கும்பமேளா – 8

ஏப்ரல் பதினாறாம் தேதி காலை ருத்ரபிரயாகில் கண்விழித்தேன். குளிரே இல்லை. ஜன்னல்வழியாகவே அளகநந்தாவும் மந்தாகினியும் தழ்விக்கொள்வதை பார்க்க முடிந்தது. அபாரமான ஒரு தனிமையுனர்ச்சி ஏற்பட்டது. அல்லது இழப்புணர்ச்சி. மாபெரும் மன எழுச்சியுடன் அங்கே வந்திருக்கிறேன். ஆனால் அந்த இடத்தை என்னால் கொஞ்சம்கூட அடையாளம் காண முடியவில்லை. நான் வந்தது வேறு எங்கோ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

வெளியே இறங்கி தனியாக ஒரு சுற்று சுற்றினேன். அப்போது ஓரளவு தெளிவாகியது. நான் 1986ல் வந்தபோது ஆழமான நதிக்குமேல் ஒரு பாலம் இருந்தது அங்கே. அந்த பாலத்தில் நின்று கீழே பார்த்தபோது பயங்கரமாக நீர் கொப்பளித்துக்கொண்டிருந்தது. இன்று, வெறும் 25 வருடங்களில் அந்த இடத்தைச் சுற்றி ஓர் ஊரே உருவாகிவிட்டிருக்கிறது.

அந்த ஊரின் எல்லா கட்டிடங்களும் முக்கால்வாசி கங்கைக்குள்தான் நின்றன. கங்கைச்சரிவுக்குள் கான்கிரீட் தூண்களை நாட்டி எழுப்பி சாலைக்கு இணையாக கட்டிடங்களை உருவாக்கியிருந்தார்கள். இந்த தூண் தொழில்நுட்பம் வந்தபின்னர்தான் ஊரே பிறந்திருக்கிறது. இன்று தொலைக்காட்சி வழியாக இந்த இடங்கள் பிரபலமான பிரகு பெரும் கூட்டம் சுற்றுலாவுக்கு வருகிறது. அவர்களை ஒட்டி ஒரு சுற்றுலாத்தொழில் பிறந்து விட்டிருக்கிறது.

கங்கைக்கரையில் கட்டிடங்களைக் கட்டுவது கடுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் சீக்கிரமே கங்கையின் எல்லா அழகும் இல்லாமலாகிவிடும் என்பதே உண்மை. நூறு வருடம் முன்பு ரிஷிகேஷ் ருத்ரபிராயகை போல இருந்திருக்கும். இன்று அது சாக்கடைகளை கங்கைக்குள் உமிழும் ஒரு நகரம்.

காலையில் கிளம்பி கங்கைரை வழியாக மீண்டும் ரிஷிகேஷ் நோக்கி இறங்க ஆரம்பித்தோம். பொதுவாக கட்வால் பகுதி வறுமை இல்லாத சுத்தமான இடமாக தென்பட்டது. அங்கே உறுதியான நிலையான சாலைகளை அமைக்க முடியாது. சாலைகள் வருடம் தோறும் இடிந்துகொண்டே இருக்கும். மொத்த இமயமலை மண்ணே உறுதியற்ற புழுதி-கூழாங்கல் குவியல். பாறைகள் உடைந்து சல்லிக்குவியலாகக் கொட்டிக்கொண்டே இருக்கும். சாலையின் ஓரமாக அருவிபோல மலையில் இருந்து மண் கொட்டிக்கொண்டே இருக்க தினமும் ஒரு மண்குவியல் பிறக்கிறது. மழைக்காலத்தில் எப்படி இருக்குமென சொல்லவே வேண்டாம்

ஆகவே வேளாண்மை, தொழில் வளர்ச்சி அங்கே சாத்தியமே இல்லை. ஆனாலும் குறைவான மக்கள்தொகை காரணமாக சுற்றுலாவை வைத்தே ஊர்கள் வளமாக இருக்கின்றன. புதிய வீடுகள். மின்சாரம், சாலைகள், கல்விநிலையங்கள்.

மீண்டும் குளித்துக்கொண்டு வந்தோம். வெயிலில் வெந்த மலைகள் அனல் கக்கின. கங்கையின் அதிகுளிர் தண்ணீரில் குளிப்பது அந்த சூடுக்கு இதமாக இருந்தது. கங்கையில் காலால் தொட்டால் மின்னதிர்ச்சி ஏற்படும் குளிர். சட்டென்று இறங்கி ஒரு நிமிடம் கழித்தால் இதமான நடுக்கம். இருபது நிமிடங்களில் உடல் அதிர ஆரம்பித்துவிடும்.

இறங்கும் வழியில் ஓர் இடத்தில் நல்ல வெண்மணல் இருந்தது. இறங்கி குளித்துக்கொண்டிருந்தோம். மறுகரை நல்ல காடு. அங்கே இரு கேழைமான்கள் [நாய்போல சின்னதாக இருக்கும் காட்டுமான்] வந்து நீர் குடித்துவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தன. ஒரு கிழவர் வந்து ‘நீர் ஆழமா? நீச்சல் தெரியாதவர் குளிக்கலாமா?’ என்று பய்ந்து கேட்டார். கிருஷ்ணன் விளக்கினார்.

சட்டென்று அவர் அம்புபோல நீரில் பாய்ந்து மீண்டு வந்தார். ”நான் கங்கையின் மகன்” என்றார் சிரித்துக்கொண்டு. உற்சாகமான கிழவர். ஒல்லியான உடல் சிரிக்கும் கண்கள். ”நாங்கள் ஹரித்வாரில் இருந்து வருகிறோம்” என்றார் கிருஷ்ணன். ”அங்கெல்லாம் கங்கை சுத்தமாக இருக்காது. நான் மலையிறங்குவதே இல்லை” என்றார் அவர்.

ஒப்புநோக்க கேரளம், தமிழ்நாட்டை விட இப்பகுதி சுத்தமாக இருப்பது போலவே இருந்தது. மாபெரும் குப்பைமலைகள் எங்கும் இல்லை. காரணம் மக்கள் மிகக் குறைவாகவே குப்பை போடுகிறார்கள் என்பதே. இங்கேபோல குப்பை அள்ளும் அமைப்பும் செயலிழந்துவிடவில்லை.

திரும்பும்போது அருண் சொன்னார் அந்தக்கிழவருக்கு எழுபதுக்கு மேல் வயது என்றும், அவருக்கு கான்சர் தாக்கியிருப்பதாகவும் அவர் சொன்னதாக. ”அதைப்பற்றி என்ன கவலை, வாழ்வது வரை வாழ்வோம்” என்று அவர் உற்சாகமாகச் சொன்னாராம்.

கோவிலூர் மடத்துக்கு இரவு  எட்டு மணிக்கு வந்து சேர்ந்தோம். நான் துணிகளை துவைத்தேன். பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் கோவிலூர் மடம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட காரில் டெல்லி நோக்கி கிளம்பினோம். இரவிலேயே டெல்லிக்குச் செல்ல திட்டமிருந்தது. ஆனால் ரிஷிகேஷில் நாங்கள் நினைத்தது போல கூட்டம் குறையவில்லை. கும்பமேளா ஒன்று நடப்பது போலவே இருந்தது. திரண்டு வழித்துசெல்லும் மக்கள் பெருக்கு.

ஹரித்வாரில் அப்போதும் முக்கால்வாசி கூட்டம் இருந்தது. கும்பமேளா நடந்த தடயமே இல்லாமல் நகரம் சுத்தமாக இருந்தது. சாலையோரம் ஒரு சமணக்கோயில் இருந்தது. சந்திரப்பிரபாநாதர் கோயில். ராஜஸ்தானிகள் அதிகமும் சந்திரபிரபாநாதரை வழிபடுகிரார்கள். கஜுராகோ பாணியிலான கோயில். நுட்பமான சிற்பங்களுடன் சிவப்புக்கல்லால் ஆக்கப்பட்டது.

டெல்லி பயணத்தை ஓர் அக்கினிப் பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும். அனல் நேராகவே முகத்தில் அறைந்தது. ஈரத்துண்டை நனைத்து போட்டுக்கொண்டே வந்தேன். மாலை ஆறுமணிக்கு டெல்லி வந்து சேர்ந்தேன். ஏழு மணிக்கு சென்னைக்கு விமானம்.

[முற்றும்]

முந்தைய கட்டுரைதுவாரபாலகன்
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (42 – 43)