«

»


Print this Post

ஓலைச்சிலுவை – கடிதம்


அன்பு அண்ணா

நாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும், அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை அவர்களின் சொற்கள் சொற்களாகவே எஞ்சும். அத்தருணம் வரை அவர்களை பின்தொடரும் உலோக பொம்மையாக வாழ்வதை , நம் ஆளுமை புரளாதிருப்பதை ஆழ்மனம் அவமதித்து கொண்டே இருக்கும் .ஒலைச்சிலுவை கதையில் தந்தையின் மரணத்திற்கு பின்பு கஞ்சிக்கு வழியில்லாததால் சாகவிருந்த குடும்பத்தை காப்பற்ற டாக்டர் சாமெர்வெலின் கிறிஸ்துவத்துக்கு மாறும் ஜேம்ஸ் டேனியலின் வாழ்வை போல்.

உலகப் போரில் பகடைகளாக நகர்த்த பட்டு சிதைத்து கொல்லப்பட்ட எளிய மனிதர்களின் ஆன்ம வல்லமை புவியெங்கும் எத்தனை ஆளுமைகளை விதைத்திருக்கிறது? உலகம் யாவையும் காரி டேவிஸ் போன்றே டாக்டர் சாமெர்வெல்லும் உலகப்போரில் எளிய மனிதனின் மகத்துவத்தை கண்டுகொள்கிறார் . இமயப்பயணத்தின் இழப்பின் அதிர்வு. பின்பு நெய்யூர் மருத்துவமனை வாயிலில் கந்தல் அணிந்த சிறுமி அளிக்கும் ஓலைச்சிலுவை. இந் நிகழ்வுகளால் உலுக்கப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் விற்று நெய்யூர் மருத்துவமனையை விரிவுப்படுத்துகிறார். நெய்யூர் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கிறார்.

சாமர்வெல் போன்ற மாமனிதர்களின் அருகாமையில் இளமையை வாழ்வது பெருவரம். குருவின் பாதங்களில் வாழ்வது. எட்டாவது வயதில் தந்தையின் மரணத்திற்கு பிறகு சாமெர்வெலால் மீட்கப்பட்டு அவருடன் வாழ்கிறான் டேனியல் . சில ஆண்டுகளில் அவன் சூழல் புறத் தோற்றம் என எல்லாம் மேம்படுகிறது. சோற்றுக்காக வேதத்திற்கு மாறிய சிறுவனின் நோக்கம் நிறைவுறுகிறது .

புறவுலகிற்கு சாமெர்வெல் போல தோற்றம் அளிப்பினும் அவன் உள்ளுக்குள் புரளவே வில்லை. கடவுளின் துளியை அவன் ஆன்மா கண்டடையவில்லை என்பதை உணர்ந்து உள்ளூர அவமதிக்கப் படுகிறான். சாமெர்வெலின் ஓபோ இசை மட்டும் தான் அவன் ஆன்மாவை தீண்டுகிறது.

தன் சீடனின் அகத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் குரு . அவனைத் தன்னில் இருந்து விளக்க விளைகிறார் . குருவின் அருகில் இருந்து அடைய இயலாத ஒன்றை எங்கு சென்று தேடுவது ? சாமெர்வெலிடமே தன் அகத்தை விளக்குகிறான். குருவுடன் வாழ்வது நரகமே எனினும் அவர் பாதங்களே சரண். அவரை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறான்.

காலரா தாக்கி பிணக்காடாக கிடக்கும் குமரி மாவட்டம் . கிருஷ்ணன் கோவிலில் காலராவுக்கு மகவுகளை பலிகொடுத்ததால் சாகவிளையும் அன்னையை துயரில் இருந்து சாமெர்வெலின் சொற்கள் மீட்கிறது . பித்துக்கொண்டவள் போல் அவள் சாமெர்வெலின் பாதங்களில் மண்டியிட்டு அழுகிறாள். அதைக்காணும் டேனியல் தளர்கிறான். அவனது ஆன்மாவில் கிறிஸ்துவின் துளி ஒன்று வீழ்கிறது.

தன் தந்தையின் மரணத்தின் வழியே தனக்களிக்கப்பட்ட ஒலைச்சிலுவையை தவறவிட்ட டேனியல் இம்முறை அதை இறுகப்பற்றிக் கொள்கிறான் .

பிரபு

அறம் அனைத்து கட்டுரைகளும்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/72038