உச்சவழு- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ,

இன்று மூன்றாவது முறையாக உச்ச வழு சிறுகதையைப் படித்தேன். மொத்த கதையும் அதன் தலைப்போடு சேர்த்துப் படிக்கும் போது மட்டுமே திறந்து கொள்கிறது. உச்ச வழு, “top slip” என்பதன் மொழியாக்கம் என்றிருந்தீர்கள். top slip என்பது உயரத்திலிருந்து வழுக்கி விட ஏதுவான இடம் என்றே நினைத்திருந்தேன். அவ்விடமும் ஆங்கிலேயர் காலத்தில் மரங்களை வெட்டி வழுக்கி விட ஏதுவாக இருந்ததால் தான் அப்பெயர் வழங்கப் பட்டது என்றும் கேட்டிருக்கிறேன். (இது போன்ற தகவல்களை ஆதாரப் பூர்வமாக சரி பார்க்க நமக்கு வழி இல்லை. அந்த இடங்களில் உள்ளவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டியது தான். பொருத்தமாக இருந்ததால் ஏற்றுக்கொண்டேன்.)

ஆனால் அதை வழு என்று, தவறு என்ற பொருளில் நீங்கள் மொழியாக்கம் செய்தது அபாரம். ஆங்கிலத்தில் கூட slip என்ற வார்த்தையை “தவறுதலாக” என்ற பொருளில் பயன்படுத்தும் வழக்கம் உண்டு தானே, “slip of the tongue” போன்று. இன்னொரு வழியில் வழு என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் வழுக்குதல் என்ற அர்த்தம் கூடத் வந்துவிடுகிறது.

இன்று ஆனை மலைக்கு வந்திருப்பவனை தான் செய்த ஓர் உச்ச வழு, ஆகப் பெரிய தவறு, ஒன்றினால் துரத்தப் பட்டு வந்தவனாகவே நான் பார்க்கிறேன். உழைத்து, கறுத்து, இறுகி, கருஞ்சுழியாகியாகி, எங்கேயோ கதகதப்பை நல்கும் உடலாக மட்டுமே ஆகிப் போன அன்னையை இறக்கும் முன் பார்க்கக் கூடத் தோன்றாத தன் உச்ச வழுவால் துரத்தப் படும் ஓர் உள்ளம். அன்னை என்றவுடன் அவன் நினைவுக்கு வருபவை தான் அவனைச் சுற்றிலும் இருக்கின்றன. அன்னையின் அதே மட்கிய துணி வாசம், ஈரம் பாய்ந்த துணி, அன்னையின் அரவணைப்பில் உணர்ந்த அதே வெப்பம், எல்லாவற்றுக்கும் மேல் அன்னையாகவே உணரப்படும் யானை என அனைத்துமே அந்த உச்ச வழுவையே அவனுக்கு நினைவுறுத்துகின்றன.

அவன் தன் அன்னையிடம் செல்ல வேண்டும் என்று விழைகின்றான். அவளையே அக்காடு முழுவதும் தேடுகின்றான். தன்னை மரம் என்றே நினைத்து தன் மதிப்பையும், தான் இருப்பதற்கான நியாயங்களையும் மட்டுமே இத்தனை நாள் தேடியவன் தானும் ஓர் காடு தான் என்பதையும், தான் இருப்பதாலேயே காடும் இருக்கிறது என்பதையும், அது ஒன்றே வாழ வேண்டியதற்கான அனைத்து நியாயங்களையும் அளித்து விடுகிறது என்பதையும் இங்கே உணர்கின்றான். தன் தவறு தன் நிழலாக வந்து கொண்டிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தவன் ஏதோ ஓர் கணத்தில் அந்த நிழல் காட்டில் சென்று கரைவதையே காண்கிறான். மனமழிந்த நிலையில் காட்டை நோக்கிப் போகின்றான். அக்கணம் அவனுள் காடு முழிக்கிறது.

தன் தாயை விட்டு அகன்று அகன்று போனதாக நினைத்த அவனின் நீர் கூட புகாத அகப்பெட்டியினுள் இருந்த அனைத்துமே அவன் தாயின் மட்கிய உடைவாசத்தையே பரப்புவதைக் காண்கிறான். சுற்றி அவனைப் பார்க்கும் அனைத்து விழிகளிலும் இருந்து கோட்டும் சூட்டும் போட்டவனல்ல தான், அன்னையின் முந்தானையில் சுருண்டு கொண்டவனே தான் என்பதை உணர்கிறான். அன்னை மட்டுமல்ல, அவனால் எந்த பெண்ணையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மனைவியையும் கூடத் தான்!! இதோ அந்த கதையில் கேட்ட தொரையின் மனைவியைக் கூடத்தான்!! அவர்களை புரிந்து கொள்ள முடியாவிட்டால் என்ன, அவர்களும் காட்டின் ஓர் அங்கம் தானே என்று புரிந்து கொள்கிறான். அவன் காடு ஒளி கொள்கிறது. முழு நிலவு பொழியத் துவங்குகிறது. அந்த காட்டின் இறுகிப் போன பரு வடிவாக, முழு நிலவையும் தந்தத்தில் கொண்டு, அவன் அன்னையாக அவன் தேடிய அந்த யானை அவனை அள்ள வருகிறது. இனி அவன் அந்த காட்டில் தொலைய மாட்டான்…. அந்த தொரையைப் போல ஆடை மட்டுமே எஞ்சியவனாக மறைய மாட்டான்.

ஓர் உச்ச வழுவால் துரத்தப் பட்டவன் ஓர் உச்சமான இடத்தில் வழுக்கிய போது அந்த காடு வந்து அவனை ஏந்திக் கொள்கிறது. (நன்றி ஊமைச் செந்நாய்). எனக்கு நூறு நாற்காலிகள் கேட்ட தர்மா நினைவுக்கு வந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு எனக்குத் திறந்து கொண்ட கதை இது ஜெ.இது தங்களின் தளத்தில் வந்த போதெல்லாம் நான் உங்கள் தளத்தின் நிரந்தர வாசகன். ஆனால் இக்கதை என்னை வெளியில் தூக்கிப் போட்டதைப் போல உணர்ந்தேன். என்னை நோக்கி, “என்னைப் படிக்க வேண்டாம்” என்று சொல்வதாக உணர்ந்தேன். விடாப்பிடியாக மீண்டும் படித்த போதும் வாயில்களே இல்லாத சுவரில் வழி தேடிய உணர்வே எஞ்சியது. சரி நமது வாசிப்பனுபவம் அவ்வளவு தான் என்று விட்டுவிட்டேன். நீலம் நாவல் முடிந்த பின்னர் இக்கதையைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தலைப்பு நினைவில் இல்லை. என் நினைவில் நின்றதெல்லாம் வெட்ட வெளி இருளில் வளரும் பொன்னென ஒளிரும் தந்தங்கள் மட்டுமே. அதையே தங்கள் தளத்தில் தேடிச் சலித்தேன். எதனால் பொன்னொளிர் தந்தங்களாக இக்கதை என் நினைவில் நின்றது என்பது இன்றளவிலும் எனக்குப் புரியவில்லை. இன்று இக்கதை பற்றிய கடிதம் கண்டவுடன் மீண்டும் படித்தேன். இந்த படிம வெளி நாளை வேறு ஒன்றாகக் கூடத் திறக்கலாம். ஆனால் இன்று, இப்போது கண்ட இந்த திறப்பை, அது தந்துள்ள உவகையை பகிரவே இக்கடிதம். மீண்டும் நன்றி, எங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 57
அடுத்த கட்டுரைவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)