நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்போது எனக்கு சற்று முதுகுவலி இருந்தது. வெண்முரசு முப்பது அத்தியாயங்கள் எழுதி முடிக்கவேண்டியிருந்தது. திரும்பிவரும்வரை தொடர்ந்து பிரசுரமாகவேண்டும். பயணத்தில் வலி குறைந்துவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அசாமில் நுழைந்ததுமே அந்த எண்ணம் மறைந்தது. அசாம் முதலிய கிழக்கு மாநிலங்களை நாம் மிகச்சிறியவை என மனதுக்குள் எண்ணியிருக்கிறோம். அவற்றின் மக்கள்தொகை குறைவு என்பதே காரணம்.
ஆனால் உண்மையில் இது பரந்து விரிந்த நிலம். ஒவ்வொரு ஊருக்கும் நடுவே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு. ஆகவே பயணத்தில் காரில் மடிந்து அமர்ந்திருந்த நேரமே அதிகம். ஒவ்வொரு ஊரிலும் சென்று இறங்கும்போது கடுமையான முதுகுவலி. மெல்ல மெல்ல முதுகு நிமிர்ந்து வலி குறையும்போது மீண்டும் கார்ப்பயணம்.
பத்தொன்பதாம்தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரசுராமகுண்ட் என்ற ஊர் வரை செல்லலாம் என எண்ணினோம். எங்கள் பயணத்திட்டத்தில் முதலில் அருணாச்சலப்பிரதேசம் இருந்தது. பின்னர் அதை விட்ட்டுவிட்டோம். அசாமை விட பெரிய அருணாச்சலப்பிரதேசம் அடர்காடுகள் கொண்ட மிகப்பெரிய மாநிலம். ஆனால் மக்கள் தொகை மிகக்குறைவு. அங்கே பயணம் செய்ய பலநாட்களாகும். ஆகவே ஒரே ஒரு எல்லையோர ஊரை மட்டும் பார்க்கலாமென முடிவுசெய்தோம்.
முக்கியமாக பிரம்மபுத்திராவின் துணையாறான லோகித் இப்பகுதியில் ஓடிவருகிறது. அதிகாலையிலேயே கிளம்பி அசாமைக் கடந்து லோகித் சமவெளிக்குச் சென்றோம். முந்நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. காற்று குளிராக இருந்தது. பேசியபடியே சென்றோம். வழக்கம்போல மதிய உணவு இல்லை. வழியில் வாங்கிய ஆரஞ்சுக்கூடையைத்தான் காலிசெய்தோம்.
அசாமும் அருணாச்சலப்பிரதேசமும் ஒரே மண் கொண்டவை. ஆனால் மெல்லமெல்ல பண்பாட்டு மாற்றத்தை உணர முடிந்தது. செல்லச்செல்ல மக்களைப் பார்ப்பதே அரிதாக ஆனது. தகரக்கூரையிடப்பட்ட சிறிய வீடுகள் கொண்ட ஒரு சாலைச்சந்திப்பில்தான் மக்களைப் பார்க்கமுடியும். பழங்களையும் காய்கறிகளையும் விற்பனைக்காக அடுக்கி வைத்திருப்பார்கள்.
இப்பகுதி மக்களுக்கு அழகுணர்வு அதிகம். பொருட்கள் எப்போதும் சீராகவே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீடுகள் கூட முறையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். தமிழகம் போல ஒழுங்கற்று திணிக்கப்பட்ட் பொருட்கள் கொண்ட வீடுகளையோ ஓட்டை உடைசல்கள் அள்ளிப்போடப்பட்ட முற்றங்களையோ காணமுடியாது. மக்கள் மிக நட்பானவர்கள். வியாபாரம் எல்லாம் தெரியாது. அவர்கள் ஒரு விலை வைத்திருப்பார்கள், வாங்கவேண்டியதுதான். பேரம்பேசினால் அவர்கள்திகைப்பதைக் காணமுடியும்.
அசாமிய மூங்கில் வீடுகள்தான் இங்கும். மூங்கில் கால்கள் மேல் அமைந்தவை. மூங்கில்கள் நிறைந்த காடுகளில் ஏராளமான காட்டுவாழைகளைக் காணமுடிந்தது. அருணாச்சலப்பிரதேசத்தை அடைந்ததும் நிலம் மலையடுக்குகளாக ஆகியது. லோகித் ஆறு கண்ணில் பட்டது. நீலநிறமான நீர் நுரைத்து வழியும் லோகித் இப்பகுதியின் அபாயகரமான ஆறுகளில் ஒன்று. வருடம்தோறும் இதன் பெருக்கில் ராணுவ வீர்ர்கள் இறக்கிறார்கள். இமையமலைப்பகுதியின் மண் மிக இளகியது. ஆனால் லடாக் போன்ற இடங்களில் மழை குறைவு. அருணாச்சலப்பிரதேசம் நான்குமாதகாலம் கடும் மழைப்பொழிவால் முற்றிலும் மூடப்பட்டிருக்கும். ஆகவே இங்கே நிலச்சரிவு மிக அதிகம். மக்கள்தொகை குறைவாக இருப்பதனால்தான் மரணங்கள் குறைவாக உள்ளன.
அருணாச்சலப்பிரதேசம் புத்தமதம் மேலோங்கியது. இந்துமதம் அடுத்தபடியாக. இவ்விரு பெருமதங்களும் இந்தியாவில் எங்கும் நிகழ்வதுபோல உள்ளூர் தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டு செயல்படுபவை. சமீபகாலமாக இங்கே அன்னியநிதி பெறும் அமைப்புகளின் தொடர்ப்பிரச்சாரத்தால் பழங்குடி வழிபாடுகள் தனி மதம் சார்ந்தவை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இதைச்செய்கிறார்கள். ஆனால் இதைப்பரப்புபவை கிறித்தவ நிறுவனங்கள். அவர்கள் அடுத்தபடியாக அந்த மக்களை கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். விளைவாக அந்த பழங்குடி மதங்களும் நம்பிக்ககளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன.
பரசுராமகுண்டம் லோகித் ஆற்றில் ஒரு பெரும் சுழி. இங்கே பரசுராமன் வந்து நீராடி தன் பாவங்களைப்போக்கிக்கொண்டதாக தொன்மம். இந்தியா முழுக்க பழங்குடிப்பகுதிகளை மைய நீரோட்டத்தில் இணைத்ததில் பரசுராமனின் தொன்மத்துக்கு முக்கியமான இடம் உண்டு. பழங்குடிகளில் இருந்து ஷத்ரியர்க்ளையும் பிராமணர்களையும் உருவாக்கியது அம்மரபு. வெண்முரசு நாவலில் விரிவாக இது எழுதப்பட்டுள்ளது.
1950ல் வந்த பெருவெள்ளத்தில் மலையிடிந்து ஒட்டுமொத்த பரசுராம குண்டும் மறைந்தது. ஆனால் இன்னும் சற்று தள்ளி புதிய சுழி உருவானது. அது இன்றைய பரசுராம குண்ட் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இங்கே பயணிகள் வருகிறார்கள். மகர சங்கராந்திக்கு நேபாளம் பூட்டான் அசாம் மணிப்பூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே தங்கி புனித நீராடுகிறார்கள். அவர்கள் தங்குவதற்கான தகரக்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லோகித் நதியின் பெரும் சமவெளியை நோக்கியபடி மலைப்பாதைச் சுழலில் ஏறிச் சென்றோம். தகரக்கொட்டகைகளால் ஆன வீடுகள் கொண்ட சிறிய கிராமங்களில் மக்கள் பெரும்பாலும் சீட்டாடிக்கொண்டிருந்தனர். ஓப்பியம் இங்கே முக்கியமான விளைபொருள். மக்கள் பெரும்பலும் ஓப்பியம் அடிமைகள். கண்கள் போதையில் செருகியிருக்க சும்மா அமர்ந்திருந்தார்கள். பெண்களே துடிப்பாகவும் அழகாகவும் தென்பட்டனர்.
இங்கே சாலைபோடுவது உட்பட அனைத்து உடல்ழைப்புப்பணிகளையும் செய்பவர்கள் பிகாரிகள். நம்மைப்போன்ற கரிய நிறம் கொண்ட எளிய மக்கள் நூறு ரூபாய் சம்பளத்திற்காக வேலை செய்து தகரக்கொட்டகைகளில் கடும் குளிரில் வாழ்கிறார்கள். நம்மூரில் மணிப்பூர் பையன்கள் ஓட்டலில் வேலைசெய்ய வருகிறார்கள். இப்பகுதி முழுக்க பிகாரிகள் உடலுழைப்பு வேலைகளைச் செய்கிறார்கள். இங்குள்ள கேட்டரிங் பயிற்சி நிறுவனங்கள் ஈராண்டுப்பயிற்சிக்குப்பின் இளைஞர்களை இந்தியாவெங்கும் ஒட்டல் வேலைக்கு அனுப்புகிறார்கள். ஓட்டல்வேலை இவர்களுக்கு இழிவானது அல்ல. ஊதியமும் அதிகம் என்பதனால் இங்கே சற்றுப் படித்த இளைஞர்கள் விரும்பும் பணியாக அது உள்ளது.
அருணாச்சலப்பிரதேசமே தூங்கிக்கொண்டிருப்பது போலிருந்தது. உச்சிமலைகள் பெரும் நதிச்சமவெளி மக்கள் அனைவருமே மயக்கத்தில் இருந்தனர். மரங்களும் பாறைகளும்கூட தூங்கிக்கொண்டிருந்தன. சுவர்களில் போஸ்டர்கள் சிலவற்றைக் கண்டேன். கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் நோய் குணமாக்கும் முகாம்கள். தனித்தனியாக இனக்குழுக்களின் இளைஞர் அமைப்புகளின் கூட்டங்களுக்கான அழைப்புகள். இங்கே இனக்குழு சார்ந்த மாணவர் அரசியல் வலுவாகியபடியே வருகிறது.
திரும்பி வரும் வழியில் சாலையோரமாக இருந்த தாய் பாணி பௌத்த ஆலயங்களுக்குச் சென்றோம். அருணாசலப்பிரதேசத்தின் மதம் பௌத்தம். ஆனால் கிறித்த மதமாற்றத்தால் வேகமாக இது அழிந்து வருகிறது. சமீபகாலமாக அதை புத்துயிர் பெறச்செய்யும் முயற்சிகள் நிகழ்கின்றன. அதன் பகுதியாகக் கட்டப்பட்டவை இவை. திபெத்திய தலாய்லாமா மரபு பௌத்தைத்தின் நிதியுதவியாலும் அருணாச்சலப்பிரதேசப் பிரமுகர்களாலும் கட்டப்பட்டாலும் இவை அருணாச்சலப்பிரதேசத்தின் மகாயான மரபைச் சேர்ந்தவை. திபெத்திய வஜ்ராயனம் இங்கில்லை. மஞ்சள் ஆடை அணிந்த புத்தர்.
புதியதாகக் கட்டப்படிருந்தால் அழகாகவே இருந்தன. மிகப்பெரிய சயனபுத்தர். அமர்ந்த புத்தர். சிலைகளின் முகங்களிலும் ஆடைகளிலும் பிற தேவதைகளிலும் தாய்லாந்துச் சாயல் இருந்தது. நான்கு பக்கமும் ஆறு சூழ்ந்த ஒரு வண்டல்தீவில் இருந்தன இந்த ஆலயங்கள். ஆலய வளாகத்திற்குள் தலாய்லாமாவும் அம்பேத்கரும் புகைப்படங்களாக அமர்ந்திருந்தனர். தலாய்லாமா இங்கே 2000த்தில் வருகைதந்திருக்கிறார். அவரது வருகை சீனாவால் கடுமையாக கண்டிக்கப்பட்டதை வாசித்த நினைவு.
அருணாச்சலப்பிரதேசத்தின் தனித்துவமான பௌத்தம் மகாயானத்தின் ஒரு பிரிவு. சிலைவழிபாடு உள்ளது. பழங்குடிச்சடங்குகளும் நாட்டார் நம்பிக்கைகளும் கலந்தது. இந்த மண்ணில் அது அழியாது வாழவேண்டும் என புத்தரிடமே வேண்டிக்கொண்டேன்.