கும்பமேளா – 7

கோயிலூர் மடத்தில் பொறுப்பில் இருந்த ஆச்சியிடம் சொல்லி கார் ஏற்பாடு செய்துகொண்டு ஏப்ரல் 15 அன்று காலை ஏழு மணி வாக்கில் கிளம்பினோம். கங்கை கரை வழியாகவே பயணம் செய்து முடிந்தவரை நதியில் குளித்துக்கொண்டே  ருத்ரப்பிரயாகை வரை சென்று அங்கே தங்கிவிட்டு மறுநாள் குளித்துக்கொண்டே திரும்பி வருவதுதான் திட்டம்.

கங்கை சீக்கிரமே பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. காலை ஒளியில் வெண்ணிறமான  உருளைக்கற்கள் நடுவே நீலபளிங்கு வழிவாக தளதளத்துச் சென்றது. மேலிருந்து பார்க்கையில் அலைகள் கண்களை மின்னல்களால் நிரப்பின. அவற்றில் அந்நேரத்திலும் சறுக்குப் படகுகள் சென்றுகொண்டிருந்தன. கங்கை ஓரமாக காம்பிங் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் காத்திருந்தன. இன்னமும் சீசன் ஆரம்பிக்கவில்லை. இமயமலைப்பகுதியில் பயணம் செய்ய மே முதல் செப்டம்பர் வரையிலான காலமே சிறந்தது. ஜூனில் முதல் மழைக்குப் பின்னர் சென்றால் இன்னமும் பசுமையைக் காணலாம்.

பல இடங்களில் சாலைவேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்தச்சாலையை தெற்கே எங்குமே நினைத்துப்பார்க்க முடியாது. இமயமலையின் மண் அள்ளிக்கொட்டியது போலிருக்கும். அங்குள்ள பாறைகளேகூட நுணுக்கமான கீற்றுகளாக வெடித்து அந்தக்கீற்றுகளை அடுக்கி வைத்தது போலிருக்கும். உறுதியான மண்ணோ பாறையோ எங்குமில்லை. ஆகவே சாலை இடிந்து சரிவதென்பது ஓர் அன்றாட நிகழ்ச்சி. சாலைகளின் விளிம்புகளே இடிந்து சரிந்துதான் காணப்படும். காரின் ஓரமாக அமர்ந்து கீழே பார்க்கையில் பலா கிலோமீட்டர் ஆழமுள்ள மலைச்சரிவுக்குமேல் நாம் பறந்து கொண்டிருக்கும் அனுபவம் தெரியும். அதிவிளிம்புகளில் ஒட்டி ஒட்டித்தான் கார் செல்லும்

மலைப்பிரம்மாண்டங்களைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். அடுக்கடுக்காக எழுந்த மலைகள் சாலைகள மலையின்  இடையைச் ச்சுற்றும் வடுபோல காட்டின. அங்கே ஒரு பறவை கூட செல்லமுடியாதென்று படும். பல காலடிப்பாதைகள் இஸட் வடிவில் ஏறிச்சென்று ஓரிரு வீடுகளே கொண்ட சிறு கிராமங்களை அடைந்தன. எல்லா வீடுகளும் வெட்டவெளி வெளித்த மாபெரும் மலைச்சரிவுகளை நோக்கி திறந்திருந்தன. அவற்றைச் சுற்றி சிறிய பாத்திகளாக வயல்கள். மலைகள் நம் பயணத்தை பொருட்படுத்தாமல் அசையாமல் அமர்ந்திருந்தது அளித்த பிரமிப்பு  பயணம் முழுக்க கூடவே இருந்தது.

சாலையோரக் கடையில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு பயணம் செய்து ஓர் இடத்தில் இறங்கி கங்கைக்குள் இறங்கிச்சென்று குளிர்ந்த நீரில் குளித்தோம். ஏராளமான தூய கோளப் பாறைகள். எல்லா பாறைகளிலும் வித விதமான நீர்க்கோல வடிவங்கள். அதிவெண்மணல் மீது ஏதோ பூச்சி இரவெலாம் ஊர்ந்த ரேகைகள் பசுவின் அடிவயிற்று நரம்புகள் போல தெரிந்தன. குளிர்நீர் உடனே உடலையும் மனதையும் விறுவிறுப்பாக ஆக்கியது. மேலே ஏறி பயணத்தை தொடர்ந்தோம். மலைகளை பார்ப்பது சலிப்பில்லாத காட்சியனுபவமாக இருந்தது. கூடவே அரட்டை, கிண்டல், தீவிரமான இலக்கிய விவாதம். நடுவே யுவன் பாடிய பழைய பாட்டுகள்.

மீண்டும் ஓர் இடத்தில் இறங்கி கங்கைக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த நீளமான அகலமற்ற நூல்பாலம் வழியாக சென்று பார்த்தோம். அங்கிருந்து பார்க்க கங்கை பிரம்மாண்டமான அழகுத்தோற்றம் கொண்டிருந்தது. மாபெரும் மலைகளுக்கு நடுவே அதல பாதாளத்தில் நீலநீர் பட்டை போலச் சென்று கொண்டிருந்தது. மேலும் சென்றபின் ஓர் இடத்தில் குளிப்பதற்காக இறங்கினோம். அங்கே பல காம்ப் கூடாரங்கள் இருந்தன., தங்க என்ன செலவாகுமென விசாரித்தோம். தலைக்கு 500 ரூபாய் வரை சொன்னார்கள். அதிகமில்லை என்றாலும் எங்களுக்கு கட்டுப்படியாகாது என்று வந்துவிட்டோம்

மீண்டும் மீண்டும் கங்கையில் குளிப்பது அப்பயணத்தின் வெப்பத்தை முழுமையாகவே இல்லாமலாக்கியது. துண்டு காய்வதற்குள் அடுத்த குளியல் என்பதே எங்கள் இலக்கு. ஒரு நதியை மீள மீள பார்ப்பதென்பது அதன் தோற்றம் பற்றி நம் மனதுக்குள் உருவாகும் நிலையான சித்திரத்தைக் கலைத்து சித்திரங்களின் தொடராக அதை ஆக்குகிறது. நதியை சலனவடிவமாக பார்க்க நம் மனம் பழகுகிறது. நதியை பார்ப்பது ஓர் அனுபவம் என்றால் அதில் இறங்கி நீராடுவதென்பது இன்னொரு அனுபவம். அது நம்மை நதியின் பகுதியாக ஆக்கிவிடுகிறது. இப்போது கங்கை ஹரித்வார் கங்கை அல்ல. ரிஷிகேஷ் கங்கை அல். அது ஒரு பிம்பபிரவாகம்.

கங்கையையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு சென்றோம். நடுவே பிரம்மாண்டமான அணைக்கட்டு ஒன்றுக்கான வேலைகளுக்காக மலையை குதறிப்போட்டிருந்தார்கள்.  மலைகள் சில காய்ந்து நின்றன, சில பசுமை பொலிந்து நின்றன. சில மலைகளில் வீடுகளும் கிராமங்களும் இருந்தன. சில மலைகள் மானுடக்கால் படாதவையாக ஓங்கிய மௌனத்தை மூடி நின்றன. மலைகள் மனதுக்குள் நிறைக்கும் மௌனம் நம்மை தனிமைப்படுத்துகிறது.  கும்பமேளாவில் பார்த்த கூட்டத்தில் பெற்ற அனுபவத்துக்கு நேர் எதிர் உச்சம் இது. ஹரித்வார் எங்கோ ஆழத்தில் இருந்தது. முழுமையாக காலத்தில் நினைவில் மூழ்கி மறைந்து விட்டிருந்தது. இங்கே மனம் நான் நான் என்று நினைத்துக்கொண்டிருந்தது. அந்த நானுடன்  அந்த மலைகளும் நீலவானமும் ஆழத்தின் வேகவதியும் கலந்திருந்தது

மாலையில் ருத்ரபிரயாகைக்கு வந்துசேர்ந்தோம். இந்த மலைக்கிராமம் கங்கையில் அலகாநந்தா வந்து கலக்கும் இடம். கங்கைக்கு இங்கே மந்தாகினி என்று பெயர், ஆனால் மந்த நடைக்குக்குபதில் நெளிவோட்டம்தான். மந்தாகினிக்கு நேர்மேலே இருக்கும் ஒரு விடுதியில் அறைபோட்டோம். கீழே இறங்கிச்சென்று இரு நதிகளும் கலக்கும் முனையில் இருந்த ருத்ரநாத் கோயிலின் படித்துறையில் இறங்கி அலகநந்தாவில் நீராடினோம். அது வரை குளித்த நீர்களிலேயே அதுதான் உக்கிரமான குளிர். குளிரில் எங்கள் கைகால்கள் விரைத்து நின்று நடுங்கினோம். அலகநந்தாவின் நீர் நல்ல நீல நிறமாக இருந்தது,. மந்தாகினிக்கு கொஞ்சம் கலங்கல். இரு நதிகளும் கலக்கும் இடம் இரு புடவைகள் முறுக்கிக் கொள்வது போல் இருந்தது

அந்த நீர்முனையில் மாலையில் கங்கைக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஒரு குழு அமர்ந்து பஜனை செய்துகொண்டிருந்தது.  மாலை நேரத்தில் சுற்றியுள்ள மலைகள் பொன்னிறமான மௌனத்தில் ஆழ்ந்திருக்க நதிக்கரையில் காலாதீதமான ஒன்றை உணர முடிந்தது

[மேலும்]

முந்தைய கட்டுரைகர்மயோகம் : (31 – 34)
அடுத்த கட்டுரைகும்பமேளா – 6