர்வது புத்தம்புதிய மாருதி 800 கார்கள் கருமை-மஞ்சள் பளபளப்புடன் டாக்ஸிகளாக ஓடுவதுதான். டாக்ஸி, ஆட்டோ அனைத்திலும் இயற்கை எரிவாயுதான் பயன்படுத்தப்படுகிறது. ஷில்லாங்கில் உருவான பொருளியல் வளர்ச்சியின் முதல் அடையாளம் எங்கும் கட்டடங்கள் கட்டப்படுவது. இரண்டாவது கல்விச்சாலைகளின் விளம்பரங்கள். ஆங்கிலப்பள்ளிகள் ஏராளமாக முளைத்திருக்கின்றன.
ஷில்லாங்கின் தேவைக்கேற்ப பொறியியல், மருத்துவக்கல்விச்சாலைகள் இல்லை. ஆகவே கணிசமானவர்கள் பெங்களூர், வேலூர், சென்னையில் வந்து பயில்கிறார்கள். தென்னகத்து பொறியியல்கல்லூரிகளின் விளம்பரங்கள் கண்ணில்பட்டன. ஷில்லாங்கிலும் சரி மேகாலயா முழுக்கவும் சரி அனைத்து உடலுழைப்புப்பணிகளுக்கும் பிகாரிகளே.
மேகாலய மக்கள் பொதுவாக வறுமையிலிருந்து வெளியே வந்துவிட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. இங்குள்ள அனைத்து மலைகளும் சுண்ணாம்புக்குவைகளே. அடுத்த நூறு வருடங்களுக்குத்தேவையான சுண்ணாம்புக்கல் இங்குள்ளது.
மேகாலயாவின் முக்கியமான கவர்ச்சிகளில் ஒன்று கிராங்க்ஸுரி என்னும் அருவி. மைண்டு ஆறு இந்த மஞ்சள்கந்தக மலைகளில் இருந்து வழிந்து செல்லும் வழியின் வலப்பக்கம் செங்குத்தான மலைப்பாதை வளைந்து வளைந்து இறங்குகிறது.
ஷில்லாங்கைக் கடந்து மலைப்பாதையில் கிராங்ஸுரி நோக்கிச் செல்லும்போது மஞ்சள்நிறமான புல்லடர்ந்த மலைகளின் சரிவுகளை பிகாரித்தொழிலாளர்கள் அமர்ந்து வெட்டி சதுரவடிவக் கற்களாக மாற்றிக்கொண்டிருப்பதைக் கண்டோம். அதை சிமிண்ட் ஆலைகள் வாங்கிக்கொள்கின்றன. நில உரிமையாளர்களுக்கு பணம் செல்கிறது.இப்படி கல்லை வெட்டியெடுக்க அரசு அனுமதி ஏதும் இல்லை. ஒரு குடிசைத்தொழிலாக அதை அனுமதிக்கிறார்கள்.
மலைச்சரிவில் முதலில் மைண்டு ஆறு தென்பட்டபோது முதலில் அது என்ன என்னும் எண்ணம் தான் ஏற்பட்டது. அது நீர்ப்பரப்பு போலவே தெரியவில்லை. நீரின் நீலம் அல்ல. பளிச்சிடும் பட்டுநீலம். மணிநீலம். மயில்கழுத்து நீலம். பார்க்கப்பார்க்க ஒவ்வொரு கோணத்திலும் மாறும் நீலநிறம் அது.
கந்தகம் கலந்த இந்த நீர் மிகக்கடினமானது. ஆகவே ஒளிவிலகல் மூலம் உருவாகும் நீலம் மேலும் அடர்ந்திருக்கிறது. லடாக்கில் போங்கோங் ஸு ஏரியிலும் அமெரிக்காவின் கிரேட்டர்லேக் ஏரியிலும் மட்டுமே அத்தனை அழகிய நீலநிறத்தைக் கண்டிருக்கிறேன்.
பல இடங்களில் காரை நிறுத்தி நிறுத்திப் பார்த்துக்கொண்டே சென்றோம். கிராங்ஸுரியை பற்றி ஷில்லாங்கில் கேட்டால் எவருக்கும் தெரியவில்லை. வழிகாட்டிப்பலகைகளும் இல்லை. அருகே உள்ள ஊர்களைப்பற்றிக் கேட்டுக்கொண்டுதான் அங்கே சென்றோம்.
மிக அருகே சென்றபின்னரும் எவருக்கும் தெரியவில்லை. ஒர் உணவகத்தில் அரிசிச்சோறும் டீயும் சாப்பிட்டபின் விசாரித்தோம். அவர்களுக்கும் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் இருந்த படத்தைக் காட்டியபோது ஒருவர் அடையாளம் காட்டினார்
கிராங்ஸுரி அருவிக்குச்செல்ல சரியான பாதை இல்லை. செம்மண் பாதையில்கொஞ்ச தூரம் சென்றபின் ஒருவரிடம் கேட்டோம். வலப்பக்கம் திரும்பும்படிச் சொன்னார். வலப்பக்கம் சென்றால் மொட்டைமலை. அங்கே அருவியோ காடோ இருப்பதன் தடையமே இல்லை.
மீண்டும் காரில் ஏறிக்கொண்டபோது அவரே வந்தார். அவரையும் காரில் ஏற்றிக்கொண்டோம். அவர் வழிகாட்ட மீண்டும் இன்னொரு மொட்டைமலையில் ஏறி காரை நிறுத்தி இறங்கிக்கொண்டு நடந்து சென்றபோது அருவிக்கான வழி தெரிந்தது. அவர் வராமல் அந்த வழியைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது
கிட்டத்தட்ட அறுநூறடி ஆழத்தில் கிராங்ஸுரி அருவி கொட்டிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தில் மிகப்பெரிய அருவியாக இருக்கும்போலும். அப்போது மிகக்கொஞ்சமாகவே நீர் பெய்தது. வளைந்து இறங்கும் படிகளில் சென்று அருவியை அடைந்தோம்.
சட்டிஸ்கரின் திரோத்கர் அருவியைப்போல ஓர் அமைப்பு. பாறை நீண்டு பெரிய கூரை வளைவு போல நின்றது. மழைக்காலத்தில் திண்ணைக்கூரையில் இருந்து நீர் விழுவதுபோல அருவி கொட்டியது. அருவிக்குப்பின்னால் பாறைக்கூரைக்கு அடியில் நின்று அருவியை பார்க்கலாம். அரைஏக்கர் அளவுக்கு அங்கே ஒரு துளி கூட நனையாமல் நிற்க இடமிருந்தது
அருவிநீர் மெல்லிய கந்தகவாசத்துடன் கனமாக இருந்தது. நீரில் மீன்களேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தாவரங்கள் செறிந்திருந்தன. நீர் தேங்குமிடங்களில்தான் அந்த மயக்கும் நீலநிறம். அந்நேரத்தில் அங்கே எங்களைத்தவிர எவரும் இல்லை. நீர் சிதறி விழுவதைக் கண்டபடி குகைவாயில் போன்ற பாறைக்குக் கீழே அமர்ந்திருந்தோம்.
மேலேறி காரை அடைந்தோம். வழிகாட்டியவருக்கு நன்றி சொல்லி கிளம்பி அத்தனை தொலைவையும் மீண்டும் கடந்து ஷில்லாங் நோக்கி வந்தோம். இந்தியாவில் ஷில்லாங்குக்கு உள்ள மிகமுக்கியமான ஒரு சிறப்பு பெருங்கற்காலப் பண்பாடு இன்னமும் அப்படியே நீடிக்கும் இடம் அது என்பதுதான். ஷில்லாங் அருகே உள்ள நார்ட்டியாங் என்ற ஊரில்தான் உலகிலேயே அதிகமான நடுகற்களும் பெருங்கற்களும் உலகிலேயே உயரமான பெருங்கற்களும் உள்ளன.
மானுட வரலாற்றில் பெருங்கற்காலம் என்பது நாகரீகம் தோன்றிய தொடக்ககாலம் எனப்பகுகிறது. மனிதன் உணவைசேகரித்து வைக்கவும், இனக்குழுக்களாகத் திரண்டு வாழவும், குருதியுறவுகளைப் பேணவும் தொடங்கிய காலம். கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்காலம் தொடங்கியது எனலாம்.
இறந்தவர்களை அடக்கம் செய்து அவர்களுக்குமேல் பெரிய கற்களை அடையாளமாக நடுவது பெருங்கற்காலப் பழக்கம். உலகமெங்கும் அத்தகைய பலவகையான கற்கள் காணக்கிடைக்கின்றன. அவை நிலைக்கற்கள், அறைக்கற்கள், கல்லடுக்குகள், வட்டக்கற்கள், குடைக்கற்கள் அல்லது தொப்பிக்கற்கள் என பலவகைப்படும். தமிழகத்தில் கொடுமணல், மறையூர், புதுக்கோட்டை போன்ற பல இடங்க்ளில் இக்கற்கள் உள்ளன.
இந்தியாவில் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை பெருங்கற்கள் பல இடங்களில் உள்ளன. கிழக்கே பிரிட்டன் முதல் மேற்கே மஞ்சூரியா வரை பெருங்கற்கள் ஏறத்தாழ ஒரேவகையானவை என்பது மானுடவியலின் மர்மங்களில் ஒன்று.
ஆனால் பெருங்கல் நாட்டும் வழக்கம் தமிழகத்தில் வரலாற்றுக்காலம் முன்னரே அருகிவிட்டது. பெருங்கல் நாட்டுவதைப்பற்றிய இலக்கியக் குறிப்புகளோ மதச்சான்றுகளோ நம்மிடம் இல்லை. நடுகற்களை நாட்டும் வழக்கமாக அது மாறிவிட்டது. தமிழகத்தில் பல்லாயிரம் நடுகற்கள் உள்ளன.
மேகாலயாவின் ஜைந்தியா, காஸி இனக்குழுவினர் இன்றும் பெருங்கற்களை நாட்டுகிறார்கள். ஊர்த்தலைவர் அல்லது குடித்தலைவர்களுக்கு பெருங்கற்கள். வீரர்களுக்கு நடுத்தர அளவிலான கற்கள். பெண்களுக்கு நான்கு கால்பாறைகளுக்குமேல் பட்டைக்கல்லைத் தூக்கிவைத்து அமைக்கப்படும் அறைக்கற்கள். மேகாலயா முழுக்க நூற்றுக்கணக்கான ராட்சதக் கற்கள் நிற்பதைக் காணமுடியும்.
நார்டியாங்கில் இருந்த தொன்மையான பெருங்கல்தொகுதியை பார்க்கச் சென்றோம். அத்தனை முக்கியமான இடத்திற்கும் எவரும் வழி சொல்லவில்லை. கேட்டுக்கேட்டு செல்லவேண்டியிருந்தது. சிறிய சாலைகளில் வெயில் வேகமாக மங்கிக்கொண்டிருந்தது. மணி நான்கு. ஐந்தரை மணிக்குமேல் சென்றால் அங்கே எதையும் பார்க்க முடியாது.
சாலைகளில் மேகாலயாவின் கவலையற்ற குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடின. பெண்கள் விறகுகளும் தண்ணீரும் சுமந்து சென்றுகொண்டிருந்தனர். மேகாலயா மழைமிக்க நிலம். ஆனால் மண் நீரைத்தேக்காத சுண்ணாம்புக்கல். ஆகவே கோடையில் குழாய்நீர்தான். கிணறுகள் இங்கு இல்லை.
ஓரிரு பெண்களிடம் வழிகேட்டோம். ஆங்கிலத்திலேயே கேட்டோம். எல்லா இளம்பெண்களும் அடிப்படை ஆங்கிலம் அறிந்தவர்களே. அஸ்ஸாம் உட்பட வடகிழக்குப் பகுதிகளில் கிறித்தவக் கல்விநிறுவனங்களின் சேவையால் ஆங்கில அறிவு அதிகம். மேகாலயாவும் நாகாலாந்தும் மேலும் ஆங்கிலக் கல்வி கொண்டவை. காரணம் அவை இரண்டுமே கிறித்தவப்பெரும்பான்மை கொண்டவை கிறித்தவக்கல்வி பெற்றவை.
மேலும் ஒரு சிறப்பம்சம் மேகாலய மொழியை ஆங்கில லிபிகளிலேயே எழுதுகிறார்கள் என்பது. முன்னர் வங்காள லிபியில் எழுதிக்கொண்டிருந்தனர். பள்ளிசெல்லும் பிள்ளைகள் நேரடியாகவே ஆங்கிலம் பயில்கின்றன. அவை அறிந்த ஒரே எழுத்துரு ஆங்கிலம். ஆகவே கல்விச்சுமை மிகக்குறைவு. மேகாலய மொழியின் நாளிதழ்களெல்லாமே ஆங்கில எழுத்தில்தான். ஒருவாரம் அங்கே தங்கி அச்சொற்களை தெரிந்துகொண்டால் வாசிக்க ஆரம்பித்துவிடலாம்.
மாலைமயங்கும் நேரத்தில் நார்டியாங் சென்று சேர்ந்தோம். சாலையோரமாகவே தெரிந்துவிட்டது அந்த வளைப்பு. கம்பிவேலி போட்டிருந்தாலும் வாயில் திறந்திருந்தது. நூற்றுக்கணக்கான பெருங்கற்கள். பிரமிப்பூட்டும் அளவுக்குப் பெரியவை. ஐம்பதடி உயரமும் பத்தடி நீளமும் கொண்டவை. அதேயளவு மண்ணுக்குள்ளும் சென்றிருக்கும். ஆகவே தான் நூற்றாண்டுகளாக நீடித்து நிற்கின்றன.
அரையிருளில் அந்த இறந்தவர்களின் நிலத்தில் நின்றிருப்பது வினோதமான மன எழுச்சியை அளிப்பதாக இருந்தது. ஐம்பதாயிரமாண்டுகளாக அங்கே நடுகற்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. கல்லால் ஆன காடு. ஒவ்வொரு கல்லாக நோக்கியபடி சுற்றிவந்தோம்.
சிற்பங்கள் நிறைந்த கோயிலுக்கும் இதற்குமான வேறுபாடு ஒன்றுதான். அங்கே ஒவ்வொரு சிற்பங்களுக்கும் அடையாளம் உண்டு. ஏன் கோகிமாவின் போர்நினைவகத்திற்கும் ஒவ்வொரு கல்லுக்கும் அடையாளம் உண்டு. இங்கே ஒட்டுமொத்தமாக ஒரு கல்வெளி மட்டுமே. எந்தக்கல் எவருடையது என்றில்லை. பெயர்கள் இருந்திருக்கலாம் என்று ஒருமுறை தோன்றியது. பெயர் இருந்தால் என்ன வேறுபாடு என மறுமுறை தோன்றியது.
இருளில் திரும்பிவந்தோம். அங்கே அருகே ஒரு சிறிய டீக்கடை. அதில் சுண்டலும் டீயும் சாப்பிட்டோம். டீக்கடைக்காரரின் மகள் அழகி. பெங்களூரில் நர்சிங் படித்தவள் பிடிக்காமல் திரும்பிவிட்டாள். இப்போது கம்ப்யூட்டர் படித்து வேலையில் இருக்கிறாள்.
குளிர்ந்த இரவில் திரும்பி வந்து ஷில்லாங்குக்கு அருகே ஜோவாய் என்ற ஊரில் ஓர் அரசு விடுதியில் தங்கினோம். நாங்கள் தங்கியதிலேயே சுத்தமான விடுதி இதுதான். இரண்டு கம்பளிகள்வீதம் இருந்தன. ஹீட்டர் இருந்தது. ஆனால் அவ்வளவு குளிரவில்லை. விரைவிலேயே படுத்துவிட்டேன். இரவு பத்து மணி அளவில் சடசடவென்று மழை தகரக்குரை மேல் பொழிந்தது. சிறிது நேரத்தில் குளிரத்தொடங்கியது. குளிர் எலும்புக்குள் ஊடுருவி வலிக்க வைத்தது. அங்கே ஓடும் மைண்டு ஆற்றிலிருந்து எழும் குளிர்.
குளிர் சரியாக தூங்கவிடவில்லை. உடல் நடுங்கி விழித்துக்கொண்டு மீண்டும் தூங்கினேன். கனவுகளில் அந்த நடுகற்கள் வந்தன. பனிக்கட்டிகள் போல குளிர்ந்திருந்தன. கன்னங்கரிய பனிக்கட்டிகள்.