உச்சவழு-கடிதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

“உச்சவழு” பலமுறை வாசித்தேன். நான் புரிந்துகொண்டவற்றை எழுதுகிறேன்.

மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் வரையிலான இடைவெளியில் மரம், காடு, யானை முன்சித்திரமாகத் தீட்டப்படுகின்றன. அப்பொழுது அது சாதாரண வர்ணனையாகத் தோன்றினாலும் கதை முழுக்கப் பரவியிருக்கும் அவை உணர்த்துவது மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. கதையின் முடிவில் ஏற்படுத்தும் அதிர்வை மீண்டும் மீண்டும் படித்து உணர்ந்து கொண்டே இருந்தேன். இருக்கிறேன்.

தங்குவதற்கு அனுமதி கிடைத்தபின் அவன் காட்டை நோக்கி நடக்கிறான்.

பங்களாவை அடைந்தவுடன் அவனுடைய மனக்குழப்பம் மெல்ல மெல்ல புரிகிறது.

மதியம் உண்டு உறங்குவதுவரை காண்பவை யாவும் அவனுடை அம்மாவை ஞாபகத்தில் கொண்டுவந்து நிறுத்துபவையாகவே இருக்கின்றன. அவனின் அம்மாவின் மணம் மீட்டெடுக்கப்படுகிறது. குற்றவுணர்வு தலைதூக்குகிறது.

மாலை குளிர் இறங்கியதும் மீண்டும் பங்களாவிற்குள் செல்கிறான். பின், காடு அவனைக் கவர தன்னையறியாமல் காட்டை நோக்கி நடக்கிறான். திரும்ப வந்ததும் கோட் அணிந்து கொண்டு அவனின் அம்மாவின் வெம்மையை உணர்கின்றான். காடு காணும் வானத்தில் எப்பொழுதும் வெளிச்சம் உண்டு என்ற வரி தெளிவின்மைக்குள்தான் தெளிவும் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றது. மீண்டும் அம்மாவின் நினைவு அவனைத் தாக்குகிறது. உறக்கம் கலைகிறான். மரணம் அவனை நோக்கி நெருங்கி வருகிறது…

ஆம். யானை என்பது அவனை நெருங்கும் மரணம்தான். அம்மாவை மீட்டெடுத்த தருணங்கள் அவனை மரணத்தை நோக்கிச் செலுத்துகின்றன. மரணம் அவனை நோக்கி வருகின்றது.

தாயையே குழந்தையாகக் காணும் அல்லது பேணும் அந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டதுதான் அவனுடைய பிழைகளிலெல்லாம் உச்சம். “உச்ச வழு”.

ஆம். நான் அப்படித்தான் உணர்கின்றேன்.

வித்தியாசமான அனுபவத்திற்கு நன்றி.

விஜய் ரங்கன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம் விழா இன்று