«

»


Print this Post

நிலம் ஒரு கடிதம்


வணக்கம். இலக்கியம் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை மிகச் சிறந்த விவேகியாக்குகிறது என்ற சு.ரா. சொல்லிப் படித்திருக்கிறேன். அதை என் வாழ்க்கையின் அனுபவத்தில் நான் கண்டு வருகிறேன். நான் ஏன் இத்தனை அமைதியானவனானேன் என்று என்னையே பலமுறை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு என் மனம் தனிமைப்பட்டு, அமைதியின் ஆழத்தில் அமிழ்ந்து போகிறது.

இப்படியான இருப்பிலேயே இலக்கியம் இன்னும் பலவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே வருகிறது. அப்படி ஒன்றைப் படித்து நான் மனமுருகிய நாள்தான் இன்று. ஏற்கனவே ஒரு முறை படித்துவிட்டேன் என்றாலும், அன்றைய மனநிலையில் அது இத்தனை தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தவில்லை. தோய்ந்த கவனமில்லாமல் இருந்திருக்கலாம். இந்த மீள் வாசிப்பில் மனம் கசிந்து உருகிப் போனது.

அம்மாதிரி சமயங்களில் நான் என் தாயை நினைத்துக் கொள்கிறேன். அவள் மனநிலை அப்படியே என்னிடமும் படிந்து போனது என்பதை உறுதி செய்து கொள்கிறேன். என்னைப் பெற்றெடுக்கும் முன் அவள் சில காலம் தன் கணவரைப் பிரிந்திருந்திருக்கிறாள். கணவனோடு சேர்ந்து இருக்க முடியவில்லையே என்கிற ஏக்கமும், பயமும் அவளை அதை நினைத்து நினைத்து மனமுருகி ஏங்க வைத்து, இளக வைத்து, சதா அழ வைத்து பாடாய்ப் படுத்தியிருக்கிறது. அதற்குப்பின் அவர்கள் சேர்ந்த சந்தோஷமான, திருப்தியான காலகட்டத்தில்தான் நான் பிறந்தேன் என்பாள் என் தாய். தொட்டதெற்கெல்லாம் நெக்குருகும் கசிந்த மனநிலை என் அம்மாவுக்கு. அம்மாதிரி விஷயங்களை அவள் சொல்லும்போதெல்லாம், எதிலும் இன்று படிக்கும்போதெல்லாம் நானும் மனம் நெகிழ்ந்து போகிறேன்.

நெலமில்லேன்னா இப்டி இருக்கலாம்….என்ன சரியா…இருந்திருவோமா?

சும்மா இருங்க…என்று அவள் அவனை மெல்லத் தட்டினாள்.

அடிச்சுப்பிடித்து பிறரின் நிலங்களை அபகரிக்கும் அவனிடம்தான் அவளுக்கு எத்தனை அன்பு. சும்மா இருங்க….என்ற அந்த வார்த்தைதான் எவ்வளவு அன்பை வெளிப்படுத்துகிறது?
பின்பக்கம் பண்டாரம் மெல்லிய குரலில் ஏலே, நீயும் அய்யனாரா? அரிவாளோட நிக்கே? என்றான்.

சேவுகப்பெருமாள் திரும்பிப் பார்த்தான்.

பண்டாரம், ”அதவச்சிக்கிட்டுக் கும்பிடுவே…”

சேவுகப்பெருமாள் கூர்ந்து பார்த்தான்.

அந்த நம்பிக்க இல்லேன்னா எதுக்கு அய்யனாரக் கும்பிடுதே? அந்த அரிவாளக் கும்பிடுறதுதான?

எத்தனை தத்துவம் பொதிந்த வார்த்தைகள்?

ஒண்ணு சொல்றேன் கேக்குதியா?

பெத்தவளுக்கு ஒண்ணு ரெண்டு. பிள்ளை…பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை… – அவளுக்கு குபுக்கென்று கண்ணீர்

பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?

பிள்ளை அல்லாததனாலதான்… – பண்டாரம் சிரித்தார். – ராமலட்சுமி அடிபட்டவள்போல் எழுந்து விட்டாள்.

தளர்ந்த நடையுடன் ராமலட்சுமி படிகளில் இறங்கினாள். அதற்குப்பின் வீடுவரை அவளால் ஒரு சொல் கூடப் பேசமுடியவில்லை…..

என்ன அற்புதமான எழுத்து? சுருங்கச் சொல்லி, பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்ட படைப்பு இது. “நிலம்“ – நேற்றிலிருந்து என்னைப் போட்டு வாட்டி எடுக்கிறது.
அவளுக்குத்தான் எத்தனை பிரியம் கணவன்மேல். அவள் சொல்லுக்குக் கட்டுப்படுவதாய், பின்னாலேயே வரும் அவன் ஒரு நாள் மாறமாட்டானா? அப்படி மாறினால் அந்தப் பண்டாரத்தைவிட மேம்பட்ட ஞானநிலைக்குப் போய்விடமாட்டானா? சேவுகப் பெருமாளை நினைத்து மனம் ஏங்குகிறது.

உஷாதீபன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/72036/