திமாப்பூரில் இருந்து கிளம்பி கோஹிமாவுக்கு மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். ஆனால் ஏழு மணி என்பது இப்பகுதியில் நள்ளிரவுபோல. குளிர். ஊரும் அடங்கத்தொடங்கிவிட்டிருந்தது. நாங்கள் கோஹிமாவிலிருந்து ஸுக்கு சமவெளிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் அதை பயணிகளுக்கு மூடிவிட்டார்கள் என்று அனுமதிகோருவதற்காகச் சொல்லி வைத்திருந்த நண்பர் சொல்லிவிட்டார். காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஆகவே மறுநாள் கோஹிமாவையே பார்ப்பதற்கு முடிவெடுத்தோம். கோஹிமாவில் அரசினர் விடுதியை அரைமணிநேரம் தேடிக் கண்டடைந்தோம். கோஹிமா நாகாலாந்தின் தலைநகரம். மிக அதிகமாக பூகம்பங்கள் நிகழும் இடங்களில் ஒன்று இது. ஆகவேதான் இங்கே அக்காலம் முதல் மூங்கில்தட்டிகளாலும் புல்லாலும் வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள். இப்போது பெரிய கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை பூகம்ப அபாயம் மிக்க இடங்களில் இருப்பதாக அரசினர் விடுதியில் சந்திக்க நேர்ந்த நிபுணர் ஒருவர் சொன்னார்.
கோகிமா ஒரு நவீன நகரம். இந்தியாவின் ஒரு செழிப்பான நகரத்திற்குரிய அனைத்துக் காட்சிகளும் இங்கும் உண்டு. உயரமான கட்டிடங்கள். விளம்பரங்கள் ஒளிரும் கடைவீதிகள். வண்டிகள் நெரிசலிட்ட சாலைகள். விளம்பரத்தட்டிகள். செல்பேசிக்கடைகள். ஆச்சர்யமளிக்கும் ஒன்றுண்டு. எங்கும் நாகா மொழியோ பிற மொழிகளோ கண்ணுக்குப்படவில்லை. ஆங்கிலம் மட்டுமே. ஆங்கில லிபிகளில் நாகா மொழி எழுதப்படவும் இல்லை. அனைவருமே ஓரளவு ஆங்கிலம் பேசுகிறார்கள். இந்தியும் ஓரளவு தெரிந்திருக்கிறது.
நல்லகுளிர். விடுதிக்குச் சென்றதுமே படுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன். காலையில் எழுந்துதான் குறிப்புகளை எழுதினேன். நான் நினைத்திருந்ததற்கு மாறாக இந்த வடகிழக்குப்பயணம் இயற்கையழகின் அற்புதமான காட்சிகளால் ஆனதாக இருக்கவில்லை. சொல்லப்போனால் பரசுராமகுண்டம் மற்றும் பிரம்மபுத்திரா தவிர எந்த நிலக்காட்சியும் என்னைக் கவரவில்லை.பொதுவாக இந்நிலம் வறண்டுபோன கேரளம் போலவே இருந்தது.
ஒருவேளை மழைக்காலத்தில் வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பசுமையாக இருந்திருக்கும். ஆனாலும்கூட இமையமலையடுக்குகளுக்கோ மேற்குமலைச்சரிவின் கிராமங்களுக்கோ உள்ள அழகு இப்பகுதிக்கு இல்லை என்றே தோன்றுகிறது. மேலும் நீண்டநேரம் பயணம் செய்தபின்புதான் ஒரு இடத்தைப்பார்க்க முடிந்தது. இரவில் நன்கு களைத்து அறைக்கு வந்தபின் எழுதும் உற்சாகமும் பெரியதாகக் கூடவில்லை.
ஸுக்கு சமவெளிக்குச் செல்லாதனால் கோஹிமாவையே சுற்றிப்பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். எங்கள் விடுதிக்கு அருகிலேயே கோஹிமாவின் உலகப்போர் நினைவிடம் இருந்தது. 1945ல் பிரிட்டிஷ் இந்தியாவும் ஜப்பானும் நடத்திய கடைசிப்போர் இங்குதான் நடந்தது. இந்திய நிலப்பகுதிக்குள் ஜப்பானியர் காலடி வைத்த இடம் கோஹிமாதான். நேதாஜி இங்குதான் இந்தியக்கொடியை ஏற்றினார்.
இங்கே அதிகாரிகளின் முகாமும் அவர்களின் விளையாட்டுமைதானமும் இருந்தன. அங்கே நடந்த கடுமையான போரில் ஆயிரத்தைநூறுபேர் இறந்தார்கள். அவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவிடம் இது.காமன்வெல்த் அமைப்பால் நிர்வகிக்கப்படுவதனால் நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. சிறிய செடிகள் பூக்களுடன் நின்ற அழகிய பூங்கா அடுக்கடுக்காக ஏறிச்சென்றது. சீரான வரிசையாக நினைவுக்கற்கள்.
நடுகற்களை வாசித்தபோது துயரம் நெஞ்சில் நிறைந்தது. பெரும்பாலான படைவீரர்களுக்கு 17 முதல் 25 வயதுக்குள்தான். செதுக்கப்பட்ட வரிகளில் ‘உன் இனிய புன்னகையும் சிரிப்பும்’ என்ற வரி கண்ணில் படும்போதெல்லாம் நெஞ்சு திடுக்கிட்டது. ஏனென்றால் அது ஒர் அலங்கார வரி அல்ல. உண்மையிலேயே அந்த வயதில் இளைஞர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள். மனைவிகள் எழுதிய கண்ணீர் வரிகள். பெற்றோரின் சொற்கள்
இத்தனை தொலைவில் நின்று பார்க்கையில் அவர்களின் இறப்பு முற்றிலும் பொருளற்றதாகவே தோன்றுகிறது. வரலாற்றின் பெருக்கில் வெற்றியும் தோல்வியும் உண்மையில் என்னவாகப் பொருள்படுகின்றன? பெரும்பாலான கல்லறைகளில் ‘அவ்வுலகில் சந்திக்கும்வரை’ என்ற வரி இருந்தது. அந்த வரி எத்தனை பொருளற்ற உணர்ச்சி வெளிப்பாடோ அதே போன்றதே அவர்களை சாவை நோக்கிக் கொண்டுசென்ற இலட்சியவாதத்தின் வரிகளும் என்று தோன்றியது.
பழங்குடிகளின் போர்களில் உள்ள குரூரம் பற்றி எண்ணிக்கொண்டு வந்தேன். அது விதை என்றால் இந்த உலகப்போரின் குரூரம் ஆலமரம். இதுதான் மானுடத்தின் முகம். எங்கும் இப்படித்தான். மிகமிக எளிதாக மக்களை வன்முறை நோக்கிக் கொண்டுசெல்லமுடியும். இனம் மதம் மொழி சாதி எதன்பொருட்டாக இருந்தாலும், விடுதலை, சமத்துவம் எதன் பொருட்டாக இருந்தாலும் போர் என்பது அழிவு மட்டுமே. ஆணவம் மட்டுமே
அங்கே இறந்த இந்து வீரர்களை எரித்து அதன் மேல் ஒரு கல் நினைவிடத்தை அமைத்திருந்தனர்.ஏராளமான தமிழ் பெயர்கள். மலையாளப்பெயர்கள். சுகுமாரபிள்ளை திருவனந்தபுரத்துக்காரர். ஏன் எங்களூராகக்கூட இருக்கலாம். நாச்சிமுத்து கவுண்டர் கோவைக்காரர் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்காவது பெயர் இருந்தது. கணிசமான கல்லறைகளில் பெயரற்ற படைவீரன் என்று இருந்தது.சரிதான் பெயர் இருந்தால்மட்டும் என்ன?
கோஹிமாவின் சந்தையைச் சென்று நோக்கினோம். சந்தை ஒரு நகரின் இதயம்போல. கோஹிமாவின் சந்தையைப்பற்றி முன்னரே சொல்லியிருந்தனர். காய்கறிகள், பழங்கள். நிகராகவே விதவிதமான அரிவாட்கள். விறகு வெட்டுபவை மட்டுமல்ல தலையை வெட்டுபவையும் கூட. கொம்பு, மரப்பிடி போட்ட வாள்கள். குத்துக்கத்திகள். கொலைக்கான சிறிய கோடரிகள்…
கருவாடு விற்கப்படும் இரண்டு கடைகளைக் கண்டோம். நன்னீர் மீன்கள். ஆனால் நம்மூர் போல நன்றாக உலரவில்லை. மெத்துமெத்தென்று கடும் துர்நாற்றத்துடன் கருப்பாக இருந்தன. மைதாம் பகுதியை பார்த்துவிட்டு வரும்போது அங்கிருந்த அகழியில் சிலர் மீன்பிடிப்பதைக் கண்டோம். அவர்கள் சென்றபோது நாங்கள் எதிரே வந்தோம். பிடித்த மீன்களை காட்டும்படி கோரினோம். அனைத்தும் கரியநிறமான கரப்பாம்பூச்சி போன்ற நீர்வண்டுகள். நீளமான அட்டைகள். இங்கே அவற்றை உலலரச்செய்து கருவாடாக கூடையில் வைத்திருந்தனர்
ஒரு பெண் வைத்திருந்த மீன்களைக் கண்டு திகைத்தோம். அகலமான அண்டா நீரில் நெளிந்த நீளமான பாம்பு போன்ற நன்னீர் ஈல்கள். பிளாஸ்டிக் கவர்களில் நீர் நிறைத்து துள்ளும் தவளைகளைப்போட்டு வைத்திருந்தனர் பலவகையான உயிருள்ள பூச்சிமீன்கள். ஒரு கூடையில் இருந்தது பீன்ஸ் என்றுதான் நினைத்திருந்தேன். மஞ்ச்ள் நிறமான உயிருள்ள புழுக்கள். பலவகையான புழுக்கள் விற்கப்பட்டன.மஞ்சள் பச்சை வெள்ளை நிறமானவை. இரண்டு இஞ்ச் நீளமுள்ளவை. கூடையிலிருந்து எழுந்து வெளியே ஊர்ந்தன
கடைக்காரப்பெண் ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டு நாகரீகமாக இருந்தாள். ஓரளவு ஆங்கிலம் கூடப்பேசினாள். அவள் புழுக்களை விற்றுக்கொண்டிருந்தாள் என்றால் எவரும் நம்பமாட்டார்கள். பல இடங்களில் புழுக்கள் விற்கப்பட்டன. உலகமெங்கும் வேடர்கள் புழுக்களை உண்பதுண்டு. ஆஸ்திரேலியப்பழங்குடிகள் புழுக்களை இறைவனால் சமைக்கப்பட்ட உணவு என்றுதான் நினைக்கிறார்கள். நாம் ஈசலை உண்பது போலத்தான். நானும் ஈசல் உண்டிருக்கிறேன். ஒன்று மனம் பழகவேண்டும். இன்னொன்று, உடல் பழகவேண்டும்.
ஒரு பெண்மணி வந்து புழுக்களும் தவளைகளும் வாங்கிச்சென்றாள். ஒரு கிலோ. தவளைகளை பாலிதீன் கவரில் நீர் நிறைத்து அந்த நீரில் உயிருடன் போட்டுக்கொடுத்தாள். எழுநூறு ரூபாய்! அது அங்கே ஏழைகளின் உணவு அல்ல. ஒரு அபூர்வமான சுவையுணவு. பழங்காலத்துச் சுவைகள் அப்படி நினைவில் படிந்துவிடும். மேற்கே கரியில் சுடப்பட்ட காய்ந்த இறைச்சி அப்படி ஒரு சுவை. கடுங்குளிர் காலத்தில் அப்படி உப்பிலிட்டு புகையில் கருக்கிய இறைச்சியை சுட்டுத்தின்றேயாகவேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு இருந்தது. இன்று அது அபூர்வமான சுவை
நாகாலாந்து 70 சதவீதம் கிறித்தவர்களால் ஆன ஒரு மாநிலம். நாகாக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இங்குள்ள பிற பழங்குடிகள் மெல்லமெல்ல நாகாலாந்தை விட்டு துரத்தப்பட்டுவிட்டனர். எல்லைப்புறக்காடுகளில் மட்டுமே சிலர் உள்ளனர். உடலுழைப்புப்பணிகள் அனைத்துமே பிகாரிகள்தான். நாகாலாந்தை இரண்டு சமூகங்களாக இன்று பிரிக்கலாம். ஒன்று மதம் மாறி, ஆங்கிலக்கல்வி கற்று உயர்நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்கள். இரு பெரும் நகரங்களில் உள்ளவர்கள் இவர்களே. இன்னொருதரப்பினர் இன்னமும் பழங்குடி வாழ்க்கை வாழும் எளிய மக்கள். நடுவே நடுத்தர வர்க்கம் பெரிதாக இல்லை. ஆப்ரிக்காவிலும் இந்நிலைதான் பல நாடுகளில் உள்ளது என அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்
பலவகையிலும் கிறித்தவ நிறுவனங்கள் வழியாக இங்கே பெரிய அளவில் அன்னிய நிதி வருகிறது. இங்குள்ள பெரும் ராணுவநிலைகளில் படைவீரர்கள் உள்ளனர். ராணுவம் இங்கே தனக்கான கட்டுமானங்களை கட்டிக்கொண்டிருக்கிறது. அதன்பொருட்டு இந்தியா பெரும் பணம் செலவிடுகிறது. பொதுவாக தொல்லைக்குள்ளாகும் மாநிலங்களில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக மேலதிக பணம் செலவிடுவது இந்திய அரசின் உத்தி.. காஷ்மீருக்கு அடுத்தபடியாக நாகாலாந்து அதிக பணம் ஊட்டப்படும் மாநிலம். நாகாலாந்தின் பொருளியலே இம்மூன்றையும் நம்பித்தான்.இவற்றில் ஏதேனும் வகையில் பங்குபெறுபவர்களே இங்குள்ள உயர்குடியினர்.
சாலையெங்கும் மாருதி,டாட்டா கார்கள். ஜீன்ஸ்,டிஷர்ட் அணிந்து தலைமுடிக்கு செந்நிறச்சாயம் பூசி கடும்சிவப்பு லிப்ஸ்டிக் அணிந்த பெண்கள். முடியை செங்குத்தாக நெற்றியில் நிறுத்திய பையன்கள். மாலையில் மதுக்கடைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடிப்பதையும் சேர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. இங்கே பழங்குடிப்பண்பாட்டில் ஆண்பெண் உறவு மிக எளிதானது. பெண்கள் பளிச்சென்று இருந்தார்கள். மஞ்சள்நிறம் இந்தியக்கலப்புடன் அழகிய பொன்னிறமாக ஆகிவிட்டிருக்கிறது. சீனர்களைப்போல கண்கள் கோணலாக இருப்பதில்லை. பெரும்பாலும் நேரான மணிக்கண்கள். சிறிய பறவைகளைப்போலச் சிரித்தபடி தலையை கோதிக்கொண்டு செல்லும் பெண்கள் அனைவருமே அழகாகத் தெரிந்தனர்.
நாகாலாந்தில் இன்று பெரிய அளவில் பிரிவினைவாதம் இல்லை. ஆயுதமேந்திய மிக்ச்சிறிய ஓரிரு குழுக்களே உள்ளன. அவையும் அவ்வ்வப்போது உதிரிக்கொள்ளைகளிலும் ஆள்கடத்தலிலும் ஈடுபடுவதோடு சரி. மக்களிடம் இந்திய அரசுக்கு அல்லது இந்திய தேசியத்திற்கு எதிரான உணர்வுகள் இருப்பதாகச் சொல்லமுடியவில்லை. அதெல்லாம் நம் உள்ளூர் மீடியா சென்னையிலும் டெல்லியிலும் இருந்தே எழுதிவிடும் பொய்கள். தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வு இருந்தது. அதற்கு நேருவின் எல்வின்கொள்கை காரணம். இன்று பொருளியல் வளர்ச்சி அதைக் கரைத்துவிட்டது.
இன்று பெரும்பாலானவர்கள் பெங்களூர் போன்ற தென்னக நகரங்களுக்குக் கல்வி கற்க வருகிறார்கள். டெல்லியில் வேலைபார்க்கிறார்கள். ஆகவே இந்தியா என்ற உணர்வு வலுவடைந்துள்ளது. சென்றகாலங்களில் பழங்குடிகளாக இருந்தபோது அவர்களுக்கு நாடு என்ற எண்ணமே அறிமுகமாகியிருக்கவில்லை. அந்நிலை மாறிவிட்டது. எல்லா இடத்திலும் தென்னகம் என்றபோதே உற்சாகமான வரவேற்பை கண்டோம். பெரும்பாலானவர்களுக்கு பெங்களூர், சென்னை வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆகியவை தெரிந்திருக்கின்றன.
அத்துடன் இன்று இங்கே வரும் தென்னகத்து கிறித்தவப்போதகர்களும் கன்யாஸ்திரீகளும் இந்தியாவின் பெருநிலத்தை பற்றிய நல்லெண்ணத்தை அவர்களிடம் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள கிறித்தவ சபைகள் பெரும்பாலும் கத்தோலிக்கம் மெதடிஸ்ட் மரபைச் சேர்ந்தவை. டான்போஸ்கோ, லயோலா நிறுவனங்கள் இப்பகுதியில் ஆற்றும் சேவை முக்கியமானது. இந்த மக்களில் ஓரளவேனும் படித்து மேலே வருபவர்களை அவை பல்வேறு வேலைகளுக்கு இந்திய மையநிலத்திற்கு அனுப்புகின்றன. அவர்கள் அப்படிச் செய்யாவிட்டால் இங்கே தீவிரவாதம் மறுபடியும் உருவாகும்.
இங்கு கிறித்தவ சபைகளால் தீவிரவாதம் வளர்கிறது என இந்துத்துவர் எழுதி வாசித்திருக்கிறேன். அது அவதூறு. முன்பு ஒரு கிறித்தவத் தனிநாடாக நாகாலாந்துக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் இன்று பெரும்பாலும் தமிழர்கள் மலையாளிகள் ஆந்திரர்களால் நடத்தப்படுகின்றன இச்சபைகள். சாலக்குடி,இரிஞ்ஞாலக்குடா மலையாளம் பேசும் கன்யாஸ்திரீகளை நிறைய பார்க்கமுடிந்தது.
கோஹிமாவிலிருந்து கிளம்பி மணிப்பூரின் இம்பாலுக்குச் செல்லவேண்டும். வழியில்தான் சுற்றுலாக்கிராமமான கிசாமா என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கே சற்றுமுன்னர்தான் ஹார்ன்பில் திருவிழா நடந்து முடிந்திருந்தது. பெரும்பாலும் வெள்ளையர்களுக்கான விழா.நாகாலாந்தில் கிறித்தவ அமைப்புகள் மூலம் அயல்நாட்டு பயணிகள் நிறைய வருகிறார்கள். இப்போது அமைதிதிரும்பியபின் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா பெருகி வருகிறது. நாங்கள் செல்லும்போது எல்லா இடங்களும் ஓய்ந்து கிடந்தன
இது ஒரு வகையான கண்காட்சி. நங்கமி,நாகா, குக்கி என இங்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்துப் பழங்குடிகளின் இல்லங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைச்சூழல் அப்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாக்காலங்களில் அந்தப்பழங்குடிகளைப்போல ஆடையணிந்த மக்களையும் அங்கே நிறுத்தி வைப்பார்கள். பழங்குடிக் கலைநிகழ்ச்சிகளும் நிகழும்.
இவர்களின் முதன்மையான கட்டுமானப்பொருள் மூங்கில். மூங்கிலக்ளை அப்படியே வளைத்தும் பலவகையில் கீற்றாக்கி முடைந்தும் கூரையையும் சுவர்களையும் அமைத்துள்ளனர். அவற்றில் மிகத்தேர்ந்த கலைத்திறனைக் காணலாம். காட்டுமரங்களை அறுத்துச் சதுரமாக ஆக்காமல் அப்படியே பயன்படுத்துகிறார்கள். மரத்தூண்களைக் குடைந்து அவற்றில் கிரேட் ஹார்ன்பில் [இருவாச்சி] காண்டாமிருகம் யானை மான் குரங்குகள் புலி போன்ற மிருகங்களையும் பழங்குடித்தெய்வங்களையும் செதுக்கி நாட்டுவது இவர்களின் பாணி.
கூரைகள் பெரும்பாலும் புல்லால் ஆனவை. காட்டுப்புல்லை ஒரு முழம் கனத்தில் அடுக்கி செய்யப்பட்ட மிகச்சரிவான கூரைகள் பல ஆண்டுக்காலம் நீடிக்கக்கூடியவை. கூரைகளெல்லாமே செங்குத்தான கூம்புகள். அவற்றின் விளிம்புகளில் புல்லால் பலவகையான அலங்காரங்களைச் செய்திருக்கிறார்கள். செண்டுகள் போல. குஞ்சலங்கள் போல. இவை இப்பழங்குடிகளின் சாதாரண இல்லங்களின் மாதிரிகள் அல்ல என்பதையும் சொல்லியாகவேண்டும். இவை அவர்களின் குலத்தலைவர்களின் ‘அரண்மனை’கள்.
பெரும்பாலான வீடுகள் தரையில் இருந்து மூங்கிலால் மேலெழுப்பப்பட்டவை. தரை எப்போதுமே மூங்கில்படலால் ஆனது. இப்பகுதியின் கடுமையான மழைதான் காரணம். நம்மூர் போல நேரடியாக தரையில் வாழமுடியாது. நீர் ஊறி சேறாகிவிடும். மரத்தில் குடையப்பட்ட சிற்பங்களில் யானையும் புலியும், புலியும் முதலையும் வேட்டையாடும் பெரிய வடிவங்கள் நிறைய இருந்தன. நீர்மகள் போன்ற கற்பனைத்தெய்வங்களும் காணக்கிடைத்தன.
மேகாலயா பகுதி பழங்குடிகள் எங்கோ பெரிய நதி அல்லது கடற்பகுதியில் இருந்து வந்தவர்கள். அங்கே அவர்கள் படகைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் வாழும் நிலங்களில் படகுக்கே வேலையில்லை. ஆனால் படகில் தாளமிடுவது அவர்களின் கலை. ஆகவே முழுக்கமுழுக்க தாள வாத்தியமாகவே படகுகளைச் செய்கிறார்கள். அந்த வடிவம் பலமடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு தாளப்படகின் பல தோற்றங்கள் உள்ளன. பெரும்பாலானவை நீரிலிட்டாலே மூழ்கிவிடும். ஆனால் அவற்றில் தாளமிடுவது பெரியதோர் கலையாக இன்றும் உள்ளது.
நாகாலாந்தின் பழங்குடிப்பண்பாடு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இன்று உணவுப்பழக்கத்தில் மட்டுமே பழங்குடி அம்சம் சற்றேனும் உள்ளது. மற்றபடி வாழ்விடம் வாழ்க்கைக்கூறுகள் அனைத்துமே மாறிவிட்டன. முக்கியமாக மொழி அழிந்துவிட்டது. நாகா மொழி எழுதப்படுவதே இல்லை. மூத்த பழங்குடிகள் மட்டுமே அதைப்பேசுகிறார்கள். இளைஞர்கள் ஒருவகையான நாகா உச்சரிப்பு கொண்ட ஆங்கிலம்தான். நாகா பண்பாடு இதேபோன்ற சுற்றுலாக் கிராமங்களில் அன்றி வெளியே எங்குமே காணக்கிடைக்காது. நாகா மக்களே இங்கு வந்துதான் பார்த்துச் செல்கிறார்கள்
அந்த மாற்றத்தை தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அது ஒருவகை பரிணாமம். ஆங்கிலம் இவர்களை ஏழு மாநில மக்களில் பிற எவருக்கும் இல்லாத ஒரு முன்னுரிமையை வேலைவாய்ப்பில் உருவாக்கியிருக்கிறது. ஆனால் மொழி அழிந்தால் அவர்களின் இறந்தகாலம் முழுமையாகவே மறைந்து போகும்.