சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது.

2

மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே வாய்ப்பதிகம். ஏனென்றால் இப்போது இங்கே வாழும் எல்லா பழங்குடிகளும் பர்மா தாய்லாந்து சீனா பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்களின் பண்பாட்டுக்கூறுகளால் அறியப்படுவதாக உள்ளது. இப்பகுதிகளில் கிபி முதல் நூற்றாண்டுமுதல்தான் மானுடவாசம் ஆரம்பித்திருக்கிறது. நெடுங்காலம் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இப்பகுதிகள் சுதந்திரமான பழங்குடி அரசுகளாகவே பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை நீடித்தன. பிரிட்டிஷார்தான் இப்பகுதிகளில் நவீன அரசைக்கொண்டுவந்தவர்கள். ஆனால் அவர்களின் ஆட்சிமுறை என்பது வரிவசூலுக்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. ஆகவே பழங்குடிச்சபைகளை அப்படியே நீடிக்க விட்டு அவர்களுக்குமேல் வரிவசூல் செய்யும் ஓர் அதிகார அமைப்பையே அவர்கள் உருவாக்கினார்கள்.

இந்நிலையில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியப்பழங்குடிச்சட்டங்களுக்கான கொள்கை முன்வரைவை உருவாக்கியவர் காந்தியரான வெரியர் எல்வின். பழங்குடிகளின் வாழ்க்கையை சமகால நாகரீகத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கூடாது என்றும் அவர்கள் கோரினாலொழிய அவர்களுக்கு நவீன வாழ்க்கையை அறிமுகம் செய்யக்கூடாது என்றும் அவர்கள் தங்கள் அளவில் நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றும் அவர் சொன்னதை நேரு ஏற்றுக்கொண்டார்.

5

வெரியர் எல்வின் மீது எனக்கு பெருமதிப்புண்டு.அதை எழுதியும் இருக்கிறேன். ஆனால் பழங்குடிப்பகுதிகளை நேரில் காணவும் ஆப்ரிக்க பழங்குடிகள் உட்பட பல்வேறு பண்பாட்டு- அரசியல் சூழலை வாசிக்கவும் செய்யும்போது அந்த எண்ணம் மாறிவருகிறது. பெரும்பாலும் ஜாரேட் டையமண்டின் கருத்தையே நான் இன்று ஏற்றுக்கொள்கிறேன்.

6

பழங்குடிகளின் வாழ்க்கைச்சூழலிலும் மனநிலையிலும் உள்ள தேக்கநிலையே அவர்களை அவ்வாறு பழங்குடிகளாக வைத்திருக்கிறது. அது அவர்களின் தெரிவு அல்ல. பெரும்பாலும் அதற்குக் காரணம் புவியியல் சார்ந்ததுதான். நதிகள் மலைகள் காரணமாக பிற பண்பாடுகளுடன் இணைப்புகள் இல்லாமலிருத்தல், உணவு ஏராளமாகக் கிடைத்தல், அல்லது உணவு அரிதாகக் கிடைத்தல் போன்ற பல காரணங்கள் அவர்களை அப்படி நீடிக்கச்செய்கின்றன. அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை என்பது இயல்பானது அல்ல, சாத்தியமானது.

வடகிழக்கை மத்திய அரசு பிரிட்டிஷ் முறையிலேயே ஆண்டது. பழங்குடிப்பகுதிகளை பழங்குடிகளின் சபைகளே ஆளும்படி விட்டுவிட்டது. எந்த நவீன வசதிகளும் செய்யப்படவில்லை. அது ஒரு கொள்கை முடிவாக எடுக்கப்பட்டது. வசதியானதாகத் தெரியவே அப்படியே விடப்பட்டது.

ஆனால் மூன்று சக்திகள் அவர்களின் வாழ்க்கையை ஊடுருவின. அதை மத்திய அரசின் மெத்தனப்போக்கு அனுமதித்தது. ஒன்று, பிற பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குடியேறியமை. இவர்களில் பிழைக்க வந்த பங்களாதேஷ் மக்கள் உண்டு. வணிகம் செய்யவந்த வங்காள மாநிலத்தவரும் சிந்திகளும் உண்டு. இரண்டு, கிறித்தவ மதமாற்ற சக்திகளின் பெரும்பிரச்சாரம். மூன்று அண்டைநாட்டின் ஊடுருவல்.

இம்மூன்றிலுமே அண்டைநாடு என்ற அம்சம் உள்ளது. இப்பழங்குடிமாநிலங்கள் அனைத்துமே எல்லைப்புறத்தில் அமைந்தவை என்ற உண்மையே எல்வின் கொள்கையை தகர்க்கிறது என்பதை நேருபாணி இலட்சியவாதம் கருத்தில்கொள்ளவில்லை. எல்லையில் பெரிய சாலைகளை அமைத்து வலுவான ராணுவநிலைகளை அமைக்காமலிருக்க எந்த நாட்டாலும்முடியாது.

3

இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. பழங்குடிமக்கள் இயல்பாகவே வலுவான பிறர் வெறுப்பு கொண்டவர்கள். வடகிழக்குப்பழங்குடிகளுக்கு பிற இனக்குழுக்களைக் கொல்வதே வாழ்க்கையின் வெற்றியும் சிறப்புமாக கருதப்படுகிறது. நூற்றாண்டுகளாக அவர்கள் பிறரை வேட்டையாடிக்கொன்று வருகிறார்கள். பழங்காலத்தில் அவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் காடுகளில் வாழ்ந்தபோது அம்மனநிலை உருவாக்கிய அழிவு பெரிதாக இல்லை, அல்லது கவனிக்கப்படவில்லை

ஆனால் இன்று நவீன ஆயுதங்களும் பயணவசதிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும்போது அவர்களின் அம்மனநிலை பேரழிவை உருவாக்குகிறது. அதை ஒரு நவீன அரசு அனுமதிக்கமுடியாது. ஆகவே அவர்களை அப்படியே விட்டுவிடுதல் என்ற வெரியர் எல்வின் கொள்கை இந்தியாவுக்கும் அம்மக்களுக்கும் தீங்கையே செய்தது என்று இங்கு வந்தபின் தோன்றுகிறது. இங்கே பார்க்கும் ஒவ்வொரு பழங்குடி நினைவுச்சின்னத்திலும் அவர்கள் வேறு பழங்குடிகளை கொன்று தலையை கையில் தூக்கியபடியே காட்சியளிக்கிறார்கள். பிற பழங்குடிகளை கொன்று எடுக்கப்பட்ட மண்டையோடுகளையே அவர்கள் வீடுகளை அலங்கரிக்கப் பயன்படுத்துகிறார்கள். சென்ற ஒருதலைமுறையாகவே அந்த கொடூரம் கட்டுப்படுத்தப்படுகிறது.

வடகிழக்குப்பகுதிகளின் அரசியல் சூழலைப்பற்றி தென்னகத்தில் எவருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் இரண்டு தரப்பினர் அதைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய தேசியத்துக்கும் தேசத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஒரு தரப்பு. அத்தரப்பை ஆதரிப்பது தங்களை புரட்சியாளர்களாக கலகக்காரர்களாக காட்டும் என நினைக்கும் முதிரா மனங்கள் இன்னொரு தரப்பு. ஐரோம் ஷர்மிளா பற்றி மட்டும் இருபது தமிழ்நூல்கள் வெளிவந்துள்ளன. காந்தி, நேரு,அம்பேத்கருக்குக் கூட இத்தனை வாழ்க்கை வரலாறுகள் தமிழில் வந்ததில்லை.

வடகிழக்குப்பகுதிகளில் ‘தனித்தேசிய’ குழுக்கள் ‘இந்தியத் தேசியத்தின்’ அடக்குமுறைக்கு எதிராக ‘சுதந்திரப் போரில்’ ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இவர்களின் கூற்று. உண்மையில் நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கு நிகழ்ந்துவருவது இனக்குழுப்போர் என்பதை வெறுமே இணையத்தை வாசித்தே அறிந்துகொள்ள முடியும்.

4

நாகா,போடோ, குக்கி, அங்கமி என ஒவ்வொரு பழங்குடியும் தனிநாடு கோருகின்றன. ஒவ்வொருவர் கோரும் நிலத்திலும் பிற பழங்குடிகள் உள்ளன. பிற பழங்குடிகளை ஆதிக்கப்பழங்குடிகள் கொன்று குவிக்கின்றன. சென்ற முப்பதாண்டுக்காலத்தில் பழங்குடி ராணுவங்கள் பிற பழங்குடிகளை கொன்ற எண்ணிக்கை இந்திய அரசின் ராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டவர்களை விட மும்மடங்கு அதிகம்.

இந்தப்பிரச்சினை பழங்குடிகள் மண்டிய ஆப்ரிக்காவில் இன்னும் தீவிரமாக உள்ளது. எங்கும் நவீன அரசுகள் செய்வது ஒன்றையே. பெரிய அளவில் ராணுவத்தை குவித்து அமைதியை நிலைநாட்டும். பழங்குடிகள் கல்வி, நவீனமயமாக்கம் மூலம் அவர்களின் இனக்குழு வெறுப்புகளைக் கடந்து வருவது வரை காத்திருக்கும். அதையே இந்திய அரசும் செய்கிறது.

ஆனால் ஆதிக்கப்பழங்குடிகள் தங்கள் நிலம் இந்திய ராணுவத்தால் பறிக்கப்பட்டிருப்பதாக குறைகூறி அதற்கு எதிராகப்போராடுவார்க்ள். ஐரோம் ஷர்மிளா போராடுவது அதற்காகவே. அவர் சொல்வதை ஏற்று இந்திய ராணுவம் வெளியேறுமென்றால் இங்கே உள்ள சிறுபான்மை பழங்குடிகள் அழிவார்கள். உண்மையில் இந்திய அரசின் ராணுவ கட்டுப்பாட்டை மீறியே கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

1995ல் நரசிம்மராவ் அரசு மியான்மார் ராணுவ அரசை அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டதுமே வடகிழக்கின் இனக்குழுப்போர்கள் முடிவுக்கு வந்துவிட்டன. பர்மிய ராணுவம் அதன் நிலத்தில் அதன் ஆதரவுடன் அமைந்திருந்த வடகிழக்கின் இனக்குழு ராணுவங்களைக் குண்டுவீசி அழித்தது. வடகிழக்குக்கு சேவை என்ற பேரில் ஃபோர்டு பவுண்டேஷன் முதலியவற்றால் அளிக்கப்பட்ட நிதி கண்காணிப்புக்குள்ளானது.

விளைவாக போர்க்குழுக்களுக்கு பணவசதியும் ஆயுதவசதியும் குறைந்தது. கணிசமானவர்கள் சரணடைந்தனர். இப்போது சிலநூறுபேருக்குள் தான் தீவிரவாதிகள் உள்ளனர். உதிரி குண்டுவெடிப்புகளைத்தவிர எந்த தீவிரவாத நிகழ்ச்சிகளும் இல்லை. அதுவும் பழங்குடிகள் ஒருவரை ஒருவர் கொன்றுகொள்வது என்பதனால் மிகவிரிவான ராணுவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது.

அசாமில் உல்ஃபா அமைப்பில் இருந்து சரண் அடைந்தவர்கள் இன்று சல்ஃபா என கேலியாக அழைக்கப்படுகின்றனர். இப்பகுதியின் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். இந்தப்பழங்குடி ராணுவங்களில் கமாண்டர் காப்டன் என்றெல்லாம் பெயருடன் இருப்பவர்கள் எவருமே பெரிதாகப் படித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அவர்களின் நிலம் பறிபோகிறது என்ற பதற்றம் இருக்கிறது. நவீன உலகம் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் அரசின் கொள்கை காரணமாக மருத்துவம் வேலைவாய்ப்பு எதுவுமே இல்லை.

ஆனால் பர்மிய ராணுவ உதவியுடன் அமைக்கப்பட்ட பழங்குடி ராணுவங்கள் உணவு உறைவிடம் ஆகியவற்றை அளிக்கின்றன. இயல்பிலேயே வேட்டைக்காரர்களான இம்மக்களுக்கு ராணுவப்பணி பிடித்தமானது. நேராக சென்று சேர்ந்துவிடுகிறார்கள். ஒருமுறை சேர்ந்துவிட்டால் பின்னர் எளிதாக வெளிவர முடிவதில்லை.தன் தந்தை நோயுற்றபோது உதவினார்கள் என்பதற்காகவே பழங்குடி ஒருவர் தீவிரவாத ராணுவத்தில் சேர்ந்தார் என்று ஒரு அதிகாரி சொன்னார். ஏனென்றால் அரசு இங்கே எதையும் செய்யவில்லை.

வெறும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டமையால் பழங்குடி ராணுவத்தில் இருந்து சரணடைந்தவர்கள் அதிகம். பசுமாடுகள் கொடுத்தல் வண்டிகள் கொடுத்தல் போன்ற மிக எளிய உதவிகள் கொண்டே கணிசமானவர்களை சரண் அடையச்செய்துள்ளனர். சென்ற மன்மோகன் சிங் அரசுக்காலத்தில் இப்பகுதியின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன. இப்போது மோடியின் அரசு மேலும் பலமடங்கு விரைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தக்குறுகிய காலகட்டத்திலேயே இப்பகுதிக்கு அதிகமாக வந்த பிரதமராக மோடி ஆகிவிட்டிருக்கிறார். .

ஆனால் என்ன வேடிக்கை என்றால் தீவிரவாதிகள் அல்லாத பிறருக்கு அரசு உதவிகள் ஏதும் இல்லை. ஆகவே சாதாரண மக்கள் எங்காவது ஒரு வெடிக்காத கையெறிக்குண்டோ துருப்பிடித்த துப்பாக்கியோ கிடைத்தால் தங்களை சரண் அடைய வந்த பழங்குடி ராணுவத்தினர் என்று சொல்லி வந்து நிற்பது வழக்கம். ஆயுதத்துடன் வந்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும். அவர்களை துரத்திவிட்டுவிட்டு அந்த ஆயுதங்களைப்பிடுங்கிக்கொள்வது ராணுவத்தினரின் வழக்கம் என்றனர். பின்னர் எங்காவது அந்த ஆயுதங்களைக் கணக்கு காட்டுவார்களாம்.

நாகாலாந்தின் நுழைவாயில் என்பது திமாப்பூர். நாகாலாந்தின் பெரிய நகரம் இதுவே. நாங்கள் நினைத்திருந்தமைக்கு மாறாக இது ஒரு மிகப்பெரிய நகரம். திருப்பூர் அளவு இருக்கும். மக்கள் தொகையில் இந்திய அளவில் 115 ஆவது நகரம் இது.பெரிய கட்டிடங்களும் கடைகள் மண்டிய தெருக்களும் கொண்டது. எங்கும் 3ஜி இண்டர்நெட் வசதி உண்டு. எல்லாவகையான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களும் கண்ணில் பட்டன.

இங்கே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று நாகாலாந்துக்குள் நுழைவதற்கான அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். ஆயிரம் ரூபாய்வரை பணம் கட்டி விண்ணப்பப் படிவங்களை நிரப்ப்க்கொடுத்தோம். அங்கேயே புகைப்படம் எடுத்து அனுமதிச்சீட்டு அச்சிட்டுக் கொடுத்தனர். இப்பகுதிகளை குடியேற்றக்காரர்களிடமிருந்து காப்பதற்கான ஏற்பாடு இது. பழங்குடி மாகாணங்களில் பிறர் நிலம் வாங்கி குடியேற அனுமதி இல்லை. இவை அவர்களுக்கான தனிச்சட்டங்களால் பாதுகாக்கப்பட்டவை. நாகாலாந்தை நாகா தேசிய முன்னணி ஆட்சி செய்கிறது. அது காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

நாகா மொழியில் டோங் ஸ்ரீ என்று அழைக்கப்பட்ட தனஸ்ரீ நதிக்கரையில் அமைந்திருக்கிறது திமாப்பூர். இது அக்காலத்தில் செங்கல் நகரம் என்று வெள்ளையர்களால் அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட வலுவான பழங்குடி மன்னர்களான திமாஸா இனத்தவரின் தலைநகர் இது. அவர்களின் ஊர் என்ற பொருளில் திமாப்பூர் என பெயர் பெற்றது.

இந்நகரின் நடுவே இருந்த திமாஸா அரசர்களின் அரண்மனை பதினெட்டடி உயரமான செங்கல் கோட்டையால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்று இப்பகுதியில் செங்கல் கட்டுமானம் எதையும் காணமுடியவில்லை. மாலை மங்கிவந்த வேளையில் காரில் பழைய திமாஸா அரசர்களின் நகர்மையத்தை விசாரித்து அலைந்தோம். நகரின் அடித்தள வேலையாட்கள் பெரும்பாலும் பிகாரிகள். ஒரு பெரிய பர்மா அகதித்தெருவும் உள்ளது. எங்கும் சரியாக தகவல் பெற முடியவில்லை

ஒருவழியாக அதைக் கண்டுபிடித்தோம். நாகாலாந்தில் இப்போதுதான் அமைதி திரும்பி கட்டுமானப்பணிகளும் அரசுசார்ந்த பணிகளும் நிகழ்ந்து வருகின்றன.பழைய திமாசா அரசர்களின் செங்கல்லால் ஆன பெரிய நுழைவாயில் ஒன்று சாலையோரமாக நின்றிருந்தது. உள்ளே கம்பிகளால் பாதுகாக்கப்பட்டு செங்கல்லைப்போன்ற மென்மையான பாறைகளால் செதுக்கி நடப்பட்ட பெரிய அலங்காரத் தூண்கள் நின்றன.

7

 

8

 

11

உள்ளே சென்றோம். அங்கே புல்வெளி அமைக்கும் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த தூண்கள் பழைய திமசா அரசர்களின் நினைவுக்காக எழுப்பட்ட நடுகற்கள். செந்நிறத்தில் பெரிய சதுரங்கக்காய்கள் போலத் தோன்றுகின்றன. இவற்றில் மயில் காளை மலர்கள் கொடிகள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பக்கலைக்குத் தொடர்பற்ற பழங்குடி அழகியல் கொண்ட செதுக்குகள் அவை.மானுட உருவங்கள் ஏதும் இல்லை.

9

இரண்டு கம்பி வளைவுகளுக்குள் நின்றிருந்த அக்கற்களை அணுகிப்பார்க்க முடியவில்லை. கம்பிக்கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. திமோசா அரசரான குங்ரதோவா- விற்காக அமைக்கப்பட 17 அடி நீளமும் 22 அடி சுற்றளவும் கொண்ட தூண் அவற்றில் மிகப்பெரியது. சில ஆய்வாளர்கள் திமாசா அரசர்களின் வெற்றித்தூண்கள் இவை என்றும் கருதுகின்றனர்.

12

10

இந்த தொல்பொருள் மையம் இன்று பணிமுடிவடையாமல் உள்ளது. தூண்களைப்பற்றிய எந்தத் தகவலும் அங்கே கிடைக்கவில்லை சுற்றுலாப்பயணிகள் அங்கே செல்வதில்லை என்பதனால் நகர் நடுவே இருந்தபோதும் எவருக்கும் அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. திமாசா ஆட்சியாளர்களைப்பற்றி எஸ்.கே.பார்பூஜாரி போன்ற வரலாற்றாசிரியர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். அவற்றைப்பற்றி தனியாகவே வாசித்து அறியவேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைஇயற்கைவேளாண்மை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27